பின்வரும் இடுகை ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் மற்றும் பின்னர் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியாவால் விரைவில் வெளியிடப்படவுள்ள பரமஹம்ஸ யோகானந்தரின் சொற்பொழிவுகள் மற்றும் கட்டுரைகளின் நான்காம் தொகுதியான ஸால்விங் த மிஸ்டரி ஆஃப் லைஃப் இல் முழுமையாக வாசிக்கக்கூடிய “ஹௌ டு கெட் அவுட் ஆஃப் மென்டல் ரட்ஸ்” என்ற உரையிலிருந்து ஒரு பகுதி. முழு உரையும் 1940 ஜூலை 14 அன்று, கலிபோர்னியாவின் என்சினிடாஸில் உள்ள ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் கோல்டன் லோட்டஸ் ஆலயத்தில் வழங்கப்பட்டது.
பூமியில் நமது உயர்ந்த கடமை, நம்மை மானுட நிலையிலிருந்து தெய்வ நிலைக்கு மாற்றிக் கொள்வதாகும். ஆனால் இந்த உலகம் கவர்ச்சிகரமான விளையாட்டுப் பொருட்களால் — நம் கவனத்தை ஈர்க்கும் பளபளப்பான பொருள் பொம்மைகளால் — நிறைந்துள்ளது, எண்ணற்ற வழிகளில் நமது எண்ணங்களும் நடத்தைகளும் ஆசைகளின் கட்டுப்படுத்தும் பாதைகளுக்குள் வழிநடத்தப்படுகின்றன.
ஞானத்தால் வழிநடத்தப்பட்டாலொழிய, நாம் இந்த வரையறுக்கப்பட்ட பாதைகளில் சிக்காமல் ஆன்ம முன்னேற்றத்தில் முன்னோக்கிச் செல்ல முடியாது. நம்முடைய எல்லா ஆசைகளிலும் இறைத் தேடுதலை முதன்மையானதாகக் கருதும் போதுதான், நிலையான இன்பத்திற்கு இட்டுச் செல்லும் வழியை நாம் காண்கிறோம்.
வாழ்க்கையில் உங்கள் முன்னேற்றத்தை ஆராய்ந்து பாருங்கள்: நீங்கள் மனப் பதிவுகளின் பள்ளத்தில் சிக்கியுள்ளீர்களா?
நீங்கள் ஒரு மண் சாலையில் பயணிக்கும்போது, உங்கள் வாகனம் சேற்றில் சிக்கிக்கொண்டால், அந்த பள்ளத்திலிருந்து உங்கள் காரை விடுவிக்க திறமையான வாகனம் ஓட்டுதல் — ஒருவேளை ஒரு இழுவை வண்டி! — தேவை. அதேபோல், மனிதகுலம் மனப் பதிவு பள்ளங்களில் சிக்கிக் கொள்கிறது; அதிலிருந்து எப்படி வெளியேறுவது என்பது நம் கவனம் தேவைப்படும் ஒரு விஷயமாகும்.
நீங்கள் அனைவரும் அவ்வப்போது வாழ்க்கையில் உங்கள் முன்னேற்றத்தை ஆராய்ந்து நீங்கள் மனப் பதிவுப் பள்ளத்தில் சிக்கியுள்ளீர்களா என்பதைப் பார்க்க வேண்டும். முதலில், நீங்கள் எந்த வகையான சாலையில் வாகனம் ஓட்டுகிறீர்கள் என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையின் இலக்கை நோக்கி நிச்சயமாக உங்களை அழைத்துச் செல்லும் சீரான, பிரகாசமான நெடுஞ்சாலையில் நீங்கள் பயணிக்கிறீர்களா?…
ஆனாலும் நீங்கள் சரியாக ஸ்டியரிங் செய்யாமல் இருக்க வாய்ப்பு உள்ளது. நீங்கள் உங்கள் மீது அதீத நம்பிக்கைக் கொண்டு, கவனக்குறைவாக உங்கள் கண்களை சாலையிலிருந்து விலக்கினால், நீங்கள் வழியிலிருந்து விலகி, ஒரு சாலையோர பள்ளத்தில் சிக்கிக் கொள்ளலாம்.
எந்தவொரு மானுட வாழ்க்கைப் பாதையிலும் ஒருவர் பள்ளத்தில் சிக்கிக் கொள்ளலாம்; அவை மனிதனின் உணர்வுநிலையைப் பற்றிக் கொள்ள எல்லா இடங்களிலும் உள்ளன. சில உங்கள் உணர்வுகளை கட்டாய கோபமாக மாற்றுகின்றன; சில உங்களை ஒரு அவநம்பிக்கை அல்லது விரக்தி மனநிலையில் சிக்க வைக்கின்றன; மற்றவை உங்களை பேராசை அல்லது பொறாமை அல்லது அதிக விமர்சனம் போன்ற நிலைத்த பழக்கவழக்கங்களில் வைத்திருக்கக்கூடும்….
ஒரு கார் சேற்றிலோ அல்லது மணலிலோ சிக்கிக் கொள்ளும் பொழுது, ஓட்டுநர் ஆக்ஸிலரேட்டரை மிதித்து, சக்கரங்கள் வேகமாக சுழல வைக்கும்போது, கார் அதே இடத்தில் இருக்கும் — இது தான் பலரின் நிலை. அவர்களின் வாழ்க்கை இயந்திரம் இயங்கினாலும், அவர்களின் சக்கரங்கள் பயனின்றி சுழல்கின்றன. அத்தகையோரின் முன்னேற்றமும் வளர்ச்சியும் மிகக் குறைவு. தங்கள் உடல் முதிர்ச்சியடைந்ததால் தாங்கள் வளர்ந்துவிட்டதாக அவர்கள் நினைக்கிறார்கள், ஆனால் அவர்களின் மூளை, அவர்களின் மனம், அவர்களின் மனப்பான்மை ஆகியவை உளவியல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் முதிர்ச்சியடையாத நிலையில் உள்ளன.
மனப்பதிவு பள்ளங்களிலிருந்து மீள்வது ஒரு கலை. எல்லோரிடமிருந்தும் விலகி அமைதியான இடத்தில் அமர்ந்து உங்களுடனேயே அமைதியாக பேசுங்கள். உங்கள் வாழ்க்கையை மிகவும் பயனுள்ளதாகவும் சுவாரஸ்யமானதாகவும் மாற்றுவதற்கான வழிகளைப் பற்றி சிந்தியுங்கள், உங்களை மேம்படுத்துவதற்கான வழிகளைப் பற்றி சிந்தியுங்கள்.
உங்கள் வாழ்க்கையில் இறை இருப்பை அதிகமாகப் பயிற்சி செய்வதன் மூலம் அவனுடன் ஆழமான உறவை வளர்த்துக் கொள்வதே மிகச் சிறந்த வழி. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைப் பற்றி மற்றவர்களிடம் பேச வேண்டிய அவசியமில்லை. அகத்துள் இறைவனுடன் இருங்கள்.
அவனே எல்லா அமைதிக்கும், எல்லா மகிழ்ச்சிக்கும் ஆதாரமானவன். அவன் என்றும் புதிய ஆனந்தம். அவனை அறிந்துகொள்வதன் மூலம், உங்கள் வாழ்க்கை இனி மந்தமாகவும் சலிப்பாகவும் இருக்காது. உங்கள் உணர்வுநிலையில் எப்போதும் புதிய சிந்தனைகள், உத்வேகங்கள் பாய்ந்து கொண்டே இருக்கும்.
“உளவியல் ரீதியான மரச் சாமான்கள்” ஆக இருப்பவர்களை, எப்போதும் தங்கள் இயல்பில் நேர்மறையான மாற்றத்தைக் காட்டாதவர்களை நீங்கள் பார்க்கும்போது, “நான் அவர்களைப் போல இருக்க விரும்பவில்லை!” என்று நினைக்கிறீர்கள்.
பாஸ்டனில் அப்படிப்பட்ட ஒருவரை நான் அறிந்திருந்தேன். அவர் ஒரு அற்புதமான ஆன்மா, மிகவும் பண்பட்டவர் மற்றும் புத்திசாலி. ஆனால் அவரிடம் சில எதிர்மறை குணாதிசயங்கள் இருந்தன. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு கொண்டிருந்த அதே பயத்திலேயே அவர் இருப்பார், அதே எதிர்மறை கருத்துக்களுடனும் விநோதமாகவும் எதிர்வினையாற்றுவார்.
அப்படி இருக்காதீர்கள். நிராகரிப்பால் வறண்டு போகாதீர்கள் நீங்கள் ஒரு இறந்த அடிமரமாக இல்லாமல், துடிப்புடன் உயிருடன் இருக்க விரும்புகிறீர்கள்! உதாரணமாக, ஒரு பழைய ரோஜாச் செடியை எடுத்து, பட்டுப்போன கிளைகள் முழுவதையும் வெட்டி, அதற்குத் தண்ணீர் ஊற்றி, பராமரித்தால், படிப்படியாக உயிர் சக்தி செடி வழியாக மேலே பாயத் தொடங்குகிறது, பின்னர் செடியின் மீதான சூரிய ஒளி பொழிவு காரணமாக, அற்புதமான மலர்கள் தோன்றும். சரியான பராமரிப்பின் மூலம், அது தொடர்ந்து வளர்ந்து செழித்து, அதன் அழகையும் நறுமணத்தையும் கொண்டு நம்மை மகிழ்விக்கிறது.
நீங்கள் அப்படி இருக்க முடியும். உங்கள் முன்னேற்றத்தை முடக்கி, உங்களை பயனற்றவர்களாக உணர வைத்த பழைய பழக்கவழக்கங்கள் அனைத்தையும் விட்டுவிடுங்கள். புதிய அனுபவங்கள், புதிய குணங்கள், உடல், மனம் மற்றும் ஆன்மாவில் புதிய முன்னேற்றங்கள் என்ற இலைகளையும் மலர்களையும் தொடர்ந்து வளருங்கள்.
சோதனைகள் எனும் குளிர்காலம் வரும்போது, வாழ்க்கையின் சில இலைகள் உதிர்கின்றன. இது இயல்பானது. அது ஒரு பொருட்டல்ல. அதை உங்கள் நன்மைக்கு எடுத்துக் கொள்ளுங்கள். “பரவாயில்லை, கோடை காலம் வருகிறது, நான் மீண்டும் மலர்வேன்” என்று சொல்லுங்கள். மிகக் கடுமையான குளிர்காலங்களைத் தாங்க மரத்திற்கு உள் வலிமையைக் கொடுத்திருக்கிறான் இறைவன். நீங்கள் அதற்கு சளைத்தவர்கள் அல்ல.
வாழ்க்கையின் குளிர்காலங்கள் உங்களை அழிப்பதற்காக அல்ல, மாறாக புதிய உற்சாகம் மற்றும் ஆக்கபூர்வமான முயற்சிக்கு உங்களைத் தூண்டுவதற்காகவே வருகின்றன, இவை ஒவ்வொருவருக்கும் வரும் புதிய வாய்ப்புகள் எனும் வசந்த காலத்தில் மலரும்.
“என் வாழ்க்கையின் இந்த குளிர்காலம் நீடிக்காது. நான் இந்த சோதனைகளின் பிடியிலிருந்து விடுபடுவேன், முன்னேற்றங்களின் புதிய இலைகளையும் மலர்களையும் பரப்புவேன். மீண்டும் சொர்க்கத்தின் பறவை என் வாழ்வின் கிளைகளில் அமரும்” என்று நீங்களே சொல்லிக் கொள்ள வேண்டும்.
உதாரணமாக, நீங்கள் நரம்புத் தளர்ச்சி அல்லது செரிமான பிரச்சினை அல்லது வேறு ஏதேனும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், அதைப் பற்றி ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்யுங்கள். சிறிது நேரம் கஷ்டப்பட்டாலும், நீங்கள் உதவியற்ற நிலை என்னும் பள்ளத்தில் சிக்கிக் கொள்ளாமல் இருந்தால் எல்லாம் சரியாகிவிடும்.
நாள்பட்ட நோய் என்பது நீங்கள் ஒருபோதும் மீள முடியாது என்று நினைக்கும் மனப் பதிவு பள்ளத்தின் ஒரு வடிவம். நோய் அல்லது வரம்புகள் பற்றிய எந்தவொரு கருத்தையும் உங்கள் மனது ஏற்றுக்கொள்ளக்கூடாது. இயல்பாகவே, உடல் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கும் என்று நினைப்பது யதார்த்தமற்றது; அதை நீண்ட காலம் நன்றாக வைத்திருக்க முடியும், ஆனால் இறுதியில் அது வயதாகி பலவீனமடையும். அதற்காக உங்கள் மனம் அதற்கு இணங்கி இருக்கவேண்டும் என்று அர்த்தமல்ல. மனதை சுதந்திரமாக வைத்திருக்க வேண்டும்.
உங்கள் உடலைப் பார்க்கும்போது அது வயதானதாகத் தோன்றலாம். ஆனால் உங்கள் கண்களை மூடி, உங்கள் உண்மையான ஆன்மாவைப் அகத்துள் தேடுங்கள், நீங்கள் பரம்பொருள் என்பதை காண்பீர்கள். புற வாழ்க்கைக்கு உங்கள் கண்களை மூடி, உங்கள் ஆன்மாவின் அகக் கண்ணைத் திறப்பீராயின், மரணமும் இல்லை, முதுமையும் இல்லை, பொருள் சார்ந்த வரம்புகளும் இல்லை.
நீங்கள் புனித பரம்பொருளே ஆவீர்கள். ஒவ்வொரு இரவும் ஆழ்ந்த உறக்கத்தின் சுதந்திரத்தில் உண்மையில் உங்களை அப்படிக் காண்கிறீர்கள், ஏனென்றால் உங்களுக்கு உருவம் இல்லை, உடலின் எடை இல்லை, ஆண் அல்லது பெண் என்ற உணர்வு இல்லை அல்லது எந்த ஒரு குறிப்பிட்ட ஆளுமையும் இல்லை. விழிப்புநிலை என்பது மேலோங்கிய மனக் குழப்பநிலை. அந்த நிலையைக் கட்டுப்படுத்துவது ஒருவனை ஜட வாழ்வின் பந்தத்திலிருந்து விடுவிக்கிறது. உறக்கம் என்பது ஒரு தன்னுணர்வற்ற ஓய்வு நிலை; அதன் விளைவுகள் தற்காலிகமானவை. ஆழ்ந்த தியானத்தின் உன்னத மௌனமே உங்கள் உணர்வுநிலையை நிரந்தரமாக விடுவிப்பதற்கான ஒரே வழி. தியானத்தின் மூலம், நீங்கள் எல்லா நேரத்திலும் உணர்வுபூர்வ அக சுதந்திரத்தைத் தக்க வைத்துக் கொள்ள கற்றுக்கொள்கிறீர்கள்.
நாள் முடிந்ததும் அமைதியாக அமர்ந்து தியானம் செய்து, அன்றைய செயற்பாடுகளை சுருக்கமாக ஆராய்ந்து பாருங்கள். பின்னர் மனதில் சங்கல்பம் செய்து கொள்ளுங்கள், “நான் அனைத்து மனப் பதிவு பள்ளங்களிலிருந்தும், என்னைக் கட்டுப்படுத்திய எல்லா எண்ணங்களிலிருந்தும், அனுபவங்களிலிருந்தும் விடுபட்டிருக்கிறேன். என் மனம் இறைவனின் ஆனந்தமான, எல்லையற்ற அமைதியில் ஓய்வெடுக்கிறது.” இது போன்ற காலங்களில் ஒருவருக்கு என்ன மகிழ்ச்சி ஏற்படுகிறது. எந்த வார்த்தைகளும் அந்த மகிழ்ச்சியை விவரிக்க முடியாது.
ஆனால் பெரும்பாலானோர் முயற்சி செய்வதில்லை. பொருள்சார் விஷயங்களைத் தேடுவதே அவர்களுடைய முன்னுரிமைகள். தங்கள் இதயம் துடிப்பதாலும், சுவாசம் பாய்வதாலும் தாங்கள் வாழ்கிறோம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது வாழ்க்கை அல்ல; அது வெறும் இருப்பு. அவர்களின் சாதனைச் சக்கரங்கள் வாழ்க்கைப் பாதையில் மணல் பள்ளங்களில் சிக்கிக் கொண்டுள்ளன.
நீங்கள் அந்த நிலையில் இருந்தால், உங்கள் வாழ்க்கை எனும் கார், தடையின்றி செல்லக்கூடிய, சீரான முன்னேற்ற நெடுஞ்சாலையில் ஓடும் வகையில், பள்ளத்திலிருந்து வெளியேற திடீரென உள்ளிருந்து கூடுதல் சக்தியை வெளிப்படுத்துங்கள். பின்னர், நீங்கள் மகிழ்ச்சி, அமைதி, மனச் சாந்தி போன்ற இறை உணர்வுகளின் பரந்த, அழகான காட்சியை அடையும் வரை, மேலும் கவனச்சிதறல்களின் பள்ளங்களைத் தவிர்த்து, சீராகச் செல்லலாம், நீங்கள் அங்கே ஓய்வெடுக்கலாம்.
அந்த காட்சி உண்மையானது. அது கற்பனை அன்று. ஆனால் அங்கு செல்வதற்கு நீங்கள் தியானம் உருவாக்கும் ஆழ்ந்த மௌனத்திற்குள் நுழைய வேண்டும். அந்த அகத்தின் சலனமற்ற அமைதி நிலையில், மானுட சிந்தனைகளற்று, உங்கள் ஆன்மா அனைத்து மனப் பதிவு பள்ளங்களிலிருந்தும் விடுபட்டிருப்பதை நீங்கள் காண்பீர்கள்.




















