YSS

சுவாமி சிதானந்த கிரியின் கிறிஸ்துமஸ் செய்தி 2019

7 டிசம்பர், 2019

அன்பரே,

உங்களுக்கும், பரமஹம்ஸ யோகானந்தரின் உலகளாவிய ஆன்மீக குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் மிகவும் உற்சாகமான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்! இந்த மகிழ்ச்சியான பருவத்தில் விண்ணுலக சாம்ராஜ்ஜியங்களிலிருந்து விசேஷ பிரகாசத்துடன், ஏற்கும் திறன் கொண்ட இதயங்களில் ஒளிரும் கிறிஸ்து-அன்பின், அமைதி அளிக்கும், இணக்கத்தைத் தரும் ஒளியை நீங்கள் உணரும்படி நான் பிரார்த்தனை செய்கிறேன்.

அந்த எல்லையற்ற கிறிஸ்து உணர்வுநிலை (கூடஸ்த சைதன்யா) – படைப்பில் பரம்பொருளினால் வெளிப்படுத்தப்படும் ஒன்றிணைக்கும் நுண்ணறிவுடனான நோக்கம் – அனைத்து உயிரினங்களையும், தேசங்களையும், இனங்களையும், சமயங்களையும் ஒரே குடும்பமாக அரவணைக்கிறது. அனைத்தும் இறைவனால் சமமாக நேசிக்கப்படுகின்றன. மாயையின் இந்த சாம்ராஜ்யத்தில் எந்த வேறுபாடுகள் நம்மைப் பிளவு படுத்துவதாக தோன்றினாலும் அவை மேலோட்டமானவை என்பதை நினைவில் கொள்ள நேரம் ஒதுக்குவோம். இறைவனின் குழந்தைகளாக நாம் பகிர்ந்து கொள்ளும் உறவு மிகவும் ஆழமானது. “பூமியில் அமைதி மற்றும் அனைவருக்கும் நல்லெண்ணம்” என்ற உலகளாவிய கிறிஸ்துமஸ் செய்தியுடன் நமது இதயங்கள் புதிதாக மேம்படுத்தப்படட்டும். அதுவே இயேசு தம் வாழ்வில் வெளிப்படுத்திய உள்ளார்ந்த கருத்து மற்றும் நிபந்தனையற்ற அன்பு; அது நம் ஒவ்வொருவரிடமும் மீண்டும் பிறக்க முடியும்.

இயேசு கிறிஸ்து சிரமமான காலங்களில் அவதாரம் எடுத்து, அன்பு, புரிதல், மன்னிப்பு மற்றும் பரிவின் சக்தி, ஆகியவை வெறுப்பின் அழிக்கும் தன்மையை விட மிகப் பெரியது, நீடித்தது என்பதை உலகுக்கு நிரூபித்தார். அவருடைய முன்மாதிரியிலிருந்து மனத்துணிவைப் பெறுங்கள். மேலும் ஒவ்வொரு நல்ல சிந்தனை மற்றும் செயல் மூலம் நீங்களும் கூட அதிகமாக இறைவனின் அன்பை இந்த உலகத்திற்கு வழங்குகிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அவர் மிக முக்கியமாக வலியுறுத்திய: “இறைவனை உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆன்மத்தோடும், உன் முழு மனதோடும், முழு பலத்தோடும் அன்புகூருவாயாக. உன்னிடத்தில் போலவே பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக.” இந்தக் கட்டளையின்படி வாழ நாம் கடுமையாக முயற்சிக்கும் போது, நம் முழு இருப்பிலும் அற்புதமான முக்தியளிக்கும், உணர்வுநிலையை விரிவுபடுத்தும், மாற்றம் ஏற்படுகிறது.

ஆன்மீக உணர்வுநிலையின் அன்பையும் ஒளியையும் நம் இதயங்களிலும் செயல்களிலும் எவ்வாறு உட் புகுத்துவது? குறிப்பாக கிறிஸ்துமஸ் சமயத்தில், ஒரு வழி, ஆழ்ந்த மற்றும் நீண்ட கால இறைத் தொடர்புக்கு நேரத்தை ஒதுக்குவதாகும். யோகதா சத்சங்க ஆசிரமங்கள்/கேந்திரங்கள்/மண்டலிகள் நடத்தும் நாள் முழுவதும் நடைபெறுகின்ற கிறிஸ்துமஸ் தியானங்கள் ஒன்றில் கலந்துகொள்ளுமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன் – அல்லது உங்கள் வீட்டிலேயே ஒரு தியான நிகழ்வை வைத்துக் கொள்ளுங்கள். அக அமைதி ஆலயத்தினுள் அனைத்து அன்பின் ஆதாரத்தை நாம் தொடர்பு கொள்ளும் போது, நமது குருதேவரின் வார்த்தைகளின் சத்தியத்தை உணர்கிறோம்: “புனிதம், அமைதி, கனவுகளுக்கு அப்பாற்பட்ட மகிழ்ச்சி, உங்கள் ஆன்மத்தில் சுடர்விட்டு நடனமாடுகிறது. அகத்தே உள்ள அந்த அமைதி, வெளியே புலனறிவுக்கப்பாற்பட்ட எல்லையற்ற அமைதியுடன் சேரட்டும். நீங்கள் அந்த சாசுவத ஒளியில் மூழ்கியுள்ளீர்கள். உங்கள் முழு இருப்பும் கிறிஸ்துவின் அந்த எங்கும் நிறைந்த பேறுபெற்ற பிரகாசத்தால் நிரம்பியுள்ளது. உடல் மற்றும் சுவாசத்திற்கப்பால், அந்த கிறிஸ்துவின் அமைதி மற்றும் ஆனந்தத்தின் சாசுவத-ஒளி தான் நீங்கள்.”

இந்த கிறிஸ்துமஸ்-ஸிற்கும் மற்றும் எப்போதும், உலகளாவிய கிறிஸ்துவின் அன்பும் அமைதியும் உங்கள் வாழ்க்கையை நிரப்பட்டும் – உங்களையும், உங்கள் அன்புக்குரியவர்களையும், நீங்கள் எவர்களுக்காகப் பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பதாக.

தெய்வீகத் தோழமையில்

சுவாமி சிதானந்த கிரி

இதைப் பகிர

Share on facebook
Share on twitter
Share on whatsapp