YSS

சுவாமி ஶ்ரீ சிதானந்த கிரியிடமிருந்து ஒரு புத்தாண்டுச் செய்தி

1 ஜனவரி, 2018

"இந்தப் புதிய ஆண்டில் நான் ஒரு புதிய மனிதன். மேலும் என் அறியாமையின் எல்லா இருளையும் விரட்டி, யாருடைய பிரதிபிம்பத்தில் நான் படைக்கப்பட்டுள்ளேனோ அந்தப் பரம்பொருளின் பிரகாசமான ஒளியை வெளிப்படுத்தும் வரை நான் மீண்டும் மீண்டும் என் உணர்வுநிலையை மாற்றிக்கொள்வேன்.""

— - பரமஹம்ஸ யோகானந்தர்

விடுமுறைக் காலத்தின் ஆனந்தத்தாலும் மேம்பாட்டினாலும் நிரப்பப்பட்டு நாம் இந்த புதிய ஆண்டிற்குள் நுழையும் தருணத்தில், உலகம் முழுவதிலுமிருந்து வந்த உங்கள் அன்பான வாழ்த்துகள், குருதேவர் பரமஹம்ஸ யோகானந்தரின் ஆசிரமங்களில் உணரப்பட்ட கிறிஸ்துமஸ் ஆனந்தத்தை அதிகப்படுத்தியது; அதற்காக நமது ஆன்மீக குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன்.
பண்டிகை விடுமுறைகளின் போதும் ஆண்டு முழுவதும் வெளிப்படுத்தப்பட்ட உங்களுடைய பலவகையான இரக்க உணர்வுகளினால் நாங்கள் ஆழமாக மெய் சிலிர்த்து விட்டோம், மற்றும் இறைவனிலும் குருவின் அன்பிலும் நாம் பகிர்ந்துகொள்ளும் ஆன்மீகப் பந்தத்தின் இதயத்திற்கு இதமளிக்கும் இந்த நினைவூட்டல்களை மனதில் வைத்துப்போற்றுகிறோம்.
உங்கள் இதயத்திற்கு மிகவும் நெருக்கமான உன்னதமான குறிக்கோள்களை அடையவதற்கும் உங்கள் அகத்தேயுள்ள தெய்வீக பிரதிபிம்பத்தை மேன்மேலும் வெளிப்படுத்துவதற்கும் ஆன உங்கள் முயற்சிகளை இறைவன் ஆசீர்வதிப்பாராக என்ற என் பிரார்த்தனைகள் உங்கள் அனைவரையும் சென்றடைகின்றன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

ஒவ்வோர் ஆண்டும், இறைவன்-அளித்த சுதந்திரத்தை நமது சொந்த ஊழ்வினையின் எஜமானர்களாக நம் அகத்தே விடுவிக்கும் ஓர் அற்புதமான வாய்ப்பை மீண்டும் புதிதாகக் கொண்டுவருகிறது.
ஆழமாகப்பதிந்துள்ள, பயனற்ற பழக்கங்கள் மற்றும் சிந்தனைப் போக்குகள் எனும் நன்கு-தேய்ந்த பாதைகளை நாம் தன்னிச்சையாகப் பின்பற்றவும் வேண்டியதில்லை, புலன்கள், அகந்தை, உலகச் சூழல் ஆகியவற்றின் தூண்டுதல்களால் நமது ஆன்மீக இலட்சியங்களிலிருந்து திசைமாறிப் போகவும் தேவையில்லை.
பகுத்தறியும் சக்தியின் மற்றும் இந்தப் புதிய வருடத்தில் ஒரு புத்தம்புதிய தொடக்கத்தின் ஊக்கமளிக்கும் சிந்தனையால் மீள்-செறிவூட்டப்பட்ட ஓர் இச்சாசக்தியின் வாயிலாக, நம்மால்
நம் கவனத்தைத் திருத்தியமைத்து நம் ஆன்மாவின் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிப்படுத்தும் புதிய பாதைகளை ஜொலிக்கச்செய்யலாம்.
கடந்த காலத்தால் உங்களைத் தடுத்து நிறுத்தவோ அல்லது எதிர்காலத்தால் உங்களை அச்சுறுத்தவோ முடியாது என்பதை அறிந்து கொள்ளுங்கள். நிகழ்காலத்தில் உணர்வுப்பூர்வமாக வாழ்வதை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம் மற்றும் எல்லையற்ற வளங்கள் உங்கள் ஆணைக்காகக் காத்திருக்கின்றன என்ற நம்பிக்கையுடன் முன்னோக்கிச்செல்லலாம்.

குருதேவர், சுய-ஆய்வு மற்றும் இறைவனின் பரந்த ஆதரிக்கும் உணர்வுநிலையுடன் நம் உணர்வுநிலையை இசைவிக்க சுய-ஆய்வு மற்றும் தியானம் செய்வதின் மூலம், புத்தாண்டுக்கான நமது மார்க்கத்தை அமைத்துக்கொள்ளவும், பின்னர் நம் வாழ்க்கைகளுக்கு நாம் பொறுப்பேற்க இறைவனின் தெய்வீகப் பரிசுகளான சிந்தனாசக்தி, இச்சாசக்தி ஆகியவற்றைப் பயன்படுத்தவும் ஊக்கமூட்டினார்.
சுய-சந்தேகம், கடந்தகாலத் தவறுகளின் வருத்தம், வேறு எந்த வடிவத்திலும் உள்ள எதிர்மறை சிந்தனை ஆகியவற்றை மனதில் இருந்து அகற்றுவது ஓர் இன்றியமையாத முதல் படியாகும். அந்தத் தடைகளை அகற்றிய பிறகு, நீங்கள் வெளிப்படுத்த அல்லது அடைய விரும்பும் ஆக்கப்பூர்வமான பண்பை அல்லது குறிக்கோளை உங்கள் கலக்கமற்ற உணர்வுநிலையின் மீது சங்கல்பம் செய்து பதிய வையுங்கள்.
குருதேவர் எங்களிடம் கூறியுள்ளார், “உங்கள் மனதில் ஒரு வலுவான எண்ணத்தை உட்செலுத்தும் பட்சத்தில், உங்களால் இப்போதே உங்கள் உணர்வுநிலையில் எந்தப் போக்கினையும் விதைக்க முடியும்; பின்னர் உங்கள் செயல்களும் முழு இருப்பும் அந்த எண்ணத்திற்குக் கீழ்ப்படிந்துவிடும்.” இச்சாசக்தியின் இயக்க ஆற்றலை அமைதியான, பொறுமைமிகு விடாமுயற்சியுடன் பயன்படுத்துவதன் –ஒவ்வொரு நாளும் நீங்கள் எதற்காகக் கடுமுயற்சி செய்துகொண்டிருக்கிறீர்களோ, அந்தக் குறிப்பிட்ட இலக்கை உங்களுக்கே நினைவூட்டுவதற்கான வழிகளைக் கண்டறிவதன்–மூலம் நீங்கள் சங்கல்பம் செய்திருந்தது மெய்யாவதை நீங்கள் காண்பீர்கள்.

உங்கள் முயற்சிகளில் நீங்கள் தனியாக இல்லை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். தினசரி தியானத்தின் அமைதியில், எண்ணியதை நிறைவேற்றுவதற்கான அனைத்துச் சக்திக்கும் பேராதாரமாக இருப்பவனை நீங்கள் தொடர்பு கொள்ளும்போது, அவனுடைய வல்லமைமிக்க இச்சாசக்தி உங்கள் இச்சாசக்தியைச் செறிவூட்டியவாறு, அவனுடைய ஞானமும் அன்பும் உங்களுக்கு வழிகாட்டியவாறு, அவனுடைய சக்தி உங்கள் எண்ணங்களுக்கு அடியில் துடிப்பதை நீங்கள் அதிகமாக உணருவீர்கள். குருஜி எங்களிடம் கூறினார், “ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்கும் இறைவனுக்கும் இடையிலான இணைப்பு.” அந்த விழிப்புணர்வில் வாழ்வதன் மூலம், உங்கள் உணர்வுநிலையின் மேற்பரப்பின் கீழ், உங்கள் முழு இருப்பிற்கும் உன்னதமான அபிலாஷைகளுக்கும் ஊட்டமளித்தவாறு, ஓர் அமைதியான மௌன ஆறு ஓடுவதைக் காண்பீர்கள். உங்கள் சொந்த அக உருமாற்றம், உங்கள் ஆத்ம குணங்களின் மலர்தல் ஆகியவற்றின் வாயிலாக, நீங்கள் மற்றவர்களிடம் உள்ள நல்லதை வெளிக்கொணர்வீர்கள் மற்றும் அவர்களின் உண்மையான தெய்வீகப் பெரும்-சுயத்தைக் கண்டுகொண்டு வெளிப்படுத்தவும் அவர்களை ஊக்குவிப்பீர்கள்.

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் இறைவனின் அன்பும் இடைவிடாத அருளாசிகளும் நிறைந்த இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
ஸ்ரீ சுவாமி சிதானந்த கிரி

இதைப் பகிர

Share on facebook
Share on twitter
Share on whatsapp