இது யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் இன் நான்காவது தலைவர் மற்றும் சங்கமாதாவான ஸ்ரீ ஸ்ரீ மிருணாளினி மாதா YSS/SRF உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு 2016 ஆம் ஆண்டு எழுதிய கடிதத்தின் ஒரு பகுதியாகும். 2011 முதல் 2017 இல் தனது மறைவு வரை YSS/SRF தலைவராக பணியாற்றிய மிருணாளினி மாதாஜி, நேர்மறை மனநிலையை வளர்த்துக் கொள்ளவும், இறைவனிலும் நம் மீதும் நாம் நம்பிக்கை கொள்ளவும் நம்மை ஊக்குவிக்கிறார். நமது சவால்களை வாய்ப்புகளாக மாற்ற விரும்பும் போதெல்லாம் இந்த காலத்தால் அழியாத ஆலோசனை சரியானதாகவே இருக்கிறது.
கடந்த யுகங்களின் ஆன்மீக மற்றும் பொருள் சார் அறியாமையை அகற்றும் முயற்சியில் உலகம் கடந்து வரும் கொந்தளிப்பை அன்றாட நிகழ்வுகள் நமக்கு அடிக்கடி நினைவூட்டுகின்றன. ஆனால் பரமஹம்ஸ யோகானந்தர் நாம் பரிணாமத்தில் முன்னேற்றப் போக்கின் சகாப்தத்தில் இருக்கிறோம் என்று உறுதி அளித்துள்ளார் மேலும் தற்காலிக ஏற்ற இறக்கங்களுக்கிடையில் ஆழ்ந்த நம்பிக்கை மற்றும் நேர்மறை மனநிலையின் ஒரு தொலைநோக்குப் பார்வையை நம் முன் வைத்துள்ளார்.
இறைவன் எல்லா ஆன்மாக்களுக்கும் அளித்திருக்கும் சுதந்திரத்தையும், தெய்வீக வலிமையையும் தினமும் பயன்படுத்தி, அச்சத்தையோ அல்லது மனச் சோர்வடைதலையோ நிராகரிப்பதன் மூலம், அந்த நேர்மறை மனநிலையை உங்கள் வாழ்க்கையில் உட்புகுத்த முடியும்.
நாம் அவனுடைய பிரதிபிம்பத்தில் படைக்கப்பட்டிருக்கிறோம், இறைவன் சுதந்திரமாக இருப்பதைப் போல சுதந்திரமாக இருப்பதற்கும் அவனுடைய உயர் உணர்வுநிலை, பேரன்பு மற்றும் பேரானந்தத்துடன் ஐக்கியமாவதற்கும் ஏதுவாக, இருமையின் சிக்கலான நாடகத்தை விட உயர்ந்த ஒரு சத்தியத்தில் நம்மை நிலைநிறுத்திக் கொள்வதற்கான திறன் நமக்குள் உள்ளது; அந்த உண்மையைக் கண்டறிவது தான் நம் வாழ்வின் நோக்கம், இந்த உலகின் துன்பம் மற்றும் இணக்கமின்மைக்கான இறுதி தீர்வு.
மாயை நம்மை பொருள்சார் உலகத்துடன் பிணைத்து வைத்து, நம்மை தாழ்ந்தவர்களாகவும், வெளிப்புற சூழ்நிலைகளால் பாதிக்கப்படக்கூடியவர்களாகவும் உணர வைக்கிறது. சித்தத்தை பலவீனப்படுத்தி, கண்ணோட்த்தை குறுகச் செய்யக்கூடிய பயம், கவலை அல்லது பிற எதிர்மறை உணர்ச்சிகளுடன் அகந்தையை அதிக உணர்திறன் கொண்டதாக மாற்றுகிறது. கையாலாகாமை என்ற மாயையை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக, நமது மனங்களும் சித்தமும், இறைவனின் சர்வ ஞானம் நிறைந்த மனத்திற்கும், அவனது சர்வ வல்லமைமிக்க சித்தத்திற்கும் வழிவகுக்கும் நுழைவாயில்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பரமஹம்ஸர் நம்மை வலியுறுத்துகிறார். மனத்தையும் சித்தத்தையும் சரியாகப் பயன்படுத்தி அந்த உள் வாயில்களைத் திறந்து வைத்தால், சவாலான வெளிப்புற நிலைமைகள் கூட நம் ஆன்மாவின் உள்ளார்ந்த தைரியத்தையும் திறன்களையும் வெளிக்கொணரும் வாய்ப்புகளாக மாறும். இதனால், நமது அன்றாட சூழலுக்கு கையாலாகாத நிலையில் எதிர்வினையாற்றுவதை விட, ஒரு நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.
“மனிதர்களின் இதயங்கள் மாறும்போது உலகமும் மாறும்” என்று பரமஹம்ஸர் கூறியுள்ளார். அந்த மாற்றம் நம்முடைய உணர்வுநிலையை கட்டுப்படுத்துவதிலிருந்து தொடங்குகிறது. தினமும் தியானித்து, அவருடைய போதனைகளில் ஊக்கமளிக்கும், புத்துயிர் ஊட்டும் சத்தியங்களிலிருந்து சிலவற்றை தினந்தோறும் கிரகித்துக்கொள்ளுங்கள். இதனால் நீங்கள் இறைவன் மீதும் உங்கள் மீதும் உள்ள நம்பிக்கையை வலுப்படுத்தி, அவனுடைய சாசுவத விதிமுறைகளோடு உங்கள் வாழ்க்கையை இணைக்க உங்கள் ஊக்கத்தை வலுப்படுத்திக் கொள்வீர்கள்.
உங்கள் இதயத்தில், நேர்மையுடன் வாழ்தல், மற்றவர்களை கருணை, புரிதல் மற்றும் அக்கறையுடன் நடத்துதல் போன்ற தெய்வீக நல்லிணக்கத்திற்கு முதலிடம் கொடுக்க நீங்கள் முடிவு செய்யும் போது, இந்த உலகில் துன்பம் மற்றும் முரண்பாட்டிற்கான ஒரு முக்கிய காரணமான சுயநலம் மற்றும் அது உருவாக்கும் தனிமைப்படுத்தல் மற்றும் பூசல்களை நீங்கள் அகற்றுகிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள.


















