யோகதா சத்சங்க மடம் — தக்ஷிணேஸ்வர்

மேற்கு வங்காளம்

வரலாறு மற்றும் வளர்ச்சி

வட கொல்கத்தாவில் கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள யோகதா சத்சங்க மடம், தக்ஷிணேஸ்வர், 1917 ஆம் ஆண்டு பரமஹம்ச யோகானந்தரால் நிறுவப்பட்ட ஆன்மீக அமைப்பான யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா(YSS)-வின் பதிவு செய்யப்பட்ட தலைமையகமாகும். இந்த அழகிய ஆசிரமத்தின் வரலாறு, இந்த மடம் நிறுவப்பட்ட 1939 ஆம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது. கம்பீரமான கட்டிடத்துடனும் அமைதியான சூழலுடனும் அமைந்துள்ள இந்த இடத்தைப் பரமஹம்ஸர் மிகவும் நேசித்தார். 1951 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் மாநாட்டின்போது, பெருந்திரளான மக்களிடையே உரையாற்றிய அவர், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் உலகின் பல நாடுகளிலிருந்தும் பக்தர்கள் தக்ஷிணேஸ்வர் ஆசிரமத்திற்கு வருகை தருவார்கள் என்று மனக்காட்சியில் கண்டு கூறினார்.

தலைவர்களான ஸ்ரீ தயா மாதா மற்றும் ஸ்ரீ மிருணாளினி மாதா ஆகியோரின் புனித வருகையால் இந்த ஆசிரமம் பல ஆண்டுகளாக ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. அவர்களது பல்வேறு வருகைகளின்போது, பக்தர்களுக்காக பல சத்சங்கங்கள், குழுத் தியானங்கள், கிரியா யோக தீட்சை நிகழ்ச்சிகள் மற்றும் ஆலோசனை அமர்வுகளை அவர்கள் நடத்தினர். YSS/SRF-ன் தற்போதைய தலைவரும் ஆன்மீக முதல்வருமான ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்த கிரி அவர்களும் இந்த ஆசிரமத்திற்கு வருகை தந்து, உண்மையைத் தேடுபவர்களின் ஆன்மீக நலனுக்காக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளார்.

ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்த கிரி
(தற்போதைய தலைவர் மற்றும் ஆன்மீக முதல்வர்)

ஆசிரமத்தைப் பற்றிய ஒரு பார்வை

இரண்டு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தக்ஷிணேஸ்வர் ஆசிரமத்தில், பழத்தோட்டம், பூச்செடிகள் மற்றும் ஒரு பெரிய குளம் ஆகியவை உள்ளன. இந்த இடம் முதலில் ஒரு தோட்ட இல்லமாக இருந்தது. ஆசிரமம் குறித்த பரமஹம்ஸரின் தொலைநோக்குப் பார்வையை மனத்தில் கொண்டு, பக்தர்களின் வசதிக்காக வளாகத்திற்குள் ஒரு தியான மண்டபம், விருந்தினர் இல்லம், சமையலறை, பணியிடங்கள் மற்றும் உணவருந்தும் பகுதி ஆகியவை அமைக்கப்பட்டன.

1939 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து, இந்த ஆசிரமம் உண்மையைத் தேடுபவர்களுக்கு ஒரு சோலையாக வளர்ந்துள்ளது. YSS சன்னியாசிகள் வழிநடத்தும் காலை, மாலை தினசரி கூட்டுத் தியானங்களிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் வாராந்திர சத்சங்கங்களிலும், பல்வேறு நினைவுதின நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறோம். YSS மற்றும் SRF பக்தர்கள், ஆசிரமத்தில் நடைபெறும் தனிப்பட்ட மற்றும் வழிநடத்தும் ரிட்ரீட்களிலும், தினமும் இருமுறை நடைபெறும் குழுத் தியானப் பயிற்சி, YSS தியான உத்திகளை மறுஆய்வு செய்தல், ஆங்கிலம், வங்காளம், இந்தி ஆகிய மொழிகளில் ஆன்மீக உரைகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறும் சாதனா சங்கமங்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள வரவேற்கப்படுகின்றனர்.

பல்வேறு ஆன்மீகச் செயல்பாடுகளை நடத்துவதோடு மட்டுமல்லாமல், YSS தக்ஷிணேஸ்வர் ஆசிரமம், குறைந்த பொருளாதார வசதி கொண்ட மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு கல்வி, மருத்துவம் மற்றும் பிற தொண்டு நடவடிக்கைகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கொல்கத்தா மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் பல ஹோமியோபதி மற்றும் அலோபதி மருத்துவமனைகள், நோயியல் ஆய்வகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆகியவற்றை நடத்துவதும் இத்தொண்டு நடவடிக்கைகளில் அடங்கும்.

YSS-க்கு புதியவரா?

வீட்டிலிருந்தே பயிலக்கூடிய பாடத்திட்டமான YSS பாடங்கள், நீங்கள் கற்பனை செய்து கூடப் பார்த்திராத வகையில் உங்கள் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியமைக்கின்றன என்பதையும், சமச்சீரான மற்றும் வெற்றிகரமான வாழ்க்கையை வாழ அவை எவ்வாறு உதவுகின்றன என்பதையும் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்.

para-ornament

கொல்கத்தாவில் பரமஹம்ஸ யோகானந்தரின் வாழ்க்கையுடன் தொடர்புடைய முக்கிய இடங்கள்

மகான்கள் வாழ்ந்த இடங்களுக்குச் செல்வது மிகவும் மதிப்புள்ளது. … அத்தகைய இடங்கள், அந்தப் புனிதத் தலங்களில் நடமாடிய தெய்வீக ஆன்மாக்கள் விட்டுச் சென்ற அதிர்வுகளால் என்றென்றும் நிறைந்திருக்கும். இப்பூமி அழியும்வரை அவர்களுடைய அதிர்வுகள் அங்கே நிலைத்திருக்கும். ஆன்மாக்கள் இறைவனுடன் ஐக்கியமான இடங்களில், நீங்கள் மேலான இறை-ஐக்கியத்தையும், அவனது மறுமொழியையும் உணர முடியும். இத்தகைய புனித யாத்திரைகள் பல சமயங்களில் ஒருவருடைய வாழ்க்கையை சிறந்ததாக முற்றிலும் மாற்றிவிடுகின்றன.

— பரமஹம்ஸ யோகானந்தர்

பரமஹம்ஸ யோகானந்தரின் இந்த வார்த்தைகளால் ஊக்கமடைந்து, அந்த மாபெரும் குருவின் இருப்பினால் புனிதமடைந்த பல்வேறு இடங்களுக்கும் ஒரு புனித யாத்திரை மேற்கொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறோம். பரமஹம்ஸர் தமது இளமைப் பருவத்தின் முக்கிய ஆண்டுகளை கொல்கத்தா நகரில் கழித்தார். அங்கு தமது குருவான ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் கிரி அவர்களிடமிருந்து ஆன்மீகப் பயிற்சியைப் பெற்றதுடன், அவரது குருபரம்பரையைச் சேர்ந்த மகாவதார பாபாஜி, லாஹிரி மகாசயர் மற்றும் ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் கிரி ஆகியோரால் அவருக்கு வழங்கப்பட்ட, கிரியா யோகப் போதனைகளை உலகம் முழுவதும் பரப்பும் புனிதப் பொறுப்பை நிறைவேற்ற அமெரிக்காவிற்குப் புறப்படுவதற்கு முன் தமது முறையான கல்வியையும் நிறைவு செய்தார்.

4 கர்பார் ரோடு மற்றும் அருகிலுள்ள பிற இடங்கள்

கொல்கத்தாவில் உள்ள 4 கர்பார் ரோடு, பரமஹம்ஸ யோகானந்தரின் குடும்ப வீடாகும். உலகம் முழுவதிலுமிருந்து பக்தர்கள் வருகை தரும், மிகவும் போற்றப்படும் புனித யாத்திரைத் தலமாக இது விளங்குகிறது. இவ்வீட்டின் இரண்டாவது மாடியில் அமைந்துள்ள மாடியறை, அவர் இறைவனுடன் இறை ஐக்கியத்தில் திளைத்த அவரது புனித சரணாலயமாக இருந்தது. இங்குதான் அவர் பல பரவச அனுபவங்களையும் தெய்வீகக் காட்சிகளையும் பெற்றார்.

அருகிலேயே 50, ஆம்ஹெர்ஸ்ட் தெரு அமைந்துள்ளது. இது ஸ்ரீ மாஸ்டர் மகாசயரின் இல்லமாகும். ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் உயர்ந்த சீடர்களில் ஒருவரான மாஸ்டர் மகாசயரை, பரமஹம்சர் தமது இளமைப் பருவத்தில் அடிக்கடி சந்தித்து வந்தார். மேலும், யோகானந்தரின் தாயார், இந்த இல்லத்தில் அவரது குடும்பம் வசித்து வந்தபோதுதான் மறைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்பார் ரோட்டில் உள்ள பரமஹம்ச யோகானந்தரின் குடும்ப இல்லத்திலிருந்து சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில், ராம்மோகன் ராய் ரோட்டில் நாகேந்திர மடம் அமைந்துள்ளது. யோகானந்தர் தமது ஆன்மீக இலக்கியமான ஒரு யோகியின் சுயசரிதத்தில் குறிப்பிடும் பாதுரி மகாசயர் (“அந்தரத்தில் மிதக்கும் மகான்”) தங்கியிருந்த இடம் இதுவாகும். பள்ளியிலிருந்து திரும்பி வரும் வழியில், அந்த மாபெரும் குரு அடிக்கடி இங்கு வந்து, இந்த மகானைச் சந்தித்து அவருடன் ஆன்மீக விஷயங்கள் குறித்து உரையாடுவார்.

அருகிலுள்ள மற்றொரு முக்கியமான இடம் கர்பாரில் உள்ள யோகதா சத்சங்க தியான கேந்திரா ஆகும். யோகானந்தரின் இளமைக்கால நண்பரான துளசி நாராயண் போஸ் அவர்களின் இல்லத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்த இடத்தில்தான், அந்த மாபெரும் குருநாதர் தமது இளமைப் பருவத்தில் தனது நண்பர்களுடன் சேர்ந்து தியானம் செய்தார்.

ஸ்ரீ யுக்தேஸ்வரரின் ஆசிரமமும் செராம்பூரில் உள்ள பிற தொடர்புடைய இடங்களும்

மேற்கு வங்காளத்தின் ஹூக்ளி மாவட்டத்தில் அமைந்துள்ள செராம்பூர், பரமஹம்ச யோகானந்தர் மற்றும் அவரது குருவான ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வரர் ஆகியோரின் வாழ்க்கையுடன் தொடர்புடைய பல புனித இடங்களைக் கொண்ட சிறப்புமிக்க தலமாக விளங்குகிறது.

தமது கல்லூரிப் பருவத்தில் ஆன்மீகப் பயிற்சிக்காக, தமது குருவின் ஆசிரமத்தில் அதிக காலத்தை அவர் செராம்பூரிலேயே கழித்தார். ஸ்ரீ யுக்தேஸ்வரரின் நினைவாக, அந்த ஆசிரம வளாகத்திற்குள் ஒரு ஸ்மிருதி மந்திர் அமைக்கப்பட்டுள்ளது. ஆசிரமத்திற்கு அருகில் யோகானந்தரின் மாமாவான ஸ்ரீ சாரதா பிரசாத் கோஷ் அவர்களின் இல்லம் உள்ளது. யோகானந்தர் சில காலம் இந்த இல்லத்தில் தங்கியிருந்தார். பின்னர், அவரது உறவினரான ஸ்ரீ பிரபாஸ் சந்திர கோஷ், யோகானந்தர் தங்கியிருந்த அந்த அறையை ஒரு புனிதத் தலமாக மாற்றி, அதற்கு ஆனந்தலோகா (ஆனந்தத்தின் இருப்பிடம்) என்று பெயரிட்டார்.

பாபாஜியின் வேண்டுகோளின்படி, ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் அவர்கள் கைவல்ய தரிசனம் (The Holy Science) என்ற நூலை எழுதி முடித்த பின், அழிவற்ற மகாவதார பாபாஜியும் ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வரும் சந்தித்துக் கொண்டதற்கு செராம்பூர் கங்கை நதிக்கரை ராய் காட் சந்தில் உள்ள இந்தப் பெரிய ஆலமரம் ஒரு மௌனசாட்சியாக நிற்கிறது.

ராய் காட் லேனிலிருந்து சில நூறு மீட்டர் தொலைவில், யோகானந்தர் தமது கல்லூரிப் பருவத்தில் வசித்த ஒரு காலத்தில் பந்தி தங்கும் இல்லமாக இருந்த இடம் உள்ளது. பழமையான அந்தக் கட்டிடம் தற்போது மிகவும் சிதிலமடைந்த நிலையில் இருந்ததால், உள்ளூர் நகராட்சி நிர்வாகத்தால் இடிக்கப்பட்டுவிட்டது.

இதற்கு அருகிலேயே அமைந்துள்ள செராம்பூர் கல்லூரியில் யோகானந்தர் இளங்கலைக் கலைப் படிப்பில் முதன்முதலில் சேர்ந்த மாணவர்களில் ஒருவராவார் மேலும் (A.B.) பட்டத்தையும் பெற்றார்.

தக்ஷிணேஸ்வர் காளி கோயில்

YSS தக்ஷிணேஸ்வர் ஆசிரமத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில், உலகப் புகழ்பெற்ற காளி கோயில் உள்ளது. காளி தேவி, பவதாரிணியாக (தமது பக்தர்களை இந்தப் பிறவிப் பெருங்கடலைக் கடக்கச் செய்பவள்) படுத்த நிலையில் இருக்கும் சிவபெருமானின் மார்பின்மீது நிற்கும், புகழ்பெற்ற ஒன்பது கோபுரங்களைக் கொண்ட கோயிலால் தக்ஷிணேஸ்வர் சிறப்புற்றுள்ளது. நுட்பமாகச் செதுக்கப்பட்ட ஆயிரம் இதழ்களைக் கொண்ட வெள்ளித் தாமரையின் மீது, அன்னை பராசக்தி மற்றும் சிவபெருமானின் அழகிய திருவுருவங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

யோகானந்தர் தமது ஒரு யோகியின் சுயசரிதம் நூலில், இக்கோயிலுக்கு தாம் மேற்கொண்ட பல புனித யாத்திரைகளைப் பற்றி விவரிக்கிறார். இக்கோயிலின் வளாகத்திற்குள் தமது சகோதரி ரோமா மற்றும் அவரது கணவர் சதீஷ் ஆகியோருடன் யோகானந்தர் வந்திருந்தபோது ஒரு பரவச தெய்வீகக் காட்சியைப் பெற்றார். நாத்திகராக இருந்த சதீஷ், அன்னை பராசக்தியிடம் யோகானந்தர் உள்ளார்ந்த தீவிர பக்தியுடன் செய்த பிரார்த்தனைகளின் மூலம், அமைதியான ஒரு மகானாக மாற்றமடைந்தார். கருணைவடிவான அன்னை என்று இறைவன் மீது பரமஹம்ஸ யோகானந்தர் கொண்டிருந்த அன்பு, அவரை அடிக்கடி இக்கோயிலுக்கு ஈர்த்தது. இங்கு அவர் பல மணி நேரம் கோயிலின் முன்மண்டபத்திலும், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் அறையிலும், மேலும் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் இறையொளியைப் பெற்ற பஞ்சவடியில் உள்ள ஆலமரத்தின் கீழும் அவர் தியானம் செய்வது வழக்கம். ஸ்ரீ ராமகிருஷ்ணர் தமது வாழ்க்கையின் இறுதி 14 ஆண்டுகள் தங்கியிருந்த கோயில் வளாகத்திலுள்ள புனித அறை, தற்போது ஒரு திருத்தலமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு பக்தர்கள் தியானம் செய்யலாம்; மேலும், அவர் பயன்படுத்திய பல பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பதையும் காணலாம்.

கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள இக்கோயில், சாலை, ரயில், மெட்ரோ மற்றும் படகு போன்ற பல்வேறு போக்குவரத்து வசதிகள் மூலம் நகரின் பிற பகுதிகளுடன் சிறப்பாக இணைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு வருபவர்கள் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டு, அகில அன்னையுடன் ஒன்றிவிடுவதற்கு ஏற்ற வகையில் கோயில் இயற்கையான சூழலை வழங்குகிறது.

அருகிலுள்ள YSS தியான மையங்கள்

YSS தக்ஷிணேஸ்வர் ஆசிரமத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள மூன்று தியான மையங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:

 
ஒரு குறிப்பிட்ட இடத்திற்கான நிகழ்ச்சி அட்டவணை, எவ்வாறு செல்வது மற்றும் தொடர்புடைய பிற தகவல்கள் குறித்த கூடுதல் விவரங்களுக்கு, மேலே குறிப்பிட்டுள்ள அந்தந்த இணைப்புகளைப் பார்வையிடவும்.

வாராந்திரிய நிகழச்சிகள்

கூட்டுத் தியானம்

நாங்கள் வழக்கமான தியானம் மற்றும் சத்சங்கங்கள் வழங்குகிறோம், அவற்றில் பொதுமக்களும் கலந்து கொள்ளலாம். இந்த அமர்வுகளில் மௌன தியானம், பக்திபூர்வமாக இசைத்தல் மற்றும் உத்வேகம் அளிக்கும் வாசிப்பு ஆகியவை இருக்கும்.

ஞாயிற்றுக்கிழமை
காலை 10:30 – நண்பகல் 12:00
ஞாயிறு சத்சங்கம் (ஒரு சிறிது நேர தியானம் உள்ளடக்கியது)
மாலை 4:30 – இரவு 8:00
மாலை தியானம்
வியாழக்கிழமை
காலை 7:00 – காலை 8:00
காலை தியானம்
மாலை 5:30 – இரவு 9:00
மாலை தியானம்
மற்ற நாட்களில்
காலை 7:00 – காலை 8:00
காலை தியானம்
காலை 10:00 – மாலை 4:00
நீண்ட தியானம்
மாலை 5:30 – இரவு 7:00
மாலை தியானம்
சிறுவர்கள் சத்சங்கம்

இந்த அமர்வுகளில், 6 முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் கதைசொல்லல், சுருக்கமான வழிநடத்தப்பட்ட தியானங்கள் மற்றும் பிற கலந்துரையாடல் வழி கற்றல் முறைகள் போன்ற சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் மூலம் YSS போதனைகள் மற்றும் வாழ்க்கை முறையைப் பற்றி அறிந்து கொள்கிறார்கள். மேலும் அறிந்து கொள்ள.

ஞாயிற்றுக்கிழமை
காலை 10:30 – காலை 11:30

YSS சாதனா சங்கங்கள்

YSS-சாதனா-சங்கம்-சென்னை-ஆசிரமம்–2024-சன்னியாசிகள்-மற்றும்-பக்தர்களின்-குழுப்-புகைப்படம்

யோகதா சத்சங்கப் போதனைகளைப் பின்பற்றும் மாணவர்களுக்கு, பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளில் முழுமையாக ஈடுபடுவதற்கான ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கும் ஐந்து நாள் நிகழ்ச்சி இது. இதில் YSS தியான உத்திகள் குறித்த வகுப்புகள், கூட்டுத் தியானங்கள், கீர்த்தனை நிகழ்ச்சிகள் மற்றும் சன்னியாசிகளின் ஊக்கமூட்டும் உரைகள் அடங்கும். இத்தகைய சில நிகழ்ச்சிகளில் கிரியா யோக தீட்சை வழங்கும் நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன.

நிகழ்ச்சி அறிவிப்புகள் மற்றும் சமீபத்திய தகவல்களைப் பெற YSS eNews-இல் பதிவு செய்யுங்கள்

வரவிருக்கும் சிறப்பு நிகழ்வுகள் & நீண்ட தியானங்கள்

மாதாந்திர நீண்ட தியானம்
அக்டோபர் 24, 2026, சனிக்கிழமை
காலை 10:00 – மாலை 4:00
கூட்டுத் தியானம்
மாதாந்திர நீண்ட தியானம்
நவம்பர் 14, 2026, சனிக்கிழமை
காலை 10:00 – மாலை 4:00
கூட்டுத் தியானம்
சாதனா சங்கம் (இந்தி)

மேலும் அறிக

நவம்பர் 18, 2026, புதன்கிழமை – நவம்பர் 22, 2026, ஞாயிற்றுக்கிழமை

செய்திகள் & புகைப்படங்கள்

உங்கள் வருகையைத் திட்டமிடுங்கள்

பகல் நேரத்தில் ஆசிரமத்திற்கு வருகை தர விரும்புகிறீர்களா?

குழுத் தியானங்களில் கலந்துகொள்ளவும், ஆசிரமத் தோட்டங்களின் அமைதியான சூழலை அனுபவிக்கவும், அல்லது தக்ஷிணேஸ்வரைச் சுற்றியுள்ள பரமஹம்ஸ யோகானந்தரின் வாழ்க்கையுடன் தொடர்புடைய புனிதத் தலங்களுக்கு யாத்திரை மேற்கொள்ளவும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம். ஆசிரமத்தை வழிகாட்டியுடன் சுற்றிப் பார்க்க விரும்பினாலோ அல்லது அந்த மாபெரும் குருநாதரின் வாழ்க்கையுடன் தொடர்புடைய முக்கியமான இடங்களைப் பார்க்க விரும்பினாலோ, வரவேற்பு மேசையை அணுகி முன்பதிவு செய்து கொள்ளவும்.

நேரங்கள்:

  • ஆசிரம வளாகம் – தினமும் காலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை அனைத்து வருகையாளர்களுக்கும் திறந்திருக்கும்.
  • வரவேற்பு மற்றும் புத்தக அறை:
    • திங்கள் முதல் சனிக்கிழமை வரை – காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை
    • ஞாயிற்றுக்கிழமை – காலை 11:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை

 
ஆசிரமத்தில் தனிப்பட்ட ரிட்ரீட்-ஐ மேற்கொள்ளத் திட்டமிடுங்கள் அல்லது வழிகாட்டுதலுடன் நடைபெறும் ரிட்ரீட்களில் கலந்துகொள்ளுங்கள்.

YSS மற்றும் SRF பாடங்களைப் பயிலும் மாணவர்கள், ஆசிரமத்தில் அதிகபட்சம் ஐந்து நாட்கள் வரை தங்குவதற்கு வரவேற்கப்படுகிறார்கள். பக்தர்கள் தனிப்பட்ட ரிட்ரீட்-ஐ மேற்கொள்ளவோ அல்லது ஆசிரமத்தில் வழிநடத்தப்படும் ரிட்ரீட்களில் ஒன்றில் கலந்துகொண்டு தங்களைப் புதுப்பித்துக்கொள்ளவோ நாங்கள் ஊக்குவிக்கிறோம். இந்தத் ரிட்ரீட்களின் போது, YSS சன்னியாசிகள் தினமும் இருமுறை நடத்தும் குழுத் தியானங்களில் கலந்துகொள்ளலாம்; YSS தியான உத்திகள் குறித்த மறுஆய்வு வகுப்புகளில் பங்கேற்கலாம்; யோகதா சத்சங்க போதனைகளைப் படிப்பதிலும் நடைமுறைப்படுத்துவதிலும் ஆன்மீக ஆலோசனையும் வழிகாட்டுதலும் பெறலாம்; மேலும், அமைதியான ஆசிரம வளாகத்தின் இயற்கைச் சூழலை அனுபவிக்கலாம். இந்தத் சாதனைகள், அனைத்து கவலைகளையும் உலகியல் சார்ந்த அக்கறைகளையும் விட்டுவிட்டு, உடல், மனம் மற்றும் ஆன்மாவை தளர்வடையச் செய்து புத்துணர்வு பெறும் ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகின்றன.

எங்களை தொடர்பு கொள்ள

Yogoda Satsanga Math — Dakshineswar
21, U. N. Mukherjee Road
Dakshineswar
Kolkata - 700076
North 24 Parganas
West Bengal
India

இதைப் பகிர