மனத்தளவில் தன்னுடன் இசைந்திருக்கும் சீடர்களுக்கு குரு, தன் மூலமாகப் பாயும் இறை-ஒளியைப் பாய்ச்சுகிறார். பக்தர், ஆழ்ந்த மன ஒருமுகப்பாட்டுடன் குருவிற்கு ஒலிபரப்பினால், குரு அதனை ஏற்று, அவ்வாறே தேவையான உதவியை மௌனமாக அனுப்புகிறார்.
— ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர்
அன்பானவர்களே,
உங்கள் ஒவ்வொருவருக்கும் அருளார்ந்த குரு பூர்ணிமா. யுக யுகங்களின் ஊடாக இறை அனுபூதி எனும் சுடரொளியைப் பிரகாசமாக ஒளிருமாறு வைத்திருக்கும் இறை-ஒளி பெற்ற எல்லா குருமார்களுக்கும் நாம் இந்தப் புனித நாளில் நமது நன்றி உணர்வை செலுத்துகையில், நமது ஆழ்ந்த நன்றியை நம் அன்பிற்குரிய குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தருக்கு வெளிப்படுத்துவதற்கு ஒன்றிணைவோம். உலகிற்கு ஒரு ஜகத்குருவாக அவரது தனித்தன்மைவாய்ந்த பங்களிப்பிற்காகவும், அதிகமாகத் தனிப்பட்ட முறையில் அன்புடனும் தொடர்ந்தும் நமது ஆன்மீக மலர்ச்சியைக் கண்காணிப்பதற்காகவும் நாம் அவரைப் போற்றுகிறோம். அவர், இறைவன் நம்மை மீட்டெடுத்து, வழிகாட்டி, விழிப்பூட்டுவதற்கான தெய்வீக வழித்தடமாக சேவையாற்றுகிறார்.
குருஜியின் வெற்றிகரமான வாழ்க்கை மற்றும் அவரது உருமாற்றும் போதனைகளின் மனவெழுச்சியையும் உதாரணத்தையும் பெற்றிருப்பதற்கான நமது நற்பேறு எத்துணை சிறப்பானது. அவர், இப்போதனைகளின் மூலமாக நம் உள்ளொளியை வெளிக்கொணர்வதற்கான திறவுகோல்களை நமக்கு அருளியுள்ளார். அவரது அருள் இடையறாது பாய்வதற்காக நாம், நமது இதயங்களை இன்னும் அதிக முழுமையாகத் திறந்து, புனித கிரியா யோக சாதனாவிற்காக நம்மையே அர்ப்பணிக்கையில், அவருடனான நம் இசைவு மிகவும் ஆழ்ந்து, நம் தினசரி வாழ்வில் அவரது இருப்பு உயிருள்ளதாகவும் தொட்டுணரக்கூடிய நிஜமாகவும் ஆகிறது. அந்த இருப்பை நாம் ஏற்றுக்கொள்வதன் மூலமாகவும், அவரது போதனைகளின் ஒவ்வோர் எண்ண-இரத்தினத்திலிருந்து பாயும் புனித சக்தியின் மூலமாகவும் அவர் என்றும்-உயிருள்ளவராக, என்றும்-அருகிலுள்ளவராக இருக்கிறார். அவர் மண்ணுலகில் பரு உடலில் வாழ்ந்தபோது, பிரிவு எனும் கனவிலிருந்து நம்மை விழித்தெழச் செய்து, நமக்குள்ளேயே பிரகாசிக்கும் இறை-ஒளியை கண்டறிந்துகொள்ள நமக்கு உதவி செய்தது போலவே இன்னும் இருந்துவருகிறார்.
நமது பணிவான ஏற்புத்தன்மை, அர்ப்பணிப்புகொண்ட ஆன்மீக முயற்சி, “மௌன இறைவனின் பேசும் குரலாக” உள்ள குருதேவரிடம் தடுமாற்றமில்லாத, ஆத்மார்த்தமான விசுவாசம் ஆகியவையே அவரது திருவடிகளில் நாம் சமர்ப்பிக்கக்கூடிய மிகச் சிறந்த காணிக்கை. அவரது அருளாசிகள் எனும் புனித நீரோடை, உங்களது உணர்வுநிலையைத் தூய்மைப்படுத்தி, உங்களது இதயங்களை துணிவு மற்றும் நிரந்தர ஆனந்தத்துடனும், நம் எல்லோரையும் இறைவனில் இணைக்கின்ற மகத்தான இறை ஒளியுடனும் நிரப்புவதை நீங்கள் உணரவேண்டும் என்பதற்காக உங்கள் அனைவருக்கும் எனது பிரார்த்தனைகள்.ஜெய் குரு!
இறைவன் மற்றும் குருதேவருடைய இடைவிடாத அன்பு மற்றும் அருளாசிகளுடன்,
ஸ்வாமி சிதானந்த கிரி




















