பின்வருவது 2007-ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற SRF உலக மாநாட்டின் போது, SRF சன்னியாசினி நமிதா மாயி அவர்கள் வழங்கிய சத்சங்கத்தின் (கேள்வி-பதில்) ஒரு பகுதியாகும். நமிதா மாயி அவர்கள் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் அமைப்பின் சன்னியாசினியாக இருந்து வருகிறார். அவர் YSS/SRF அமைப்பின் அன்பிற்குரிய சங்கமாதாவும், மூன்றாவது தலைவருமான ஸ்ரீ தயா மாதா அவர்களின் அலுவலகத்தில், அவரது செயலாளர்களில் ஒருவராகவும் தனிப்பட்ட உதவியாளராகவும் சுமார் நாற்பது ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அவர் தற்போது லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள SRF சர்வதேசத் தலைமையகத்தில் வசித்து வருகிறார். இந்தச் சத்சங்கத்தின் விரிவான பகுதிகள், “அனைவரிலும் இறைவனைக் காணுதல்” என்ற தலைப்பில், 2025-ஆம் ஆண்டு யோகதா சத்சங்க வருடாந்திர இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
கேள்வி: “நான் பிறர் மீது அன்பு செலுத்தவும், அவர்களுடன் இன்னும் இணக்கமான உறவை வளர்த்துக் கொள்ளவும் விரும்புகிறேன். இதற்காக நான் கடைப்பிடிக்க வேண்டிய சில யோசனைகளைத் தயவுசெய்து கூற முடியுமா?”
இது ஒரு பரந்த விஷயம், ஆனால் இதற்கான எளிமையான பதில் என்னவென்றால், நாம் தியானம் செய்யும்போது, இறைவனின் அந்த இனிமையை நாம் உணரத் தொடங்குகிறோம்; அந்த அன்பே மற்றவர்களிடம் நம்மை நெருங்கச் செய்கிறது.
நாம் ஒவ்வொருவருமே அந்தத் தெய்வீகப் பரம்பொருளின் ஒரு சுடர்தான் என்பதையும், இறைவன் அனைவரிலும் குடி கொண்டுள்ளார் என்பதையும் நாம் உணரத் தொடங்கும்போது, மற்றவர்களை ஒரு வித்தியாசமான கோணத்தில், ஒரு புதிய ஒளியில் நாம் காணத் தொடங்குகிறோம்.
13-ஆம் நூற்றாண்டின் பாரசீகக் கவிஞரான ஹாபிஸ், இந்தச் சிந்தனையை மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளார். அவர் எழுதினார்: “இறைவன் உங்களை ஒரு விருந்துக்கு அழைத்து, ‘இன்று இரவு நடன அரங்கில் இருப்பவர்கள் அனைவரும் எனது சிறப்பு விருந்தினர்கள்’ என்று கூறினால்—அங்கு சென்றதும் நீங்கள் அவர்களை எப்படி நடத்துவீர்கள்?” ஹாபிஸ் கூறுகிறார், “உண்மையில், உண்மையில் இறைவனின் வைரங்கள் இழைக்கப்பட்ட நடன மேடையில் இல்லாதவர் இவ்வுலகில் எவருமே இல்லை.”
பல ஆண்டுகளுக்கு முன்பு, நான் SRF-இல் உறுப்பினராகச் சேர்ந்த சிறிது காலத்திற்குப் பின், மேற்படிப்பிற்காக லண்டன் சென்றேன். நான் லண்டனைச் சென்றடைந்ததும் செய்த முதல் காரியம், அங்குள்ள SRF தியானக் குழுவைத் தேடிக் கண்டுபிடித்ததுதான்.
நான் அங்கே சென்றடைந்ததும், என்னைப் போலவே இத்தாலியைச் சேர்ந்த மற்றொரு பெண்மணிக்கு அறிமுகம் செய்யப்பட்டேன். அவர் மிகவும் அழகாகவும், கம்பீரமாகவும் இருந்தார். நான் அவருக்கு வாழ்த்துச் சொன்னபோது, அவர் மிகுந்த கர்வத்துடன் , ‘நான் இன்னாரது கோமகள்’ என்று கூறினார். அவ்வளவுதான். அவர் மீது எனக்கு உடனேயே வெறுப்பு ஏற்பட்டது. தியானம் தொடங்கியபோது நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன், ஏனெனில் அதன் பிறகு அவரிடம் நான் மீண்டும் பேச வேண்டிய அவசியம் இருக்கவில்லை.
தியானம் முடிந்த உடனேயே, நான் ஒரு விரைவான “குட் நைட்” கூறிவிட்டு, எனது ஹோட்டல் அறைக்குத் திரும்பினேன். அறைக் கதவைத் திறந்தபோது, நான் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போனேன். ஒரு அலமாரியில் நமது குருதேவர் பரமஹம்ஸ யோகானந்தரின் “இறுதிப் புன்னகை” புகைப்படத்தை வைத்திருந்தேன்; அந்தத் தருணத்தில் அவர் அப்படியே அந்த ‘ கோமகள்’ போலவே எனக்குத் தெரிந்தார்! அவரது தலைமுடி கூடப் பொன்னிறமாக இருந்தது!
சில ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த கோமகள் மவுண்ட் வாஷிங்டனில் உள்ள SRF சர்வதேசத் தலைமையகத்திற்கு வந்தபோது நான் அவரைச் சந்தித்தேன் — அந்த நேரத்தில் நான் ஆசிரமத்தில் ஒரு சன்னியாசியாக வாழ்ந்து கொண்டிருந்தேன் — அவர் மீது எனக்கு உண்மையிலேயே நன்றியும் அன்பும் ஏற்பட்டது. குருநாதர் எனக்கு ஒரு மிகச்சிறந்த பாடத்தைக் கற்றுக்கொடுக்க அவரைப் பயன்படுத்திக்கொண்டார் என்பதற்காக மட்டுமல்லாமல், அவரது முகம் மற்றும் பொன்னிறத் தலைமுடியைத் தாண்டி நான் பார்த்தபோது, அங்கே பரமஹம்ஸஜியின் அந்தத் குறும்புத்தனமான பார்வையை என்னால் காண முடிந்தது.
ஆன்ம அனுபூதி நோக்கிய பயணத்தில் நாம் மற்றவர்களை நமது பயணத் தோழர்களாகவும் — பல நேரங்களில் நமக்குத் தெரியாமலேயே நமக்கு பாடம் புகட்டும் தனிப்பட்ட ஆசிரியர்களாகவும் — பார்க்கத் தொடங்கினால், அவர்களை இன்னும் எளிதாக நேசிக்க முடியும்.
அப்படியானால் நாம் வேறென்ன செய்ய முடியும்? சிறிய விஷயங்களிலிருந்து தொடங்குங்கள். உங்கள் காலைத் தியானத்திற்குப் பிறகு, அன்றைய தினம் யாருக்காவது உதவ குருஜி உங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவரிடம் எப்போதாவது கேட்டிருக்கிறீர்களா? உங்கள் இதயத்தையும் மனத்தையும் திறந்து வைத்திருந்தால், நடக்கும் அற்புதமான விஷயங்களைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அவர் உங்கள் மூலமாகச் செயல்பட முடியும்.
இன்னொருவரை மகிழ்விப்பதற்காக உங்களுக்கு மிகவும் பிரியமான ஒன்றை விட்டுக் கொடுக்கத் தயங்காதீர்கள். அது உங்களுக்கு எவ்வளவு மதிப்புமிக்கதாக இருந்தாலும் அதைக் கொடுக்க அஞ்சாதீர்கள். ஏனெனில், அதை நாம் எதிர்கொள்வோம், நாம் (மரணத்திற்குப் பின்) சூட்சும உலகிற்கு செல்லும்போது, நம்மால் எதையும் எடுத்துச் செல்ல முடியாது. எதுவுமே இல்லை. நமது ஆன்மா மட்டுமே முன்னேறிச் செல்லும். எனவே, இப்பொழுதே இன்னொருவரை ஏன் மகிழ்ச்சியடையச் செய்யக்கூடாது? அதன் மூலம் ஒரு சிறிய நல்வினையையாவது நாம் ஈட்டிக்கொள்ளலாமே.
இன்னொருவருக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு சிறு குறிப்பையோ அல்லது பாராட்டையோ அனுப்பத் தயங்காதீர்கள்; அல்லது தனிமையில் இருப்பவருக்கு ஒரு பூங்கொத்தை அளியுங்கள். மற்றவர்களிடம் அன்புடன் நெருங்குங்கள். அன்பை உங்களுக்குள்ளேயே வைத்திருக்கும்போது அது பெருகுவதில்லை, மாறாக அதை நீங்கள் மற்றவர்களுக்குக் கொடுக்கும்போதே அது உங்களைத் தேடி வரும்.
மற்றவர்களுக்காகப் பிரார்த்தனை செய்யத் தயங்காதீர்கள். உங்களுக்கு எவ்வளவு வேலை இருந்தாலும், உங்கள் தியானத்தின் இறுதியில், ஒரு சில நிமிடங்களை ஒதுக்கி மற்றவர்களுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். பிரார்த்தனை என்பது மிகவும் வலிமையானது. அந்த வழியிலும் உங்களால் மற்றவர்களை அணுக முடியும். நீங்கள் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்தது அவர்களுக்குத் தெரியாமலேயே இருக்கலாம், ஆனால் அதன் மூலம் நீங்கள் அவர்களது வாழ்க்கையையே மாற்றக்கூடும்.
அதன் பிறகு, ஒருவேளை குருதேவர் உங்கள் மூலமாகச் செய்த காரியம் என்னவென்று நீங்கள் தெரிந்துகொள்ளும்போது, நீங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைவீர்கள் — மற்றவர்களை அணுகுவதில் உங்களுக்கிருந்த அந்தத் தயக்கத்தை அல்லது இயலாமையை முறியடிக்க ஏதோ ஒன்று செய்திருக்கிறோம் என்பதை அறிவது உங்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தரும்.
மிகவும் சிந்தனைமிக்க குழந்தையைத் தேர்ந்தெடுக்கும் போட்டியில் வெற்றி பெற்ற ஒரு சிறுவனைப் பற்றிய கதையை நான் வாசித்தேன். அந்த நான்கு வயது சிறுவனின் பக்கத்து வீட்டு முதியவர் ஒருவரின் மனைவி சமீபத்தில் காலமானார். அந்த முதியவர் அவரது வீட்டு புல்வெளியில் அமர்ந்து அழுது கொண்டிருப்பதை அந்தச் சிறுவன் பார்த்தான்; உடனே அவரிடம் சென்று அவர் மடி மீது ஏறி அமர்ந்து கொண்டான்.
பின்னர், அவனது அம்மா அந்தச் சிறுவனிடம், “கண்ணே, அந்த முதியவரிடம் நீ என்ன சொன்னாய்?” என்று கேட்டார். அதற்கு அவன், “ஒன்றுமில்லை, அவர் அழுவதற்கு மட்டுமே நான் உதவினேன்,” என்று கூறினான்.
பெரிய செயல்கள் மக்களின் இதயத்தை அடிக்கடி தொடுவதில்லை. ஒவ்வொரு நாளும் நம்மால் செய்யக்கூடிய சிறிய, சிந்தனைமிக்க விஷயங்களே மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. எனவே, மற்றவர்களை நேசிப்பதற்காக, கடவுளிடமும் குருவிடமும் அவர்களது அன்பையே உங்களுக்குத் தருமாறு கேளுங்கள். அப்போது உங்கள் இதயம் மலரும் — மேலும் அந்தத் தெய்வீக அன்பை நீங்கள் அனைவருக்கும் வழங்கவும் முடியும், உங்களால் மற்றவர்களிடம் மிக எளிதாக நெருங்கிப் பழகவும் முடியும்.
நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் இறைவனின் எல்லையற்ற சக்தியான — பிரார்த்தனையின் ஆற்றல் மூலம் மற்றவர்களுக்கு எவ்வாறு உதவலாம் என்பதைப் பற்றி மேலும் அறிய, யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியா/ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் -ன் உலகளாவிய பிரார்த்தனை வட்டத்தில் இணைய உங்களை அன்புடன் அழைக்கிறோம்.




















