ராஞ்சியில் புதிய பதின்ம வயதினருக்கான திட்டம் தொடக்கம்

1 நவம்பர், 2024
புதிய பதின்மவயதினர் திட்டம் தொடக்க நாளில் YSS மற்றும் SRF சன்னியாசிகளுடன் இளையோர் திட்டத்தின் பதின்மவயதினர் மற்றும் குழந்தைகள்

இளையோர்களிடையே ஆன்மீக மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கான ஒரு முக்கிய முன்முயற்சியாக, யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா (YSS), 13 முதல் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஒரு புதிய பதின்ம வயதினர் திட்டத்தைத் தொடங்கியது. YSS ராஞ்சி ஆசிரமம் சிவா மந்திரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஸ்வாமி சங்கரானந்தா மற்றும் அமெரிக்காவிலுள்ள நம் SRF ஆசிரமங்களைச் சேர்ந்த ஸ்வாமிகள் சரளானந்தா மற்றும் பத்மானந்தா ஆகிய இரு சிறப்பு வருகையாளர்கள் கலந்து கொண்டனர்.

ஸ்வாமி பத்மானந்தா, குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் படத்தின் முன் நிகழ்ச்சிக்குரிய விளக்கு ஏற்றினார். குழந்தைகள் ஆனந்தமாக “ஜெய் குரு” கீதம் பாடினர். பின்னர் அவர் ஓர் எழுச்சியூட்டும் தொடக்க உரையை நிகழ்த்தி, சான் டியாகோ கோவிலில் இளம் வயது வந்தோர் சங்க அமர்வுகளை நடத்துதல் மற்றும் SRF இல் இளையோருக்கான கோடைகால முகாம்களின் போது தியான அமர்வுகள் நடத்துவது போன்ற SRF இளையோர் அவுட்ரீச் நிகழ்ச்சியில் தமது பல வருட அனுபவங்களிலிருந்து வசீகரிக்கும் கதைகளைப் பகிர்ந்து கொண்டார். ஈர்க்கக்கூடிய வகையில், சுமார் 25 இளம் பார்வையாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்திய அவர், “நீங்கள் எங்கு சென்றாலும் குருதேவர் எப்போதும் உங்களுடன் இருப்பதை நினைவில் கொள்ளுங்கள். வாழ்க்கையின் அனைத்து சூழ்நிலைகளிலும் விசுவாசத்துடனும் நம்பிக்கையுடனும் பற்றிக் கொள்ள அவனுடைய கரத்தை நீங்கள் நாடிக் கொண்டேயிருந்தால், அவன் எண்ணற்ற சம்பவங்களின் மூலம் தனது இருப்பை உங்களுக்கு வெளிப்படுத்துவான்” என்று கூறினார்.

பங்கேற்ற பதின்மவயதினர்களில் ஒருவர் தொடக்க பிரார்த்தனை மற்றும் கீதம் வழி நடத்தினார். இதைத் தொடர்ந்து, குழந்தைகள் சத்சங்கம் தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கம் குறித்து மற்ற பதின்ம வயதினரிடமிருந்து மனப்பூர்வமான பிரதிபலிப்புகள் வந்தன. 13 வயதான அனிமேஷ், குழந்தைகள் சத்சங்க வகுப்புகளில் கலந்து கொள்வது தனக்கு எப்படி உத்வேகம் அளித்தது என்பதைப் பகிர்ந்து கொண்டான். அதே நேரத்தில் 16 வயதான ஆத்யா, புதிய பதின்மவயதினர் திட்டத்தின் மூலம் கற்றுக்கொள்ளவும் வளர்ச்சியடையவும் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினாள். அவர்களின் வார்த்தைகள் YSS இன் இளையோருக்கான முன்முயற்சிகளின் மாற்றத்தை ஏற்படுத்தும் தாக்கத்திற்கு ஒரு சான்றாக விளங்குகின்றன.

அனிமேஷ் கூறியதிலிருந்து ஒரு பகுதி: “கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளாக YSS ராஞ்சி குழந்தைகள் சத்சங்கத்தில் பங்கேற்கவும், கோடைக்கால முகாம்கள், வருடாந்திர சுற்றுலா, யாத்திரைகள் போன்றவற்றில் பங்கேற்கவும் பெரும் வாய்ப்பும் அருளாசியும் எனக்கு கிடைக்கப் பெற்றது. நான் கற்றுக்கொண்ட மிக முக்கியமான விஷயம், நம் வாழ்வில் இறைவன் மற்றும் குருமார்களின் முக்கியத்துவம், தியானத்தில் குருதேவரை எவ்வாறு தொடர்பு கொள்வது, குருதேவர் எப்போதும் என்னுடன் இருக்கிறார், என்னை வழிநடத்துகிறார், பாதுகாக்கிறார் என்பதை அறிந்து நல்ல, மகிழ்ச்சியான வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதுதான்.”

ஆத்யா தனது உரையில், “புதிய பதின்மவயதினர் திட்டத்தின் மூலம் நாம் எவ்வாறு தியானம் செய்வது மற்றும் நமது கவனத்தை வளர்த்துக் கொள்வது என்பதைக் கற்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். ஏனென்றால், இந்த வயதில், நம் கவனத்தை திசைதிருப்பும் விஷயங்கள் நிறைய உள்ளன, இவற்றை எவ்வாறு திறம்பட கையாள்வது என்பதை பள்ளிகள் நமக்குக் கற்பிப்பதில்லை. சகாக்களின் அழுத்தம், பாதுகாப்பின்மை, குறைந்த சுயமரியாதை, எதிர்மறை எண்ணங்கள், பயம், மன அழுத்தம், பதட்டம், தனிமை என பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.

“தற்போதைய தலைமுறை இளையோர்கள் பலர், குறிப்பாக அவர்கள் பரீட்சையில் குறைந்த மதிப்பெண்களைப் பெற்றால், மனச்சோர்வடைகிறார்கள். தொடர்ச்சியான முயற்சிகளுக்குப் பிறகும் அவர்கள் தோல்வியுற்றால், இது ஏன் எனக்கு நடக்கிறது? நான் என்ன செய்தேன் இதற்கு? என்று சிந்திக்கத் தொடங்குகிறார்கள். சிலர் தங்கள் கொடுமையான விதிகளுக்கு இறைவனைக் கூட குறை கூறத் தொடங்குகிறார்கள். எனவே, மிகவும் முக்கியமானவை என்றாலும் கூட, இன்றைய தினத்தில் யாரும் கவனிக்காத அத்தகைய பிரச்சினைகளை எவ்வாறு கையாள்வது என்பதை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்தத் தலைமுறையினர் கதைகள் மற்றும் புராணங்களில் நம்பிக்கை வைப்பதில்லை. சான்றுகளுடன் கூடிய நடைமுறை தீர்வுகளை அவர்கள் விரும்புகிறார்கள், குருதேவரின் போதனைகள் தான் இதற்கு சரியான வழிகாட்டியாக இருக்கும். குருதேவரின் நடைமுறைப் போதனைகள் நம் அகப் போராட்டங்களை வெல்ல உதவும் என்று நான் நம்புகிறேன்.”

ஸ்வாமி சங்கரானந்தா தனது உரையில், “குருதேவரின் எப்படி வாழ வேண்டும் போதனைகள் வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள நமது உள்ளார்ந்த ஆன்ம சக்தியை சார்ந்திருப்பது எப்படி என்பதைக் கற்பிக்கின்றன. உடல் ஆரோக்கியம், மன திறன்களை மேம்படுத்துதல், தியானத்தின் மூலம் ஆன்ம உள்ளுணர்வை எழுப்புதல் உள்ளிட்ட மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான சமநிலை மற்றும் முழுமையான வளர்ச்சியின் முக்கியத்துவத்தை அவை எடுத்துக்காட்டுகின்றன. மேலும், தோல்வி, பயம் மற்றும் இழப்பு போன்ற நமது உணர்ச்சிகளை, ஆக்கபூர்வமான வழிகளில் எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதைக் கற்றுக்கொள்வது, மீள்தன்மைக்கு அதாவது பின்னடைவுகளிலிருந்து மீண்டு எழும் திறனுக்கு, முக்கியமானது.” 

மேலும் அவர் கூறியதாவது: “நமது புதிய பதின்மவயதினர் திட்டத்தில், குழு விவாதங்கள், நாடகங்கள், கைவினைப்பொருட்கள் தயாரித்தல், விளையாட்டுகள், செயல்விளக்கங்கள் மற்றும் சேவை செயல்பாடுகள் போன்ற பல்வேறு வடிவங்களில் இந்த பாட விஷயங்களை நாம் ஆராய்வோம். வெற்றிகரமான கல்வி முறைகள் மூலம், வரும் வாரங்கள் மற்றும் மாதங்களில், யோகானந்தரின் போதனைகளின் முழு ஆழத்தையும் நோக்கத்தையும் உங்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்துவோம் என்று நம்புகிறோம்.” 

ஒரு யோகியின் சுயசரிதத்தில் விவரிக்கப்பட்டுள்ளபடி, குருதேவரின் தந்தை பகபதி சரண் கோஷின் உதாரணத்தை மேற்கோள் காட்டி, பெற்றோர்களும் வழிகாட்டும் பெரியோர்களும் பதின்ம வயதினரின் வாழ்க்கையில் ஆற்றும் முக்கிய பங்கை வலியுறுத்தினார் — முகுந்தாவின் (பரமஹம்ஸ யோகானந்தரின் குழந்தைப் பருவ பெயர்) தந்தை, சமநிலை முடிவெடுப்பிற்கும் பெற்றோர் வழிகாட்டுதலை வளர்த்துக் கொள்வதற்கும் எடுத்துக்காட்டாக விளங்கி, தனது குழந்தைகளின் கோரிக்கைகளை எவ்வளவு கவனத்துடன் பரிசீலித்தார் என்பதை விளக்கினார்.

மற்றவர்களுக்கான பிரார்த்தனை, குணப்படுத்தும் உத்தி செய்தல் மற்றும் பதின்மவயது பங்கேற்பாளர்களில் ஒருவர் வழிநடத்திய நிறைவு பிரார்த்தனை ஆகியவற்றுடன் நிகழ்ச்சி முடிவடைந்தது. பின்னர் ஸ்வாமிகள் சரளானந்தா, பத்மானந்தா ஆகியோர் பிரசாதம் விநியோகித்து கலந்து கொண்டவர்களுக்கு ஆசி வழங்கினர் (கீழே காண்க). 

இதைப் பகிர