யார் என்னை எல்லா இடத்திலும் காண்கிறானோ, என்னில் எல்லாவற்றையும் காண்கிறானோ, அவனது காட்சியிலிருந்து ஒருபோதும் நான் மறைவதில்லை, அவனும் என் காட்சியினின்று என்றும் மறைவதில்லை.
— காட் டாக்ஸ் வித் அர்ஜுனா: தி பகவத் கீதா (VI:30)
அன்புக்குரியவர்களே,
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திருஅவதார நினைவுநாளான இந்த ஆன்மீக எழுச்சியூட்டும் ஜன்மாஷ்டமியில் உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது அன்பான வாழ்த்துகள். ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அவதரித்திருந்தாலும், இந்த மகத்தான, நேசத்திற்குரிய இறை-அன்பின் அவதாரம், தனது அழகான மனித வடிவத்தில் இம்மண்ணுலகில் வாழ்ந்தது எவ்வளவு உண்மையானதோ அதே போலவே, அவருடன் இசைந்திருப்பவர்களுக்கு இன்றும் மெய்யானவராக உள்ளார் — ஆன்ம-அனுபூதி எனும் இலக்கை நோக்கிய இராஜ யோகப் பாதையில் உள்ள உண்மையான சாதகர்களுக்கு வழிகாட்டி, அவர்களை மேம்படுத்த என்றும் தயாராக உள்ளார். நமது குரு பரமஹம்ஸ யோகானந்தரால் அளிக்கப்பட்ட கிரியா யோகப் போதனைகளின் வாயிலாக, பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு வழங்கிய ஆன்ம-விடுதலைக்கான அதே புனித சூத்திரத்தை நாம் பெற்றுள்ளோம்.
எல்லா இடங்களிலும் இறைவனைக் கண்டு, எல்லாவற்றையும் அவனில் காண்கின்றவன் இறைவனது காட்சியிலிருந்து ஒருபோதும் மறைவதில்லை என பகவத் கீதையில் அன்பிற்குரிய கிருஷ்ணர் உறுதியளிக்கிறார். அன்றாட வாழ்வின் கடமைகள் மற்றும் ஒழுங்கான நடைமுறைகளுக்கு நடுவில், நாம் இறைவனை நினைவுகூர்ந்து — அமைதியின்மைக்குப் பதிலாக தியானத்தைத் தேர்ந்தெடுத்து, இறை அன்பனுடன், அவனுக்காகச் செயல்களை ஆற்றும் ஒவ்வொரு நேரமும் — ஓர் அற்பமான எண்ணத்திற்குப் பதிலாக கருணையான எண்ணத்தை மாற்றீடு செய்கின்ற, மற்றவர்களுக்கு இரக்கத்தைக் காட்டுகின்ற, ஓர் எதிர்மறை எண்ணத்தின் ஈர்ப்பை எதிர்க்கின்ற ஒவ்வொரு நேரமும் — நாம் அவனது சர்வ வியாபகத்தை நமது உணர்வில் இன்னும் மிகத் தெளிவாக ஈர்க்கின்றோம். சில சமயங்களில் சாதகர்கள், இறைவன் பதிலளிப்பதற்கு முன்னர் அவர்கள் முதலில் உன்னத ஆன்மீகச் சிகரங்களை அல்லது முழுமையான சுய-தேர்ச்சியை அடைய வேண்டும் என எண்ணக்கூடும். இருப்பினும் இறைவனின் என்றும்-நேசிக்கும், கண்காணிக்கும் கண்கள், பக்தியின் ஒவ்வோர் அர்ப்பணிப்பையும், ஒவ்வோர் உண்மையான முயற்சியையும் அளவற்ற பெருந்தன்மையுடன் ஒவ்வொன்றையும் பாராட்டியவண்ணம் நோக்குகின்றன. பரமஹம்ஸ யோகானந்தர், பகவத் கீதையின் மீதான அவரது மொழிபெயர்ப்பும் விளக்கவுரையுமான காட் டாக்ஸ் வித் அர்ஜுனா-வில் வெளிப்படுத்தியிருப்பது போல, மிகவும் விரைந்து மறையும் எண்ணத்தையும், மிகவும் அற்பமான செயலையும்கூட அவனுடைய இருப்பை நோக்கிய படிக்கற்களாகப் பயன்படுத்தலாம்.
அன்புக்குரியவர்களே, கண்ணபிரானின் பக்தர்களை, உலகப் பற்றைத் துறந்து தெய்வீகப் புல்லாங்குழலின் அழைப்பைப் பின்பற்றத் தூண்டிய அதே நம்பிக்கையுடனும், ஆன்மீக உற்சாகத்துடனும் நீங்கள் உங்களது தினசரி தியானத்தையும் வாழ்க்கையின் அனுபவங்களையும் அணுகும் போது உங்களது இதயங்களும் மனங்களும் அவனது எல்லையற்ற, அனைத்தையும் நிறைவேற்றவல்ல அன்பின் உயிர்த்துடிப்புள்ள இருப்பை இன்னும் அதிகமாக ஈர்க்குமாக. அந்த அன்பு, உங்களது காட்சியிலிருந்து ஒருபோதும் விலகாமல், உங்களது ஒவ்வோர் ஆன்மீக வெற்றியிலும் களிப்புறும்.
நாம் ஸ்ரீ கிருஷ்ணரின் பிறப்பை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகையில் உங்கள் ஒவ்வொருவருக்குமான எனது பிரார்த்தனை, அவரது தெய்வீக வாழ்க்கையும் போதனைகளும் இவ்வுலகத்திற்கு நிரந்தரமாக அருளுகின்ற ஆன்ம-எழுச்சியூட்டும் ஒளியையும் அருளாசிகளையும் உங்களது சொந்த உணர்வுநிலை எனும் புனிதத் தொட்டிலில் நீங்கள் ஏற்பீர்களாக.
ஜய் ஸ்ரீ கிருஷ்ணா! ஜய் குரு!
ஸ்வாமி சிதானந்த கிரி




















