புத்தாண்டு செய்தி 2022

31 டிசம்பர், 2021

அன்பரே,

குருதேவர் பரமஹம்ஸ யோகானந்தரின் ஆசிரமங்களில் உள்ள எங்கள் அனைவரிடமிருந்தும் உங்களுக்கு மகிழ்ச்சியான புத்தாண்டு வாழ்த்துகள்! கிறிஸ்துமஸ் பருவத்தில் உலகெங்கிலும் இருந்து நாங்கள் பெற்ற நல்வாழ்த்துகள் மற்றும் நினைவூட்டல்களுக்கும், கடந்த ஆண்டு முழுவதும் நீங்கள் பல அன்பான வழிகளில் எங்களை அணுகியதற்கும் அன்பார்ந்த நன்றிகள்.

நாம் 2022 -ஆம் ஆண்டை தொடங்கும் போது, மாற்றமடைந்து கொண்டிருக்கும் இந்த யுகத்தில் வாழ்க்கையின் யதார்த்தங்களான சவால்கள் மற்றும் மாற்றங்களினூடே உங்கள் பாதையை திட்டமிட இறைவன் உங்களுக்கு ஆக்கப்பூர்வமான உணர்வுடன் கூடிய வழிகாட்டுதலை நீங்கள் உணரக்கூடியவாறு அருள வேண்டும் என்பதே எனது இதயப்பூர்வமான பிரார்த்தனை. நம் குருதேவர் இந்த இனிமையான வார்த்தைகளில் விவரித்துள்ள அகமுகமான அனுபவ ஞானத்தையும் உத்தரவாதத்தையும் நீங்கள் அறிந்து கொள்வீர்களாக: “புரிந்து கொள்ளும் தன்மை என்பது ஒவ்வோர் ஆன்மாவினுடைய விலைமதிப்பற்ற உடைமையாகும். அது உங்களின் அகக் காட்சி, உள்ளுணர்வு ஆற்றல் ஆகும். இதன் மூலம் நீங்கள் உங்களைப் பற்றியும் மற்றவர்களைப் பற்றியும், மேலும் உங்கள் பாதையில் எழும் அனைத்து சூழ்நிலைகளைப் பற்றியும் — உண்மையைத் தெளிவாக அறிந்து கொள்ளவும், அதற்கேற்ப உங்கள் மனோபாவங்களையும் செயல்களையும் சரியாக அனுசரித்துக் கொள்ளவும் முடியும்.”

பகுத்தறிந்து சரியானதைக் கடைப்பிடிப்பதில் அந்தத் தெளிவையும் நம்பிக்கையையும் நாம் எவ்வாறு கண்டறிவது? பரந்த அளவிலான சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் எழுச்சிகள் நிறைந்த இந்த சகாப்தத்தில், தினசரி, இறைவன் மீது ஆழ்ந்த கவனத்துடன் தியானம் செய்வதற்கான ஒரு புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பு தான், உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நீங்கள் வழங்கக்கூடிய மகத்தான பரிசாகும். பாதுகாப்பிற்கும் மீண்டெழுவதற்கும் சாசுவத ஆதாரமாகிய இறைவனுடன் தினசரி பக்திபூர்வமான தொடர்பு என்பது நமது ஆன்ம சக்தியின் நிலையான, உறுதிப்பாட்டிற்கு, “தகரும் உலகுகளின் அழிவின் மத்தியில் நிலைகுலையாமல் இருக்க” நம்மைப் பயிற்றுவிப்பதற்கான வழியாகும்.

தனிமைப்படுத்திக்கொண்ட, தனி பக்தர்களாக வாழ்க்கையின் சவால்களை நாம் எதிர்கொள்ளும்போது, நம் உணர்வுநிலையை இறைவனில் நிலைநிறுத்தும் திறன், விரும்பியபோது பயன்படுத்த கடினமாகத் தோன்றலாம். ஆனால், நாம் நம் இதயங்களை இறைவன் மற்றும் குருதேவருடன் — மற்றும் அருளாசி பெற்ற இந்தப் பாதையை நாம் பகிர்ந்து கொள்கின்ற ஆயிரக்கணக்கான தெய்வீக நண்பர்களுடன் இணைக்கும்போது — நம்மை பாதையிலிருந்து விலக்க முயற்சி செய்யும் எந்த இடையூறு விளைவிக்கும் நிகழ்ச்சிகளின் குறுக்கீடுகள் இருந்தாலும், நமது ஆன்மீக முன்னேற்றத்தில் சீராக முன்னேறுவதற்கான ஸ்திரத்தன்மையையும் மன உறுதியையும் நாம் காணலாம். இச்சா சக்தியை விட சுற்றுச்சூழல் வலிமையானது என்ற விதிக்கு, தனிநபர்களாக நாம் உட்பட்டு இருக்கலாம். ஆனால் ஒன்றுபட்ட பல இச்சா சக்திகள் சுற்றுச்சூழலை மாற்றமுடியும் — அல்லது புதிய ஒன்றை உருவாக்க முடியும். கூட்டுத் தியானம் மற்றும் தெய்வீகத் தோழமை மூலம், உலகெங்கிலும் உள்ள கிரியா யோக தியானம் செய்பவர்களால் ஒட்டுமொத்தமாக உருவாக்கப்படும் ஆன்மீக அதிர்வலைகளுடன் நமது தனிப்பட்ட முயற்சிகளை வலுப்படுத்திக் கொள்கிறோம்.

கடந்த இரண்டு வருடங்களாக உங்கள் சொந்த சாதனா வை ஆழப்படுத்திய பல மொழிகளில் ஆன்லைன் தியானங்கள், பக்திபூர்வமான கூடுதல்கள் மற்றும் வகுப்புகள் என புதிதாக உருவாக்கப்பட்ட மெய்நிகர் சூழலுக்காக, குறிப்பாக, நீங்கள் பங்கேற்கும் போது வணக்கத்திற்குரிய நம் குருதேவருடன் அனுபவிக்கும் எழுச்சியூட்டும் ஒத்திசைவிற்காக, உங்களில் பலர் நன்றி தெரிவித்துள்ளீர்கள். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் நம் சர்வதேச “சுவர்-அற்ற ஆலயத்தில்” — நம் ஆன்லைன் பேரவை உட்பட — தொடரவும், எங்களால் முடிந்தவரை விரிவுபடுத்தவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம் என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்.

உண்மையான உலகளாவிய குடும்பமாக நம்மை ஒன்றிணைக்கும் சத்சங்கத்தின் பிணைப்பு (மெய்ப்பொருளுடன் தோழமை) துணிவையும் வலிமையையும் மற்றும் வெளி உலகின் எந்த நிலையற்ற அனுபவத்தையும் விட, இறைவனின் ஒளியும் ஆனந்தமும் உணரத்தக்கவாறு அதிக உண்மையானவை என்ற திட நம்பிக்கையையும் நமது தனிப்பட்ட வாழ்க்கையில் தொடர்ந்து உட்புகுத்தட்டும். இந்த புத்தாண்டிலும், எப்போதும் உங்கள் உயர்ந்த மற்றும் உன்னதமான இலக்குகளை நீங்கள் அடைய அந்த ஒளியும் மெய்ப்பொருளும் ஆனந்தமும் என்றென்றும் உங்களை வழிநடத்தட்டும்.

இறை அன்பிலும் தோழமையிலும்,

ஸ்வாமி சிதானந்த கிரி

இதைப் பகிர