ஸ்வாமி சிதானந்த கிரி அவர்களின் கிறிஸ்துமஸ் 2024 செய்தி

13 டிசம்பர், 2024

அன்பரே,

உங்களுக்கும், பரமஹம்ஸ யோகானந்தரின் உலகளாவிய ஆன்மீக குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் மிகவும் அருளப்பெற்ற கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்! ஆண்டின் இந்த புனித சமயத்தில் விண்ணுலக மண்டலங்களிலிருந்து வெளிப்படும் அமைதி மற்றும் ஆனந்தத்தின் அதிர்வுகளால் உங்கள் இதயமும் ஊக்கமும் எழுச்சியூட்டப்படட்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.

இயேசு பெத்லெகேமில் பிறந்ததிலிருந்து பல நூற்றாண்டுகள் கடந்துவிட்டன; ஆயினும், தெய்வீக அன்பின் இந்த சாசுவத அவதாரத்தின் போதனைகளும் எடுத்துக்காட்டுகளும் இன்றும் ஆன்ம-அனுபூதிக்கான சக்தியைப் வெளிப்படுத்துகின்றன, தார்மீக தைரியம், அனைவரிடமும் கருணை மற்றும் இறைவனை மையமாகக் கொண்ட வாழ்க்கை ஆகிய அனைவருக்குமான விதிமுறைகளுடன் உலகின் அனைத்து மூலைகளிலும் உள்ள ஆன்மாக்களை ஊக்குவிக்கின்றன. அந்த அருள் மற்றும் வல்லமையுடன் நாம் இசைவித்திருந்தால், இயேசு தம்முடைய பூமிக்குரிய அவதாரத்தின்போது செய்த உடல் ரீதியான குணப்படுத்தும் அற்புதங்களை விடவும், அவர் தொடர்ந்து உருவாக்கும் ஆன்மீக மாற்றங்கள் மிகப் பெரிது என்பதை நாம் அறிந்து கொள்வோம்.

இயேசு மகாவதார் பாபாஜியுடன் இணைந்து மனிதகுலத்தை ஞானஒளி பெற்ற உணர்வுநிலையுடனான ஒரு புதிய சகாப்தத்திற்குள் உயிர்ப்பிக்க பணியாற்றி வருகிறார் என்று நமது வணக்கத்திற்குரிய குருதேவர் நமக்கு உறுதியளித்துள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து, ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் / யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா கிரியா யோக போதனைகளை ஒன்றாக உலகிற்கு வழங்கியுள்ளனர். இதன் மூலம் எல்லையற்ற கிறிஸ்து குழந்தையின் பிறப்புக்கு நமது உணர்வுநிலை தொட்டிலை நாம் தயார் செய்ய முடியும்.

குருதேவர் ஒருமுறை கூறினார், “குழந்தை இயேசுவை அவரது தொட்டிலில் தன் செயலற்றவராக நாம் நினைக்கிறோம்…ஆயினும் அந்த சிறிய வடிவத்திற்குள் பிரபஞ்சத்தின் ஒளியாகிய எல்லையற்ற கிறிஸ்து இருந்தார்.” படைப்பின் ஒவ்வொரு அணுவிலும் அதிர்வுறும் அந்த சர்வ வியாபக கிறிஸ்து உணர்வுநிலை [கூடஸ்த சைதன்யா] நம் வாழ்வில் ஒளியேற்றவும், உலகை குணப்படுத்தவும் வல்லது.

மனிதகுலத்திற்கான இந்த மகத்தான கிறிஸ்துமஸ் அன்பளிப்பில் நாம் எவ்வாறு தீவிரமாக பங்கேற்க முடியும்? இயேசு வெளிப்படுத்திய கருணை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய கிறிஸ்து-உணர்வு, உலக அங்கீகாரம் தேவையற்ற அல்லது பிரத்தியேக சுயநலமற்ற பணிவு, மற்றும் கடுமையான சோதனைகளுக்கு மத்தியிலும் அகத்தினுள் பகைமை தீண்ட முடியாத மன்னிக்கும் அவரது அன்பு ஆகியவற்றை உள்வாங்குவதன் மூலம் நாம் பங்கேற்க முடியும். மேலும், பரமஹம்ஸர் நமக்குக் கற்பித்தபடி, தியானத்தின் உள்ளார்ந்த அமைதியில் இறைவனுடன் இணைந்திருப்பதன் மூலம் உண்மையான கிறிஸ்துமஸாக இருக்கும் அன்பு, ஒளி, மற்றும் எல்லையற்ற தன்மையின் விரிவடைந்த உணர்வுநிலையை நாம் ஆழமாக உணரவும் அதை நம் புற வாழ்வில் பெருக்கெடுத்தோடவும் செய்ய முடியும்.

இந்தப் புனிதப் பருவத்தின் உண்மையான உணர்வு—கிறிஸ்து மற்றும் மகான்களின் சாசுவத உணர்வு—இப்போதும், புத்தாண்டு முழுவதும், உங்கள் இதயத்தையும் இல்லத்தையும் நிரப்ப வேண்டும் என்ற எனது மனப்பூர்வமான பிரார்த்தனையை உங்களுக்கு அனுப்புகிறேன்.

இறைவன், கிறிஸ்து மற்றும் குருமார்களின் அன்பு மற்றும் ஆனந்தத்தில்,

ஸ்வாமி சிதானந்த கிரி

இதைப் பகிர