உலகின் மிகப்பெரிய ஆன்மீகக் கூட்டமான கும்பமேளா, உலகம் முழுவதிலுமிருந்து பக்தர்களை கங்கை, யமுனை மற்றும் சூட்சுமமான சரஸ்வதி ஆகியவற்றின் புனித சங்கமத்திற்கு ஈர்க்கிறது. யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா / ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் (YSS/SRF) பக்தர்களுக்கு, இந்த மேளா ஆழ்ந்த ஆன்மீக முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது, ஏனெனில் இது நமது மதிப்பிற்குரிய குரு மற்றும் பரமகுருமார்களான மகாவதார் பாபாஜி, லாஹிரி மகாசயா, ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர்ஜி மற்றும் பரமஹம்ஸ யோகானந்தர் ஆகியோரின் புனித இருப்பால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது, இது ஒரு யோகியின் சுயசரிதம் இல் விவரிக்கப்பட்டுள்ளது.
தனது நீண்டகால பாரம்பரியத்தை பின்பற்றி, ஆயிரக்கணக்கான YSS/SRF பக்தர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஓர் அமைதியான மற்றும் எழுச்சியூட்டும் யாத்திரையை வழங்கும் வகையில், ஜனவரி 10 முதல் பிப்ரவரி 15 வரை பிரயாக்ராஜ் கும்பா மேளா — 2025 இல் YSS முகாம் ஒன்றை அமைத்தது.
ஒரு புனித ஆரம்பம்: தொடக்க விழா மற்றும் ஆன்மீக செயல்பாடுகள்


ஜனவரி 10 ஆம் தேதி ஸ்வாமி ஈஸ்வரானந்த கிரி அவர்களால் YSS முகாம் தொடங்கி வைக்கப்பட்டது. முகாமில் தங்கியிருந்த பக்தர்களுக்கு சங்கமத்தில் புனித நீராடவும், YSS சன்னியாசிகள் நடத்திய தினசரி கூட்டு தியானங்கள், கீர்த்தனைகள், ஆன்மீக சொற்பொழிவுகள் மற்றும் வீடியோ காட்சிகள் போன்ற பல்வேறு ஆன்மீக நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் வாய்ப்பு கிடைத்தது.
கிரியா யோகப் பயிற்சி மற்றும் பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளில் தாங்கள் ஆழ்ந்து செல்ல ஏதுவாக பக்தர்களுக்கு ஆன்மீக வழிகாட்டுதலைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில் சன்னியாசிகள் ஆலோசனைகளும் கிடைத்தன.
“அமைதியான, ஆனந்தமான, தெய்வீகமான! வாழ்வில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும், ஈடு இணையற்ற ஆன்மீக அனுபவம்.”
– எல். என்., தெலுங்கானா
பக்தர்களின் உற்சாகமான பங்கேற்பு
உலகெங்கிலும் இருந்து சுமார் 2,500 பக்தர்கள் வருகை தந்திருந்தனர். ஒவ்வொரு நாளும் சுமார் 300 பக்தர்கள் முகாமின் செயல்பாடுகளில் பங்கேற்று, அதை தெய்வீகத் தோழமையின் துடிப்பான மையமாக மாற்றினார்கள்.
முகாமில் தன்னலமற்ற சேவை உணர்வு பரவியிருந்தது, 100 க்கும் மேற்பட்ட பக்தர்கள் முகாமின் சுமூகமான செயல்பாட்டை உறுதி செய்வதற்காக நிகழ்வின் போது தன்னார்வ சேவை செய்தனர். புத்தகங்கள், வரவேற்பு, சமையலறை, விருந்தோம்பல் போன்றவற்றில் தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
“நம் குருதேவரின் அன்பு மற்றும் அரவணைப்பால் நிரப்பப்பட்டு, நான் என் தாய் வீட்டில் இருப்பதைப் போல உணர்ந்தேன் முழு அனுபவமும் சொர்க்கமாக இருந்தது…. மிகுந்த அன்புடனும் அக்கறையுடனும் எங்களுக்கு சேவை செய்த ஒவ்வொரு தன்னார்வலரிடமும் குருஜியின் இருப்பை நாங்கள் உணர முடிந்தது.”
– ஜே. எல்., ஆந்திரா
வசதியான தங்குமிட ஏற்பாடுகள்
வசதியான மற்றும் ஆன்மீக ரீதியில் வளமான தங்குதலை உறுதி செய்வதற்காக, முந்தைய மேளாக்களுடன் ஒப்பிடும்போது YSS முகாமில் பல மேம்பாடுகள் செய்யப்பட்டிருந்தன:
- பக்தர்களின் வசதிக்காக கட்டில்கள், போர்வைகள் மற்றும் வெந்நீர் வழங்குதல்.
- குளிரிலிருந்து பாதுகாக்கும் வகையில் முழு முகாமும் தார்பாய் கொண்டு மூடப்பட்டிருந்தது.
- டைல்ஸ் பதிக்கப்பட்ட தரையுடன் கூடிய சுகாதாரமான கழிப்பறைகள் மிகுந்த கவனத்துடன் பராமரிக்கப்பட்டிருந்தன.


கும்பமேளாவின் பரந்த கூட்டத்திற்கு மத்தியில் ஓர் அமைதியான சரணாலயமாக மாற்றிய முகாமின் அமைதியான சூழல் பக்தர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.
மற்றொரு பக்தர் கூறினார்: “இந்த முறை, எல்லாமே பெரிதும் மேம்படுத்தப்பட்டிருந்தது! கட்டில்கள், போர்வைகள், சார்ஜிங் பாயிண்டுகள் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றிற்கான ஏற்பாடுகள் சிறப்பாக இருந்தன. தியானக் கூடம், வரவேற்பறை, கூட்ட அறைகள் அனைத்தும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன. சூழ்நிலை இனிமையாக இருந்தது, முகாம் விசாலமாக உணர்ந்தோம், சாத்வீக உணவு ஊட்டமளிப்பதாக இருந்தது, கங்கை அருகே தியானம் செய்வது ஒரு உண்மையான அருளாசி. கும்பமேளாவில் இந்த அற்புதமான அனுபவத்தை அளித்த குருதேவா, YSS மற்றும் தன்னார்வலர்களுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்.”
யாத்ரீகர்களுக்கு மருத்துவ சேவை
YSS பக்தர்களுக்கு சேவை செய்வதோடு மட்டுமல்லாமல், கும்ப மேளாவில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான யாத்ரீகர்களுக்கும் இந்த முகாம் மருத்துவ உதவிகளை வழங்கியது. தன்னலமின்றி தினமும் தன்னார்வ சேவை செய்யும் அர்ப்பணிப்புள்ள மருத்துவர்களின் உதவியுடன், உதவி கோரிய அனைவருக்கும் சரியான நேரத்தில் மற்றும் கருணையுடன் சுகாதாரப் பாதுகாப்பை இந்த முகாம் உறுதி செய்தது. முகாம் நடந்த இடத்தில் YSS நடத்தும் மருந்தகத்திலிருந்து சுமார் 20,000 நபர்கள் இலவச மருத்துவ உதவியைப் பெற்றனர்.
ஆன்மீக பரப்புரை: குருஜியின் போதனைகளைப் பரவச் செய்தல்


குருதேவரின் போதனைகள் குறித்து மேலும் அறிய விரும்பும் ஆர்வமுள்ள சத்தியம் தேடுபவர்களுடன் கலந்துரையாட தன்னார்வலர்கள் மற்றும் சன்னியாசிகள் இருந்த புக் ஸ்டாலை 25000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்வையிட்டனர். அவர்களில் சிலர் YSS பாடங்களுக்கு பதிவு செய்தனர்.
நிறைவு
பல வார ஆன்மீக எழுச்சிக்குப் பிறகு, பிப்ரவரி 15 அன்று முகாம் நிர்வாகி ஸ்வாமி தைர்யானந்த கிரியின் நிறைவு சத்சங்கத்துடன் YSS கும்ப மேளா முகாம் முடிவடைந்தது. நன்றியுணர்வு, அன்பு மற்றும் இறையருள் மற்றும் குருமார்களின் அருளால் நிரம்பி வழியும் இதயங்களுடன் பக்தர்கள் புறப்பட்டனர். ஆழ்ந்த தியானம், தெய்வீகத் தோழமை இன் அருளாசிகளையும் குருஜியின் எல்லையற்ற அன்பையும் அவர்கள் தங்களுடன் எடுத்துச் சென்றனர்.
முகாமில் பகிரப்பட்ட தெய்வீக தருணங்களைக் காண பட்டனைக் கிளிக் செய்க.