யோகானந்தரின் ஆசிரமங்களிலிருந்து ஜன்மாஷ்டமி செய்தி

8 ஆகஸ்ட், 2022

அன்பர்களே,

ஒவ்வொரு ஆண்டும் ஜன்மாஷ்டமி அன்று, பகவான் ஸ்ரீ கிருஷ்ணனின் அவதார தினத்தை நாம் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம். இந்தப் புனித நேரத்தில் நமது தியானங்களிலும் பக்தி நினைவுகூரல்களிலும், அவனது சாசுவத இருப்பையும் எல்லையற்ற அன்பையும் ஏற்கும் திறன் கொண்டவர்களாய் — இருப்போமாக. காலங்காலமாக இறைவனின் ஒரு முழு அவதாரமாக, பரம்பொருளின் சர்வ வியாபகத்துடன் ஒன்றிய நிலையில், அவன் நமக்கும் உலகிற்கும் சாசுவதமாக கிடைக்கப் பெறுகிறான் — இன்று மிகவும் இன்றியமையாததாக தேவைப்படும் எல்லையற்ற கருணையையும் குணப்படுத்தும் அருளாசிகளையும் நமக்கு பொழிய தயாராக இருக்கிறான்.

பகவான் கிருஷ்ணன் இருப்பு வெளிப்படும் பல வழிகளில் ஒன்று புனித பகவத் கீதை — நமது குருதேவர் பரமஹம்ஸ யோகானந்தர் அருளிய அதன் ஞானத்தின் ஆன்ம-விழிப்பூட்டும் வெளிப்பாட்டை விட வேறு எங்கும் அந்த இருப்பு உணர்வுபூர்வமாக வெளிப்படக்கூடியதாக இல்லை. கிருஷ்ணனுக்கும் அவனது சீடனான அர்ஜுனனுக்கும் இடையிலான இந்த புனித உரையாடலின் பக்கங்களை திறந்து, தியானத்திற்குப் பிறகு நாமே பக்தியுடன் மையப்படுத்திக் கொண்டு சிறிது படித்தாலும் கூட, பரம்பொருளை நோக்கிய நமது பயணத்தை, ஆசீர்வதித்து வளப்படுத்தக்கூடிய உணர்வுநிலையை உயர்த்தும் சத்தியத்தின் அதிர்வு ஓட்டத்தை நாம் உணருவோம். இவ்வாறாக, தியானரீதியாக அவனுடைய இருப்பில் இம்மறை நூலில் ஈடுபட்டால், ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜுனனை உயர்த்தி உதவியதைப் போலவே, நமது அன்றாட வாழ்வின் குருக்ஷேத்திரப் போர்களத்தில் நமது உன்னத இலக்கான ஆன்ம அனுபூதியை நாம் அடையும் வரை அவனுடைய தெய்வீக ஆற்றல் நமக்குள் வெளிப்பட்டு, நம்மை மேம்படுத்தி உதவுவதை நாம் உண்மையில் உணர முடியும்.

இந்த உலகைக் காத்து வழிநடத்தும் இறைவன் மற்றும் தெய்வீக ஆசான்களுடன் ஒரு உயிரோட்டமான தொடர்பைப் பேணுவதற்கு, மிகவும் முக்கியமானது, உண்மையாகவும், முறை தவறாமலும் தியானத்தில் ஆழ்ந்து, முழு உணர்வு நிலையையும் அவர்களின் அன்பு இருப்பில் ஆழ்த்துவது ஆகும். பின்னர், ஒவ்வொரு கவனச்சிதறலிலிருந்தும் விடுபட்டிருக்கும் அந்த புனித ஆழங்களில், நாம் இறைவனுக்கு – நமக்குப் பிரியமான எந்த வடிவத்திலும் – நமது இருப்பின் உன்னத அன்பு, சரணாகதி மற்றும் பக்தியை வழங்க முடியும், அந்த வகையான நேர்மையான ஆன்ம-அழைப்புக்கு, எல்லையற்ற இறைவன் தவறாமல் தனிப்பட்ட முறையில் மறுமொழி அளிக்கிறார்.

உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையின் தனித்துவ இசை சாசுவத விண்ணுலக இசையுடன் கலக்கும் வரை, யோகப் பெருமான் ஸ்ரீ கிருஷ்ணன் மற்றும் பிற மகான்களின் ஞானம் மற்றும் தியான போதனைகளை நீங்கள் தளராத உறுதியுடனும் அன்புடனும், பின்பற்றுவீர்களாக.

ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா! ஜெய் குரு!

ஸ்வாமி சிதானந்த கிரி

இதைப் பகிர

Facebook
X
WhatsApp