நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் எங்கள் இதயங்கள் இரங்குகின்றன. இந்தத் துயரச் சம்பவத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து, பல குடும்பங்களும் சமூகங்களும் துக்கத்தில் ஆழ்ந்திருக்கும் அதேவேளையில், காணாமல் போனவர்களைப் பற்றிய செய்திக்காக எண்ணற்றோர் இன்னும் காத்திருக்கின்றனர். இந்தப் பேரழிவின் செய்தி தெரியவந்த உடனேயே, YSS மற்றும் SRF ஆசிரமங்களைச் சேர்ந்த குருதேவரின் சன்னியாசிகளும் சன்னியாசினிகளும், நமது தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்த கிரி அவர்கள் உட்பட, இப்பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும், நேபாளத்திலும் அப்பகுதி முழுவதிலும் வாழும் குருதேவரின் அன்பிற்குரிய அர்ப்பணிப்புமிக்க பக்தர்களுக்காகவும் தீவிர பிரார்த்தனைகளைச் செய்து வருகின்றனர்.
ஒரு புனிதத் தலத்திற்கு நம்பிக்கையுடனும் பக்தியுடனும் பயணம் மேற்கொண்ட யாத்ரீகர்களுக்கு இத்தகைய துயரமான சம்பவம், எவ்வாறு நேர்ந்தது என்று பல பக்தர்கள் நியாயமான கேள்வியை எழுப்புகின்றனர். தாங்க இயலாத இழப்பு நிறைந்த தருணங்களில், இப்படைப்பையும் இறைவனை நோக்கித் திரும்பும் ஒவ்வொரு ஆன்மாவின் பயணத்தையும் ஆளும் தெய்வீக தனிப்பட்ட மற்றும் கூட்டு கர்மவினை விதிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள வரம்புக்குட்பட்ட மனித அறிவு போராடுகிறது. ஆனால், நம்பிக்கையுடன் நாம் அறிவது என்னவென்றால், இந்தப் புனித யாத்திரையின்போது தங்கள் இதயங்களை இறைவனுடன் பக்தியில் இணைந்திருந்தபோது உயிர்நீத்த ஒவ்வொரு ஆன்மாவும் இப்போது பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் ஒளி, அழகு மற்றும் முழுமையான சுதந்திரம் நிறைந்த ஓர் உலகிற்கு உயர்ந்துவிட்டனர் என்பதையே.
இறைவன் மீதான உறுதியான அன்புடன் நிலையற்ற இவ்வுலக வாழ்க்கையின் பேரிடர்களையும் துயரங்களையும் நாம் காணும்போது இந்தப் பூமி நமது உண்மையான இல்லம் அல்ல என்ற புரிதலுடன், இறைவனின் எல்லையற்ற அன்பும் கருணையும் வாழ்க்கையின் மிகவும் இருண்ட தருணங்களில்கூட நம் ஒவ்வொருவருடனும் என்றும் நிலைத்திருந்து, ஒவ்வொரு ஆன்மாவின் யாத்திரை எனும் பிறவிகளை வழிநடத்தி இறுதி முக்தி மற்றும் பேரானந்தத்திற்கும் இட்டுச் செல்கிறது என்ற விழிப்புணர்வு அடைந்தவர்களாகிறோம்.
இந்தப் பேரிடரால் தங்கள் அன்புக்குரியவர்களை எதிர்பாராத துயரமான முறையில் இழந்து தவிக்கும் குடும்பத்தினருடன் நமது இதயங்கள் கருணையிலும் பிரார்த்தனையிலும் இணையட்டும் மேலும் நிலைகுலைந்த சமூகங்களுக்கு நம்மால் இயன்ற அளவு நிவாரணப் பொருளுதவிகளை வழங்குவோம்.நாம் அனைவரும் ஒன்றிணைந்து இறைவனின் குணப்படுத்தும் ஒளியானது நேபாளம், இமயமலைப் பகுதிகள், இந்தப் பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களை சூழ்ந்திருப்பதாக மனக்காட்சி காண்போம். ஸ்வாமி சிதானந்தஜி அவர்கள் நமக்கு நினைவூட்டுகிறார்: “குருதேவர் பரமஹம்ஸ யோகானந்தரின் ஆன்மிகக் குடும்ப மற்றும் YSS/SRF உலகளாவிய பிரார்த்தனை குழுவின் உறுப்பினர்களாக இருக்கும் நமக்கு, உதவி தேவைப்படுவோருக்கு ஆறுதலையும், வலிமையையும், ஆன்மிக உயர்வையும் அளிக்கும் பிரார்த்தனை அதிர்வலைகளை அனுப்பும் புனிதமான வாய்ப்பும் பொறுப்பும் உள்ளது. ஆழ்ந்த தியானம், பிரார்த்தனை மற்றும் குருதேவர் அருளிய குணமளிக்கும் உத்தியைப் பயிற்சி செய்வதன் மூலம் நாம் ஆறுதல், நம்பிக்கை மற்றும் தெய்வீக குணமளிக்கும் ஊடகங்களாக முடியும்.”
ஸ்வாமி சிதானந்தஜி அவர்கள் இந்தப் பிரார்த்தனையில் நம் அனைவரையும் இணையக் கூறுகிறார்:“குருதேவர் மற்றும் நமது மகாகுருமார்களின் கருணையும் அருளாசிகளும் இந்தப் பேரிடரால் பாதிக்கப்பட்ட அனைவரையும் தெய்வீகப் பாதுகாப்பு, ஆறுதல் மற்றும் அமைதியால் அரவணைக்குமாக. இன்னமும் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்படுவார்களாக. தங்களின் அன்புக்குரியவர்களை இழந்தவர்கள் துயரத்தைத் தாங்கிக்கொள்ளும் வலிமையைப் பெறுவார்களாக. காயமடைந்தவர்கள் குணமடைவார்களாக; இன்னும் காத்திருப்பவர்கள் நல்ல செய்தி வரும் என்ற நம்பிக்கையில் நிலைபெறுவார்களாக. எல்லாவற்றிற்கும் மேலாக, வாழ்க்கையின் நிச்சயமற்ற சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், நம் ஒவ்வொருவரிடமும் இறைவன் கொண்டிருக்கும் அன்பே என்றும் அசைக்க முடியாத ஒரே உண்மை என்பதை நாம் ஒவ்வொருவரும் நினைவில் கொள்வோமாக.”
YSS/SRF உலகளாவிய பிரார்த்தனை குழு
YSS மற்றும் SRF ஆசிரமங்களைச் சேர்ந்த சன்னியாசிகளும் சன்னியாசினிகளும், உதவி தேவைப்படும் அனைவருக்காகவும் தொடர்ந்து ஆழ்ந்த பிரார்த்தனை செய்து வருகிறார்கள் என்று உறுதியளிக்கிறோம். உங்களுக்காகவோ அல்லது வேறு ஒருவருக்காகவோ நாங்கள் பிரார்த்தனை செய்ய வேண்டுமென நீங்கள் விரும்பினால், கீழே பகிரப்பட்டுள்ள இணைப்பைக் க்ளிக் செய்து பதிவு செய்யலாம்:
மேலும், யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள YSS/SRF உலகளாவிய பிரார்த்தனை குழு கையேட்டை வாசிக்க உங்களை ஊக்குவிக்கிறோம்.




















