
ஆன்மீக ரீதியில் உணர்திறன் உடையவர்களில், குருவின் நிபந்தனையற்ற அன்பின் ஒளிவட்டத்தில் சீடனின் இதயம் முழுகியிருக்கும்போது குருவுக்கு விசுவாசம் தன்னிச்சையாக எழுகிறது. இறுதியாக ஒரு உண்மையான நண்பரையும், ஆலோசகரையும், வழிகாட்டியையும் கண்டறிந்ததை ஆன்மா அறிந்து கொண்டது.
— ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர்
அன்பிற்குரியவர்களே,
குரு பூர்ணிமா எனும் வணக்கத்திற்குரிய இந்த நன்னாளில் உங்கள் ஒவ்வொருவருக்கும் அன்பான நல்வாழ்த்துக்கள். யுகங்கள் தோறும் மனிதகுலத்தை ஆன்மீகமயமாக்கிய, ஞான ஒளி பெற்ற குருமார்களை — நமது YSS/SRF மகா குருமார்களின் பரம்பரை போன்ற — கௌரவிக்கும் இந்த புனிதமான பாரம்பரியத்தைக் கடைபிடிப்பதில் நமது பக்தியை ஒன்று சேர்ப்போம். நமது தனிப்பட்ட மோட்சத்திற்காக இறைவன் தாமே வெளிப்பட்டிருக்கும், இறைவனால் நியமிக்கப்பட்ட குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர் நமக்குக் கிடைத்திருப்பது எவ்வளவு பெரிய பாக்கியம்! பல பிறவிகளின் உச்சநிலை ஆசீர்வாதமும், ஆன்மீகப் பாதையில் உள்ள அனைத்து புதையல்களுக்கும் மேலான ஒரு புதையலுமான அத்தகைய ஒருவரின் தாமரைப் பாதங்களுக்கு ஈர்க்கப்படுவது ஒரு பெரும் பாக்கியம் என்பதை நான் உணர்வது போலவே நீங்களும் உணர்வீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
தமது எல்லையற்ற பெருந்தன்மையினாலும், அளவற்ற அன்பினாலும், குருதேவர் நமக்கு தமது ஆன்மீகப் பெருங்கருணையை அளித்திருக்கிறார்: கிரியா யோகத்தின் புனித அறிவியல், மிக உயர்ந்த மகிழ்ச்சியையும் இறைவனுடன் ஒத்திசைவையும் கொண்டு வரும் வாழ்வியல் கொள்கைகள், மேலும், அறியாமலேயே, தமது வெற்றியான வாழ்க்கைக்கான அகத் தூண்டுதலையும், எடுத்துக்காட்டையும் நமக்குத் தந்துள்ளார். மேலும், அவரை சத்குருவாக வணங்கும் ஒவ்வொரு உண்மையான சீடருக்கும், அவர் அருள்புரியும் ஆன்மப் பேரானந்தத்திற்கும், விடுதலைக்கும் வரம்பே இல்லை.
குருதேவரிடத்தில், ஒரு நித்தியமான நண்பர், ஆலோசகர் மற்றும் ஆன்மீக வழிகாட்டி நமக்குக் கிடைத்திருக்கிறார்; அவர் தமது அமரத்துவ போதனைகள் மூலமாகவும், நமது தியானத்தால் பிறந்த உள்வாங்கும் திறன் மூலமாகவும் நம்முடன் பேசிக்கொண்டிருக்கிறார். அவர் அளித்திருக்கும் சாதனையை நாம் மனப்பூர்வமாகப் பயிற்சி செய்வதன் மூலம், அவர் பௌதீக உடலில் இங்கேயிருந்ததைப் போலவே, இந்த நொடியிலும் நமக்கு உண்மையானவராக இருக்க முடியும்.
இந்தச் சிறப்பான நாளிலும், எப்போதும், குருதேவருக்கு நாம் வழங்கக்கூடிய மிக உயர்ந்த காணிக்கை என்னவென்றால், நமது உண்மையான சீடத்துவம் என்னும் மாலையாகும். அது விசுவாசத்தின் நூலில் தொடுக்கப்பட்டு, நமது பக்தியின் மலர்களாலும், அவரது ஆன்மீக இலட்சியங்களுக்கு நாம் அளிக்கும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பாலும் அலங்கரிக்கப்பட்டதாகும். அவரது பாதுகாக்கும் இருப்பையும், தெய்வீக அன்பையும் நீங்கள் எப்போதும் உணர்ந்து, உங்கள் உணர்வுநிலையை நிலைபேறு ஒளி மற்றும் பேரானந்த உலகங்களுக்கு அவர் உயர்த்துவார் என்ற எனது பிரார்த்தனைகள் எப்போதும் உங்களுடன் உள்ளன. ஜெய் குரு!
இறைவன் மற்றும் குருதேவரது இடைவிடாத ஆசீர்வாதங்களுடன்,
சுவாமி சிதானந்த கிரி