கீழ்க்காணும் பதிவு, பரமஹம்ஸ யோகானந்தரின் “கல்டிவேட் ஃப்ரெண்ட்ஷிப் வித் காட்” என்ற உரையிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு பகுதியாகும். இந்த உரையை பரமஹம்ஸ யோகானந்தரின் தொகுக்கப்பட்ட சொற்பொழிவுகள் மற்றும் கட்டுரைகள் தொடரின் நான்காவது தொகுதியான ஸால்விங் த மிஸ்டரி ஆஃப் லைஃப் என்ற புத்தகத்தில் முழுமையாகப் படிக்கலாம். இது ஹார்ட்பேக், பேப்பர்பேக் மற்றும் மின்புத்தக பதிப்புகளில் தற்போது கிடைக்கிறது.
எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்: உங்களுக்கு சிறிது ஓய்வு நேரம் கிடைக்கும்போது, அதை இறைவனுடன் உங்கள் நட்பை வளர்ப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். இது எனது சொந்த அனுபவத்திலிருந்து நான் உங்களுக்கு அளிக்கும் ஒரு பணிவான ஆலோசனையாகும்….
இறைவனுடன் நட்பு வளர்த்துக் கொள்ளவும், அவனை நேசிப்பதற்கும், நாம் அவனை அறிந்துகொள்ள வேண்டும். அசைவற்ற நிலையிலும் அமைதியிலும் உங்கள் ஆன்மாவை அவனிடம் அர்ப்பணியுங்கள்.
ஒருவேளை, சில மாதங்களில், வேதங்கள் மற்றும் மற்ற சாத்திரங்களில் உள்ள ஞானத்திலிருந்து நான் உங்களுக்கு இறைவனைப் பற்றி கற்பிக்கக்கூடும்; ஆனால் அந்த உண்மைகளை நீங்கள் உங்கள் ஆன்மாவுக்குள் உணர்ந்தறியாவிட்டால் அது உங்களுக்குப் பெரிய பயனை அளிக்காது.
ஆன்ம-அனுபூதி அகஅமைதியில்தான் கிடைக்கிறது. அமைதியை இறைவன் விரும்புகிறான். அமைதியே தெய்வத் தந்தையின் புனித பீடமும் சரணாலயமும் ஆகும். அமைதியில் அவனைத் தேடுவதைப் பயிற்சி செய்யுங்கள். தியானமே வழி. நான் உங்களுக்கு அளிக்கக்கூடிய மிகச் சிறந்த ஆலோசனை அதுவே. நூல்களையும், வகுப்புகளையும், தத்துவ விளக்கங்களையும் நீங்கள் பெறலாம். ஆனால் இதை மட்டும் மறந்துவிடாதீர்கள்: உங்கள் ஓய்வு நேரம் முழுவதையும் தியானம் செய்வதற்கும், இறைவனுடன் நட்பை வளர்த்துக் கொள்வதற்கும் உபயோகியுங்கள்.
தியானத்தின் முதல் சில நிமிடங்களில் உங்கள் மனம் அலைபாயக்கூடும், ஆனால் எண்ணங்கள் அடங்கும் வரை நீண்ட நேரம் விடாமுயற்சியுடன் இருங்கள். நீங்கள் இப்படி நினைப்பீர்கள்: “ஓ, இன்று எனக்கு இந்த வேலை இருக்கிறது; நான் இன்று இரவு சற்று நேரம் கழித்து தியானம் செய்வேன்.” அவனை அறிவதின் மிகப்பெரிய முக்கியத்துவத்தை நீங்கள் உணராத வரை, அந்த “இன்று இரவு” உங்களுக்கு ஒருபோதும் வரப்போவதில்லை; கவனத்தைத் திசைதிருப்பும் வேலைகள் உங்கள் காலை, மதியம் மற்றும் மாலைப் பொழுதுகளை நிரப்பிவிடும், இறுதியில் இரவு வரும்போது நீங்கள் உதவியற்ற நிலையில் உறக்கத்திற்கு ஆட்பட்டுவிடுவீர்கள்.
ஆகவே, நீங்கள் தியானம் செய்ய அமரும்போது, மனதை ஒருமுகப்படுத்துங்கள். அலைபாயும் எண்ணங்களை விரட்டிவிட்டு, “தந்தையே, என்னுடன் இருப்பீராக. எனக்கு ஒரு பதில் வேண்டும்; உம்முடைய அருளாசியை எனக்குள் உணர விரும்புகிறேன்,” என்று உறுதியாகக் கூறுங்கள். ஒவ்வொரு முறையும் இன்னும் ஆழமாக மீண்டும் மீண்டும் அவனிடம் அதையே சொல்லுங்கள்.
“வானுலகத் தந்தையே, நான் உம்மை நேசிக்கிறேன்” என்று கூறும் அதே நேரத்தில், நீங்கள் சாப்பிட விரும்பும் ஒரு சுவையான கேக்கை பற்றி நினைத்துக் கொண்டிருப்பது போல் மனம் அலைபாய பிரார்த்திப்பது சிறிதும் பயனற்றது. முதல் வார்த்தையான “தந்தையே” என்று கூறுங்கள், அதுவே போதும்; ஆனால் அதை நீங்கள் உணரும் வரை சொல்லுங்கள். பின்னர் உங்கள் பிரார்த்தனையின் அடுத்த வாக்கியத்திற்குச் செல்லுங்கள்.
கிழக்கிற்கும் மேற்கிற்கும் உள்ள ஒரு வித்தியாசம் இதுதான். உதாரணமாக, நான் முதன்முதலில் அமெரிக்கா வந்தபோது மேற்கத்திய இசை என்னைக் கவரவில்லை ஆனால் இப்போது ஒரு கதை உச்சக்கட்ட முடிவை நோக்கிச் செல்வதுபோல அது எவ்வாறு முன்னேறுகிறது என்பதை நான் புரிந்துகொள்கிறேன். கிழக்கில் நாம் இசையை இந்த வழியில் பயன்படுத்துவதில்லை; அது வெளிப்படுத்தும் உணர்வில் மூழ்கிப் போகும் வரை அதைத் திரும்பத் திரும்ப வாசிக்கிறோம்.
இறைவனிடம் எந்த அன்பையும் உணராமல், பிரார்த்தனை புத்தகம் முழுவதையும் ஓதுவதால் என்ன பயன்? உண்மையான பிரார்த்தனை என்பது அறிவுக்கு அப்பாற்பட்டது; அது நீங்கள் இறைவனிடம் சொல்வதை உணர்வதே ஆகும். அந்த உணர்வு வளர்த்தெடுக்கப்பட வேண்டும்: ஆரம்பத்தில் நீங்கள் இறைவனை அறியாததால், அவன் மீது அன்பு கொள்வதில்லை.
நமக்கு நெருக்கமானவர்களையும் பிரியமானவர்களையும் நாம் நேசிக்கிறோம். அவர்களுக்கு நாம் உணர்வதை இயல்பாகவே வெளிப்படுத்துகிறோம்; அது நம் இதயங்களிலிருந்து தன்னிச்சையாகவே பீறிட்டு எழுகிறது. ஏன்? ஏனென்றால் அவர்கள் நமக்கு உண்மையானவர்கள்; அவர்களை நாம் கண்முன் அல்லது நம் மனக்கண்ணால் காண முடியும். ஆனால் இறைவனை நாம் காண்பதில்லை, ஏனெனில் நாம் அவனை அறிய முயற்சி செய்யவில்லை. மலர்களிலும் இயற்கையின் பிற அழகுகளிலும் அவனுடைய இருப்பை நாம் ஊகிக்கலாம்; ஆனால் அவனோடு நேரடித் தொடர்பு கொள்வதற்கு ஆழ்ந்த தியானம் தேவைப்படுகிறது….
இறைவனை உணரும் வரை தளராது முயற்சி செய்யுங்கள்
என் தந்தையின் மீது நான் உணரும் அன்பின் மிகச் சிறிய பொறியையாவது நான் உங்களுக்குள் எழுப்பும்போது, என் பணி நிறைவடைகிறது.
அவரை அறிந்துகொள்வதற்கு அதிக நேரம் பிடித்தது; இந்த வாழ்க்கையில் நான் ஒருபோதும் வெற்றிபெற முடியாது என்று தோன்றியது, ஏனெனில் மனம் மிகவும் அமைதியற்றதாக இருந்தது. ஆனால், என் தியானத்தை கைவிடுமாறு என் மனம் என்னை ஏமாற்ற முயன்ற போதெல்லாம், நான் என் மனதை ஏமாற்றிக் கொண்டேன்: “எந்த சத்தம் வந்தாலும், எந்த திசைதிருப்பல் வந்தாலும் நான் இங்கேயே அமர்ந்திருப்பேன். நான் முயற்சித்து இறக்க நேர்ந்தாலும் பரவாயில்லை; இறுதிவரை நான் தொடர்வேன்.”
நான் இவ்வாறாக விடாமுயற்சியுடன் இருந்தபோது, எப்போதாவது ஒருமுறை இறைப் பரம்பொருளின் ஒரு தரிசனம் கிடைக்கப் பெற்றது; ஒரு தீப்பொறி போல, மிக அருகில் இருந்தும் மிகத் தொலைவில் இருப்பது போல, தோன்றி உடனே மறைந்துவிடும். ஆனால் நான் உறுதியுடன் இருந்தேன். கண்ணுக்குப் புலப்படாத அமைதியில் எல்லையற்ற உறுதிப்பாட்டுடன் நான் எப்படி காத்திருந்தேன்! என் ஆழ்ந்த தியானம் அதிகரிக்க அதிகரிக்க, அவனுடைய உறுதிமொழி மேலும் தெளிவாகவும் வலிமையாகவும் ஆனது. இப்போது அவன் எப்போதும் என்னுடன் இருக்கிறான்….
நான் உங்களுக்குள் வளர்க்க விரும்பும் ஒரே ஒரு விஷயம் என்னவென்றால், நீங்கள் “இறைவா, நான் உன்னை நேசிக்கிறேன்” என்று சொல்லும் ஒவ்வொரு முறையும், உங்கள் ஒவ்வொரு உயிரணுவும், ஒவ்வொரு உணர்வும், ஒவ்வொரு எண்ணமும் அவனது எல்லையற்ற பேரானந்தத்தில் விழித்தெழும் வகையில், அவனுடனான அந்த உறவுதான்.
பரமஹம்ஸ யோகானந்தர் அருளிய ஸால்விங் த மிஸ்டரி ஆஃப் லைஃப என்ற நூல், அன்றாட வாழ்வில் இறை உணர்தல் பற்றிய சொற்பொழிவுகள் மற்றும் கட்டுரைகள் தொடரின் நான்காவது பாகமாகும். காலத்தால் அழியாத ஞானம் நிறைந்த இந்த சிறந்த படைப்பை இப்பொழுது ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம்.



















