பின்வரும் இடுகை யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியாவால் விரைவில் ஹார்ட்பேக், பேப்பர்பேக் மற்றும் மின்புத்தகம் பதிப்புகளில் வெளியிடப்படவுள்ள பரமஹம்ஸ யோகானந்தரின் சொற்பொழிவுகள் மற்றும் கட்டுரைகளின் நான்காம் தொகுதியான ஸால்விங் த மிஸ்டரி ஆஃப் லைஃப் இல் முழுமையாக வாசிக்கக்கூடிய “த டிவோஷனல் வே டு காட்,” என்ற உரையின் ஒரு பகுதி.

அதன் எண்ணற்ற வடிவங்கள் வந்து தத்தமது இடங்களில் அமையப்பெற்று, பிரபஞ்சத்தை அலங்கரிக்கவும், பூமியில் உயிர்கள் ஜீவிக்கச் செய்யவும் காரணமான பிரபஞ்சப் பெருவளங்களைப் படைத்தது யார்?
ஒரு கடிகாரத்தின் இயக்கத்தைப் பார்க்கும்போது, சிக்கலான பாகங்களை உருவாக்கி அவற்றை இணைத்தவன் மனிதனே என்பதை நாம் புரிந்து கொள்கிறோம். அதே சமயம் புல்வெளியைப் பார்க்கும்போது, “மண்ணைப் பசுமையான புற்களால் போர்த்திய விதையில் உள்ள சக்தியை படைத்தது யார்?” என்று நாம் கேட்க வேண்டும். படைப்பின் அற்புதமான மர்மங்களைத் தரிசிக்க நம்மை யார் படைத்தார்கள்? படைப்பாளர் தன்னை மறைத்துக் கொண்டிருக்கிறான், என்றாவது ஒருநாள் நாம் அவனைத் தேடி உணர்ந்தறியலாம் என்பதற்காகவே….
இறைவனின் மறைந்திருக்கும் இருப்பை உணர்ந்தறிய, நீங்கள் அவனை நேசிக்க வேண்டும்; ஆனால் என் மனதில் தோன்றியது என்னவெனில், இறைவனை அறியாமல் எப்படி அவனை நேசிக்க முடியும்? உங்களுக்குத் தெரியாத எதையும் நீங்கள் நேசிக்க முடியாது. நீங்கள் இதுவரை பார்த்திராத ஒரு மலரை நீங்கள் நேசிக்க முடியுமா? கடல் என்பது வெறும் ஒரு வார்த்தையாக மட்டுமே இருந்தால், அதை உங்களால் நேசிக்க முடியுமா? ஒருபோதும் அறிந்திராத அல்லது கேள்விப்படாத ஒருவரை நேசிக்க முடியுமா? ஒருபோதும் சந்திக்காத ஒருவரை நண்பராகக் கருதி நேசிக்க முடியுமா? உங்களுக்குத் தெரியாத ஒன்றை நீங்கள் நேசிக்க முடியுமா? அப்படியானால், ஒருபோதும் அவனைப் பார்த்திரா நிலையில், இறைவனை நேசிப்பது எப்படி சாத்தியம்? இனிமேல் நான் அதைச் சொல்ல முடியாது. நான் அவனை எப்போதும் பார்க்கிறேன். நீங்கள் இப்போது நினைக்கும் ஒவ்வொரு எண்ணமும், அந்த ஒளியிலிருந்து வருவதாக நான் காண்கிறேன்.
ஒரு நகரத்தின் மின்னும் விளக்குகள் எவ்வளவு அழகாக இருக்கின்றன என்பதை நீங்கள் ஒரு குன்றின் உச்சியிலிருந்து பார்க்கும்போது, டைனமோ தான் பல்புகளை ஒளிரச் செய்ய மின்சாரத்தை வழங்குகிறது என்பதை மறந்துவிடுகிறீர்கள். ஆக, மனிதர்களின் துடிப்பான உயிராற்றலைக் காணும்போது, அவர்களை உயிர்ப்பிப்பது எது என்று அறியாதபோது, நீங்கள் ஆன்மீக ரீதியாக பார்வையற்றவர்களாக இருக்கிறீர்கள். அந்த சக்தி, கட்புலனாகததாக இருந்தாலும், மிகவும் வெளிப்படையானது. அது எப்போதும் நமது எண்ணங்களுக்குப் பின்னால் கண்ணாமூச்சி ஆடுகிறது. இறைவன் மறைந்திருக்க விரும்புவதாலேயே, அவனைப் பற்றி சிந்திப்பதும் நேசிப்பதும் கடினமாக இருக்கிறது.
இறைவனை அறிவதற்கு மிக எளிய வழி அன்பின் வழிதான் என்பதே ஒரு முரண்பாடு. அவனை அறிய ஞான யோகம் எனும் ஒரு ஞான மார்க்கம் உள்ளது: இறைவன் அல்லாத அனைத்தையும் “நேதி, நேதி,” (இதுவல்ல; அதுவல்ல) என்று நீக்கி, பகுத்தறிந்து பிரித்தறியும் பாதை அது. மற்றொரு வழி என்னவென்றால், நற்செயல்களை மட்டுமே செய்வதன் மூலமும், அவற்றின் பலன்களைத் துறப்பதன் மூலமும் (கர்ம யோகம்) ஒருவரைத் தூய்மைப்படுத்திக் கொள்வதாகும்.
மேலும், எல்லாவற்றிலும் இறைவனைக் காணும் வரை இடைவிடாது அவனை நினைக்கும் பக்தி யோகப் பாதை உள்ளது. நாம் பக்திக் கண்களால் அவனைத் தேடினால், அவன் மிகத் தெளிவாகத் தெரிகிறான். நாம் அவனை விரும்புகிறோம், அவன் தொடர்ந்து நம்மை விட்டு விலகிச் செல்ல முடியாது என்பதை நாம் அவனுக்குத் தெரியப்படுத்த வேண்டும். நமது எண்ணங்களாலும், அவனுக்கான நமது ஆழமான ஏக்கத்தாலும் இடைவிடாது நாடினால், அவன் தன்னைப் வெளிப்படுத்தியே தீருவான்; அவன் பதிலளிப்பான்.
இறைவனின் இருப்பு மிகவும் அருகாமையில் உள்ளது; அது ஒரு இருட்டறைக்குள் உங்களுடன் யாரோ கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருப்பது போன்றது. அந்த நபரை நீங்கள் காணாவிட்டாலும், அவர் அங்கு இருப்பதை நீங்கள் உணர்கிறீர்கள். அப்படியேதான் இறைவனும், காணாத உங்கள் கண்களின் இருளுக்குப் பின்னால் இருக்கிறான். அவன் விவேகியின் வழியாக நம்முடன் பேசுகிறான். மேலும் கிறிஸ்து, கிருஷ்ணர் மற்றும் குருமார்கள் போன்ற மகான்களின் வழியாக நமக்கு அகத் தூண்டுதல் அளிக்கிறான்.
அவன் இருக்கிறான், ஆனால் அவன் எங்கே? அதற்கே பக்தி பதிலளிக்கிறது: அவனிடம் பக்தி கொள்ள அவனை நீங்கள் காண வேண்டியதில்லை. பக்தி என்பது, பிரபஞ்சத்தின் இருண்ட புதிரில், உங்களுடன் ஒரு தெய்வீகக் கண்ணாமூச்சி விளையாட்டை விளையாடிக்கொண்டிருக்கும் அவன், உங்களைச் சுற்றிலும் எங்கும் நிறைந்திருக்கிறான் என்பதை நீங்கள் அறிவதாகும். இலைகளுக்குப் பின்னால், காற்றுக்குப் பின்னால், சூரியனின் சூடான கதிர்களுக்குப் பின்னால் — அவன் மறைந்திருக்கிறான், ஆனால் அவன் அங்கிருக்கிறான். வெகு தொலைவில் இல்லை; அதனால்தான் அவனை நேசிப்பது எளிதாகிறது.
இறைவன் நம் இதயங்கள் அறியக்கூடிய பேரன்பன். அவன் தேடப்படுவதை விரும்புகிறான், ஏனெனில் அவன் எதிர்பார்க்கும் ஒரே விஷயம் அவனுடைய குழந்தைகளின் அன்பு. அவர்களின் அன்பைப் பெறுவதே அவன் படைப்பைத் தோற்றுவித்ததன் ஒரே நோக்கம். நம் அன்பைத் தவிர, அவன் தன்னுள் அனைத்தையும் கொண்டிருக்கிறான். அவனை நேசிக்கவோ அல்லது நேசிக்காமல் இருக்கவோ அவன் நமக்கு சுதந்திர விருப்பம் அளித்துள்ளான். அவன் நம்மை மிக மிக விரும்புகிறான். அதனால்தான் அவன் தம் மகான்களை அவனிடம் திரும்புவதற்கானப் பெருவழியைக் காட்ட அனுப்புகிறான்.