ஸ்ரீ தயா மாதா அவர்களின் புதிய உரைத் தொகுப்பான ஜர்னி வித் பரமஹம்ஸ யோகானந்தா புத்தகத்தில் உள்ள “ஸ்பிரிசுவல் மெச்யூரிடி மீன்ஸ் அட்யூன்மென்ட் வித் காட்” என்னும் அத்தியாயத்தின் ஒரு சிறு பகுதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. (இப்புத்தகம் விரைவில் ‘ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்’ இனாலும் பின்னர் ‘யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா’ வினாலும் வெளியிடப்பட உள்ளது). இந்தப் பகுதியில், யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் இன் அன்பிற்குரிய மூன்றாவது தலைவரும் சங்கமாதாவுமான அவர், பரமஹம்ஸ யோகானந்தரின் முக்தி அளிக்கும் சில உண்மைகளையும், நாம் நம் வாழ்வில் வெளிப்படுத்த விரும்பும் உண்மைகளை நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கிறார்.
பரமஹம்ஸ யோகானந்தர் தியானத்திற்காக எங்களை ஒன்றாக வரவழைக்கும்போது, சில சமயங்களில் மிகக் குறைவாகவே பேசுவார்; ஆனால் அந்தச் சொற்ப வார்த்தைகளில் ஏராளமான அர்த்தமும், உண்மைகளின் களஞ்சியமும் இருந்தன. ஒழுக்கத்தைக் கற்பித்தாலும் சரி அல்லது பாராட்டிய போதிலும் சரி, ஒவ்வொரு சொல்லும் எனக்காகவே கூறப்பட்டதாக எனக்குத் தோன்றியது. அவர் கூறிய அனைத்தையும் நான் என் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களாகவே ஏற்றுக்கொண்டேன். மற்றவர்கள் அதைச் செய்தார்களா இல்லையா என்பது எனக்கு ஒரு பொருட்டாக இருக்கவில்லை. அவரது வார்த்தைகள் – குறிப்பாக அவர் கடிந்துகொள்ளும் சொற்கள் – மற்றவர்களுக்காகச் சொல்லப்பட்டவை என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. உண்மையின் ஒவ்வொரு சிறு கல்லையும் எடுத்து நான் பொக்கிஷமாகப் போற்றினேன். அவர் கூறியவற்றை நான் மனதில் ஆழமாகப் பதித்துக் கொள்ளாவிட்டால், அவர் பேசுவதில் எந்தப் பயனும் இல்லை என்று நான் உணர்ந்தேன். இன்று நம் அனைவருக்கும் இதுவே பொருந்தும். நாம் இறைவனை அறிய விரும்பினால், குருவின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவதற்கு இத்தகைய முயற்சியை நாம் மேற்கொள்ள வேண்டும்.
ஒரு மாலை வேளையில் தியானத்திற்குப் பிறகு, குருஜி எங்களுக்கு ஆசி வழங்கியபோது மூன்று விஷயங்களைக் கூறினார்; அவற்றை அன்று முதல் என் வாழ்வில் கடைப்பிடிக்க முயன்று வருகிறேன். இன்றிலிருந்து நீங்களும் அவற்றைப் பின்பற்ற உங்களை ஊக்குவிக்கிறேன்:
- பரிவுடன் இருங்கள்.
- விமர்சனம் செய்யாதீர்கள்.
- பணிவுடன் இருங்கள்.
என் அறைக்குத் திரும்பிய நான் அவற்றை எழுதி, அவை ஒரு நிரந்தர நினைவூட்டலாக இருக்கக்கூடிய இடத்தில் வைத்தேன்.
பரிவுடன் இருங்கள்: இதன் பொருள், அதிக புரிதலுடனும் கருணையுடனும் இருப்பது; மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்வது, அவர்களைப் பற்றி அக்கறையுடன் சிந்திப்பது, தேவைப்படும் வேளையில் உதவுவது, மேலும் எப்பொழுதும் மற்றவர்களைப் பற்றி நல்லவிதமாக எண்ண முயற்சிப்பது என்பதாகும்.
விமர்சனம் செய்யாதீர்கள்: விமர்சனத்தில் ஈடுபடுவது நாள்பட்ட மனநோயாக மாறும். இந்த உலகில் எதுவுமே சரியானதல்ல என்பதால் இந்த தீய பழக்கத்திற்குள் சிக்கிக் கொள்வது எளிது; எல்லோரிடமும் வெளிப்படையான குறைபாடுகள் உள்ளன, நிச்சயமாக நாமும் அதில் அடங்குவோம். ஆனால் மற்றவர்களை எதிர்மறையாக மிகைப்படுத்தி விமர்சிப்பதற்கும், அந்த பிழைகளைத் தவிர்ப்பதற்காக தனிப்பட்ட பாடமாக அவர்களின் தவறுகளை தனிப்பட்ட முறையில் குறிப்பிடுவதற்கும் இடையே ஒரு சிறந்த வேறுபாடு உள்ளது. நாம் ஒருவருக்கொருவர் தீர்ப்பு வழங்க எந்த உரிமையும் இல்லை; இறைவனுக்கு மட்டுமே அந்த உரிமை உண்டு. விமர்சிக்கும் இயல்புடைய எவரும் ஆன்மீக முன்னேற்றத்திற்கு அது ஒரு பெரிய தடை என்பதை உணர்வார்கள்.
பணிவுடன் இருங்கள்: “நான் பணிவானவன்” என்று வெற்று வார்த்தைகளில் அல்லாமல், நம்முடைய அணுகுமுறையில் தான் பணிவு வெளிப்படுகிறது. இது இறைவனுடனான ஓர் இனிமையான, இரகசியமான, அமைதியான மற்றும் அன்பான உறவாகும்; இதில் எந்தவொரு பெருமைக்கும் உரியவர்கள் என்று நாம் ஒருபோதும் நினைப்பதில்லை. பாராட்டப்படும் போது, இறைவனின் அருள், வழிகாட்டுதல் மற்றும் உதவியின்றி நாம் அத்தகைய அங்கீகாரத்தை ஈர்த்திருக்க மாட்டோம் என்பதை நாம் அறிவோம்.
தன்னை மறக்கச் செய்யும் அக மனப்பாங்கான அந்த உண்மையான பணிவிற்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்: “இறைவா, நீ தான் கர்த்தா, நான் அல்ல.” ஆழ்ந்த கவனத்துடன் இதை மனதிற்குள் உச்சரிக்கும் ஒரு மந்திரமாகப் பயன்படுத்தி, அகந்தையிலிருந்த உங்களை விடுவிக்குமாறு இறைவனிடம் வேண்டுங்கள். பணிவு இல்லையெனில், ஆன்மீக வாழ்க்கையைக் கட்டியெழுப்ப உறுதியான அடித்தளம் எதுவும் இல்லை. மனம் மற்றும் இதயம் இறைவனைப் பற்றிய எண்ணங்களாலும் இறை அன்பாலும் எவ்வளவு அதிகம் நிறைகிறதோ, அந்தளவிற்கு சுயநலமான “நான், நான், நான்” என்பதற்கு இடம் குறைகிறது.
குருஜி நமக்கு வழங்கியிருக்கும் முக்தி அளிக்கும் உண்மைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வது எனக்குப் பெரும் பாக்கியமும் மகிழ்ச்சியும் ஆகும். இது அவருடைய அறிவுரை. இறைவனை அறிந்து கொள்வதற்கான உங்கள் நேர்மையான முயற்சியின் ஒரு பகுதியாக இந்த உண்மைகளைப் பின்பற்றுங்கள். ஆன்மிக மலர்ச்சி என்பது முதன்மையாக உள்ளார்ந்த விஷயமாகும். இந்த உண்மைகளை நீங்கள் மனதிற்குள் ஏற்று அவற்றை உள்ளார்ந்து சிந்தித்து, உங்கள் எண்ணங்களிலும் பிரார்த்தனைகளிலும் ஆழமாகப் பதியச் செய்தால், அவை உங்கள் வாழ்க்கையில் வெளிப்புறமாக வெளிப்படத் தொடங்கும். “மனிதன் தன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே இருக்கிறான்.” *
அடிக்குறிப்பு:
* நீதிமொழிகள் 23:7 (பைபிள்).




















