2026, ஜனவரி 31 அன்று — நமது அன்பிற்குரிய மூன்றாவது தலைவர் மற்றும் சங்கமாதா, ஸ்ரீ ஸ்ரீ தயா மாதா அவர்களின் புனித பிறந்த தினத்தன்று — யோகதா சத்சங்க இன்டர்மீடியட் மகாவித்யாலயா (YSIM) ஜெகன்னாத்பூர் கல்வி வளாகத்தில் அமையவுள்ள அதன் இன்டர்மீடியட் மகாவித்யாலயா கட்டடத்திற்கான பூமி பூஜை (அடிக்கல் நாட்டு விழா) மூலம் ஒரு வரலாற்று மைல்கல்லை குறித்தது.
YSS சன்னியாசிகள், கல்வி நிறுவனங்களின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள மற்றும் பக்தர்கள் இந்த புனித நிகழ்வில் பங்கேற்றனர். ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் (SRF) அமைப்பிலிருந்து இந்தியாவுக்கு யாத்திரை மேற்கொண்டிருந்த ஸ்வாமி கேசவானந்தா மற்றும் பிரஃபுல்லானந்தா அவர்களும் இந்நிகழ்வில் உடனிருந்தனர்.
இறை அருளை வேண்டுதல்
பாரம்பரிய வேத சடங்குகளுடன் பூமி பூஜை காலையில் தொடங்கியது. ஸ்வாமி கோகுலானந்தா யஜ்ஞ கர்த்தாவாக செயல்பட்டு, பணியின் வெற்றிகரமான நிறைவிற்காக தெய்வீக அருளாசிகளைக் கோரினார்.
பின்னர், சம்பிரதாயப்படி தீபம் ஏற்றி, பிரம்மச்சாரி பாஸ்கரனந்தாவால் ஒரு சிறிது நேர தியானம் நடத்தப்பட்டு, முறையான நிகழ்ச்சி தொடங்கியது. இந்த திட்டப் பணிகள் சுமூகமாக நிறைவடையவும், கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்புக்காகவும் அனைவரும் பிரார்த்தனை செய்தனர்.
குருஜியின் இலட்சியத்தை முன்னெடுத்துச் செல்லுதல்
நிறுவனத்தின் மரபைப் பின்தொடர்ந்து, ஸ்ரீ ஏ. கே. சக்ஸேனா (செயலாளர், யோகதா சத்சங்க மகாவித்யாலயா), ராஞ்சியில் உள்ள யோகதா சத்சங்க கல்வி நிறுவனங்களின் வரலாற்றைப் பகிர்ந்து கொண்டார். பிரம்மச்சரிய வித்யாலயா நமது குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரால் நிறுவப்பட்டது என்றும், அவரது வாழ்நாளில் ஸ்ரீ ரவீந்திரநாத் தாகூர் மற்றும் மகாத்மா காந்தி போன்ற புகழ்பெற்ற ஆளுமைகளின் வருகைகளால் கௌரவிக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இன்டர்மீடியட் மகாவித்யாலயத்தின் உத்தேசிக்கப்பட்டுள்ள நான்கு மாடிக் கட்டடம், தோராயமாக 46,500 சதுர அடி பரப்பளவில், 30 வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகங்கள், ஒரு நூலகம், நிர்வாக அலுவலகங்கள், மற்றும் சிறுவர், சிறுமிகளுக்கான தனித்தனி வசதிகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.
லெப்டினன்ட் ஜெனரல் ஞான பூஷண் (துணைத் தலைவர், நிர்வாகக் குழு, YSIM), இந்த முயற்சி, YSS-இன் கல்விக்கான முழுமையான அணுகுமுறையின் தனித்துவ அடையாளங்களான நற்பண்பு, ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பு மூலம் இப்பகுதியின் இளைஞர்களை உருவாக்குவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியை பிரதிபலிக்கிறது என்று எடுத்துரைத்தார்.
தனது உரையில், ஸ்வாமி பவித்ரானந்தா, புதிய கட்டடம் பின்தங்கிய குழந்தைகளின் கல்விக்கு ஆதரவளிக்கும் வகையில் நவீன வசதிகளை வழங்கும் என்று எடுத்துரைத்தார். குருஜியின் எப்படி-வாழ-வேண்டும் லட்சியங்களில் வேரூன்றி, இந்நிறுவனம் குணநலன் மேம்பாட்டை மையமாகக் கொண்டு, உடல், மனம் மற்றும் ஆன்மாவின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டம் ₹14 கோடி செலவில் மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் அறிவித்ததோடு, நன்கொடையாளர்களுக்கு மனமார்ந்த நன்றியையும் தெரிவித்தார்.
ஸ்ரீ அரவிந்த் கட்டியார் (செயலாளர், YSIM) நன்றியுரையுடன் விழா நிறைவடைந்தது, அதனைத் தொடர்ந்து பிரசாதமும், மதிய உணவும் வழங்கப்பட்டன.




















