குரு பூர்ணிமா வேண்டுகோள் — 2026

23 ஜூலை, 2026

“கருணை மற்றும் ஞானதிருஷ்டி மூலம் ஓர் உண்மையான குரு உடல், உள்ளம் மற்றும் ஆன்ம ஏழ்மையில் உள்ளவர்களிடத்தில் இறைவன், தானே துயருறுவதைக் காண்கிறார். அதனால் தான் அவர்களுக்கு உதவி செய்வதை அவர் தன் ஆனந்தமான கடமையாகக் கருதுகிறார்.”

— ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர்

குரு பூர்ணிமா அன்று சிறப்பு காணிக்கை செலுத்த அழைக்கிறோம்

நம் அன்பிற்குரிய குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர், ஓர் உண்மையான குரு அனைவரிடமும் தெய்வீகத்தைக் காண்கிறார் மற்றும், அவர்களின் மேம்பாட்டிற்காக மகிழ்ச்சியுடன் தம்மை அர்ப்பணித்துக் கொள்கிறார் என்பதை நமக்கு நினைவூட்டுகிறார். இறை அன்பு மற்றும் ஒளியின் தூதுவர்களாகத் திகழும் அத்தகைய உண்மையான குருமார்களை நாம் போற்றி, ஆழ்ந்த நன்றியுணர்வுடன் உள்ளார்ந்து வணங்கும் புனித நன்னாளே குரு பூர்ணிமா ஆகும்.

பரமஹம்ஸரின் சீடர்களாகிய நமக்கு, இந்த நாள் வெறும் கொண்டாட்டத்தைக் காட்டிலும் மேலானது. இது நமது ஆன்மீகப் பயணத்தில் குருதேவரிடமிருந்து நாம் பெற்ற அருளாசிகளை சிந்தித்துப் பார்ப்பதற்கும், மேலும் நம்மால் முடிந்த வழிகளில் அவருக்கு சேவை செய்ய நமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ளும் நேரமும் ஆகும்.

குருதேவரின் பணிக்கு அன்புடன் சேவையாற்ற ஓர் அழைப்பு

இந்த புனித சந்தர்ப்பத்தில், நம் அன்பிற்குரிய குருதேவரின் பாதத் தாமரைக்கு இதயபூர்வ அன்பை நாங்கள் காணிக்கையாகச் சமர்ப்பிக்கும் வேளையில், பல பக்தர்கள் உள்ளூர நெகிழ்ந்து பின்வருமாறு கேட்கத் தூண்டப்படுகிறார்கள்:

“மகிழ்ச்சியுடன் மற்றவர்களுக்குச் சேவை செய்வதில் நான் எவ்வாறு அவருடைய கருவியாக மாற முடியும்?”

இந்த குரு பூர்ணிமாவில், பரமஹம்ஸரின் பணியை முன்னெடுத்துச் செல்ல உங்கள் அன்பான ஆதரவு உதவக்கூடிய இரண்டு புனிதப் பணிகளில் பங்கேற்று, அத்தகையதொரு கருவியாக மாற உங்களை அழைக்கிறோம்:

மொத்த மதிப்பிடப்பட்ட செலவு: ₹14 கோடி

குருதேவரின் கிரியா யோக போதனை மற்றும் அவரது கருணைமிக்க அன்பு ஆகியவற்றின் ஒளியை உலகம் முழுவதும் பரப்ப எங்களுக்கு உதவும் உங்கள் பிரார்த்தனைகள், சேவை மற்றும் தாராளமான பங்களிப்புகள் அனைத்திற்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள விரிவான வேண்டுகோளைப் படியுங்கள்.

பகுதி I

மகாவதார பாபாஜி குகைக்கு அருகில் உள்ள ரத்கலில் ஒரு பார்வையாளர் மையம்

மகாவதார பாபாஜி
மகாவதார பாபாஜி குகை
இந்த குகையில், மகாவதார பாபாஜி 1861 இல் லாஹிரி மகாசயரை சந்தித்தார்.

மகாவதார பாபாஜி குகை புனித தலம், உலகெங்கிலும் உள்ள மெய்ப்பொருள் நாடுவோருக்கு ஒரு கலங்கரை விளக்கமாக மாறியுள்ளது. 1861 ஆம் ஆண்டில், இந்த பேறுபெற்ற இடத்தில் தான் அமரத்துவ பாபாஜி தனது மேன்மைமிகு சீடரான லாஹிரி மகாசயரை சந்தித்தார். அவர் மூலம், இழந்திருந்த கிரியா யோக விஞ்ஞானத்தை இந்த யுகத்திற்கு மீண்டும் உயிர்ப்பித்தார்.

நம் அன்பிற்குரிய குருதேவரின் ஒரு யோகியின் சுயசரிதம், வலைத்தளம் மற்றும் ஆன்லைன் ஊடகங்கள் வாயிலாக மகாவதார பாபாஜியைப் பற்றி மேலும் பலரும் அறிந்துகொள்வதால், முக்கியஸ்தர்கள் மற்றும் பிரமுகர்கள் உட்பட பெருகிவரும் பார்வையாளர்கள் — சில சமயங்களில் பேருந்துகளில் கூட்டமாக — இந்த மகத்தான அமரத்துவம் வாய்ந்த குருவின் ஆசிகளைப் பெற தினந்தோறும் இப்புனிதத் தலத்திற்கு யாத்திரை மேற்கொள்கின்றனர். சிலர் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா (YSS) மற்றும் ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் (SRF) பற்றி ஏற்கனவே அறிந்திருந்தாலும், பாபாஜியின் ஆசிகள் மூலம், கிரியா யோக விஞ்ஞானத்தை உலகிற்கு கொண்டு செல்ல யோகானந்தாஜி தான் இந்த அமைப்புகளை நிறுவினார் என்பதைப் பலர் இன்னும் அறியவில்லை.

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஸ்ரீ ராம் நாத் கோவிந்த் பாபாஜி குகையில்
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஸ்ரீ ராம் நாத் கோவிந்த் ஸ்மிருதி பவனில்

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஸ்ரீ ராம்நாத் கோவிந்த், தமது பரிவாரங்களுடன் குகை மற்றும் ஸ்மிருதி பவனுக்கு (குகைக்குச் சற்று கீழே அமைந்துள்ளது) வருகை புரிகிறார்.

நீதிபதி அலோக் மஹ்ரா பாபாஜி குகை மற்றும் ஸ்ம்ருதி பவனிற்கு மேற்கொண்ட வருகை
உத்தராகண்ட் உயர் நீதிமன்ற அமர்வு நீதிபதியாகிய நீதிபதி அலோக் மஹ்ரா, ஸ்ம்ருதி பவன் (மேலே காட்டப்பட்டுள்ளது) மற்றும் பாபாஜி குகைக்கு வருகை தருகிறார்.

பாபாஜி குகைக்கு அருகாமையில், அங்கு வரும் யாத்ரீகர்கள் குகைக்குச் செல்லும் வழியிலும், திரும்பி வரும்போதும் ஓய்வெடுப்பதற்கும் இளைப்பாறுவதற்கும் ஏற்ற வகையில், முழுமையான வசதிகளுடன் கூடிய ஒரு பார்வையாளர் மையத்தை அமைக்க YSS நீண்டகாலமாகவே விரும்பியுள்ளது. மேலும், ஆர்வத்துடன் நாடுவோருக்கு YSS/SRF மற்றும் குருதேவரின் கிரியா யோகப் போதனைகள் குறித்த தகவல்களையும் இந்த மையம் வழங்கும்.

மேலும், பார்வையாளர் மையம், பாபாஜி குகை மற்றும் அக்குகைக்குச் சற்று கீழே அமைந்துள்ள ஸ்மிருதி பவன் ஆகியவற்றைப் பராமரிக்கும் சேவகர்கள் தங்குவதற்கான ஒரு சேவை மையத்தை உருவாக்க YSS விரும்பியது. இந்த நோக்கத்துடன், சில ஆண்டுகளுக்கு முன்பு பாபாஜி குகைக்கு அருகில் 11 ஏக்கர் நிலத்தை YSS கையகப்படுத்தியது.

2024-ஆம் ஆண்டில், நமது மதிப்பிற்குரிய தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்த கிரி அவர்கள், இவ்விரு கட்டுமானத்திற்குத் தமது அருளாசியை இனிதே வழங்கினார்:

I. பார்வையாளர் மையம் (அதிதி பவன்)

பாபாஜி குகைக்கு வருகை தரும் யாத்ரீகர்களையும் யோகதா பக்தர்களையும் வரவேற்கும் வகையில், 6,200 சதுர அடி கட்டுமானப் பரப்பளவு கொண்ட இருமாடி கட்டடம் பின்வரும் வசதிகளை வழங்குகிறது:

  • வரவேற்புப் பகுதி
  • YSS-இன் ஆன்மீக நூல்களை வழங்கும் ஒரு புத்தக அறை
  • பக்தர்களுக்கு புனித YSS குரு பரம்பரை வரலாறு, மற்றும் YSS இன் கிரியா யோக போதனைகள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தும் ஓர் ஒலி-ஒளி விளக்க அறை மற்றும் புகைப்படக் கண்காட்சி அறை
  • யாத்ரீகர்களுக்கு நீர் மற்றும் சிற்றுண்டிகள்
  • தூய்மையான மற்றும் எளிதில் அணுகக்கூடிய கழிவறைகள், மேலும்
  • பாதுகாப்பு, நீர் சேமிப்பு மற்றும் பராமரிப்பாளர் குடியிருப்பு போன்ற பிற துணை வசதிகள்

II. வசதிகள் கட்டடம்

16,000 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த நான்கு மாடிக் கட்டிடத்தில், யாத்ரீகர்களுக்கு சேவை செய்வதற்கும், பார்வையாளர் கட்டடம், வசதிகள் கட்டடம், பாபாஜி குகை மற்றும் சுற்றியுள்ள பகுதி, மற்றும் ஸ்மிருதி பவன் ஆகியவற்றைப் பராமரிப்பதற்கும் ஆன சேவகர்கள் தங்குவார்கள். இதில் அமையவுள்ள வசதிகள் பின்வருமாறு:

  • தங்கி பணிபுரியும் சேவகர்களுக்கான உறைவிடங்கள்
  • வருகைதரும் குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்களுக்கு தங்கும் வசதி மற்றும் உணவு
  • ஒரு அறப்பணி மருந்தகம்
  • கூடுதல் உள்கட்டமைப்பு — மழைநீர் சேகரிப்புடன் கூடிய நம்பகமான நீர் சேமிப்பு, மற்றும் தடையற்ற மின்சாரத்தை உறுதி செய்யும் ஜெனரேட்டர் காப்புடன் கூடிய வலுவான மின்சார விநியோகம் ஆகியவற்றின் காரணமாக எல்லாப் பருவங்களிலும் யாத்ரீகர்களுக்கான சேவை ஒவ்வொரு பருவத்திலும் தடையின்றி தொடரும்
  • பணிகள் சீராக நடைபெறுவதற்கு உதவும் அலுவலக இடங்கள், பணியாளர் குடியிருப்புகள், வாகன நிறுத்துமிடம் மற்றும் பிற துணை வசதிகள்
Aerial Map of the Visitors Centre and Facilities Building
மகாவதார பாபாஜியின் குகைக்குச் செல்லும் பாதைக்கு மிக அருகில் அமையவுள்ள பார்வையாளர் மையம் மற்றும் வசதிகள் கட்டடத்தின் அமைவிடம்.
பாபாஜி குகைக்கு அருகிலுள்ள இரண்டு
இரு கட்டடங்களையும் காட்டும் கட்டுமானத் தளம். பாபாஜி குகைக்குச் செல்லும் சாலை பார்வையாளர் மையத்தின் பின்னால் செல்கிறது.

நிதிசார் கண்ணோட்டம் மற்றும் காலநிர்ணயம்

  • கட்டுமானத்தின் மொத்த உத்தேச செலவு: ₹10 கோடி
  • பணிகள் நிறைவடையும் உத்தேச காலம்: 2027ன் முற்பகுதி


இந்த தெய்வீக நோக்கம் நிறைவேற உங்கள் ஆதரவை வரவேற்கிறோம்.

பகுதி II

குருதேவரின் ராஞ்சி ஆசிரமத்தைப் பாதுகாத்தல்

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, YSS ராஞ்சி ஆசிரமம் ஒரு பேறுபெற்ற புகலிடமாக இருந்து வருகிறது. இங்கு பக்தர்களும் பார்வையாளர்களும் குருதேவரின் இருப்பால் புனிதப்படுத்தப்பட்ட வளாகத்தில் நடந்து, தியானம் செய்வதன் மூலம் தங்கள் இதயங்களை அமைதி மற்றும் ஆனந்தத்தால் நிரப்பிக் கொள்கிறார்கள்.

நமது ஜனவரி 2026 செய்திமடலில், இங்கு வருகை தருபவர்களையும் சேவை செய்பவர்களையும் கவனித்துக் கொள்வதற்கும், வருங்கால சந்ததியினருக்காக இந்த புனித இடத்தின் அமைதியையும் அழகையும் பாதுகாப்பதற்கும் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளை நாங்கள் பகிர்ந்துகொண்டோம்:

  • சாலைகள் மற்றும் வளாகச் சூழலை மேம்படுத்துதல் — உறுதியான சாலைகள், கற்கள் பதிக்கப்பட்ட நடைபாதைகள் மற்றும் பாதசாரிகளுக்கான பாதைகள்; அமைதியான சூழலை மேலும் மெருகூட்டும் வகையிலான இயற்கைக்காட்சி அமைப்பு; சூரிய சக்தி விளக்குகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட மின்சாரக் கட்டமைப்புகள்; அத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட கழிவுநீர் மற்றும் வடிகால் அமைப்புகள்.
  • குழந்தைகளுக்கான வசதிகள், அவுட்ரீச் சேவைகள் மற்றும் அறநலப் பணிகளை மேம்படுத்துதல் — இளைஞர் சேவைகளுக்கென ஒரு பிரத்யேகக் கட்டடம்; YSS பாடங்களுக்கான கூடுதல் அச்சிடும் மற்றும் சேமிப்பு வசதி; மற்றும் வசதி குறைந்தவர்களுக்குச் சிறப்பாகச் சேவை செய்ய, ஒரு புதிய பல் மருத்துவப் பிரிவுடன் கூடிய புதுப்பிக்கப்பட்ட அறப்பணி மருந்தகம்.

குருதேவரின் அருளால், வளாகத்தில் இம்முயற்சிகள் அனைத்திலும் கட்டுமானப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன; பின்வரும் புகைப்படக் காட்சியை உங்களுடன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம். இந்தத் திட்டங்கள் அனைத்தும் 2027ஆம் ஆண்டின் முற்பகுதியில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

I. சாலைகள் மற்றும் பாதைகள்

சாலை கட்டுமானப் பணிகளின் நிலைகள்

II. கழிவுநீர் மற்றும் வடிகால் அமைப்புகள்

III. சேமிப்பு வசதிகள்

உங்கள் அன்பு மற்றும் நிதி உதவியினால் தான் இத்திட்டங்களை எங்களால் மேற்கொள்ள முடிகிறது.

இந்த புனரமைப்புப் பணிகள் காரணமாக நாங்கள் ராஞ்சி ஆசிரமத்தை தற்காலிகமாக மூட வேண்டியிருந்தது. இது நீண்ட காலமாக நிலுவையிலிருந்த திட்டங்களையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்தது.

IV. நிலத்தடி மழைநீர் சேமிப்பு தொட்டி

ஆசிரமத்தைச் சுற்றிலும் சமீபகாலமாக உயர்ந்துவரும் அடுக்குமாடிக் கட்டடங்களால், நிலத்தடி நீர்மட்டம் படிப்படியாகக் குறைந்து வருகிறது; இதனால் கோடைக்கால உச்சத்தின்போது ஆசிரமத்தின் சில கிணறுகள வறண்டு போவதுடன், ஆழ்துளைக் கிணறுகளிலிருந்து கிடைக்கும் நீரின் அளவும் தொடர்ந்து குறைந்து வருகிறது. நகராட்சி நீர் இணைப்பு இருந்தாலும், அதன் விநியோகம் சீரற்றதாக இருப்பதோடு, ஆசிரமத்தின் தேவைகளுக்கு அது ஒருபோதும் போதுமானதாக இருப்பதில்லை. எனவே, மேற்பரப்பு நீரோட்டமாக இழக்கப்படும் மழைநீரை சேமிப்பதற்காக, சுமார் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நிலத்தடி மழைநீர் சேமிப்புத் தொட்டி ஒன்றை அமைப்பது விவேகமானதாக இருக்கும் என்று நாங்கள் கருதினோம்.

கோசாலைக்கும் ஸ்ரவணாலயத்திற்கும் இடையில், நிலத்தடி சேமிப்பு தொட்டி கட்டப்பட்டு வருகிறது.

இத்தொட்டி அமைத்தன் முதன்மை நோக்கம். மழைக்காலத்தில் மழைநீரைச் சேகரித்துச் சேமித்து வைப்பதே; இவ்வாறு சேமிக்கப்படும் நீர் கோடைக்காலங்களில், குறிப்பாக ஆசிரமத் தோட்டங்களைப் பராமரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

சிவ மந்திர் புனரமைப்புப் பணிகளின் கட்டடக்கலை வரைபடம்
புதுப்பிக்கப்பட்ட சிவ மந்திரின் கட்டடக்கலை வரைபடம்

V. சிவ மந்திர் மற்றும் ஹோம குண்டம்

பல ஆண்டுகளாக, சிவ மந்திரும் அதன் ஹோம குண்டமும் வழிபாட்டிற்கும், நமது குருமார்களின் நினைவாக நடத்தப்படும் பக்திபூர்வ நிகழ்வுகளுக்கும் உரிய புனித இடமாக இருந்து வருகின்றன. காலப்போக்கிலும் இயற்கைச் சூழலின் தாக்கத்தாலும் இக்கட்டமைப்புகள் சிதிலமடைந்துள்ள நிலையில், இந்தப் புனித இடத்திற்கு இப்போது அவசரமான புதுப்பிப்பு தேவைப்படுகிறது. அதற்கேற்ப, ஒரு புனரமைப்பு பணி திட்டமிடப்பட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள் மற்றும் பணிகளின் நோக்கம்:

  • கூரை மாற்றுதல் — மந்திரின் புனிதத்தையும் அழகையும் பாதுகாக்கும் வகையில், பழைய கல்நார் கூரையும், பழுதடைந்த சட்டகமும் நீக்கப்பட்டு, நீடித்து உழைக்கக்கூடிய, பாதுகாப்பான, கலைநயமிக்க கூரை அமைப்பு பொருத்தப்படும்.
  • புதிய கிரானைட் தரைத்தளத்தை அமைத்தல் — நீடித்து உழைக்கும் தன்மை, எளிதான பராமரிப்பு மற்றும் அந்த இடத்தின் அழகை மேம்படுத்துவதற்காக.
  • ஹோம குண்டம் சீரமைப்பு — அதன் கட்டமைப்பு உறுதித்தன்மையை சரி செய்வதற்கும், நிகழ்ச்சிகள் மற்றும் பக்திபூர்வ நிகழ்வுகளுக்குப் பாதுகாப்பான பயன்பாட்டை உறுதி செய்வதற்கும், அதை மீண்டும் கட்டுதல்.

நிதிசார் கண்ணோட்டம் மற்றும் காலநிர்ணயம்

  • மொத்த மதிப்பிடப்பட்ட செலவு: ₹4 கோடி
  • பணிகள் நிறைவடையும் உத்தேச காலம்: 2027ன் முற்பகுதி


இந்த தெய்வீக நோக்கம் நிறைவேற உங்கள் ஆதரவை வரவேற்கிறோம்.

இதை நாம் இணைந்து உருவாக்குவோம்

மகாவதார பாபாஜி குகைக்கு அருகிலுள்ள புனிதத் தலம் மற்றும் குருதேவரின் அன்பிற்குரிய ராஞ்சி ஆசிரமம் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்படும் இத்தகைய பல்வேறு திட்டங்கள் மூலம், மெய்ப்பொருளை நாடி வரும் ஒவ்வொருவரையும் அன்புடனும் மரியாதையுடனும் வரவேற்கவும், இன்னும் வரவிருக்கும் தலைமுறை சாதகர்களுக்காக இந்தப் புனித இடங்களைப் பாதுகாக்கவும் நாம் முயல்கிறோம்.

பல ஆண்டுகளாக உங்கள் தாராள மனப்பான்மையும் தொடர்ச்சியான ஆதரவுமே, நிறைவேறியுள்ள அனைத்தையும் சாத்தியமாக்கியுள்ளன.

உங்கள் ஆதரவை எவ்வாறு வழங்குவது

அனைத்திற்கும் மேலாக, இந்த தெய்வீகப் பணிகள் தடங்கலின்றி நிறைவு பெற, உங்கள் பிரார்த்தனைகளை வேண்டுகிறோம். உளமார்ந்த பிரார்த்தனையே ஒவ்வொரு அர்ப்பணிப்பின் உண்மையான அடித்தளமாகும்.

இப்புனித பணிகளுக்கு ஆதரவளிக்க நீங்கள் விரும்பினால், கீழே உள்ள இரண்டு விருப்பங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, YSS நன்கொடைப் பக்கத்தின் வாயிலாக ஒருமுறை அல்லது மாதந்தோறும் தொடரும் வகையிலான நன்கொடையை வழங்கலாம்:

நீங்கள் கூடுதல் நன்கொடை அளிக்கவோ அல்லது ஒரு குறிப்பிட்ட திட்டத்திற்கு ஆதரவளிக்கவோ விரும்பினால், உங்களுடன் தனிப்பட்ட முறையில் பேச விழைகிறோம். தயவுசெய்து YSS உதவி மையத்தை (0651) 6655 555 என்ற எண்ணில் (திங்கள் — சனி வரை, காலை 9:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை) தொடர்பு கொள்ளுங்கள்.

குருதேவரின் ஆசிரமங்களில் சேவை செய்யும் சன்னியாசிகள் மற்றும் சேவகர்களாகிய நாங்கள், எங்கள் மனமார்ந்த நன்றியையும் உங்களின் நல்வாழ்விற்காக தினசரி பிரார்த்தனைகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். உங்கள் அன்பினாலும் ஆதரவினாலும், இங்கு வருகை தரும் அனைவருக்கும் குருதேவரின் ஒளி, அன்பு மற்றும் ஞானத்தை இந்தப்புனித இடங்கள் தொடர்ந்து பரப்பிக் கொண்டிருக்கும்.

நம்முடைய மகத்தான குருமார்களின் ஆசிகள் எப்போதும் உங்களுடன் இருப்பதாக.

தெய்வீகத் தோழமையில்,
யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா

இதைப் பகிர