நமது உறவுகளில் நல்லிணக்கத்தை வளர்ப்பது பற்றி பரமஹம்ஸ யோகானந்தர்

17 மே, 2025

ஓர் அறிமுகம்:

உறவுகளில் நல்லிணக்கத்தை பேணுவது என்பது வளர்க்கப்பட்டு பயிற்சி செய்யப்பட வேண்டிய ஓர் உண்மையான கலை என்று நீங்கள் எப்போதாவது கண்டறிந்திருக்கிறீர்களா…

பரமஹம்ஸ யோகானந்தர், “நிச்சயமாக மற்றவர்களுடன் ஒத்துப் போவது வாழ்க்கையின் மிகச் சிறந்த கலைகளில் ஒன்றாகும். அது வெற்றிகரமான வாழ்விற்கு ஒரு நடைமுறைத் தேவை மட்டுமல்ல, ஆன்ம விழிப்புணர்வுக்கும், முன்னேற்றத்திற்கும் ஒரு அத்தியாவசியமான பகுதியாகும்.” என்று குறிப்பிட்டார்.

இந்தச் செய்தி மடலில், நம் ஆன்மாக்களின் தெய்வீக அன்பு, புரிதல் மற்றும் உயர்ந்த ஆற்றலைப் பயன்படுத்தி வெளிப்படுத்துவதன் மூலம், நமது உறவுகளில் அதிக நல்லிணக்கத்தை வளர்க்கும் வழிகளைப் பற்றி பரமஹம்ஸரின் ஞான வழிகாட்டுதலைப் பகிர்ந்து கொள்கிறோம்.

பரமஹம்ஸ யோகானந்தரின் உரைகள் மற்றும் கட்டுரைகளிலிருந்து:

மற்றவர்களிடத்தில்‌ உள்ள உங்களுடைய உறவுமுறைகளில்‌, அவர்கள்‌ தங்களுக்குள்ளேயே செதுக்கியெடுத்துள்ள தனிப்பண்புகளைக்‌ கண்டுணர்ந்து பாராட்டுவது மிகவும்‌ அவசியமானது. நீங்கள்‌ திறந்த மனத்துடன்‌ மக்களை ஆராய்ந்தால்‌, நீங்கள்‌ அவர்களை நன்றாகப்‌ புரிந்துகொண்டு அவர்களுடன்‌ சுமுகமாக இருக்க முடியும்‌. நீங்கள்‌ என்ன வகையான மனிதருடன்‌ பழகுகிறீர்கள்‌ என்று உடனே உங்களால்‌ கூறமுடியும்‌ மற்றும்‌ அவருடன்‌ எப்படி பழகுவது என்பதும்‌ உங்களுக்குத்‌ தெரியும்‌.

ஒவ்வொருவரும்‌ பார்க்க விரும்பும்‌ ஓர்‌ அழகிய மலர்‌ போன்று, நீங்கள்‌ ஆகும்வரை மற்றவர்களைப்‌ பற்றி அக்கறை மற்றும்‌ அன்புடைமை ஆகியவற்றைப்‌ பயிற்சி செய்யுங்கள்‌. ஒரு மலரில்‌ உள்ள அழகாகவும்‌, ஒரு தூய மனத்தில்‌ உள்ள வசீகரமாகவும்‌ இருங்கள்‌. நீங்கள்‌ அந்த விதத்தில்‌ வசீகரமாக இருக்கும்பொழுது நீங்கள்‌ எப்பொழுதும்‌ உண்மையான நண்பர்களைப்‌ பெற்றிருப்பீர்கள்‌.

தியானத்தில் நீங்கள் உணரும் அமைதியை அன்றாட நடவடிக்கைகளுக்குள் எடுத்துச் செல்லுங்கள்; அது உங்கள் வாழ்வின் ஒவ்வோர் அம்சத்திலும் நல்லிணக்கத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டுவர உங்களுக்கு உதவி செய்யும்.

பிறர் உங்களிடம் இரக்கம் காட்ட வேண்டும் என நீங்கள் விரும்பினால், உங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் இரக்கம் காட்டத் தொடங்குங்கள். நீங்கள் மதிக்கப்பட வேண்டும் என விரும்பினால், ஒவ்வொருவரிடமும், இளைஞர் மற்றும் வயோதிகர் ஆகிய இருவரிடமும் மரியாதையுடன் இருக்க நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். மற்றவர்களிடமிருந்து அமைதி வெளிப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், நீங்களே அமைதியாக இருக்க வேண்டும். மற்றவர்கள் சமயப்பற்றுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், நீங்களே ஆன்மீகவாதியாக இருக்கத் தொடங்குங்கள். நினைவில் கொள்ளுங்கள், மற்றவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ, முதலில் நீங்களே அப்படி இருங்கள், அப்போது மற்றவர்கள் உங்களிடம் அதே போல் நடந்து கொள்வதைக் காண்பீர்கள்.

[சங்கல்பம்:] “நான் மற்றவர்களிடம் அன்பையும் நல்லெண்ணத்தையும் பரவச் செய்யும் போது, இறைவனின் அன்பு என்னிடம் வரும் பாதையைத் திறக்கிறேன். தெய்வீக அன்பு அனைத்து நன்மைகளையும் என்னிடம் ஈர்க்கும் காந்தம் ஆகும்.”

ஸ்வாமி சிதானந்த கிரி மும்பையில் 2019 ஆம் ஆண்டு ஆற்றிய உரையின் ஒரு பகுதியைப் படிப்பதன் மூலம் இந்த விஷயத்தை மேலும் ஆராய உங்களை அழைக்கிறோம், அதில் YSS/SRF தலைவர், அமைதியான மற்றும் ஒற்றுமையான உலகத்திற்கான நம்பிக்கையின் உண்மையான ஆதாரத்தை உருவாக்கி தியானம் எவ்வாறு மற்றவர்களுடன் ஆழமான ஆன்மீக உறவுகளை உருவாக்க உதவுகிறது என்பதை விவரிக்கிறார்.

இதைப் பகிர