குருதேவரின் பணியைச் செய்வதில் சேவை மற்றும் சாதனை ஆகிய இரட்டை அம்சங்களை விளக்கி, நமது போற்றுதலுக்குரிய தலைவரும் ஆன்மீக முதல்வருமான ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்த கிரி அவர்கள் பின்வருமாறு கூறினார்: “சாதனா இல்லையேல், சேவையானது நீடித்தப் பலனைத் தருவதில்லை. அதேபோல, சேவை — அதாவது சுயநலமற்ற தன்மை மற்றும் தன்னை அர்ப்பணித்தல் — இல்லையேல், சாதனாவின் இலக்கு பொதுவாக எட்ட முடியாததாகவே இருக்கும்.”
மேற்கூறிய வழிகாட்டுதல்களைச் செயல்படுத்தும் விதமாக, இந்தியா மற்றும் நேபாளம் முழுவதிலுமிருந்து அறுபதுக்கும் மேற்பட்ட YSS இளையோர் சேவைத் தன்னார்வலர்கள், ஆன்மீகப் பயிற்சி, ஆன்மீகக் கல்வி மற்றும் குழுவாகக் கற்றல் ஆகியவற்றில் கவனம் செலுத்த, 2026 ஆகஸ்ட் 19 முதல் 23 வரை YSS தக்ஷினேஸ்வர் ஆசிரமத்தில் ஒன்றுகூடினர். ஐந்து நாட்கள் நடைபெற்ற இந்த முதலாவது இளையோர் சேவைத் தலைவர்களுக்கான ஏகாந்த வாச முகாம் ஒருவர் அன்றாடச் செயல்பாடுகளிலிருந்து விலகி, ஆன்மீகப் பயிற்சியில் கூட்டாக ஆழந்து மூழ்கித் திளைக்க ஒரு வாய்ப்பை வழங்கியது.
தக்ஷிணேஸ்வர் ஆசிரமத்தில் YSS சன்னியாசிகள் மற்றும் இளையோர் சேவைத் தன்னார்வலர்கள்
சன்னியாசிகள் வழிநடத்திய கீர்த்தனையுடன் கூடிய நீண்ட தியானங்கள் ஒரு சிறப்பம்சமாக அமைந்தன. YSS வெளியீடுகளிலிருந்து எடுக்கப்பட்ட பகுதிகளை அடிப்படையாகக் கொண்ட தினசரி ஸ்ரவணம் (குழுவாகப் படித்தல்) அமர்வுகள், இந்த் குழுவின் கட்டமைப்பு மற்றும் தலைமைத்துவத்தில் கவனம் செலுத்தின. அவை பங்கேற்பாளர்கள் புத்துணர்ச்சி பெறவும், பிணைப்பை வலுப்படுத்திக் கொள்ளவும் அற்புதமான ஒரு வாய்ப்பையும் வழங்கின. யுக்திசார் மறுஆய்வுக் கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சி நிரல் அமைக்கும் அமர்வுகள் மூலம், இளையோர் சேவைகளின் பணி, அதன் உடனடித் தேவைகள் மற்றும் அதன் பல்வேறு முன்னெடுப்புகளுக்குத் அவர்கள் எவ்வாறு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்க முடியும் என்பது குறித்த பரந்த புரிதலை வளர்த்துக் கொள்ள தன்னார்வலர்களுக்கு இந்த ஏகாந்த வாசம் உதவியது.
“இந்த ஏகாந்த வாசம், அகப்பார்வை, ஆன்மீகப் புத்துணர்வு, அர்த்தமுள்ள உறவுகள் மற்றும் சேவைக்கான புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு இனிய பயணமாக அமைந்தது.”
சேவையின் ஆன்மீக அடித்தளத்தை ஆழப்படுத்துதல்
இந்த ஏகாந்த வாசம் தன்னார்வலர்கள் சீடர்களாகத் தங்கள் பயணத்தைப் பற்றிச் சிந்திப்பதற்கும், சேவை செய்வதில் உள்ள அவர்களின் ஆழ்ந்த நோக்கங்களையும் குறிக்கோள்களையும் தெளிவுபடுத்துவதற்கும் உதவியது. “இறைவன் மட்டுமே” என்பதில் அனைவரின் கவனத்தையும் செலுத்த வைப்பதன் மூலம், இந்நிகழ்ச்சித் திட்டம், தோழமையில் அடங்கியுள்ள பகிர்வு, கற்றல் மற்றும் பரஸ்பர ஈடுபாடு ஆகியவற்றை YSS பாதையின் முக்கிய ஆன்மீக இலக்குடன் சமநிலைப்படுத்தியது.
கங்கைக் கரையில் அமைந்துள்ள தக்ஷிணேஸ்வர் ஆசிரமத்தின் சூழல், இந்த உள்முகப்படுதலைப் பெரிதும் பூர்த்தி செய்தது. அதிகாலை தக்ஷிணேஸ்வர் காளி கோயிலுக்குச் செல்வதுடன், இரவு உணவுக்குப் பின் கதை சொல்லுதல், கவிதை மற்றும் தோழமை இந்த ஏகாந்த வாசத்தில் இணைக்கப்பட்ட புதுமையான அனுபவங்களில் சிலவாகும்.
தக்ஷிணேஸ்வர் காளி கோயிலில் தெய்வத்தாயின் அருளை வேண்டுதல்
“இத்தகைய நன்கு திட்டமிடப்பட்ட ஏகாந்த வாசம் மற்றும் குறிப்பாக காளி மாதா ஆலய தரிசனத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள். தெய்வீக அன்பு என்னைச் சூழ்ந்திருப்பதை நேரடியாக உணர முடிந்தது.”
பகிரப்பட்ட நோக்க உணர்வு
தற்போது, சுமார் 400 இளையோர் சேவை தன்னார்வலர்கள் இந்தியா முழுவதும் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்; அவற்றில் பின்வருவன அடங்கும்:
- இளம் சாதகர் சங்கங்கள்
- ஆன்லைன் இளம் சாதகர் ஃபெலோஷிப்ஸ்
- குழந்தைகள்/பதின்ம வயதினர் கோடைக்கால முகாம்கள்
- பதின்மவயதினருக்கான ஆன்லைன் சத்சங்கம்
- கேந்திராக்கள் மற்றும் மண்டலிகளில் நேரில் நடைபெறும் குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினருக்கான சத்சங்கங்கள்
இந்த ஏகாந்த வாசம், வழிவகுப்பவர்கள் பயிற்சியாளர்கள், உள்ளடக்கம் உருவாக்குநர்கள், செயல்பாட்டுத் தலைவர்கள் மற்றும் திட்ட மேலாளர்கள் ஆகிய பல்வேறு பணிகளில் சேவை செய்பவர்கள ஒன்றிணைத்தது. இளம் சாதகர் பெல்லோஷிப்பின் (YSF) முக்கியக் குழுவைச் சேர்ந்த சுமார் 20 இளம் சாதகர்களும் இதில் கலந்துகொண்டு, நிகழ்வுகளுக்குப் புதிய கருத்துகளை வழங்கினர்.
ஒரு கூட்டு முயற்சிச் சூழலில், தலைமுறை இடைவெளியைக் கடந்த இந்த ஒன்றுகூடல், பக்தர்கள் தலைமுறைகளைக் கடந்து ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்ளவும், அனுபவங்களைப் பரிமாறிக்கொள்ளவும், நுண்ணறிவுகளைப் பெறவும், இளையோர் சேவைகளில் சேவை செய்வதென்றால் என்ன என்பதையும், இன்னும் பரந்த அளவில் YSS தன்னார்வலராக இருப்பதென்றால் என்ன என்பதைப் பற்றிய புரிதலை வளர்த்துக் கொள்ளவும் உதவியது. சிந்தனை உரையாடல் மற்றும் பகிரப்பட்ட அனுபவங்கள் மூலம் கற்றுக்கொள்வதற்கே இங்கு முழுவதும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
2027-ஆம் ஆண்டிற்காக உத்தேசிக்கப்பட்டுள்ள எட்டு வகையான பணிகள் பங்கேற்பாளர்களிடம வழங்கப்பட்டன; இதன் மூலம் அவர்கள் தங்களுக்கு விருப்பமான அல்லது முந்தைய அனுபவமுள்ள பணிகளைத் தேர்ந்தெடுக்கலாம், அதே நேரத்தில் தாங்கள் வேறு எங்கு பங்களிக்க முடியும் என்பதையும் ஆராயலாம்.
இந்த ஏகாந்த வாசத்தின் முக்கிய செய்திகள்
- இந்தத் நிகழ்ச்சியின் தியானம் மற்றும் ஏகாந்த வாச அம்சங்களால் தன்னார்வலர்கள் ஆன்மீக ரீதியில் புத்துணர்ச்சி அடைந்ததாக உணர்ந்தனர்.
- கூட்டுச் சேவைத் தொடர்புகள் மற்றும் புதிய நட்புறவுகள் மூலம் தோழமை உணர்வு வலுப்படுத்தப்பட்டது.
- குறிப்பிட்ட சேவைப் பகுதிகளையும் தாண்டி மக்கள் இளையோர் சேவைகளின் தொலைநோக்குப் பார்வையை விரிவாகப் புரிந்து கொண்டனர்.
- தன்னார்வலர்கள் சேவா கொள்கைகளை தெளிவாகப் புரிந்துகொண்டனர்.
- சில தன்னார்வலர்கள் குருஜியின் பணிக்காகக் கூடுதல் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதற்கு ஊக்கம் பெற்றனர்.
“வாழ்க்கை, முக்கியமாக சேவையின் அடிப்படையில் இருக்க வேண்டும்”
ஏகாந்த வாசத்தின் போது பரமஹம்ஸ யோகானந்தரின் ஒரு மேற்கோள் வலியுறுத்திக் கூறப்பட்டது; அதில் அவர் இவ்வாறு கூறியிருந்தார்:
வாழ்க்கை, முக்கியமாக சேவையின் அடிப்படையில் இருக்க வேண்டும். அந்தக் குறிக்கோள் இல்லாமல் இறைவன் உங்களுக்குக் கொடுத்துள்ள அறிவுத்திறன், அதனுடைய இலட்சியத்தை அடைய முடியாது. சேவையில் உங்களுடைய சிறிய “தான்” – ஐ மறக்கும் பொழுது பரம்பொருளின் பேராத்மாவை உணர்ந்து கொள்வீர்கள்…. வாழ்க்கை என்பது கடமையின் ஒரு மகிழ்ச்சிகரமான யுத்தம் எனவும், அதே சமயம் ஒரு கடந்து போகும் கனவு எனவும் நீங்கள் உணரும் பொழுதும், மேலும் மற்றவர்களுக்குக் கருணையையும் அமைதியையும் அளிப்பதன் மூலம் அவர்களை மகிழ்ச்சியுறச் செய்த ஆனந்தத்தில் நீங்கள் நிறைந்துவிடும் பொழுதும், இறைவனின் பார்வையில் உங்கள் வாழ்க்கை ஒரு வெற்றியாகும்.
























