பின்வரும் இடுகை ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் மற்றும் பின்னர் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியாவால் விரைவில் வெளியிடப்படவுள்ள பரமஹம்ஸ யோகானந்தரின் சொற்பொழிவுகள் மற்றும் கட்டுரைகளின் நான்காம் தொகுதியான ஸால்விங் த மிஸ்டரி ஆஃப் லைஃப் இல் முழுமையாக வாசிக்கக்கூடிய “ஸெல்ஃப்-ரியலைசேஷன்: நோயிங் யுவர் இன்ஃபினிட் நேச்சர்” என்ற உரையின் ஒரு பகுதி.
அனைத்து பெரும் சமயங்களின் போதனைகளும் இறைவனை நோக்கி வழிநடத்துகின்றன; ஆனால் அவற்றின் மாறுபட்ட வெளிப்புற கடைப்பிடிப்புகள் யாவும் சாதகரை இறுதியில் தியானத்தின் ஒரே அகப் பெருவழிக்கு இட்டுச் செல்லும் புறவழிகளேயாகும்.
தேகத்திலிருந்தும் எல்லைக்குட்பட்ட உலகிலிருந்தும் உணர்வுநிலையை விலக்கி தெய்வீகத்தில் ஐக்கியப்படுத்துவதே இறைவனில் முக்தி அடைவதற்கான ஒரே வழி. இயேசு தியானம் செய்தார். அவர் திரளான பொது மக்களுக்கு தார்மீக மற்றும் ஆன்மீக உண்மைகளை கற்பித்தார் — இறைவனை நோக்கிய பாதைக்குத் தேவையான முதல் படிகள்; ஆனால் தனது நெருங்கிய சீடர்களுக்கு இறை ஐக்கியத்திற்கான உயர் தியான விஞ்ஞானத்தை அவர் கற்பித்தார்.
தியான உத்தி மட்டுமே உங்களுக்கு விடுதலையைத் தராது; உங்கள் குணம் வலுவானதாகவும் தூய்மையாகவும் இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கை, நடத்தை அனைத்தும் சத்தியத்தின் விதிகளுக்கு இசைவாக இருக்க வேண்டும். யோக தியானப் பாதையின் முதல் விதிகள் யமம் மற்றும் நியமம் — பத்து கட்டளைகளுக்கு ஒத்த நீங்கள் செய்யக்கூடாத சில விஷயங்கள், (“கொலை செய்யாதிருப்பாயாக,” “பொய் சாட்சி சொல்லாதிருப்பாயாக,” “விபச்சாரம் செய்யாதிருப்பாயாக,” மற்றும் பல); மேலும் நீங்கள் பின்பற்ற வேண்டிய தூய்மை, சமநிலை மனநிறைவு, உள்முகநோக்கு (சுய ஆய்வு), இறைவன் மீதான பக்தி மற்றும் சுய ஒழுக்கம் போன்ற நேர்மறையான அறிவுறுத்தல்கள்.
தியானத்தில் மேம்பட, நீங்கள் பெருமை, கோபம், பேராசை, பொறாமை ஆகியவற்றிலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் நேர்மையற்றவர்களாக இருக்கக் கூடாது; உண்மையாகவே உணராத எதையும் நீங்கள் சொல்லக்கூடாது. சுயநலமாக பிறரிடம் எதையும் எதிர்பார்க்காதீர்கள்; உங்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை என்றால், மக்கள் உங்களிடமிருந்து என்ன எடுக்க முடியும்? இறைவனைத் தவிர வேறு எந்த லட்சியமும் எனக்கு இல்லாததால் யாரும் என்னை காயப்படுத்த முடியாது. நான் எந்த மனிதன் மீதும் கோபப்பட விரும்புவதில்லை, தன் கோபத்தை வெளிப்படுத்தி யாரும் என்னைத் தூண்டவும் முடியாது. எனவே அமைதியாகவும், சுயக்கட்டுப்பாடுடனும், நேர்மையாகவும் இருக்க முயற்சி செய்யுங்கள். இல்லையெனில், தவறான நடத்தை தியானத்தின் சாதகமான விளைவுகளை அழித்துவிடும்.
உங்களின் ஒவ்வொரு ஆன்மீக எண்ணமும் உங்கள் நித்திய நண்பனாக இருக்கும். உங்களின் ஒவ்வொரு தீயப் போக்கும் நீண்ட காலத்திற்கு உங்கள் எதிரியாக இருக்கும்; நீங்கள் அதை விட்டொழிக்கும் வரை அது உங்களைப் பின்தொடரும். அதை நினைவில் கொள்ளுங்கள். இறைவனை அடைவதற்கான படிப்படியான வழிமுறைகளை நான் உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன். தவறான எண்ணங்கள் மற்றும் பழக்கவழக்கங்களிலிருந்து முதலில் விடுபடுங்கள். இரண்டாவது, நல்ல பழக்கங்களை உருவாக்கி, நல்ல செயல்களைச் செய்யுங்கள்.
மூன்றாவது படி ஆசனம் அல்லது அமர்வுநிலை: ஆழ்ந்த தியானம் செய்வதற்கு தேகம் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.
பின்னர் பிராணாயாமா (பிராணன் அல்லது உயிர் சக்தியை கட்டுப்படுத்துதல்), தேகத்தையும் மனத்தையும், மற்றும் சுவாசத்தையும் இதயத் துடிப்பையும் அமைதிப்படுத்தும் உத்திகள். பிராணாயாமம் அனுபூதிக்கான முதன்மையான கலை ஆகும். அநித்திய சுவாசத்தை கையாள்வதில் தேர்ச்சிப் பெறாவிட்டால் நீங்கள் இறைவனை உணர முடியாது. சுவாசம் மனத்தை புலன்உணர்வுத் தளத்துடன் இணைக்கிறது. உங்கள் சுவாசம் அமைதியாகும்போது, உங்கள் மனம் உள்ளார்ந்து செல்கிறது. சுவாசமின்மையே இறைவனை அடையும் வழி. பிராணாயாமப் பயிற்சியைப் பயிற்சி செய்யுங்கள், தியானம் செய்வது எப்படி — இறைவனை உணர்ந்து அவனுடன் ஒன்றிணைவது எவ்வாறு என்பதை அறிவீர்கள்.
பிராணாயாமம் மூலம் மனத்தை உள்முகப்படுத்துதல் பிரத்யாஹாரம் என்று அழைக்கப்படுகிறது. இது அடுத்த படிநிலை: உணர்வுநிலை புலன்களிலிருந்து விலகி, அகத்துள் செல்கிறது. அப்போதுதான் உண்மையான தியானம் தொடங்குகிறது.
சுவாசம், தேகம் மற்றும் வெளிப்புற உணர்ச்சிகளின் கவனச்சிதறல்களிலிருந்து உங்கள் கவனம் விடுபடும்போது, அது இறைவன் மீது ஒருமுகப்படமுடியும். அதுவே தாரணை எனப்படும், ஒருமுகப்படுதல், அஷ்டாங்க யோகப் பாதையின் ஆறாவது படி. அகத்தின் அசைவற்ற நிலையில், பரமாத்மாவின் வல்லமைமிக்க குரலை ஓம், வார்த்தை அல்லது ஆமென் என்று ஒருவர் கேட்கிறார்.
அந்த மகத்தான, ஆறுதல் தரும் பிரபஞ்ச அதிர்வுகளைக் கேட்டு அதில் நீங்கள் ஐக்கியப்படும்போது, உணர்வுநிலை அதனுடன் பரந்தவெளி முழுவதும் விரிவடைகிறது. அதுவே தியானம், இறைவனின் பரிமாணத்தைப் பற்றிய கருத்தாக்கத்தின் மீதான தியானம்.
தியானத்தின் ஒருமுகப்பாடு மற்றும் உணர்தல் ஆழமடையும் போது, ஒருவர் இறுதி நிலையான சமாதியை அடைகிறார், இதில் தியானிப்பவர், தியான செயல்முறை மற்றும் தியானப் பொருள் (இறைவன்) ஆகியவை இணைந்து ஒன்றேயாகின்றன. சமாதியில், இறைவனும் நீங்களும் ஒன்றே என்பதை நேரடி அனுபவத்தின் மூலம் அறிவீர்கள்.
தியானம்தான் ஒரே வழி. “இடைவிடாமல் பிரார்த்தனை செய்யுங்கள்” என்று இயேசு கற்பித்தார். அதற்கு என்ன பொருள்? ஐந்து நிமிடங்கள் சிதறடிக்கப்பட்ட பிரார்த்தனையில் உட்கார்ந்துவிட்டு, பின்னர் அவசரமாகச் செல்வது அல்ல; இறைவனை அறிய வேண்டும் என்ற உங்கள் ஆன்மாவின் கூக்குரலுக்கு பதில் கிடைக்கும் வரை தியானம் செய்வதே ஆகும்.
எல்லையற்ற ஆழ்ந்த பரிபூரணனாக, அவன் அருவமானவன். ஆயினும் அனைவரின் தந்தை-தாய்-நண்பனாக, அந்த பரம்பொருள் நெருங்கிய விதமாக தனிப்பட்டவன்; அதனால், அவன் உங்களுக்கு பதிலளிப்பான். ஆரம்பத்தில் மௌனமாக இருப்பான்; ஆனால் உங்கள் கோரிக்கைகளில் நீங்கள் விடாப்பிடியாக இருந்தால், அவன் பதிலளிப்பான். உங்களில் சிலர் அவனின் மறுமொழி பெறுவதற்கான இடத்தை நெருங்கி வருவதை என்னால் உணர முடிகிறது.
இறைவன் மறுமொழி கூறும் வரை முயற்சியைக் கைவிடாதீர்கள்: “தெய்வத் தாயே, நீ என்னிடம் பேச வேண்டும். நீ என்னுடன் பேசாவிட்டால் நான் ஆயிரம் முறை இறக்கிறேன்.” நீங்கள் முற்றிலும் நேர்மையானவர் என்று அவளை நம்ப வைக்கும்போது, நான் உங்களுக்குச் சொல்வதன் நிறைவேற்றத்தைக் காண்பீர்கள்.
அதன் விளைவு, நாள் முழுவதும் நீடிக்கும் வகையில் உங்கள் தியானத்தை மிகவும் தீவிரமானதாக ஆக்குங்கள். உங்களைப் படைத்தவனை நாடுவதை விட வேறெதிலும் அதிக மும்முரமாக இருக்காதீர்கள். நீங்கள் உலகத்தின் அரசனாகிவிட்டால், பிறகு என்ன? நீங்கள் எல்லா நாடுகளையும் வென்றால், பிறகு என்ன? ஒரு நாள் நீங்கள் இறந்து கொண்டிருப்பதையும் உதவியற்றவர் என்பதையும் காண்பீர்கள். உலக விஷயங்களை சொந்தமாக்கிக் கொள்ள நீங்கள் ஏன் ஏங்க வேண்டும்? அவை எப்போது வேண்டுமானாலும் உங்களிடமிருந்து பறிக்கப்படலாம் — நீங்கள் மரணத்தின் வாயில்களைக் கடக்கும்போது அவை நிச்சயமாகப் பறிக்கப்படும். மாறாக, உங்களிடமிருந்து ஒருபோதும் பறிக்க முடியாத ஒன்றை அறிய முயற்சி செய்யுங்கள். தியானம் செய்யாதவர்களுக்கு இறைவன் மிகவும் நிச்சயமற்றவன், ஆனால் யோகி அவனை மிகவும் நம்பகமான நிச்சயமானவனாக அறிகிறார். அவனைக் கண்டுணர்பவர்களுக்கு “அவர்களின் வெகுமதி மகத்தானதாக இருக்கும்.”
இந்தியாவின் மகத்தான யோகிகளிடம் உண்மையான மகிழ்ச்சியை நான் கண்டிருக்கிறேன். அவர்களின் பூமிக்குரிய வசிப்பிடம் ஒரு எளிய குகையாக இருக்கலாம்; ஆனால் அவர்கள் அரசனுக்கு அரசனான இறைவனின் பேரானந்தத்தில் புன்னகைக்கும், அனைத்து படைப்புகளுக்கும் மேலான தங்களது சக்தியில் பாதுகாப்பாக இருக்கும் அரசர்கள்.
இந்த இறை உணர்வுநிலையை அடைவதே உங்கள் இறுதி மற்றும் மிகவும் பயனுள்ள குறிக்கோள் என்பதை உணருங்கள்; நீங்கள் அதை அடைவது எப்படி என்பதை அறிய அனைத்து படிநிலைகளையும் நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
அமைதியாக உட்கார்ந்து ஒரு சிறு பிரார்த்தனை சொல்வது உங்களுக்கு ஆன்ம அனுபூதியைத் தராது; அது உங்கள் பிரார்த்தனை மற்றும் இறைவன் மீதான விருப்பத்தால் மௌனத்தைக் கடைவதால் வருவது. இதன் விளைவு அற்புதமானதாக இருக்கும். நீங்கள் முயற்சி செய்ய வேண்டும்: நான் உங்களுக்கு வார்த்தைகளால் ஊட்டமளிக்க இங்கு வரவில்லை, ஆனால் இறை அன்பால் உங்கள் ஆன்மாவை பேணி காக்கவே வந்துள்ளேன்.
இந்த வலைப்பதிவு இடுகையில், பரமஹம்ஸர், இறைவனுடனான நமது ஒருமைத் தன்மையை உணர பிராணாயாம உத்திகளின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுகிறார். யோகதா சத்சங்க பாட மாணவர்களுக்குக் கற்பிக்கப்படும் மிக உயர்ந்த பிராணாயாம உத்திகள் கிரியா யோகா விஞ்ஞானத்தின் ஒரு பகுதியே. பரமஹம்ஸ யோகானந்தர் கிரியா யோக தியான விஞ்ஞானத்தின் படிப்படியான முறைகள் மற்றும் “எப்படி-வாழ-வேண்டும்” கோட்பாடுகளில் தனது விரிவான வழிமுறைகளை வழங்குவதற்காக YSS பாடங்களை உருவாக்கினார்.


















