துணிவை வெளிப்படுத்துவதே துணிவை வளர்த்துக் கொள்ளும் வழியாகும் — ஸ்ரீ தயா மாதா

8 மே, 2026

லாஸ் ஏஞ்ஜலீஸில் உள்ள ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் சர்வதேசத் தலைமையகத்தில், ஜூன் 15, 1965 அன்று சத்சங்கத்தின் போது வழங்கப்பட்ட ஓர் உரையின் பகுதி இது. “கரேஜ் டு ஃபேஸ் அவர் ஃபியர்ஸ்” என்ற தலைப்பிலான அந்தப் உரை, 2020ஆம் ஆண்டு யோகதா சத்சங்க இதழில் வெளியிடப்பட்டது. மேலும், இது ஸ்ரீ தயா மாதா அவர்கள் உரைகளின் மூன்றாவது தொகுப்பாக வெளிவரவிருக்கும் ‘Journey With Paramahansa Yogananda’ என்ற நூலில் ஓர் அத்தியாயமாக இடம்பெறும். ஸ்ரீ தயா மாதா அவர்கள் 1955 முதல் 2010ல் அவர் காலமாகும் வரை யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா / ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் இன் தலைவராகவும் சங்கமாதாவாகவும் பணியாற்றினார்.

லோடஸ்-ஆரஞ்-லைன்ஆர்ட்

ஒவ்வொரு மனிதனும் துணிவு என்னும் பண்பைப் பயிற்சித்தல் அவசியம். துணிச்சல் என்பது அச்சம் அறவே இல்லாத நிலையைக் குறிப்பதல்ல; ஒருவர் பெரும் நடுக்கத்தை உணர்ந்தாலும், துணிச்சலுடன் இருக்க முடியும். அச்சங்களுக்கு அடிபணியாமல், மாறாக அவற்றை எதிர்கொண்டு வெல்வதற்கு தன் மனதை உறுதியாக்கிக்கொள்பவரே உண்மையான வீரராவார்.

ஏன் என்றே அறியாமலே நாம் ஏதோ ஒன்றைக் கண்டு அஞ்சக்கூடும்; ஒருவேளை, இந்த வாழ்விலோ அல்லது முற்பிறவியிலோ ஏற்பட்ட, தற்போது மறக்கப்பட்டுவிட்ட கடும் அதிர்ச்சி அனுபவத்தால் இருக்கலாம். ஆனால், நமது பாதுகாப்பற்ற உணர்வுகளை உணர்ச்சிவசப்படாமல் ஆராய்ந்தால், அவை பொதுவாக ஆதாரமற்றவை என்று நாம் கண்டறிவோம். “நாம் அஞ்சவேண்டிய ஒரே விஷயம், அச்சம் மட்டுமே.”* என்ற அந்த கூற்றில் ஆழ்ந்த உண்மை இருக்கிறது. பெரும்பாலும், நமது மனநலத்திற்கும் நல்வாழ்விற்கும் பெரும் அச்சுறுத்தல்களாக அமைபவை, நாம் எதிர்கொள்ளும் புறச் சூழல்கள் அல்ல; மாறாக, ஆன்மாவிற்கே இயல்பாக அமைந்திருக்கும் வலிமையோடும் நம்பிக்கையோடும் அச்சூழல்களை எதிர்கொள்ள நாம் கற்றுக்கொள்ளாததே உண்மையான காரணமாக அமைகிறது.

சிறுவயதில், இருள் மீது பயத்தை உண்டாக்கிய ஓர் அனுபவம் எனக்கு ஏற்பட்டது. அப்போது எனக்குச் சுமார் எட்டு அல்லது ஒன்பது வயதிருக்கும்; என் தாயார் என் இளம் தம்பியை சிறிது நேரம் வைத்துக் கொள்ளச் சொன்னார், நானும் ஜன்னலருகே அமர்ந்து, அவனை அமைதியாகத் தாலாட்டிக் கொண்டிருந்தேன். நான் அப்போதுதான் ‘அலி பாபாவும் நாற்பது திருடர்களும்’ கதையைப் படித்துக் கொண்டிருந்தேன், எளிதில் பாதிக்கப்படக்கூடிய என் இளம் மனம், திருடர்கள் தங்கள் பலியாட்களுக்கு இழைத்திருந்த கோரமான காட்சிகளால் நிறைந்திருந்தது. அக்கம்பக்கத்தைச் சேர்ந்த சில சிறுவர்கள் ஒரு தந்திரம் செய்யத் திட்டமிட்டனர். அவர்கள் ஜன்னலுக்கு வெளியே மெதுவாக ஊர்ந்து வந்து, திடீரெனத் தொடர்ந்து பல பயங்கரமான அலறல்களை எழுப்பினர். நான் பேரச்சம் கொண்டு, அமர்ந்திருந்த நாற்காலியிலிருந்து துள்ளி எழுந்தேன்.

அதற்குப் பிறகு நீண்ட காலத்திற்கு, இருளுக்குள் ஏதேனும் பதுங்கி இருக்கக்கூடும் என்று நான் ஆழ்மனதில் அஞ்சிக்கொண்டிருந்தேன். எதைக் குறித்தும் பயப்படுவதை நான் ஒருபோதும் விரும்பியதில்லை; எனவே ஒரு நாள், “எனக்கு என்ன ஆயிற்று? நான் ஏன் இருளைக் கண்டு பயப்படுகிறேன்?” என்று என்னையே கேட்டுக்கொண்டேன். என்னால் முடிந்தவரை இருண்ட அறைகள் அனைத்திலும் வேண்டுமென்றே நடந்து சென்று, என் பயத்தை வெல்வது என்று நான் முடிவு செய்தேன். அப்படியே செய்தேன்.

ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் கூறியதைப் போல “பயத்தை நேருக்கு நேர் எதிர்கொள், அது உன்னைத் தொந்தரவு செய்வதை நிறுத்திவிடும்.” உங்கள் பயங்களிலிருந்து ஓடி ஒளிய முயல்வது பயனற்றது, ஏனெனில், ஏனெனில் நீங்கள் திரும்பி அவற்றை எதிர்கொள்ளும் வரை அவை உங்களைத் துரத்திக் கொண்டேயிருக்கும். இதை நீங்கள் முதன்முறையாகச் செய்ய முயலும்போது அது மிகவும் கடினமாகத் தோன்றலாம்; இருப்பினும், அதைச் செய்தே தீருங்கள். இரண்டாவது முறை அது இன்னும் எளிதாக இருக்கும்; வெகு விரைவில், அந்தப் பயத்தை நீங்கள் வென்றுவிடுவீர்கள். துணிவை வெளிப்படுத்துவதே, துணிவை வளர்த்துக்கொள்வதற்கான வழியாகும்.

அடிக்குறிப்பு:
* பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட்.

லோடஸ்-ஆரஞ்-லைன்ஆர்ட்

YSS/SRF-இன் அன்பிற்குரிய மூன்றாவது தலைவரும் சங்கமாதாவுமான ஸ்ரீ தயா மாதா அவர்களின் — அன்பு, பணிவு மற்றும் இறைவனுக்கும் தனது குருவான பரமஹம்ஸ யோகானந்தருக்கும் ஆற்றிய அர்ப்பணிப்புமிக்க சேவை நிறைந்த — உத்வேகம் அளிக்கும் வாழ்வைப் பற்றி அறிந்துகொள்ள உங்களை அழைக்கிறோம்.

இதைப் பகிர