1961 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று வழங்கப்பட்ட “ரைட் அட்டியூட்: ஹார்னெஸிங் லைஃப்’ஸ் டிஃபிகல்டீஸ் ஃபார் பாஸிடிவ் அசிவ்மென்ட்ஸ்” என்ற உரையின் ஒரு சிறு பகுதி இது. இந்த உரை, ஸ்ரீ தயா மாதா வழங்கிய உரைகளின் புதிய தொகுப்பான ஜர்னி வித் பரமஹம்ஸ யோகானந்தா (இது விரைவில் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியாவால் வெளியிடப்படவுள்ளது) என்ற நூலில் ஓர் அத்தியாயமாக இடம்பெற்றுள்ளது. யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் இன் அன்பிற்குரிய மூன்றாவது தலைவரும் சங்கமாதாவுமான அவர், வாழ்க்கையில் தவிர்க்க முடியாத சவால்களைச் சரியான மனப்பான்மையுடன் எதிர்கொள்ளும் பண்பை வளர்த்துக்கொள்வது, இறைவனுடன் நாம் மேலும் நெருங்கி வரவும், உண்மையான அகச் சுதந்திரத்தையும் நிறைவையும் கண்டறியவும் எவ்வாறு உதவும் என்பதை விளக்குகிறார்.
அன்பு மற்றும் புரிதல், ஞானம், ஆரோக்கியம், பாதுகாப்பு, நீடித்த மகிழ்ச்சி — இவற்றை ஒவ்வொரு மனிதனும் தேடிக்கொண்டிருக்கிறான். ஆன்மீகப் பாதையில் பயணிக்கும் நாம், இறைத் தொடர்பு மூலம் இந்த இலக்குகளை அடைவோம் என்று உறுதியாக நம்புகிறோம். இது ஓர் உலகளாவிய உண்மை என்றாலும், இறைத் தொடர்புக்கான வழிமுறைகள் அனைவருக்குமான சாசுவத கோட்பாடுகளைக் கொண்டிருந்தாலும், ஒரு வகையில் ஒவ்வொரு மனிதனும் தனிப்பட்ட மற்றும் தனித்துவமான பாதையையே பின்பற்றுகிறான். நமது உள்ளார்ந்த ஞானத்தையும், இறைவனுடனான நமது ஆன்மாவின் பரிபூரண உறவை பற்றிய உணர்தலையும் விழித்தெழச் செய்ய நம் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகத் தேவைப்படும் குறிப்பிட்ட சூழ்நிலைகள், சோதனைகள் மற்றும் பாடங்கள் வழியே அந்தப் பாதை நம்மை அழைத்துச் செல்கிறது.
நம்மை அழியக்கூடிய ஜீவன்களாக நம்பும் நமது தவறான பழக்கம், இன்னல் காலங்களில், நம்மைத் தவறான சிந்தனைகளுக்கு எளிதில் ஆளாக்கிவிடுகிறது — “எனக்கு ஏன்? இதற்கு நான் என்ன செய்தேன்?” — என்று எண்ணத் தூண்டுகிறது; அல்லது வாழ்க்கை நம்மை நடத்தும் விதம் குறித்து அதிருப்தி அல்லது கோபத்தை உணர வைக்கிறது. சரியான மனப்பான்மையை வளர்த்துக்கொள்வது, அந்தச் சூழ்நிலைகளை, அவை எவ்வளவு “நியாயமற்றதாக,” தோன்றினாலும், வாய்ப்புகளாகக் காண நமக்கு உதவுகிறது — அவை நமது சொந்த தனிப்பட்ட கர்மவினையால் உருவாக்கப்பட்டவை, ஆயினும் நம் ஆன்மாவின் பரிணாம வளர்ச்சியை விரைவுபடுத்தும் பொருட்டு இறைவனின் உள்ளார்ந்த அருளால் ஆசீர்வதிக்கப்பட்டவை.
நம்முடைய சிரமங்கள் மற்றவர்களிடமிருந்தோ, புறச் சூழல்களிலிருந்தோ, வேறு எந்த மூலத்திலிருந்தோ அல்ல, மாறாக இறைவனின் பிரபஞ்ச விதிமுறைகள் மூலமாக அவனிடமிருந்தே வருகின்றன என்ற நமது புரிதலுடன் முன்னேற்றம் ஒத்திசைந்துள்ளது. நமக்கு நிகழ்வதை நம்முடைய இறுதி மற்றும் உன்னத நன்மைக்காக பயன்படுத்திக் கொள்ள முடியும் என்ற உண்மையில் நாம் உறுதியாக இருந்தால், இறைவனின் அருளாசி எப்போதும் நம்முடன் இருப்பதையும், நமது துன்பங்கள் நம்மை அகத்தளவில் பாதிக்க முடியாது என்பதையும் கண்டறிவோம்.
இதனால்தான் நாம் எதிர்கொள்ளும் சூழ்நிலைகளைப் பற்றிய சரியான மனப்பான்மையைக் கொண்டிருப்பது மிகவும் முக்கியமாக இருக்கிறது. ஆன்மீகப் பாதையில் அனைத்திற்கும் அடிப்படையே இந்த மனப்பான்மைதான் என்று நான் உறுதியாகக் கூறுவேன். நாம் வாழ்க்கையை எவ்வாறு எதிர்கொள்கிறோம், இன்னல்களுக்கு எவ்வாறு எதிர் வினையாற்றுகிறோம், நமது நல்வாழ்வுக்கும் மனச்சமநிலைக்கும் தவிர்க்க முடியாமல் வரும் சவால்களை எவ்வாறு எதிர்கொள்கிறோம், நமது ஆன்மீகப் பயிற்சிகளில் எவ்வாறு ஈடுபடுகிறோம் — இவையே நாம் இறைநிலைக்கு எவ்வளவு நெருக்கமாக, எவ்வளவு விரைவாகச் செல்கிறோம் என்பதைத் தீர்மானிக்கின்றன.
நாம் இந்த லெளகீக தளத்தில் இருக்கும் வரை, ஒரு விஷயத்தை நம்மால் உறுதியாகக் கூற முடியும்: அது மாற்றத்தின் நிச்சயமற்ற தன்மைதான். ஒளி மற்றும் இருள், ஆரோக்கியம் மற்றும் நோய், பிறப்பு மற்றும் இறப்பு ஆகிய மாயையின் ஏற்ற இறக்கங்கள் இடைவிடாது நம் மீது திணிக்கப்படும் இந்த இருமை உலகில் இதை நம்மால் தவிர்க்க முடியாது. இந்த நிலையற்ற தன்மையைக் கண்டு நாம் ஒருபோதும் அஞ்சவோ, நம்பிக்கை இழக்கவோ கூடாது! நமது சொந்த அதீதமான, பேரின்பமய இயல்பைப் பற்றி நமக்குக் கற்பிப்பதே அவற்றின் நோக்கம். இந்த முடிவில்லாத ஏற்ற இறக்கங்களிலிருந்து விடுபட முயற்சி செய்ய தூண்டும் ஒரு கருவியே இவை. இருமை விதிக்கு அப்பால் உயர்வதற்கான வழி, மாற்றங்களுக்கு அப்பாற்பட்ட, மாறாத மெய்ப்பொருளான இறைவனுடன் தொடர்புகொள்வதே ஆகும்.
பரமஹம்ஸர் அடிக்கடி கூறுவது போல், “தகரும் உலகுகளின் அழிவின் மத்தியில் நிலைகுலையாமல் இருக்க” நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அப்பொழுது நாம் இறைவனை நோக்கி உறுதியாக முன்னேறுவதை அறிவோம். நமது பாதை அமைதியின் இனிய ஓடை வழியே செல்கிறதா அல்லது கரடுமுரடான போர்க்களத்தைக் கடந்து செல்கிறதா என்பது இறுதியில் ஒரு பொருட்டல்ல. நாம் அடைய முயலும் இலக்கில் உறுதியாகவும், விருப்பத்துடனும் இருப்பதே மிக முக்கியம். சில வேளைகளில் நாம் தடுமாறி மாயையில் அகப்பட்டுக் கொள்ளக்கூடும், ஆனால் நம் இதயம் நேர்மையானதாக இருந்து, இறைவனுக்காக ஆழ்ந்த ஏக்கத்துடனிருந்தால், அவன் நம்மைத் தாமதிக்க விடுவதில்லை, நீண்ட காலம் சிக்கிக்கொண்டிருக்க விட மாட்டான். நாம் விடுபடுவதற்கு ஏதுவான அனுபவங்களையும் அருளையும் அவன் நமக்கு வழங்குகிறான்.
என் வாழ்வில் விரும்பத்தகாதது எதேனும் வரும்போது, அதில் சம்பந்தப்பட்டவர்களையும் சூழ்நிலைகளையும் கடந்து, அதில் உள்ளார்ந்திருக்கும் ஆன்மீகப் பாடத்தை உணர்வதிலிருந்து கிடைக்கும் விடுதலை தான் என்னே! என் வாழ்வில் ஏற்பட்ட ஒவ்வொரு காயத்திற்கும், ஒவ்வொரு ஏமாற்றத்திற்கும், தவறான புரிதலுக்கும், அதுபோன்ற எல்லாவற்றிற்கும் நான் பணிவோடு நன்றியுடையவளாக இருக்கிறேன்; ஏனெனில், இவை எனக்குச் செய்த நன்மைகளையும், இந்த மனப்பான்மையுடன் தங்கள் துன்பங்களை எதிர்கொண்ட உங்கள் அனைவருக்கும் செய்த நன்மைகளையும் நான் காண்கிறேன். வலிமையையும் புரிதலையும் அன்பையும் அளிப்பவரிடம் விரைவதற்கு சிரமங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்துள்ளன — இதன் மூலம் அவருடனான என் பிணைப்பையும், நாம் யாருடைய அடிச்சுவடுகளை பின்பற்ற முயலுகிறோமோ, அந்த அன்பிற்குரிய குருவுடனான என் ஒத்திசைவையும் அவை உறுதிப்படுத்துகின்றன.
பரமஹம்ஸர் ஒரு முறை, “உன் வாழ்க்கை பல இன்னல்களால் நிரம்பியிருக்கும், இருப்பினும் உன் மனத்தை என்னிடத்தில் வை.” என்று என்னிடம் கூறியது எனக்கு நினைவிருக்கிறது, குருவே இறைவனிடம் நம்மை வழிநடத்தும் நம்பிக்கைக்குரிய வழிகாட்டி. வாழ்வில் என்ன நேர்ந்தாலும், அது எனக்கு முக்கியமில்லை; ஏனெனில், என் மனம் பாதையை விட இலக்கின் மீதே அதிக கவனம் செலுத்துகிறது. நம்மில் எவருக்கும் பாதை எப்போதும் எளிதானதாக இருப்பதில்லை. ஆனால், “இறைவனிடம் என் மனதை மேலும் திருப்புவதற்கு ஒவ்வொரு அனுபவத்தையும் நான் எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது?” என்று நாம் தொடர்ந்து நம்மிடமே கேட்டுக்கொண்டால், நாம் வெற்றியாளராக மாறுகிறோம். சரியான மனப்பான்மையின் மூலம், வாழ்க்கையின் துயரங்களையே இறைவனை நோக்கி விரைந்து செல்வதற்கான உந்துசக்தியாக நாம் மாற்றிக்கொள்ள முடியும்.




















