1955 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு அவர் மறையும் வரை யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ஸெல்ஃப்-ரியலைசேஷன் பெலோஷிப் இன் மூன்றாவது தலைவர் மற்றும் சங்கமாதாவுமாக இருந்த ஸ்ரீ தயா மாதாவின் செய்தி பின்வருமாறு. தயா மாதாஜி 1931 ஆம் ஆண்டு தனது 17 வயதில் பரமஹம்ஸ யோகானந்தரின் ஆசிரமத்தில் நுழைந்தார். இந்த பின்வரும் செய்தி முதலில் 1984 இல் யோகதா சத்சங்க இதழில் “எ லெட்டர் ஃப்ரம் ஸ்ரீ தயா மாதா” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது; இத்தகைய செய்திகள் பல வருடங்களாக இதழின் வாசகர்களால் ஊக்கமளிக்கப்படுதலுக்கும் விவேகமான அறிவுரைக்காகவும் மிகவும் விரும்பப்படுகின்றன.
வெகு காலத்திற்கு முன்பு, குருதேவர் பரமஹம்ஸ யோகானந்தர் என் உணர்வுநிலையில் இந்த அறிவுரையைப் பதிய வைத்தார்: “ஒருபோதும் ஊக்கம் குறைவுற்று இருக்க வேண்டாம்.” பல ஆண்டுகளாக இது பெரும் வலிமையின் ஆதாரமாக இருந்து வருகிறது. இது ஆன்மீக வெற்றியின் முக்கியமான ரகசியம்.
பக்தனின் முன்னேற்றத்தைத் தடுக்கும் மாயையின் விருப்பமான கருவிகளில் ஊக்கமின்மையும் ஒன்றாகும். அதிக முயற்சியை மேற்கொள்வதற்கான நமது விருப்பத்தை இது முடக்குகிறது, நாம் வெற்றி பெறும்வரை விடாமுயற்சியுடன் இருப்பதற்கான விருப்பத்தை பலவீனப்படுத்துகிறது. ஆனால் நமது இலக்கு மிக உயர்ந்தது – இறை ஐக்கியம் – என்பதால், நாம் குறைகளை கடக்க வேண்டும் என்பதை உணர வேண்டும். நமது குறைபாடுகளை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துவது கூட நமது உற்சாகத்தை குறைக்க அனுமதிக்கக்கூடாது.
மனச்சோர்வு மற்றும் பலவீனத்தை பற்றிய எண்ணங்கள் ஆகியவை நமது முன்னேற்றத்தைத் தடுப்பதற்கான மாயையின் வழிகள் மட்டுமே. அவற்றைப் புறக்கணித்துவிட்டு, தைரியத்துடனும், நம்பிக்கையுடனும் முன்னேறினால், நாம் ஆன்மீக ரீதியில் வெற்றி பெறுவோம். அதுவே பரமஹம்ஸரின் லட்சியம். பின்னர், அப்போது, அவர் கூறியது போல், “இருள் எப்போதுமே இருந்திராதது போல் மறைந்துவிடும்”.
ஒரு இளம் பக்தையாக, குருதேவர் இல்லாத நேரத்தில் நான் ஒருமுறை ஆழ்ந்த மனச்சோர்வடைந்தேன். அவர் திரும்பி வந்ததும், தியானத்தில் இருந்தபோது, அவருக்கு ஒரு தரிசனம் கிடைக்கப் பெற்றது: எனது போராட்டத்திற்குப் பின்னால் உள்ள எதிர்மறை சக்திகளை அவர் முதலில் பார்த்தார், பின்னர் ஒளிவட்டத்தால் என்னைச் சூழ்ந்திருந்த தெய்வ அன்னையை தரிசித்தார்.
ஒவ்வொரு சிரமத்திலும், நம் ஒவ்வொருவருக்கும் ஒரு தேர்வு உள்ளது: மனந்தளர்ந்து மாயைக்கு அடிபணிவது; அல்லது மாயையை வெல்ல நமக்கு உதவ தனது சக்தியையும் அருளையும் வழங்க தயாராக இருக்கும் தெய்வ அன்னை எப்போதும் அருகில் இருப்பதை அறிந்து முழு நம்பிக்கையுடன் விடாமுயற்சியுடன் இருப்பது ஆகும்.
ஆன்மீகப் பாதையில் நாம் அடிக்கடி மூன்று படிகள் முன்னோக்கியும், இரண்டு பின்னோக்கியும் வைப்பதாகத் தோன்றலாம். ஆனால் நாம் யதார்த்தமானவர்களாக இருந்தால், இது நம்மைக் கலங்கச் செய்ய விடவும் மாட்டோம், கடந்த கால தவறுகளைப் பற்றி சிந்தித்து நேரத்தை வீணடிக்கவும் விட மாட்டோம்.
நமது தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவும், மாற்றிக் கொள்ள தீர்மானிக்கவும், பின்னர் அவற்றை மறக்கவும் பரமஹம்ஸர் நமக்குக் கற்றுக் கொடுத்தார். நாம் தடுமாறும்போது இறைவன் நம்மைக் கண்டனம் செய்வதில்லை, எனவே நாம் தேவையில்லாமல் நம்மை நிந்தித்துக் கொள்ளக்கூடாது.
மாறாக, இறைவனை அதிகமாக நேசியுங்கள். உங்கள் குறைபாடுகள் உங்களை அச்சுறுத்தவோ அல்லது அவனிடம் சரணடைவதிலிருந்து உங்களைத் தடுக்கவோ முடியாத அளவிற்கு அவனை நேசியுங்கள்.
அவன் கருணை நிறைந்தவன், பரிவு மிக்கவன்; நீங்கள் அவனுடைய பேரன்பில் சாசுவத நிறைவு அடைவதைக் காண அவனை விட ஆர்வமாக வேறு யாரும் இல்லை. தன்னம்பிக்கையுடன் அவனை அணுகி, தியானம் செய்து, நிலையான பக்தியுடன் அவனைத் தேடுங்கள், நீங்கள் அவனை அறிவீர்கள்.


















