“‘ஒரு கொசுவை எப்படித் தந்திரமாக வெல்வது’ — அக அமைதியின் யோக சக்தி” பரமஹம்ஸ யோகானந்தர் அருளியது

6 மார்ச், 2026

பின்வருவது பரமஹம்ஸ யோகானந்தரின் புகழ்பெற்ற வாழ்க்கை வரலாறான, ஒரு யோகியின் சுயசரிதம் நூலின் “என் குருவின் ஆசிரமத்தில் கழித்த வருடங்கள்… என்ற அத்தியாயத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு பகுதியாகும். அதில் அவர் தனது புகழ்பெற்ற குருவான ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வருடனான தனது ஆழ்ந்த உத்வேகமளிக்கும் அனுபவங்களை விவரிக்கிறார். ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வரின் உன்னத ஆன்மீக நிலை மற்றும் வற்றாத ஞானத்தின் ஒரு சிறு பார்வை கீழே பகிரப்பட்டுள்ளது. இந்தப் பத்தியில் பரமஹம்ஸாஜி ஸ்ரீ யுக்தேஸ்வரை அடிக்கடி எளிதாக “மாஸ்டர்” என்றே குறிப்பிடுகிறார். இது ஒருவருடைய குருவை பக்தியுடன் அழைக்கும் ஒரு மரியாதைக்குரிய முறையாகும், இது தன்னை முழுமையாக வென்ற ஒரு ஆன்மாவைக் குறிக்கிறது.

லோடஸ்-ஆரஞ்-லைன்ஆர்ட்

ஸ்ரீ யுக்தேஸ்வருடன் நான் இருந்த ஆரம்ப மாதங்கள் ஒரு பயனுள்ள படிப்பினையுடன் முடிந்தன. அது ஒரு கொசுவை எப்படித் தந்திரமாக வெல்வது என்பது. வீட்டில் என் குடும்பத்தினர் இரவில் எப்பொழுதுமே பாதுகாப்பான கொசு வலைகளை உபயோகப்படுத்தினர். செராம்பூர் ஆசிரமத்தில் இந்த முன்னெச்சரிக்கையான வழக்கம் பின்பற்றப்படாததைக் கண்டு நான் திகில் அடைந்தேன். ஆனால் கொசுக்களோ ஆசிரமத்தில் முழுவதுமாகக் குடி கொண்டிருந்தன. என்னை அவைகள் தலையிலிருந்து கால்வரை கடித்தன. குருதேவர் என்னிடம் இரக்கப்பட்டார்.

“நீ ஒரு கொசுவலை வாங்கிக்கொள். அத்துடன் எனக்கும் ஒன்று வாங்கி விடு, அவர் சிரித்தபடி தொடர்ந்தார். நீ உனக்கு மட்டும் ஒன்று வாங்கிக் கொண்டால், எல்லா கொசுக்களும் என் மீதே திரும்பிவிடும்!”

நான் மிக்க நன்றியுடன் அப்படியே செய்தேன். நான் செராம்பூரில் தங்கிய இரவுப் பொழுதெல்லாம் என் குரு என்னைப் படுக்கை நேர கொசுவலைகளைக் கட்டச் சொல்வது வழக்கம்.

ஓர் இரவு கொசுக்களின் ஒரு கும்பலே எங்களைச் சூழ்ந்தது. குருதேவர் வழக்கமான உத்திரவுகளைப் பிறப்பிக்கவில்லை. நான் கலவரத்துடன் கொசுக்களின் எதிர்பார்ப்புடன் கூடிய ரீங்காரத்தை கேட்டேன். படுக்கையில் படுத்து நான் அவைகளைப் பொதுவாக நோக்கி, அமைதியாயிருக்கும்படி பிரார்த்தனை செய்தேன். ஓர் அரை மணி நேரம் கழித்து குருவின் கவனத்தை ஈர்ப்பதற்காக வேண்டி மெதுவாக இருமுவது போல் பாசாங்கு செய்தேன். கொசுக்கள் அவைகளின் இரத்த வேட்கை கொண்ட சடங்கை கொண்டாடிக் கொண்டிருந்த அச்சமயத்தில் அவற்றின் கடியினாலும், முக்கியமாக ரீங்காரத்தினாலும் நான் பைத்தியம் ஆகிவிடுவேன் என நினைத்தேன்.

குருதேவரிடமிருந்து பதிலுக்கு எந்த அசைவுமில்லை. நான் ஜாக்கிரதையாக அவரருகில் சென்றேன். அவர் மூச்சு விடவில்லை. அவர் யோக நிஷ்டையில் இருக்கும் பொழுது நான் மிக அருகில் சென்று பார்ப்பது இது தான் முதல் தடவை. எனக்கு ஒரே பயமாகிவிட்டது.

“அவர் இதயம் நின்றுவிட்டிருக்க வேண்டும்!” நான் ஒரு கண்ணாடியை அவர் நாசியினருகில் பிடித்தேன். அதில் சுவாசத்தின் ஆவி படியவில்லை. என்னை இன்னும் நிச்சயப்படுத்திக் கொள்வதற்காக நான் அவர் நாசியையும் வாயையும் என் விரல்களினால் மூடினேன். அவர் உடல் சில்லிட்டும் அசைவற்றும் இருந்தது. ஒரே குழப்பத்தில் நான் உதவிக்கு யாரையாவது அழைக்கக் கதவின் பக்கம் திரும்பினேன்.

“ஆக! புதிதாக அரும்பும் ஆராய்ச்சியாளரே! பாவம் என் மூக்கு! குருதேவரின் குரல் சிரிப்பினால் குலுங்கிற்று. நீ ஏன் தூங்கச் செல்லக்கூடாது? உனக்காக முழு உலகமே மாறுமோ? உன்னை மாற்றிக் கொள். கொசுக்களின் நினைவை விட்டொழி.”

நான் பணிவுடன் என் படுக்கைக்குத் திரும்பினேன். என் அருகில் ஒரு கொசு கூட வரத் துணியவில்லை. முதலில் குருதேவர் கொசுவலைக்கு ஒப்புக் கொண்டது வெறுமனே என்னை மகிழ்விக்கத்தான் என்பதைப் புரிந்து கொண்டேன். அவருக்கு கொசுக்களிடத்தில் எந்த பயமும் இல்லை. யோக சக்தியினால் கொசுக்கள் அவரைக் கடிப்பதை தடுக்க முடிந்தது. அல்லது அவர் நினைத்தால், அவர் இதிலிருந்து தப்பி, தாக்கப்பட முடியாத தன் உள்ளுக்குள் ஒன்றிவிடவும் முடியும்.

“அவர் எனக்காக நிரூபித்துக் காட்டி இருக்கிறார்,” நான் நினைத்தேன். “நான் அவ்விதமான யோக நிலையை அடைய முயல வேண்டும்.” கவனத்தைத் திசை திருப்பும் கணக்கற்றத் தொல்லைகள், இவ்வுலகில் அவைகளுக்குப் பஞ்சமே இல்லை — வண்டுகளின் ரீங்காரத்தைப் போல! சூழும் பகல் வெளிச்சம் போல! எதையுமே கண்டு கொள்ளாமல் ஓர் உண்மையான யோகி உயர் உணர்வு நிலையை அடைந்து அதில் லயித்துவிட முடியும். சமாதியின் முதல் (சவிகல்ப) நிலையில் ஒரு பக்தன் வெளி உலகத்துடன் தொடர்பு கொள்ளும் இந்திரிய உணர்வுகளை அடைத்து விடுகிறான். பிறகு அவனுக்கு, பண்டைய ஏடன்1 நகரத்தை விடத் தெளிவான உள்வெளியின் ஒலிகளும் காட்சிகளும் பரிசாகக் கிடைக்கின்றன.

படிப்பினை அளிக்கக்கூடிய இக்கொசுக்கள் ஆசிரமத்தில் சீக்கிரத்திலேயே இன்னொரு பாடத்தையும் கற்பித்தன. அது மாலையின் இதமான அந்தி நேரம். குருதேவர் புராதனமான நூல்களை ஒப்புவமை இல்லாது விளக்கிக் கொண்டிருந்தார். அவரது காலடியில் நான் முழு அமைதியுடன் அமர்ந்திருந்தேன். ஒரு முரட்டுத்தனமான கொசு அந்தச் சொற்பொழிவின் போது என் கவனத்தைச் சிதைக்கப் போட்டியிட்டது. அது என் தொடை மேல் தன் விஷத் தன்மையுள்ள தோலைத் துளைக்கும் ஊசியை செலுத்தவே, என் கை பதிலடி கொடுக்கத் தானாகவே எழும்பியது. கொல்லப் போவதை நிறுத்து! சரியான சமயத்தில் எனக்குப் பதஞ்சலியின் அஹிம்சையைப் (தீங்கின்மை)2 பற்றிய சூத்திரம் நினைவிற்கு வந்தது.

“நீ ஏன் அந்த வேலையை முடிக்கவில்லை?”

“குருதேவா, கொல்வதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?”

“இல்லை, ஆனால் உன் மனத்தில் நீ ஏற்கனவே மரண அடியைக் கொடுத்துவிட்டாயே.”

“எனக்குப் புரியவில்லை.”

“அஹிம்சை என்பதன் மூலம் பதஞ்சலி கூறியிருப்பது கொல்வதற்குள்ள விருப்பத்தை நீக்க வேண்டும் என்பது தான். என் மன ஓட்டத்தை ஸ்ரீ யுக்தேஸ்வர் ஒரு திறந்த புத்தகத்தைப் போலப் படித்தறிந்து விட்டார். இந்த உலகம் அஹிம்சையை உள்ளபடியே செயல்முறைக்குக் கொண்டு வர முடியாதபடி ஓர் அசௌகரியமான நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது. மனிதன் தீமை தரக்கூடிய ஜந்துக்களை முழுவதும் அழிக்கக் கட்டாயப் படுத்தப்படலாம். ஆனால் அவனுக்குக் கோபமோ விரோதமோ ஏற்பட வேண்டிய கட்டாயம் ஏதுமில்லை. மாயையின் சூழ்நிலையில் எல்லா ஜீவன்களுக்கும் சமமான அதிகாரம் உண்டு. படைப்பின் ரகசியத்தைக் கண்டறியும் ஞானிக்கு இயற்கையின் எண்ணற்ற குழப்பத்தைத் தரும் படைப்புகளுடன் சுமுகமாக வாழ முடியும். அழிவின் மேலுள்ள விருப்பத்தை வெற்றி கொள்வதனால் எல்லா மனிதர்களும் இந்த உண்மையை அறிய முடியும்.”

“குருதேவா, ஒரு கொடிய மிருகத்தைக் கொல்லாமல் மனிதன் தன்னை பலியாகக் கொடுத்துவிடலாமா?”

“கூடாது, மனித உடல் விலைமதிப்பற்றது. அதன் தனித்தன்மை பொருந்திய மூளையினாலும் முதுகுத் தண்டின் மையங்களினாலும் – அது மிக உயர்ந்த பரிணாம வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இவைகள் மூலமாக ஒரு முன்னேறிய பக்தனால் தெய்வீகத்தின் உன்னதமான தன்மைகளை முழுமையாகப் புரிந்து கொள்ளவும் வெளிப்படுத்தவும் முடிகிறது. கீழ் நிலையிலுள்ள எந்த உயிரினத்திற்கும் அந்த வசதி இல்லை. மனிதன் ஒரு பிராணியையோ அல்லது உயிரையோ அவசியம் கொல்ல நேரும் பொழுது அவனுக்கு ஒரு சிறு பாவக்கடன் ஏற்படவே செய்கிறது என்பது உண்மை. ஆனால் புனித சாத்திரங்கள் மனித உயிரை அவசியமற்ற முறையில் இழப்பது கர்ம விதியைக் கடுமையாக மீறுவதாகும் என்று போதிக்கின்றன.”

நான் நிம்மதியுடன் பெருமூச்செறிந்தேன். ஒருவருடைய இயற்கையான உணர்வுகளுக்கு சமய நூல்களிலிருந்து பரிந்துரை இந்த மாதிரி கிடைப்பது என்பது எப்பொழுதும் ஏற்படுவதில்லை.

குருதேவர் எனக்குத் தெரிந்தவரை, ஒரு புலியின் அருகிலோ சிறுத்தையின் அருகிலோ இருந்ததில்லை. ஆனால் ஒரு தடவை ஒரு பயங்கரமான நல்ல பாம்பை அவர் எதிர் கொண்ட பொழுது அவர் அன்பினால் அதை வென்று விட்டார். இந்தச் சந்திப்பு குருதேவரின் கடற்கரையில் உள்ள பூரி ஆசிரமத்தில் நடந்தது. குருதேவரின் கடைசிக் காலத்தில் இளம் சீடனாயிருந்த பிரஃபுல்லா இந்தச் சமயத்தில் குருதேவருடன் இருந்தான்.

பிரஃபுல்லா என்னிடம் கூறியது: “ஆசிரமத்திற்கு அருகில் நாங்கள் வெளியில் அமர்ந்திருந்தோம். நான்கடி நீளமுள்ள ஒரு மிகப் பயங்கரமான நல்ல பாம்பு அருகில் தோன்றிற்று. எங்களை நோக்கிக் கோபத்துடன், விரிந்த படத்துடன் அது வேகமாக ஓடி வந்தது. குருதேவர் ஏதோ ஒரு குழந்தையை வரவேற்பது போல் ஒரு சிறு சிரிப்பு சிரித்தார். ஸ்ரீ யுக்தேஸ்வர் தாளலயத்துடன் கைகளைத் தட்டுவதைக3 கண்டதும் நான் மிகத் திகிலடைந்துவிட்டேன். அந்த பயங்கரமான விருந்தாளிக்கு அவர் விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தார்! நான் அப்படியே அமைதியுடன் அசையாமல் இருந்தேன். உள்ளுக்குள் மிகத் தீவிரமாக பிரார்த்தனைச் செய்து கொண்டிருந்தேன். அந்தப் பாம்பு குருதேவரின் அன்பால் கவரப்பட்டு, அவருக்கு வெகு அருகில் அசைவின்றி இருந்தது. அந்தப் பயங்கரமான படம் படிப்படியாக சுருங்கியது. அந்த நாகம் ஸ்ரீ யுக்தேஸ்வரின் பாதங்களுக்கிடையே நெளிந்து சென்று புதர்களில் மறைந்து போயிற்று.”

“ஏன் குருதேவர் கையசைத்துத் தாளமிட வேண்டும்? ஏன் பாம்பு அவரைக் கொத்தவில்லை என்பதெல்லாம் எனக்கு அப்பொழுது புரியவில்லை. நமது தெய்வீக குரு, எந்த உயிரி னத்திடமிருந்தும் தொல்லை ஏற்படக் கூடும் என்கிற பயப்படும் நிலையைத் தாண்டிவிட்டார் என்று இப்பொழுது அறிகிறேன்,” என்று பிரஃபுல்லா முடித்தான்.

அடிக்குறிப்புகள்:

  1. ஒரு யோகியின் சர்வ வல்லமை பொருந்திய சக்தி, வெளிப்புற இந்திரியங்களின் உதவியில்லாமலே பார்க்கவும், ருசிக்கவும், நுகரவும், ஸ்பரிசிக்கவும், கேட்கவும் திறன் பெற்றது என்பது தைத்திரீய ஆரண்யகத்தில் பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ளது. குருடன் முத்தைத் துளைத்தான், விரலில்லாதவன் அதை நூலில் கோர்த்தான்; கழுத்தில்லாதவன் அதை அணிந்தான்; நாவில்லாதவன் அதைப் புகழ்ந்தான்.
  2. அஹிம்சையில் (தீங்கின்மை) ஊறிப் பக்குவப்பட்டவன் முன்னிலையில் எந்த உயிரிடமும் விரோதம் உண்டாகாது – யோக சூத்திரங்கள் 11:35.
  3. நல்ல பாம்பு அதன் வரம்பிற்குள் அசையும் எந்தப் பொருளையும் வேகமாகக் கொத்திவிடும். அனேகமாக சிறிதும் ஆடாமல் அசையாமல் இருப்பது ஒன்றுதான் தப்பும் வழி.
லோடஸ்-ஆரஞ்-லைன்ஆர்ட்

உலகின் மிகவும் பாராட்டப்பட்ட ஆன்மீக படைப்புகளில் ஒன்றான பரமஹம்ஸ யோகானந்தரின் ஒரு யோகியின் சுயசரிதம் பற்றி மேலும் அறிந்துகொள்ள உங்களை அழைக்கிறோம். உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கானோரின் இதயங்களைத் தொட்டு, மனங்களைச் செழுமைப்படுத்தியுள்ள நூல் இது.

இதைப் பகிர