யோகதா சத்சங்க கிளை ஆசிரமம் — துவாராஹாட்
உத்தராகண்டின் இயற்கை எழில் மிக்க இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள துவாரஹாத், யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் பக்தர்களுக்கு ஆழ்ந்த ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த ஓர் இடமாகும். மகாவதார பாபாஜியின் தெய்வீக இருப்பால் அருளப்பட்டதும், YSS/SRF மகத்தான குருமார்களின் புனித பாரம்பரியத்துடன் தொடர்புடையதுமான இந்தப் மலைப்பகுதிகள், அமைதி, அகமுகத் தொடர்பு மற்றும் கிரியா யோகத்தின் சாசுவத உண்மைகளை உணர்ந்து கொள்ளத் துடிக்கும் உண்மையான சாதகர்களை நெடுங்காலமாக ஈர்த்து வந்துள்ளன.
இயற்கையாகவே ஆன்மீக எழுச்சியூட்டும் இந்தச் சூழலில், அமைந்துள்ள யோகதா சத்சங்க கிளை ஆசிரமம், துவாரஹாத் பக்தர்கள் ஆன்மீகத்தில் தாங்கள் ஆழ்ந்து செல்ல ஒரு சிறந்த புகலிடத்தை வழங்குகிறது. ஏகாந்த வாசத்திற்காகவோ, சிறப்பு நிகழ்ச்சிக்காகவோ, அல்லது தனிப்பட்ட சாதனாவிற்காகவோ வரும் பக்தர்கள், இந்த ஆசிரமத்தின் அமைதியான சூழலைப் பயன்படுத்தி தியானம் செய்யவும், சுய பரிசோதனையில் ஈடுபடவும், பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளுடன் தங்களை இசைவுபடுத்திக் கொள்ளவும் முடியும்.






இமயமலையில் ஒரு ஆன்மீகப் புகலிடம்
1983-ல் கட்டப்பட்டுத் திறந்து வைக்கப்பட்ட இந்த ஆசிரம வளாகத்தில் ஒரு தியான மந்திர் (தியான மண்டபம்) உள்ளது. இங்கு, YSS சன்னியாசிகள் நடத்தும் தினசரி கூட்டு தியானங்கள் மற்றும் சத்சங்கங்களில் கலந்து கொள்ள பக்தர்கள் ஒன்றுகூடுகின்றனர்.
தங்கும் விடுதிப் பகுதிகளில், நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் அல்லது தனிப்பட்ட ஏகாந்த வாசத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்காகத் தூய்மையான மற்றும் வசதியான அறைகள், உணவு வசதிகள் மற்றும் பிற அத்தியாவசிய வசதிகள் உள்ளன. பல்வேறு கட்டடங்களை இணைக்கும் நடைபாதைகளின் இருபுறமும் நன்கு பராமரிக்கப்படும் தோட்டங்கள், திறந்த முற்றங்கள் மற்றும் நிழலான அமரும் இடங்கள் அமைந்துள்ளன. சந்தடியற்ற இமயமலைச் சூழலுடன் சேர்ந்து, இந்த அமைதியான இடங்கள் பக்தர்களுக்குத் தியானம் செய்யவும், சுய பரிசோதனை செய்து கொள்ளவும் இறைவனுடன் நிச்சலன நிலையில் தொடர்பு கொள்ளவும் ஏராளமான வாய்ப்புகளை வழங்குகின்றன.
மகாவதார பாபாஜி குகை மற்றும் ஸ்மிருதி பவன்
துவாரஹாத்திலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில், துனாகிரி மலைத்தொடரின் மடியில் மகாவதார பாபாஜி குகை அமைந்துள்ளது — 1861 ஆம் ஆண்டில் மகாவதார பாபாஜி, லாஹிரி மகாசயருக்குப் பண்டைய கிரியா யோக விஞ்ஞானத்தில் தீட்சை அளித்த புனித இடம் இதுவே. நவீன காலத்தின் அனைத்து கிரியாபான்களும் இந்த நிகழ்விலிருந்தே தங்கள் குருபரம்பரையைப் பெறுகின்றனர். நவீன உலகிற்கு கிரியா யோகத்தை மீண்டும் அறிமுகப்படுத்திய ஒரு தெய்வீகச் சந்திப்பு இதுவாகும்.
இக்குகையின் அருகில், மகாவதார பாபாஜியைப் போற்றும் வகையில் YSS ஸ்மிருதி பவன் என்று அழைக்கப்படுகிற ஒரு சிறிய ஆலயத்தை அமைத்துள்ளது. இந்தப் புனித தலத்திற்கு வரும் பக்தர்கள், அவரை நினைவுகூர்வதற்கும் தியானிப்பதற்குமான இடமாகச் செயல்படுகிறது.
இந்தப் புனிதத் தலங்களுக்குச் செல்லத் திட்டமிடுபவர்கள், கூடுதல் தகவல்களையும் பயனுள்ள வழிகாட்டுதல்களையும் இங்கே காணலாம்.











முக்கியஸ்தர்கள் மற்றும் பிரமுகர்களின் வருகை
நமது அன்பிற்குரிய குருதேவரின் ஒரு யோகியின் சுயசரிதம் வாயிலாகவும், இன்டர்நெட் மற்றும் ஆன்லைன் ஊடகங்களினாலும் அதிகமானோர் மகாவதார பாபாஜியைப் பற்றி அறிந்துகொண்டு வருவதால், இந்த பெரும் அமரத்துவ ஞானியின் அருளாசிகளைப் பெறுவதற்காக ஒவ்வொரு நாளும் முக்கியஸ்தர்கள் மற்றும் பிரமுகர்கள் உட்பட ஏராளமான யாத்ரீகர்கள் – சில சமயங்களில் பேருந்துகளில் வந்து இறங்குவோர் – இந்தப் புனிதத் தலத்திற்கு ஆன்மீகப் பயணம் மேற்கொள்கின்றனர்.
பல வருகையாளர்களுக்கு, இத்தகைய புனிதப் பயணங்கள் மகாவதார பாபாஜியைப் பற்றியும், கிரியா யோகம் எனும் பண்டைய விஞ்ஞானத்தைப் பற்றியும் மேலும் அறிந்துகொள்ளும் வாய்ப்பை வழங்குகின்றன. அதன் நவீன மறுமலர்ச்சி மற்றும் உலகளாவிய பரவல் பரமஹம்ஸ யோகானந்தர் மற்றும் YSS/SRF குரு பரம்பரை மூலமாக இந்த மகா குருவால் வழிநடத்தப்பட்டது.
அறப்பணிகள் மற்றும் மனிதாபிமானச் செயல்பாடுகள்
மனிதகுலத்தை தனது பெரிய ஆன்மாவாகக் கருதி சேவை செய்ய வேண்டும் என்ற பரமஹம்ஸ யோகானந்தரின் இலட்சியத்திற்கு ஏற்ப, YSS துவாரஹாத் ஆசிரமம், துவாரஹாத் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இமயமலை கிராமவாசிகளுக்குப் பல்வேறு அறப்பணிகளையும் நிவாரண நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்த ஆசிரமம் ஆண்டுக்கு இருமுறை இலவச மருத்துவ முகாம்களை நடத்துகிறது. போதிய மருத்துவ வசதிகள் கிடைக்கப்பெறாத மக்களுக்கு, இலவச மருந்துகள், பல்வேறு மருத்துவத் துறைகளின் கீழ் இலவச ஆலோசனைகள் மற்றும் பரிசோதனைகள் இந்த முகாமில் வழங்கப்படுகின்றன.
கூடுதலாக, இந்த ஆசிரமம் பின்தங்கிய குழந்தைகளுக்கான பால கிருஷ்ணாலயா என்ற இலவச தொடக்கப்பள்ளி மூலமாகவும், தியானம், யோகா, கலைகள், நன்னெறி சார்ந்த கல்வி மற்றும் வாழ்க்கை-திறன் பயிற்சி ஆகியவற்றை இணைக்கும் வருடாந்திர குழந்தைகள் கோடை முகாம் மூலமாகவும் கல்வி மற்றும் இளைஞர் மேம்பாட்டில் கவனம் செலுத்துகிறது. மேலும், சிறப்புத் திறனும் ஆற்றலும் கொண்ட உள்ளூர் மாணவர்களுக்கு பல்வேறு கல்வி உதவித்தொகைகள் மற்றும் பிற உதவிகளை வழங்கி ஆதரவளிக்கிறது.





YSS-க்கு புதியவரா?
வீட்டிலிருந்தே பயிலக்கூடிய பாடத்திட்டமான YSS பாடங்கள், நீங்கள் கற்பனை செய்து கூடப் பார்த்திராத வகையில் உங்கள் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியமைக்கின்றன என்பதையும், சமச்சீரான மற்றும் வெற்றிகரமான வாழ்க்கையை வாழ அவை எவ்வாறு உதவுகின்றன என்பதையும் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்.
வாராந்திர நிகழ்ச்சிகள்
நாங்கள் வழக்கமான தியானம் மற்றும் சத்சங்கங்கள் வழங்குகிறோம், அவற்றில் பொதுமக்களும் கலந்து கொள்ளலாம். இந்த அமர்வுகளில் மௌன தியானம், பக்திபூர்வமாக இசைத்தல் மற்றும் உத்வேகம் அளிக்கும் வாசிப்பு ஆகியவை இருக்கும்.
YSS இ-செய்திமடலுக்குப் பதிவு செய்து, புதிய தகவல்களையும் நிகழ்ச்சி அறிவிப்புகளையும் பெறுங்கள்
வரவிருக்கும் சிறப்பு நிகழ்வுகள் & நீண்ட தியானங்கள்
(YSS சன்னியாசிகள் வழிநடத்தும்)
செய்திகள் & புகைப்படங்கள்
உங்கள் வருகையைத் திட்டமிடுங்கள்
நீங்கள் பகல் நேரத்தில் ஆசிரமத்திற்கு வர விரும்புகிறீர்களா?
கூட்டுத் தியானங்களில் கலந்துகொண்டு ஆசிரமத்தின் அமைதியைத் துய்த்து மகிழ உங்களை அன்புடன் அழைக்கிறோம். துவாரஹாத்திற்கு அருகிலுள்ள மகாவதார பாபாஜி தொடர்புடைய புனிதத் தலங்களுக்கும் நீங்கள் பயணம் மேற்கொள்ளலாம். ஆசிரமத்தைச் சுற்றிப் பார்க்க வழிகாட்டுதல் தேவைப்பட்டாலோ அல்லது மகாவதார பாபாஜி குகை, ஸ்மிருதி பவன் போன்ற இடங்களுக்குச் செல்ல விரும்பினாலோ, சந்திப்பு நேரம் பெற எங்கள் வரவேற்பறையைத் தொடர்புகொள்ளுங்கள்.
கவனத்திற்கு: ஆசிரம வளாகம் அனைத்து பார்வையாளர்களுக்கும் தினமும் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை திறந்திருக்கும்.
ஒரு தனிப்பட்ட ஏகாந்த வாசத்திற்கு திட்டமிடுங்கள் அல்லது ஆசிரமத்தில் நடத்தப்படும் ஏகாந்த வாசம் ஒன்றில் கலந்துகொள்ளுங்கள்.
YSS/SRF பாட மாணவர்கள் ஆசிரமத்தில் ஐந்து நாட்கள் வரை தங்கலாம். ஆன்மீக ரீதியாகப் புதுப்பித்துக்கொள்ளவும் புத்துணர்ச்சி பெறவும், பக்தர்கள் தனிப்பட்ட ஏகாந்த வாசத்தை மேற்கொள்ளவோ அல்லது எங்களுடைய ஏகாந்த வாச நிகழ்ச்சிகள் ஒன்றில் கலந்துகொள்ளவோ வரவேற்கிறோம். இந்த ஏகாந்த வாசத்தின் போது, YSS சன்னியாசிகள் தினசரி இருமுறை நடத்தும் கூட்டு தியானங்களில் நீங்கள் கலந்து கொள்ளலாம்; மேலும் யோகதா சத்சங்க போதனைகள் கற்றல் மற்றும் பயிற்சியில் ஆன்மிக ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் பெறலாம்.
ஆசிரமத்தில் தங்குமிடம் கோரிக்கைக்கு, கீழே உள்ள பட்டனைக் கிளிக் செய்யவும்.
எங்களை தொடர்பு கொள்ளவும்
எப்படி சென்றடைவது
உத்தராகண்ட் மாநிலத்தின் அல்மோரா மாவட்டத்தில் அமைந்துள்ள துவாரஹாத், விமானம், ரயில் மற்றும் சாலை வழியாக நன்கு இணைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் குமாவோன் பகுதிக்கான முக்கிய நுழைவாயில்களாக விளங்கும் காத்கோடம் அல்லது ஹல்த்வானி வழியாக துவாரஹாத்தை அடைகின்றனர்.
துவாரஹாத்திற்கு அருகிலுள்ள விமான நிலையம் பந்த்நகர் விமான நிலையம் (PGH) ஆகும், இது சுமார் 149 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. பந்த்நகர், குறைந்த எண்ணிக்கை கொண்ட, ஆனால் வழக்கமான விமான சேவைகள் மூலம் டெல்லி மற்றும் நொய்டாவுடன் இணைக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்திலிருந்து துவாரஹாத்திற்குச் செல்ல டாக்ஸிகள் எளிதாகக் கிடைக்கின்றன, மேலும் சாலை வழியாகப் பயணிக்க சுமார் 6 மணி நேரம் ஆகும்.
அருகிலுள்ள ரயில் நிலையங்கள் காத்கோடம் மற்றும் ஹல்த்வானி ஆகும், இவை YSS துவாரஹாத் ஆசிரமத்திலிருந்து முறையே சுமார் 116 கி.மீ மற்றும் 122 கி.மீ தொலைவில் அமைந்துள்ளன. இரயில் நிலையங்களிலிருந்து துவாரஹாத்திற்குத் டாக்சிகள் மற்றும் பேருந்து வசதிகள் எளிதாகக் கிடைக்கின்றன. இரயில் நிலையங்களிலிருந்து ஆசிரமத்திற்குத் டாக்சியில் செல்வதற்கு ஏறக்குறைய 5 மணிநேரம் ஆகும்.
டெல்லியிலிருந்து காத்கோடத்திற்குச் செல்லும் சில ரயில்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
- காத்கோடம் சதாப்தி எக்ஸ்பிரஸ் (12040) – இது புது டெல்லி நிலையத்திலிருந்து அதிகாலையில் புறப்பட்டு, நண்பகல் வாக்கில் காத்கோடம் சென்றடைகிறது.
- ராணிகேத் எக்ஸ்பிரஸ் (15013) – ஜெய்சால்மரிலிருந்து ஜெய்ப்பூர் மற்றும் டெல்லி வழியாக காத்கோடம் வரை இயக்கப்படுகிறது. இது இரவில் டெல்லியிலிருந்து புறப்பட்டு, விடியற்காலையில் காத்கோடம் சென்றடைகிறது.
துவாரஹாத், உத்தராகண்ட் மற்றும் முக்கிய வட இந்திய நகரங்களுடன் சாலை வழியாக நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
உத்தராகண்டில் அருகிலுள்ள நகரங்களான காத்கோடம் (116 kms), ஹல்த்வானி (122 kms), அல்மோரா (70 kms), நைனிடால் (93 kms), ராணிகேத் (35 kms), மற்றும் கௌசானி (50 kms) ஆகிய இடங்களிலிருந்து பேருந்து மற்றும் டாக்ஸி சேவைகள் கிடைக்கின்றன.
மாற்றாக, நீங்கள் டெல்லியிலிருந்து (420 kms) காரில் பயணம் செய்யலாம், இதற்கு சுமார் 10 மணி நேரம் ஆகும். டெல்லியிலிருந்து, ISBT ஆனந்த் விஹாரிலிருந்து காத்கோடம், அல்மோரா, அல்லது நைனிடாலுக்குச் செல்லும் பேருந்துகளில் ஏறி, பின்னர் அங்கிருந்து செல்ல இணைப்புப் பேருந்து அல்லது டாக்ஸி மூலம் துவாரஹாத் சென்றடையலாம்.
கவனத்திற்கு: 1,500 மீ (5,000 அடி) சராசரி உயரமும், அடர்ந்த பைன் மரக் காடுகளையும் கொண்ட துவாரஹாத் ஆண்டு முழுவதும் குளிர்ச்சியாகவே இருக்கும், குறிப்பாக நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான குளிர்கால மாதங்களில் கடும் குளிர் நிலவும். மாலை சுமார் 7:00 மணிக்கே நகரம் அமைதியாகிவிடுவதால், மாலை நேரத்திற்கு முன்பே ஆசிரமத்தைச் சென்றடைய நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

















