இரயில்வேஸ் கிரெடிட் சொஸைடி பரமஹம்ஸருடைய தந்தைக்கு சமூக விருது வழங்கி கௌரவிக்கிறது

29 அக்டோபர், 2020

பரமஹம்ஸ யோகானந்தர் தன் தந்தை, ஸ்ரீ பகவதி சரண் கோஷைப் பற்றி ஒரு மேம்பட்ட கிரியா யோகி என்ற முறையில் அடிக்கடி மரியாதையுடன் பேசினார்; பரமஹம்ஸர் அமெரிக்காவில் தன் ஆன்மீகப் பெரும் பணியைத் துவக்க 1920-ல் இந்தியாவை விட்டுச் சென்ற போது அவர் முக்கியமான நிதியுதவியையும் அளித்தவர் ஆவார். இப்போது, பகவதி சரண் கோஷின் வாழ்க்கையும் பெருந்தகைமையும் மீண்டும் கௌரவிக்கப்படுகின்றன; இம்முறை அது ஒரு நூற்றாண்டிற்கு முன் அவர் நிறுவிய ஒரு நிதி நிறுவனத்தால் செய்யப்படுகிறது.

இரயில்வேஸ் கிரெடிட் சொஸைடி பரமஹம்ஸருடைய தந்தைக்கு சமூக விருது வழங்கி கௌரவிக்கிறது

பகவதி சரண் கோஷ் (1853-1942), பரமஹம்ஸ யோகானந்தரின் தந்தை, லாஹிரி மகாசயரின் சீடர்

அக்டோபர் 19, 2020 அன்று, தென்கிழக்கு, & தென்கிழக்கு மத்திய மற்றும் கிழக்குக் கடற்கரை இரயில்வே ஊழியர்கள் கூட்டுறவுச் சங்கம் கொல்கத்தாவின் கார்டன் ரீச் பகுதியில் உள்ள சங்கத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் பகவதி சரண் கோஷின் ஒரு வெண்கல மார்பளவுச் சிலையை அர்ப்பணித்தது. 1909ல் அவர் நிறுவிய (முதலில் “கல்கத்தா அர்பன் பேங்க்” என்ற பெயரில்) நிறுவனத்தின் வாயிலாக ஊழியர்கள் ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக குறைந்த வட்டியுடன் கடன் பெற்றிருக்கிறார்கள்; நினைவுச் சிலை இரயில்வே ஊழியர்களின் நலனுக்கான ஸ்ரீ கோஷின் அர்ப்பணிப்பை அங்கீகரித்தது. அச்சமயத்தில் ஸ்ரீ கோஷ் பெங்கால்-நாக்பூர் இரயில்வேயில் (இப்போது தென்கிழக்கு இரயில்வே) ஒரு மூத்த பதவியில் வேலை பார்த்தார்.

அர்ப்பணிப்பு விழாவில், தன் மனைவி திருமதி சரிதா கோஷுடன் வந்த பகவதி சரண் கோஷின் கொள்ளுப் பேரன் ஸ்ரீ சோம்நாத் கோஷ் அவருடைய சிலையைத் திறந்துவைத்து தன் கொள்ளுத் தாத்தாவின் வாழ்க்கையைப் பற்றிப் பேசினார். அதன்பின் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியாவின் சுவாமி அச்சுதானந்த கிரி வங்கியை நிறுவியதில் பகவதி சரண் கோஷின் மனிதகுலச் சேவையை அங்கீகரித்ததற்காக சங்கத்திற்கு நன்றி தெரிவித்தார், மற்றும் ஒரு யோகியின் சுயசரிதம் நூலில் தன் தந்தையின் பங்களிப்பை பரமஹம்ஸ யோகானந்தரின் சொந்த அங்கீகரிக்கும் சொற்களை மேற்கோள் காட்டினார்:

“அதிகாரத்திற்காக பணம் சேர்ப்பதில் தந்தை ஆர்வம் காட்டவில்லை. ஒரு சந்தர்ப்பத்தில், கல்கத்தா அர்பன் பேங்க்-ஐ ஏற்படுத்திய பிறகு, அவர் அதனுடைய பங்குகள் எதையும் வைத்துக் கொள்வதின் மூலம் பயனடைய மறுத்துவிட்டார். அவர் தன் ஓய்வு நேரத்தில் ஒரு சமூகக் கடமையைச் செய்ய மட்டுமே விரும்பியிருந்தார்.”

தந்தைக்கும் மகனுக்கும் இடையேயுள்ள ஓர் ஒற்றுமையைக் கோடிட்டுக் காட்டியவாறு, சுவாமி அச்சுதானந்தா மேலும் குறிப்பிட்டார்: “சிறிய அளவில் தொடங்கப்பட்ட இரயில்வே ஊழியர்கள் கூட்டுறவுச் சங்கத்திற்கும் அவருடைய மகன் பரமஹம்ஸ யோகானந்தரால் நிறுவப்பட்ட யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியாவின் வளர்ச்சிக்கும் இடையேயுள்ள ஒரு பெரிய ஒற்றுமையை நாங்கள் கவனிக்கிறோம்.” இரண்டும் சேவை புரிவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட நிறுவனங்கள் ஆகும் என்று அவர் கூறினார்.

பகவதி சரண் கோஷின் உத்வேகமூட்டும் வாழ்வின் பல விவரங்கள் ஒரு யோகியின் சுயசரிதம்நூலிலும் அத்துடன் பரமஹம்ஸரின் சகோதரர் சனந்த லால் கோஷ் எழுதிய மேஜ்தா என்ற பரமஹம்ஸரின் வாழ்க்கை வரலாற்றிலும் கூறப்பட்டுள்ளன. லாஹிரி மகாசயரின் ஒரு நேரடிச் சீடரான பகவதி சரண் கோஷ் தன் எட்டு குழந்தைகளின் மீதும் ஓர் அன்பான ஆன்மீகத் தாக்கத்தை ஏற்படுத்தினார். மேலும் அவருடைய நிதிசார்ந்த பங்களிப்புகள் பரமஹம்ஸரின் சர்வதேச திட்டப்பணிக்கு மட்டுமல்லாமல் 1935-ல் இந்தியாவிற்கு பரமஹம்ஸர் திரும்பிவந்த போது ராஞ்சியில் ஒய் எஸ் எஸ் ஆசிரமத்தை நிரந்தரமாக நிறுவுவதற்கும் முக்கியமாக இருந்தன.

பகவதி சரண் கோஷ் ஒரு இளைஞராக கடும் நிதிப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு, இறுதியில் பிந்தைய வாழ்வில் பொருள்வளத்தை அடைய கடுமையாக உழைத்த போதிலும், அவர் நிதிசார்ந்த பலன்களை விட ஆன்மீகத்திற்கு முன்னுரிமை வழங்கினார். ஒரு யோகியின் சுயசரிதம் நூலில் பரமஹம்ஸர் தன் தந்தையின் சிறப்பியல்புவாய்ந்த குறிப்புகளில் ஒன்றைப் பதிவுசெய்தார்:

“பொருள்சார் லாபத்தால் ஏன் பெருமை கொள்ள வேண்டும்? மனச்சமநிலை எனும் ஓர் இலக்கை நோக்கிச் செல்லும் ஒருவர் லாபத்தால் ஆரவாரம் கொள்வதும் இல்லை, நஷ்டத்தால் சோர்வடைவதும் இல்லை. மனிதன் இவ்வுலகில் காசின்றி வருகிறான், மற்றும் ஒரு ரூபாயும் இன்றி புறப்பட்டுச் செல்கிறான் என்று அவருக்குத் தெரியும்.”

பரமஹம்சரின் யோகானந்தர்-தந்தை-கௌரவிக்கப்பட்டார் (1)
கொல்கத்தாவின் கார்டன் ரீச் பகுதியில் உள்ள தென்கிழக்கு, தென்கிழக்கு மத்திய மற்றும் கிழக்குக் கடற்கரை இரயில்வே ஊழியர்கள் கூட்டுறவுச் சங்கத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் ஒரு புதிதாகத் திறக்கப்பட்ட பகவதி சரண் கோஷின் ஒரு வெண்கல மார்பளவுச் சிலையின் இருபக்கமும் ஒய் எஸ் எஸ் சன்னியாசிகள் சுவாமி அச்சுதானந்தா மற்றும் பிரம்மச்சாரி அமேயானந்தா இருக்கின்றனர். சுவாமி அச்சுதானந்தருக்குப் பின்புறம் பகவதி சரண் கோஷின் கொள்ளுப்பேரன் ஸ்ரீ சோம்நாத் கோஷ் நிற்கிறார். அவரும் அவருடைய மனைவி, திருமதி சரிதா கோஷும் (இடது பக்கத்திலிருந்து இரண்டாவது) அதிகாரப்பூர்வமாக சிலையைத் திறந்து வைத்தனர்; அப்போது பாரம்பரிய வேத முழக்கங்கள் ஒலிக்கப்பட்டன மற்றும் சிலைக்கு சடங்கு முறைமையாக மாலை அணிவிக்கப்பட்டது. சங்கத்தின் இயக்குநர் குழு உறுப்பினர்களும் உடன் இருந்தனர்.

இதைப் பகிர