
ஓர் அறிமுகம்:
பரமஹம்ஸ யோகானந்தர் அருளிய ஒரு யோகியின் சுயசரிதம் மூலமாகவே, மகாவதார் பாபாஜி என்ற அற்புதமான ஆன்மீக அவதாரத்தை உலகம் அறிய முடிந்தது.
பாபாஜி, இந்த நவீன யுகத்தில் கிரியா யோக பண்டைய விஞ்ஞானத்தை மீண்டும் உயிர்ப்பித்த ஒரு மகாத்மா ஆவார். யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் பணிகளுக்கு ஆதாரமான, முக்தி பெற்ற குருமார்கள் பரம்பரையின் பரம குருவாகவும் அவர் திகழ்கிறார். ஒரு யோகியின் சுயசரிதம் நூலில் கூறப்பட்டுள்ளது போல, எண்ணற்ற நூற்றாண்டுகளாக அவர் இமயமலையில் ஏகாந்தத்தில் வாழ்ந்து வருகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 25 ஆம் தேதி, YSS/SRF, 1920 ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து புறப்படுவதற்கு முன்பு, பாபாஜி கொல்கத்தாவில் பரமஹம்ஸரை சந்தித்து, கிரியா யோகத்தை உலகிற்கு அறிமுகப்படுத்த அவரை ஆசீர்வதித்த நாளை நினைவுகூர்கிறது.
அந்த சந்திப்பில் பாபாஜி கூறினார்: “மேலை நாடுகளில் கிரியா யோக போதனைகளைப் பரப்ப நான் உன்னைத்தான் தேர்ந்தெடுத்துள்ளேன். இறை-அனுபூதியின் விஞ்ஞானபூர்வமான உத்தியான கிரியா யோகம் இறுதியில் அனைத்து தேசங்களிலும் பரவும், மேலும் முடிவிலாத் தெய்வத் தந்தைப் பற்றிய மனிதனின் தனிப்பட்ட, அறிவெல்லைக் கடந்த ஞானத்தின் மூலம் நாடுகளை இணக்கப்படுத்தத் துணைபுரியும்.”
கீழே கொடுக்கப்பட்டுள்ள, மகாவதார பாபாஜியின் உலகை மாற்றியமைக்கும் தாக்கம் குறித்த பரமஹம்ஸரின் வார்த்தைகளை வாசிக்க உங்களை அழைக்கிறோம்.
பரமஹம்ஸ யோகானந்தரின் உரைகள் மற்றும் கட்டுரைகளிலிருந்து:
ஆன்மாவானது எதன் மூலம் உடல் மற்றும் மனம் ஆகிய சாதனங்கள் மீது ஆதிக்கம் பெற்று, ஆன்ம அனுபூதியை — தனது இருமையை கடந்த அமரத்துவ இயல்பை, பரம்பொருளுடனான ஒன்றிய தன்மையைப் பற்றிய விழிப்பூட்டப்பட்ட உணர்வு நிலையை–அடைய அவற்றைப் பயன்படுத்துகிறதோ, அந்த அறிவியல் தான் யோகம் ஆகும்.
கிருஷ்ணரால் அர்ஜுனருக்கு பழங்காலத்தில் உபதேசிக்கப்பட்டு, பகவத் கீதையில் குறிப்பிடப்பட்டுள்ள கிரியா யோக உத்தியானது, யோக தியானத்தின் உன்னத ஆன்மீக விஞ்ஞானமாகும். லெளகீக யுகங்களில் மறைக்கப்பட்டிருந்த இந்த அழிவற்ற யோகம், மகாவதார பாபாஜியால் நவீன மனிதனுக்கு மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டது. பாபாஜி தாமே, அவருடைய மற்றும் எனது குருவின் விருப்பப்படி நான் நிறுவிய ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் [யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா] அமைப்பின் மூலம், இறை-ஐக்கியத்தின் இந்தப் புனித விஞ்ஞானத்தைப் பரப்புமாறு என்னை நியமித்தார்.
நவீன காலங்களின் போக்கையும், குறிப்பாக மேற்கத்திய நாகரிகத்தின் தாக்கத்தையும் அதன் சிக்கல்களையும் பாபாஜி நன்கு உணர்ந்திருக்கிறார், மேலும் யோகத்தின் ஆன்ம-விடுதலைகளை மேற்கிலும் கிழக்கிலும் சமமாகப் பரப்புவதன் அவசியத்தையும் உணர்ந்திருக்கிறார்.
[மகாவதார பாபாஜி கூறினார்:] “இறை உணர்தலுக்குத் தேவையான விஞ்ஞான உத்தியான கிரியா யோகம், கடைசியாக எல்லா நாடுகளிலும் பரவும், மேலும் மனிதனின் தனிப்பட்ட, எல்லை கடந்த இறை ஞானத்தின் மூலமாக தேசங்களை இணக்கமாக்க உதவும்.”

பரமஹம்ஸரின் ஆன்மீக உன்னதமான ஒரு யோகியின் சுயசரிதம் நூலின் “நவ பாரதத்தின் மகாவதார பாபாஜி” என்ற அத்தியாயத்தைப் படிக்க உங்களை அழைக்கிறோம். இது மகாவதார பாபாஜியின் ஆன்மீக உயரத்தையும், சிறப்புப் பங்கையும் ஆழமாக விவரிக்கிறது. உலகை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள, கிரியா யோகப் பாதையில் சாதகர்களுக்கு தொடர்ந்து உதவுவதாக உறுதியளித்துள்ள இந்த மகத்தான ஆன்மாவைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளுங்கள்.