செப்டம்பர் 19, 2020 அன்று SRF மதர் சென்டரில் YSS/SRF தலைவர் ஆற்றிய “பரமஹம்ஸ யோகானந்தா: எ பிரிஜ் மேகர் ஆஃப் ஹிஸ்டாரிக் ப்ரபோஷன்ஸ்,” என்பதிலிருந்து சில பகுதிகள், இது யோகதா சத்சங்கா பத்திரிகையின் 2021 ஜனவரி–மார்ச் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. பரமஹம்ஸ யோகானந்தர் அமெரிக்காவிற்கு வந்ததன் நூறாவது ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் ஸ்வாமி சிதானந்த கிரி உரையாற்றினார். மேற்கில் பரமஹம்ஸர் தனது முதல் உரையில் போற்றிப் புகழ்ந்த ஆன்ம சுதந்திரத்தை உங்கள் வாழ்வில் ஒரு நிரந்தர நிதர்சனமாக்க, யோக விஞ்ஞான தியானத்தை பயன்படுத்த இந்த வலைப்பதிவு உங்களுக்கு அகத் தூண்டுதல் அளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
புறத்தே, பரமஹம்ஸ யோகானந்தர் ஒரு இந்துவாக, ஒரு அமெரிக்கக் குடிமகனாக, உலகின் குடிமகனாகக் காணப்பட்டார். ஆனால், அவரது உண்மையான இயல்பு, அவர் அகத்தே இருந்ததே. அவருடைய கவிதைகளில் ஒன்றில், அகமுகமாக தன் அனுபவம் என்ன என்பதை வெளிப்படுத்தினார்:
எனக்கு நாடுமில்லை, அன்பான தாயகமுமில்லை;
நான் இந்துவோ கிறிஸ்தவ ஞானியோ அல்லன்;
மேற்கத்தியனோ, கிழக்கத்தியனோ அல்லன், மரபுவழி தடைகளுக்குப் பின்னால் இனத்தால் பிணைக்கப் பட்டவனுமில்லை….
என் சித்தம் சுதந்திரத்தில் திளைக்கிறது —
அதன் ஒரே சமயம் சுதந்திரம்….
மற்றவர்கள் அறியாத, ஆனால் நான் அறிந்த ஒன்று,
நான் விழித்தெழுகிறேன், நடக்கிறேன், கனவு காண்கிறேன்,
உண்கிறேன், பருகுகிறேன், ஆனந்தத்தில் திளைக்கிறேன்.
நான் தேடிய அந்த ஆனந்தம் நானே —
அனைவரும் தேடும் அந்தப் பேரின்பம்.1
இதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்: “என் சித்தம் சுதந்திரத்தில் திளைக்கிறது — அதன் ஒரே மதம், சுதந்திரமே.” இது மிகவும் சுவாரஸ்யமானது; ஏனெனில், பரமஹம்ஸர் பாஸ்டன் நகருக்கு வருகை தந்த நிகழ்வை நமக்கு நினைவூட்டுகிறது. 1920-ல் இங்கு அவர் சமய மிதவாதிகள் மகாசபையில் பேசுவதற்காக வந்திருந்தார். இந்த மகாசபை அமெரிக்கா மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மதத் தலைவர்களை ஈர்த்தது — சுதந்திரம் தேடி இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவிற்கு வந்த யாத்ரீகர்கள் ஆகிய குடியேறிகள் அங்கு வந்திறங்கியதன் 300-ஆம் நிறைவைக் கொண்டாடும் வகையில் நடத்தப்பட்டது; மேலும் “சுதந்திரத்தின்2 உண்மையான அர்த்தம் என்ன?” என்பதே அந்த மாநாட்டின் கருப்பொருளாக அமைந்திருந்தது.
அமெரிக்க தேசத்தை உருவாக்கிய முன்னோர்கள் சுதந்திரப் பிரகடனத்தில் எழுதியதை நாம் அறிவோம்: “அனைத்து மனிதர்களும் சமமாகப் படைக்கப்பட்டவர்கள் என்பதும், தங்களது படைப்பாளரால் சில பறிக்க முடியாத உரிமைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்பதும், இவற்றில் வாழ்வு, சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சியைத் தேடுதல் ஆகியவை அடங்கும் என்பதையும் வெளிப்படையான உண்மைகளாக நாங்கள் கருதுகிறோம்.” இவை நெஞ்சை நெகிழ வைக்கும், அமரத்துவம் வாய்ந்த சொற்கள். ஆனால், இது ஒரு மிகச்சிறந்த யோகக் கோட்பாடு என்பதைப் பலரும் உணர்ந்திருக்க மாட்டார்கள். உண்மையில், அரசியல்வாதிகள், அரசுத் தலைவர்கள் மற்றும் புரட்சித் தலைவர்கள் ஆகியோரின் பார்வையை விடவும் யோகாவின் பார்வை ஆழமானது என்று நாம் கூறலாம். வாழ்வு, சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சியைத் தேடுதல் ஆகியவை வெறும் பறிக்க முடியாத உரிமைகள் மட்டுமல்ல; அவை மனித இயல்பின் அடிப்படையிலேயே பொதிந்துள்ள, பிரிக்க முடியாத ஆற்றல்கள் அல்லது செயல்முறைகள் என்று யோகம் கூறுகிறது.
பரமஹம்ஸர் கொண்டுவந்த ராஜ யோக விஞ்ஞானத்தைப் பற்றி SRF [YSS] பாடங்களிலும், உங்கள் தியானப் பயிற்சியிலும் நீங்கள் கற்றுக் கொண்டவற்றைப் பற்றிச் சிந்தியுங்கள்; மேலும் வாழ்வு, சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சியைத் தேடுதல் ஆகிய இந்தக் கோட்பாடுகளின் அடிப்படையில் அவற்றைச் சிந்தித்துப் பாருங்கள். உயிர்ச்சக்தி (பிராணன்), சுதந்திரம் (அல்லது சுதந்திர விருப்பம்), மற்றும் மகிழ்ச்சியை நாடுதல் (அல்லது, பரிபூரண ஆனந்தத்திற்கான ஆன்மாவின் ஏக்கம் என்றும் கூட இதைச் சொல்லலாம்) — இவை ஆன்மாவின் பத்து கருவிகள் (ஐந்து புலன்கள் மற்றும் ஐந்து செயலுறுப்புகள்) மூலம் நம் அனுமதியுடனோ அன்றியோ செயல்படும் சக்திகள் என்று யோகம் நமக்குச் சொல்கிறது. அதனால்தான், இவை வெறும் பறிக்க முடியாத உரிமைகள் மட்டுமல்ல, மாறாகப் பிரிக்க முடியாத சக்திகள் அல்லது செயல்முறைகள் என்று நான் கூறுகிறேன்.
நான் இதில் இன்னும் சற்று ஆழ்ந்து செல்ல விரும்புகிறேன், ஏனெனில் அது 1920 பேரவையில் பரமஹம்ஸர் நிகழ்த்திய “சமய விஞ்ஞானம்” உரையை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதை இது தெளிவுபடுத்தும். நாம் கருத்தரிக்கப்படும் நேரத்தில், நமது சூட்சும மற்றும் காரண சரீரங்களாகிய உயிர்ச் சக்தி மற்றும் உணர்வுநிலையால் மூடப்பட்ட ஒரு தெய்வீக ஆன்மாவாகவே சரீரத்தில் நுழைகிறோம் என்று அவர் தம் போதனைகளில் விளக்குகிறார். மேலும் ஆன்மா அந்த உயிர்ச்சக்தியையும் உணர்வுநிலையையும் உடல்-மன கருவிகளில் பாய்ச்சுகிறது. இதுவே மனிதனின் நிலை; இந்த விஷயத்தில் நமக்குத் சுதந்திர விருப்பம் இல்லை. உயிர் கீழ்நோக்கி மற்றும் புறத்தே பாய்ந்து — நரம்பு மண்டலத்திற்குள், புலன்களுக்குள் — உடலை உருவாக்கி உயிரூட்டுகிறது; மேலும், மிக முக்கியமாக, நாம் தேர்ந்தெடுத்தாலும் விரும்பாவிட்டாலும், ஆன்மா அந்த உடலுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளச் செய்கிறது.
ஆனால், அந்த உடலில் நாம் எவ்வாறு வாழ்கிறோம் என்பது மட்டுமே நம் கட்டுப்பாட்டில் உள்ளது — அதாவது, நம்மை அடிமைப்படுத்திப் பிணைக்கும் புலன் இச்சைகள் மற்றும் பழக்கவழக்கங்களின் மாயையுடனும் கூடிய அந்த உடலோடு நாம் நம்மை அடையாளம் காண்கிறோமா இல்லையா என்பது. நாம் உண்மையில் யார் என்பது குறித்த தவறான கண்ணோட்டத்துடன் ஆன்மா கட்டுண்டு கிடப்பதே உண்மையான அடிமைத்தனம் ஆகும். 100 ஆண்டுகளுக்கு முன்பு நமது குருவால் மேற்கத்திய நாடுகளுக்கும் அதன் மூலம் உலகிற்கும் கொண்டுவரப்பட்ட SRF/YSS அமைப்பின் போதனையான கிரியா யோகம், ஆன்மாவின் அடையாளப்படுத்தும் சக்தியைக் கட்டுப்படுத்தும் விஞ்ஞானத்தை நமக்கு வழங்குகிறது; இது, ஆன்மாவாகிய நாம், நன்மைக்கோ தீமைக்கோ, நம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் புறம்பான பாத்திரங்களையும் பண்புகளையும் ஏற்கும் செயல்முறையாகும். வாழ்க்கை, சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சியைத் தேடும் சக்திகளை—நம் உயிர்ச்சக்தி, நம் சுதந்திர விருப்பத் தேர்வு மற்றும் எல்லையற்ற பேரின்பத்திற்கான நம் ஆன்மாவின் விருப்பத்தை நாம் எங்கு தேடுகிறோம்—எப்படி நிர்வகிக்கிறோம் என்பதைப் பற்றியதுதான் இது. அதுவே சமய விஞ்ஞானம்; சுதந்திரத்தின் உண்மையான அர்த்தத்தை மையமாகக் கொண்டு நடைபெற்ற அந்த சமயங்கள் மகாசபையில் பரமஹம்ஸர் நிகழ்த்திய பேருரையின் சாரம்.
விடுதலை எய்துவதற்கு சமய விஞ்ஞானத்தில் வல்லமை பெறுதல்
நீங்கள் அறிவீர்கள், அங்கு அவர் ஆற்றிய உரை “சமய விஞ்ஞானம்” என்று தலைப்பிடப்பட்டிருந்தது; அதே பெயரில் ஒரு சிறிய — ஆனால் மிக சக்திவாய்ந்த — நூலும் வெளியிடப்பட்டது, அந்த நூலை நாங்கள் [SRF] இப்போது SRF-இன் நூற்றாண்டு விழாப் பதிப்பாக மீண்டும் வெளியிட்டுள்ளோம். உண்மையான சுதந்திரத்தைப் பொறுத்தவரை, அந்த மகாசபையில் நமது குரு வழங்கிய கருத்துக்களை மூன்று முக்கிய அம்சங்களாக சுருக்கிக் கூறலாம்.
முதலாவதாக, குருஜி தமது நூலில் கூறுவது போல “நிலையற்ற உடலுடனும் அமைதியற்ற மனத்துடனும் அடையாளப்படுத்திக் கொள்ளும் உணர்வே, நமது ஆன்மீக துயரத்திற்கு மூல ஆதாரம் அல்லது மூல காரணம் ஆகும்.”
இரண்டாவது அம்சம் என்னவென்றால், சரியான கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, அத்தகைய துன்பத்தை நிரந்தரமாகத் தவிர்ப்பதும், தூய பேரின்பத்தை அல்லது இறைவனை அடைவதுமே சமயம் ஆகும். இதுவே மதம் குறித்த அவரது உலகளாவிய வரையறை.
மூன்றாவது அம்சம் என்னவென்றால், என்றும் -ஆனந்தமயமான ஆன்மாவை, நிலையற்ற உடல் மற்றும் மனத்துடனான அதன் கேடு விளைவிக்கும் தொடர்பிலிருந்தும் அடையாளப் படுத்துவதிலிருந்தும் விடுவிப்பதற்கான மிகவும் எளிதான, பகுத்தறிவுக்கு மிகவும் பொருத்தமான, மிகவும் அடிப்படை வழிமுறைகளை – அனைவருக்குமான நடைமுறை வழிகளை – பயன்படுத்துவதாகும். அதனால் துன்பத்தை அது நிரந்தரமாக தவிர்த்து பேரானந்தத்தை எய்தும். சமயம் இதையே அடக்கியுள்ளது.
இது ஒருவேளை சற்றே தத்துவார்த்தமான அல்லது நுட்பமான ஒன்றாக இருக்கலாம். ஆயினும், குருதேவர், சுதந்திரம் எனும் முழு கருத்தாக்கத்தை எவ்வாறு அணுகினார் என்பதையும், அது சமய விஞ்ஞானத்தின் வல்லமையை முற்றிலும் சார்ந்தது என்பதை எவ்வாறு விளக்கினார் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவர் கூறியது போல: “என்றும்-ஆனந்தமயமான ஆன்மாவை, நிலையற்ற உடல் மற்றும் மனத்துடனான அதன் கேடு விளைவிக்கும் தொடர்பிலிருந்தும், அடையாளப் படுத்துவதிலிருந்தும் விடுவிப்பதேயாகும்.” வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அமெரிக்கர்களுக்கும், உலகின் ஒவ்வொரு நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் அவர் உணர்த்தியதாவது: சுதந்திரம் மற்றும் சமத்துவம் குறித்த நமது சமூக லட்சியங்கள், ஆன்மீக சுதந்திர லட்சியங்களால் – அதாவது, நமது கீழ்நிலை இயல்பின் சீரழிக்கும் உந்துதல்களிலிருந்து விடுதலை பெறுதல் ஆதரிக்கப்படாவிட்டால், அந்த சமூக லட்சியங்கள், அமெரிக்காவிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ பகுதியளவு மட்டுமே உணரப்பட்டதாக இருக்கும்.
SRF/YSS பாடங்கள் வாயிலாகப் பரமஹம்ஸ யோகானந்தர் நமக்கு வழங்கிய போதனைகளில், அந்த அடையாளம் காணும் செயல்முறையின் கட்டுப்பாட்டைப் பெற சரியான மனப்பான்மைகள், சரியான சங்கல்பங்கள் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாகச் சரியான விஞ்ஞான பூர்வ உத்திகளை அவர் நமக்குக் கொடுத்திருப்பதற்கு நாம் எவ்வளவு பாக்கியசாலிகள்! இதுவே யோகக் கலை மற்றும் சமய விஞ்ஞானம் அதாவது, நமது உண்மையான அடையாளம் என்பது பரமாத்மாவுடனான அல்லது இறைவனுடனான ஒன்றுபடுவது என்பதை உணர்வது; அதேவேளையில், மற்ற தற்காலிக அடையாளங்கள் அனைத்தும் ஐந்து வகையான துன்பக் காரணிகள், வரம்புக்குட்பட்டவைகள், பற்றுகள், கர்மவினைகள் பதஞ்சலி தமது யோக சூத்திரங்களில் குறிப்பிடும் துன்பங்கள்.3 “சமய விஞ்ஞானம்” — சுதந்திரத்தின் உண்மையான அர்த்தத்தைப் பற்றிய ஒரு பொருத்தமான, விரிவான மற்றும் ஆழமான விளக்கம் வேறு எதுவாக இருக்க முடியும்!
அடிக்குறிப்புகள்:
- யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா வெளியிட்ட சாங்ஸ் ஆஃப் த ஸோல் நூலில் உள்ள “இன் த லேண்ட் ஆஃப் ட்ரீம்ஸ்” இருந்து சில பகுதிகள்.
- இதற்கு பத்தாண்டுகளுக்கும் மேலாக முன்னதாகவே, 1607-இல் வர்ஜீனியாவில் இங்கிலாந்திலிருந்து வந்த குடியேறிகளால் மற்றொரு நிரந்தரக் குடியேற்றம் நிறுவப்பட்டிருந்தது; ஆனால், அக்குழுவின் நோக்கம் முதன்மையாக மத சுதந்திரத்திற்கான தேடலாக இருப்பதை விட வணிக ரீதியாக இருந்தது.
- காட் டாக்ஸ் வித் அர்ஜுனா: த பகவத் கீதாவில், பரமஹம்ஸ யோகானந்தர், “யோக சூத்திரங்கள் II:3-இல், கிலேஷம்’ அல்லது துன்பங்கள் ஐந்து வகைப்படும் என வரையறுக்கப்பட்டுள்ளது: அவை அவித்யா (அறியாமை), அஸ்மிதா (அகங்காரம்), ராகா (பற்று), துவேஷம் (வெறுப்பு) மற்றும் அபிநிவேஷம் (உடல் மீதான பற்று) ஆகியனவாகும்.” என்று விளக்குகிறார்.
யோக தியான விஞ்ஞானம் மற்றும் சமநிலை வாழ்க்கை பற்றிய பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளின் மையமாகிய யோகதா சத்சங்க பாடங்கள் பற்றி மேலும் அறிந்து கொள்ள உங்களை அழைக்கிறோம்.
ஸ்வாமி சிதானந்தாஜியின் 2020 SRF நூற்றாண்டு நிறைவுப் பேருரையிலிருந்து எடுக்கப்பட்ட இந்த பகுதியை SRF யூடியூப் சேனலிலும் காணொளியாகக் காணலாம்.




















