ஸ்ரீ தயா மாதா அருளிய “புது வருடத்தில் உங்களுக்காக என் பிரார்த்தனை”

3 ஜனவரி, 2025

பின்வரும் பதிவு ஸ்ரீ தயா மாதாவின் “அன்பு மட்டுமே: மாறிக் கொண்டிருக்கும் உலகில் ஆன்மீக வாழ்க்கை வாழ்தல்” என்ற புத்தகத்தில் “புது வருடத்தில் ஆன்மீக வாய்ப்புகள்” என்ற உரையிலிருந்து ஒரு பகுதி. பரமஹம்ஸ யோகானந்தரின் நெருங்கிய சீடர்களில் ஒருவரான ஸ்ரீ தயா மாதா, 1955 முதல் 2010 இல் இறக்கும் வரை யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் இன் தலைவராகப் பணியாற்றினார்.

உங்கள் ஒவ்வொருவருக்காகவும் இந்த புது வருடத்தில் நான் செய்யும் பிரார்த்தனை என்னவென்றால் உங்களது ஆன்மீகப் பாதையில் உங்களுடைய சீரிய மற்றும் உன்னத குறிக்கோள்கள் நிறைவுற வேண்டும் என்பதுதான்.

இறையன்பை நாடும் நீங்கள் அதைப் பெறுவீர்களாக; புரிந்துகொள்ளும் தன்மையை நாடும் நீங்கள், மனித உறவுகளில் அதைத் தேடாமல் புரிந்து கொள்ளும் தன்மையின் பெரும் ஊற்றான அவனிடம் தேடுங்கள்; வலிமை, துணிவு, அல்லது பணிவு ஆகியவற்றை நாடும் நீங்கள், யார் இந்த குணங்களை நீங்கள் அடைவதற்கு உதவ வல்லவரோ, நீங்கள் இறைவனின் உண்மையான குழந்தைகள் என்பதை நீங்கள் காணும்படியாக உங்களுக்குள் உறங்கும் தெய்வீகத்தை யார் எழுப்ப வல்லவரோ, அந்த மகா ஆசானிடம் செல்லுங்கள்.

புது வருடத்தில் நம் இறையருள் பெற்ற குருதேவருடைய தூண்டுதல் என் நினைவில் ஒலிக்கிறது; “எழுந்திரு, இனியும் தூங்காதே! எழுந்திரு, இனியும் தூங்காதே! எழுந்திரு, இனியும் தூங்காதே!”

அமைதி, ஆனந்தம், மகிழ்ச்சி, மற்றும் தெய்வீக அன்பு ஆகியவற்றை அடையும் வழி, உங்கள் உணர்வுநிலையை இறைவனிடத்தில் மையப்படுத்தியும் அமைதியாகவும் வைத்து இருப்பதுதான். இந்த ஒரே ஒரு கருத்தில் ஒருமுகப்படுங்கள்; இறைவன் மட்டுமே. “நீதான் எனது துருவ நட்சத்திரம்; உன்னில் நான் வாழ்கிறேன், அசைகிறேன், சுவாசிக்கிறேன், மற்றும் என் இருப்பை வைத்திருக்கிறேன். உன்னை நேசிப்பதையும் உனக்கு சேவை செய்வதையும் தவிர வேறு ஒன்றையும் நான் வேண்டேன்.” புது வருடத்தில் இதை உங்கள் நிலையான பிரார்த்தனையாக ஆக்கிக் கொள்ளுங்கள்.

இரவும் பகலும் இறைவன் மீது ஒருமுகப்பட்டு, அவனுடைய அன்பிலேயே ஆழ்ந்திருங்கள். அவன் மட்டும்தான் நிஜம். அவன் அன்பில் தான் விவேகம், பணிவு, மகிழ்ச்சி, தயை, புரிந்து கொள்ளும் திறன் மற்றும் நிறைவு ஆகியவை உள்ளன. நாம் ஒவ்வொருவரும் அவனுடைய அன்பை அதிக மெய்யார்வத்துடன் தேடுவோமாக.

மிக ஆழ்ந்து தியானம் செய்யுங்கள் மேலும் மிகுந்த விருப்பத்துடனும், நேர்மையுடனும், ஒருமுனைப்பாட்டுடனும் இறைவனுக்கு சேவை செய்ய முயலுங்கள்.

சேவை செய்தால் மட்டும் போதாது; அதை பெரும் பேறாக எண்ணி உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும், இதயத்தில் அன்புடனும் சேவை செய்யுங்கள்.

இறைபக்திப் பாடல்களை பாடிக்கொண்டு, அந்த ஆனந்தமான உணர்வுநிலையை புது வருடத்தின் எல்லா நாட்களிலும் எடுத்துச் சென்று, எவ்வாறு நாம் அந்த இறைவனைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டு வருடத்தை தொடங்கினோமோ, அவ்வாறே முடிப்போமாக.

இதைப் பகிர