அக்டோபர் 5, 2011 அன்று காலமான வணிக தொலைநோக்காளரும் ஆப்பிள் கம்ப்யூட்டரின் நிறுவனருமான ஸ்டீவ் ஜாப்ஸ் இன் 2011 நினைவஞ்சலி நிகழ்ச்சியில், அவருடைய விருப்பத்தின்படி,வணிகம், அரசியல் மற்றும் நவீன சமுதாயத்தில் செல்வாக்குமிக்க நூற்றுக்கணக்கான தலைவர்களுக்கு பரமஹம்ஸ யோகானந்தரின் ஒரு யோகியின் சுயசரிதம் அறிமுகப்படுத்தப்பட்டது.
செப்டம்பர் 2013 இல் ஆன்லைனில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோ நேர்காணலில், Salesforce.com தலைமை நிர்வாக அதிகாரி மார்க் பெனியோஃப் இதையும் பிற கதைகளையும் தொடர்புபடுத்தி, சில நேரங்களில் வெளித் தெரியாவிட்டாலும் திரு. ஜாப்ஸின் ஆழ்ந்த, ஆன்மீக இயல்பு என்று தான் அறிந்ததைப் பகிர்ந்து கொண்டார். CNET செய்திகளில் வெளியிடப்பட்ட நேர்காணலின் தொகுப்பில் பின்வரும் பகுதி உள்ளது:
“ஜாப்ஸின் மரணத்தைத் தொடர்ந்து நடந்த நினவஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சம்பவத்தை பெனியோஃப் கூறினார். அதில் கலந்து கொண்டவர்களுக்கு வெளியே செல்லும் வழியில் ஒரு சிறிய பழுப்புப் பெட்டி கொடுக்கப்பட்டது. ‘இது சிறந்ததாக இருக்கப் போகிறது,’ என்று நினைத்துக் கொண்டார். ‘இது அவர் எடுத்த முடிவு என்று எனக்குத் தெரியும், அது எதுவாக இருந்தாலும், நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும் என்று அவர் விரும்பிய கடைசி விஷயம் இதுதான்.’
அந்தப் பெட்டியில் பரமஹம்ஸ யோகானந்தரின் ஒரு யோகியின் சுயசரிதம் என்ற புத்தகத்தின் பிரதி இருந்தது. ஜாப்ஸின் வாழ்நாள் முழுவதும் அவருக்கு உத்வேகம் அளித்த ஆன்மீகப் புத்தகம் அது. 1946இல் முதன்முதலாக வெளியிடப்பட்ட இந்த புத்தகம், ‘ஆன்ம-அனுபூதி’ மற்றும் கிரியா யோக தியானப் பயிற்சியை வலியுறுத்துகிறது.
“[வால்டர்] ஐசக்ஸனின் வாழ்க்கை வரலாற்றின்படி, ‘ஜாப்ஸ் முதலில் பதின்பருவத்தில் அதைப் படித்தார், பின்னர் இந்தியாவில் அதை மீண்டும் படித்தார், அன்றிலிருந்து ஆண்டுக்கு ஒரு முறை படித்தார்.’ 1974இல் ஜாப்ஸ் ஆன்ம ஞானம் தேடி இந்தியாவிற்குப் பயணம் செய்தார். ‘தனது உள்ளுணர்வு தான் தனக்கான மிகச் சிறந்த பரிசு, மற்றும் உலகத்தை அகத்துள் இருந்து வெளியே பார்க்க வேண்டியுள்ளது என்ற வியக்கத்தக்க உணர்தலைக் கொண்டிருந்தார்,’ என்று பெனியோஃப் கூறினார்.”