“இனம், நிறம் அல்லது மதத்தை காட்டிலும் ஓர் ஆழமான ஒருங்கிணைப்பைக் கண்டறிதல்” ஸ்வாமி சிதானந்த கிரி

3 ஜூன், 2020

ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்த கிரியின் செய்தி
யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் இன் தலைவர்

அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள தற்போதைய நிலைமையைப் பற்றி பேசுகையில், ஸ்வாமி சிதானந்தஜி, இன அநீதி மற்றும் பிரிவினையின் தீவிரப் பிரச்சனையைப் பற்றியும், அறிகுறிகளை மட்டுமல்லாது, மனிதகுலம் எதிர்கொள்ளும் இந்த நோயின் காரணத்தை நிவர்த்தி செய்வதற்கான வழியை பற்றியும் விவரிக்கிறார். தியானம் செய்பவர்கள் முதலில் தியானத்தின் மூலம் தங்களுக்குள் அமைதியை ஏற்படுத்திக் கொண்டு, நம் சமூகத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள இனப் பாகுபாடுகளுக்கு தீர்வு காண உதவும் ஆன்மீக செயல்பாடுகள் மூலமாக அந்த அமைதியை மற்றவர்களிடம் பரவச் செய்யும் உண்மையான அமைதி நிலைநாட்டுபவர்களாக இருக்க அவர் ஊக்குவிக்கிறார்.

Swami Chidananda Giri thanking for love, support and prayers

ஸ்வாமி சிதானந்தாவின் செய்தியின் உரை கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

ஆன்மீகப் பாதையில் இருக்கும் தெய்வீக நண்பர்களே, வாழ்த்துக்களும் வணக்கங்களும்.

அமெரிக்காவிலும் உலகெங்கிலும் பல நகரங்களில் எழுந்துள்ள இன அடிப்படையிலான கொந்தளிப்பு புயல்கள் குறித்து என்னைப் போலவே நீங்களும் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளீர்கள் என்பதை நான் அறிவேன். இது தொடர்பாக சில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

முதலில், பிரச்சனையைப் பற்றி தெளிவாக இருப்போம். இன வெறி மற்றும் அநீதி மனித இதயங்களிலும் மனதிலும் உள்ள ஒரு நோயாகும் – நமக்குள் இறைவனுக்கு இடம் அளிக்காத நம்மில் எவரின் இதயங்களிலும் மனதிலும் உள்ள நோய். சமீப நாட்களில், அமெரிக்கா முழுவதும், அந்த நோயின் புதிய எழுச்சியை நாம் கண்டிருக்கிறோம். அமெரிக்கா மட்டுமல்ல: உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நாடுகள் இனம், நிறம் மற்றும் நிச்சயமாக பல இடங்கள் மதத்தின் அடிப்படையில் பாகுபாடு, வெறுப்பு ஆகியவற்றால் ஏதேனும் ஒரு அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளன.

எந்தவொரு நாள்பட்ட நோயையும் போலவே, அறிகுறிகளுக்கும் நாம் சிகிச்சையளிக்க முடியும் – அது பயனுள்ளதாக இருக்கும், சந்தேகமில்லை – ஆனால் அதற்கான காரணத்தையும் நாம் கவனிக்க வேண்டும்.
இதுபோன்ற சமயங்களில், ஆன்மீக நாட்டமுள்ள அனைத்து இதயங்களும் மனங்களும் தான் உதவ என்ன செய்ய முடியும் என்று தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்கின்றன. இந்த உலகில் நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு பாத்திரங்களை வகிக்கிறோம், வெவ்வேறு திறமைகள் மற்றும் திறன்களுடன்; இதன் பொருள் என்னவென்றால், எந்த நேரத்திலும் நமது மனித குலம் எதிர்கொள்ளும் குறிப்பிட்ட நெருக்கடி அல்லது பிரச்சனையைப் பொறுத்து மற்றவர்களுக்கு சேவை செய்ய நாம் வெவ்வேறு வழிகளில் தகுதி பெற்றுள்ளோம் என்பதாகும்.

நமது SRF மற்றும் YSS உறுப்பினர்களில் பலர் தங்கள் தொழில் மற்றும் தொழில்சார் திறமைகளைப் பயன்படுத்துகிறார்கள், அல்லது அவர்கள் அறநலப் பணி அல்லது உதவியை அளித்து, மற்றவர்களது வாழ்க்கையையும், நமது சமூகத்தையும் உலகத்தையும் மேம்படுத்த உதவுகிறார்கள் என்பதை நான் அறிவேன். இறைவன் அவர்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பானாக! வறுமை, இன அநீதி மற்றும் மனித அறியாமையின் பிற விளைவுகளை ஒழிக்க உலகம் முழுவதும் தீவிரமாக பங்களிக்கும் ஒவ்வொருவரையும் இறைவன் ஆசீர்வதிப்பானாக.

ஆனால் பரமஹம்ஸ யோகானந்தரின் அனைத்து சீடர்களும், தியானம் சார்ந்த ஆன்மீக போதனைகளை பின்பற்றுபவர்களும் சேவையாற்றக்கூடிய மற்றும் சேவையாற்ற வேண்டிய ஒரு வழி உள்ளது. அது அமைதி உருவாக்குபவராக இருப்பதே ஆகும். தியானத்தின் மூலம் நமக்குள் அமைதியை ஏற்படுத்தி, நாம் வெளிப்படுத்தும் அமைதி, நல்லிணக்கம், பிரார்த்தனை மற்றும் இறை அன்பு ஆகியவற்றின் அதிர்வுகளால் நம்மைச் சுற்றியுள்ள அனைவருக்கும் சேவை செய்வது.

நமது குரு மீண்டும் மீண்டும் வலியுறுத்தியது போல, மனித குலத்திற்கு இத்தகைய மன வேதனையைக் கொணரும் தொடர்ச்சியான சமூகப் பிரச்சினைகளுக்கு ஒரே நிரந்தர தீர்வு நம்மை மாற்றிக் கொள்வதே, நாம் மேலும் அமைதியான, அன்பான, இறைவனை மையமாகக் கொண்டு வாழும் நபர்களாக மாறுவதே ஆகும். அப்படி செய்வதுதான் மூல காரணத்தை களையும். மற்றவை அனைத்தும், சிறந்தவை என்றாலும், அறிகுறிகளை மட்டுமே சரி செய்கின்றன.

எனவே, நாம் கடந்து செல்லும் சிக்கலான காலங்களை குணப்படுத்துவதற்கான நமது பங்களிப்பாக அமைதியை உருவாகுவதற்கும், பரப்புவதற்கும் இப்போதே ஒன்றாக சிறிது நேரம் செலவிடுவோம்.

ஏனென்றால் வெறும் வார்த்தைகள் போதாது. இது போன்ற காலங்களில் – பெரும் தவறான புரிதல், பயம் மற்றும் கோபத்தின் காலங்களில் – நாம் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளும் வார்த்தைகளுக்கு சிறிதளவு பயனே உண்டாகிறது. பெரும்பாலும் அவை எதிர்மறை விளைவையே ஏற்படுத்துகின்றன, ஏனென்றால் மற்ற மனிதர்களுடன் நாம் பேசும் வார்த்தைகள் மிகவும் எளிதில் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகின்றன. ஆனால் நம் இருதயத்தின் ஆழ்ந்த ஏக்கங்களிலிருந்து இறைவனிடத்துப் பாயும் வார்த்தைகள் – பிரார்த்தனை, தியானம் மற்றும் இறைத் தொடர்பு போன்றவைகளில் – வெறும் மனித உரையின் அனைத்து வடிவங்களையும் தாண்டி ஒரு சக்தியைக் கொண்டுள்ளன.

எனவே எனது பிரார்த்தனை இரண்டு விதமாக உள்ளது: நம் யுகத்தின் நல்லெண்ணம் கொண்ட சீர்திருத்தவாதிகளின் — அனைத்து இன, மத, சமூக, அரசியல் ஒற்றுமையாளர்கள் – பேச்சை நாம் அனைவரும் மரியாதையுடனும், முன்னுரிமை கொடுத்தும் கேட்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். ஒருவருக்கொருவர் செவிமடுக்கும் அந்த ஆழ்ந்த ஆன்மீக செயலினால், வார்த்தைகள் வெளிப்படுத்தும் உன்னத இலட்சியங்களை, குணமளித்தலை ஊக்குவிக்கும் உணர்வுபூர்வ செயலாக மாற்றக்கூடிய சிறந்த வழியைக் கண்டறிய முயல்வோம்.
ஆனால், அதைவிட முக்கியமாக, இந்த பிரிவினைவாத காலத்தில் நம்முடைய இதயப்பூர்வமான வார்த்தைகள், நம்முடைய இயல்பில் உள்ள அனைத்து சிறந்த உண்மையான, மற்றும் உன்னதமானவற்றின் ஆதாரம் மற்றும் ஊற்றான இறைவனை அடைய வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்:

தியானத்தின் உள்ளார்ந்த மௌனத்தில் காணப்படும் அமைதி மற்றும் புரிதலின் சக்தியை நாம் பேசும் மற்றும் கேட்கும் வார்த்தைகளில் வெளிக்கொணர, தேவையான நேரத்தை எடுத்து, நம் ஆன்மாக்களுக்குள் எவ்வளவு ஆழ்ந்து செல்ல வேண்டும் என்பதை உணர்ந்தறிவோம். நாம் ஒருவருக்கொருவர் பேசும் வார்த்தைகளுடன், இறைவனிடம் பேசும் நம் வார்த்தைகளும் செய்யும் பிரார்த்தனைகளும், ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளுதலுக்கு இட்டுச் செல்லும் தற்போதைய மோதல்கள் மற்றும் இணக்கமின்மைகளுக்கான நமது எதிர்வினையை வரையறுத்து வடிவமைக்கட்டும்.

இன அநீதியை குணப்படுத்துவதற்கான ஒரு பிரார்த்தனை

தெய்வத் தந்தையே, தாயே, நண்பனே, அன்பிற்குரிய இறைவா,

இன அநீதி மற்றும் பிரிவினைக்கு எதிரான பரவலான எதிர்ப்புகளுடன் அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் பரவி வரும் கோபம், பயம், தவறான புரிதல் மற்றும் வலி ஆகியவற்றை எதிர்கொள்வதில் நாங்கள் எடுக்கக்கூடிய மிகவும் ஆக்கபூர்வமான அணுகுமுறையை எங்களுக்குக் காட்டுங்கள்.

எங்கள் அனைவரின் சாசுவத தந்தையே-தாயே, அமெரிக்காவிலும் பல நாடுகளிலும் நிலவும் துன்பம் மற்றும் இன அடிப்படையிலான அநீதியைத் தணிக்க, எவ்வாறு கேட்பது, உணருவது, ஞானத்தால் வழிநடத்தப்படும் நடவடிக்கைகளை எடுப்பது என்பதை, நாங்கள் தெய்வீக சமமானவர்களாக படைக்கப்பட்ட சகோதர சகோதரி ஆன்மாக்கள் என்ற முறையில் எங்களுக்குக் கற்றுக் கொடுங்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக, அன்பு, கருணை மற்றும் குணப்படுத்துதலின் இறைவா, தியானத்தின் மூலமும், எங்கள் கீழ்நிலை உணர்வுகளை ஒழுக்கப்படுத்திக் கொள்வதன் மூலமும் எங்கள் ஆன்மாக்களில் உமது இருப்பிலிருந்து பாயும் உலகளாவிய அன்பை எங்களில் எழுப்புவோமாக; அதனுடன், நமது உலகக் குடும்பத்தினர் ஒவ்வொருவரின் நல்வாழ்வு, வளமை மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்காக, எமது பிரார்த்தனைகள், எங்களை மாற்றிக் கொள்வதற்கான எமது முயற்சிகள் மற்றும் வெளிப்புற சேவை தொடர்பான எந்த செயல்பாடுகளுக்கும் பங்களிக்க வேண்டும் என்ற உறுதியை எங்களுக்குள் எழுப்பிக் கொள்வோமாக.

ஓம். சாந்தி. ஆமென்.

[ஸ்வாமி சிதானந்தஜி தியானம் வழிநடத்துகிறார்.]

பிரச்சனையின் கர்மவினை காரணத்தை நிவர்த்தி செய்தல்

அன்பார்ந்த நண்பர்களே, நாம் நினைவில் கொள்வோம்: குணப்படுத்தல் நடப்பதற்கு, அறிகுறிகளை மட்டும் அல்ல, இந்த சிக்கல்களின் காரணத்தை ஒப்புக் கொள்ளவும், அவற்றைத் தீர்க்கவும் நாம் ஆன்மீக முதிர்ச்சியைக் கண்டறிய வேண்டும்.

கர்ம விதிதான் நமது தனிமனித வாழ்க்கையின், தேச வாழ்க்கையின் சக்கரங்களை இயக்குகிறது. இந்த தற்போதைய கிளர்ச்சிகள் உண்மையிலேயே ஒரு ஆழமான அடிப்படை காரணத்தின் அறிகுறிகளாகும். நம்மில் யாரும் அவற்றைக் குறைத்து மதிப்பிடுவது அல்லது நியாயப்படுத்துவது போன்ற தவறுகளைச் செய்யாமல் இருக்க இதைச் சொல்கிறேன். நம்முடைய தனிப்பட்ட வாழ்விலோ அல்லது சமூகத்திலோ உள்ள எந்த ஆழமான கர்மவினை நிலையைப் போலவே, நாம் அவற்றை கையாண்டு, செயல்படுத்தி, அவை நமக்குக் கற்பிக்க வேண்டிய ஆன்மீகப் பாடங்களைக் கற்றுக் கொள்ளாத வரை அவை நீங்காது.

நம் குருதேவர் பரமஹம்ஸ யோகானந்தர் அமெரிக்காவை நேசித்தார். அதன் விதியைப் பற்றி அடிக்கடி கூறுவார். அமெரிக்கா உலக நாடுகளின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பதாகவும், அது உலகில் செய்த அனைத்து நன்மைகளுக்கும் மகத்தான நல்ல கர்மவினையைக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். ஆயினும்கூட, ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மற்றும் பூர்வீக அமெரிக்கர்களை வெட்கக்கேடான முறையில் நடத்திய இந்த தேசத்தின் வரலாறு உருவாக்கிய வேதனையான கர்ம விளைவுகளைப் பற்றி அவர் தெளிவாக ஆனால் தொலைநோக்கு ஆன்மீக பார்வையுடன் பேசினார். அவர் வசிக்கும் நாடு இந்த சீர்கேட்டை கடக்க உதவுவதற்கான ஒரு பெரிய பொறுப்பை உணர்ந்தார் – அமெரிக்கர்கள் தங்கள் சிறந்த மற்றும் உன்னதமான குணங்களை வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் விரும்பியதாலோ, அல்லது ஒரு கருமை நிறமுள்ள வெளிநாட்டவராக நிந்தை செய்யப்பட்டதின் நேரடி அனுபவத்தின் காரணமாகவோ அல்ல; ஆனால் மனிதகுலம் முழுவதின் மீதும் அவர் கொண்டிருந்த கிறிஸ்துவைப் போன்ற அன்பின் காரணமாகவும், இந்த பிரச்சினைகளுக்கான பதில் ஆன்மீகத்தில் உள்ளது, வெளிப்புற மதச்சார்பற்ற அல்லது சமூக சீர்திருத்தங்களில் மட்டுமல்ல என்ற அவருடைய தெய்வீக உணர்வின் காரணமாகத் – அவரது தெய்வீக நம்பிக்கை – தான்.

எனவே அவரது அதீத ஞானம் மற்றும் உத்வேகம் நிறைந்த வார்த்தைகளுடன் நான் நிறைவு செய்கிறேன். அந்த வார்த்தைகளுக்குப் பின்னால் உள்ள ஆன்மீக சக்தியை உணருங்கள், அந்த அன்பின் சக்தி நம் ஒவ்வொருவருக்கும் நமக்கும், அனைத்து இனங்களைச் சேர்ந்த நமது சகோதர சகோதரிகளுக்கும், நமது உலகத்திற்கும் ஒரு புதிய நம்பிக்கையையும் சாத்தியக்கூறுகளையும் வழங்கட்டும்.

அவர் கூறினார்:

“நாம் தியானத்தில் இறைவனை நேசிக்கக் கற்றுக்கொண்டவுடன், நம் குடும்பத்தை நேசிப்பது போல அனைத்து மனிதர்களையும் நேசிப்போம். தங்கள் ஆன்ம-அனுபூதி மூலம் இறைவனை அறிந்தவர்கள் – உண்மையில் இறைவனை உணர்ந்தவர்கள் – அவர்கள் மட்டுமே மனிதகுலத்தை நேசிக்க முடியும்; தனிப்பட்ட முறையில் அல்ல, ஆனால் அவர்களின் உடன் பிறந்த சகோதரர்களாக, ஒரே தந்தையின் குழந்தைகளாக.”

para-ornament

“எல்லா இனங்களின் இரத்த நாளங்களிலும் ஒரே உயிர் நாடி சுழன்று கொண்டிருக்கிறது என்பதை உணருங்கள். எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், இறைவன் எல்லா உயிர்களிலும் வாழ்ந்து, சுவாசிக்கும் போது, வேறு எந்த மனிதனையும் வெறுக்க யாரேனும் எப்படித் துணிவார்கள்? ஒரு சில ஆண்டுகளுக்கே நாம் அமெரிக்கர்கள் அல்லது இந்துக்கள் அல்லது வேறு சில தேசிய இனத்தவர்கள், ஆனால் நாம் என்றென்றைக்கும் இறைவனின் குழந்தைகள்.”

para-ornament

“நீங்கள்‌ இறைவனைத்‌ தொடர்பு கொண்டால்‌, அவன்‌ ஒவ்வொருவருக்குள்ளும்‌ இருக்கிறான்‌ என்பதையும்‌, அவன்‌ எல்லா இனத்தவர்களின்‌ குழந்தைகளாகவும்‌ மாறியுள்ளான்‌ என்பதையும்‌ அறிவீர்கள்‌. பிறகு நீங்கள்‌ எவருடைய எதிரியாகவும்‌ இருக்க முடியாது. இந்த முழு உலகமும்‌, அந்த உலகளாவிய அன்பு மூலம்‌ நேசிக்க முடியுமானால்‌, மனிதர்கள்‌ தங்களுக்குள்ளேயே ஒருவருக்கு எதிராக மற்றொருவர்‌ ஆயுதம்‌ ஏந்த வேண்டிய அவசியம்‌ இருக்காது. நமது சொந்த கிறிஸ்துவைப்‌ போன்ற உதாரணத்தின்‌ மூலம்‌ நாம்‌ அனைத்து மதங்கள்‌, அனைத்து நாடுகள்‌ மற்றும்‌ அனைத்து இனங்களின்‌ மத்தியில்‌ ஒற்றுமையைக்‌ கொண்டுவர வேண்டும்‌.”

para-ornament

எனவே, நண்பர்களே, ஒரு சிறந்த உலகத்தை உருவாக்குவது நமது சக்திக்கு உட்பட்டது என்பதை அறிந்து, அந்த வார்த்தைகளில் நம்பிக்கை வைப்போம். நாம் ஒவ்வொரு நாளும் இறைவனை தியானிக்கும்போது, தெய்வீக அமைதி மற்றும் அன்பின் உண்மையான உணர்வை பிரார்த்தனையிலும் பிரார்த்தனை வழிகாட்டும் செயலிலும் உலகிற்கு பரவச் செய்வோம்.

இறைவன் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பானாக, நேசிப்பானாக.

இதைப் பகிர