இந்தப் பதிவு, விரைவில் வெளியிடப்படவுள்ள “Journey With Paramahansa Yogananda” என்ற உரைகளின் தொகுப்பில் இடம்பெறும் “The Many Aspects of God” என்ற அத்தியாயத்தின் ஒரு பகுதியாகும். ஸ்ரீ தயா மாதா அவர்கள் 1955 முதல் 2010 ஆம் ஆண்டு மறைவுவரை, யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா / ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் அமைப்புகளின் தலைவராகவும் சங்கமாதாவாகவும் பணியாற்றினார். அவரது கருணையும் ஊக்கமும் நிறைந்த அறிவுரைகளும், ஆன்மீகமாக முழுமையாக வாழ்தல் என்றால் என்ன என்பதை எடுத்துக்காட்டிய அவரது உன்னதமான வாழ்வும், உலகெங்கிலும் உள்ள பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளைப் பின்பற்றும் பக்தர்களால் நீண்டகாலமாகப் போற்றப்பட்டு வருகின்றன.
ஆன்மீகப் பாதையைப் பின்பற்றி அர்ப்பணிப்புடன் வாழ்ந்த எனது சொந்த வாழ்க்கையைப் பற்றி சிந்தித்துப் பார்க்கும்போது, இறைவனைத் தேடுவதால் கிடைக்கும் மாபெரும் அமைதி மற்றும் ஆனந்தம் அதாவது மகிழ்ச்சி, பாதுகாப்பு மற்றும் புரிதல் ஆகியவற்றிற்கு ஈடாக வேறு எந்த முயற்சியின் பலன்களும் இருக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. இதனால், இறைவனை அடைவதற்காக ஒவ்வொருவரும் உண்மையிலேயே இந்த உலகைத் துறந்து, குகைகளுக்கோ மடங்களுக்கோ சென்று தனிமையில் வாழ வேண்டும் என்று நான் கருதுகிறேன் என்று எந்த வகையிலும் பொருள் கொள்ளக்கூடாது. ஒருபோதும் இல்லை. பரமஹம்ஸ யோகானந்தர் நமக்குக் போதித்தது என்னவென்றால், உண்மையான துறவின் சாரம், சன்னியாச ஆடையை அணிவதில் மட்டும் இல்லை; மாறாக, உள்ளார்ந்த நிலையில் இறைவனுடன் இசைவு பெறுவதைத் தேடுவதில்தான் உள்ளது.
இதற்கு ஒருவர் தமது பொறுப்புகளைத் துறக்க வேண்டிய அவசியமில்லை. இந்த உலகில் நம் ஒவ்வொருவருக்கும் இறைவன் சில கடமைகளை அளித்துள்ளார்; அவற்றை நாம் நிறைவேற்ற வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். நாம் எங்கு வைக்கப்பட்டிருக்கிறோமோ, அங்கே நமது கடமைகளையும் பொறுப்புகளையும் முறையாக நிறைவேற்ற வேண்டும். ஆனால், ஒரு விஷயத்தைத் தெளிவாக அறிந்துகொண்டு செயல்பட வேண்டும்: “ஒவ்வொரு கணத்திலும், ஒவ்வொரு சூழ்நிலையிலும், நான் உன்னுடனேயே உறவு கொண்டு செயல்பட வேண்டும். எனது அனைத்து கடமைகளையும் நிறைவேற்றிக்கொண்டிருந்தாலும், நான் தேடுவது உன்னைத்தான்; என் வாழ்க்கையில் உனக்குத்தான் முதலிடம்.” இதுதான் உண்மையான துறவு வாழ்க்கையாகும். பரமஹம்ஸர் கூறியதுபோல்: “உங்கள் இதயத்தை ஓர் ஆசிரமமாகவும், இறைவன் மீதான அன்பை உங்கள் அங்கியாகவும் ஆக்குங்கள்.”
வாழ்க்கையில் நமக்கு மிகுந்த துயரத்தைத் தருவதும், நம்முடைய அனைத்து பிரச்சினைகளுக்கும் அடிப்படைக் காரணமாக இருப்பதும் நிறைவேறாத ஆசைகளே. நாம் அன்பை விரும்புகிறோம்; அன்பு கிட்டாதபோது துயருறுகிறோம். பொருளாதாரப் பாதுகாப்பை நாடுகிறோம்; அது மறுக்கப்படும்போது தேவையின் வேதனையை உணர்கிறோம். ஆரோக்கியம், மகிழ்ச்சி, அமைதி, ஞானம், நிச்சயமற்ற சூழ்நிலைகளுக்கு மத்தியில் பாதுகாப்பு ஆகியவற்றிற்கான ஆசை நிறைவேறாதபோது ஏற்படும் ஏமாற்றம் அனைத்தும் மனித துயரத்தின் மூல ஆதாரமாகிறது. இந்த ஏமாற்றங்களிலிருந்து விடுபடுவதற்கான வழி இறைவனைத் தேடுவதே ஆகும். கிறிஸ்து இவ்வாறு கூறவில்லையா? “முதலில் தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; பின் இவையெல்லாம் கூட உங்களுக்குக் கொடுக்கப்படும்.”* இந்த இலட்சியத்தை நான் எப்போதும் என் முன் வைத்திருக்கிறேன்.
ஒருவருடைய கடமைகள் அல்லது வாழ்க்கை முறை எதுவாக இருந்தாலும், இறைவனுக்கு முதலிடம் அளிப்பதே இறைவனைத் தேடுவதற்கான வழி ஆகும். உண்மையான துறவி என்பவர் தனது மற்ற அனைத்து ஆசைகளையும், இறைவனை அடைவதற்கான உன்னத ஆசைக்கும் பேராவலுக்கும் கீழே வைத்திருப்பார். ஏனெனில் இறைவனே நமது அனைத்து ஏக்கங்களுக்கும் இறுதியான நிறைவை அளிப்பவன். இறைவனுக்காக அனைத்தையும் அகமுகமாக துறந்து, நமது இதயத்தைத் தூய்மைப்படுத்தும்போது, அன்பு, பாதுகாப்பு, மகிழ்ச்சி ஆகியவற்றிற்கான ஏக்கத்தை நாம் துறப்பதில்லை. இவை அனைத்து உயிர்களும் நாடுகின்ற இலக்குகளாக இருப்பதால், அவற்றை நாம் தொடர்ந்து தேடுகிறோம். ஆனால், இவற்றை இந்த உலகத்திலிருந்து பெறலாம் என்ற பலனற்ற நம்பிக்கையை மட்டும் நாம் துறக்கிறோம். மேலும், முதலில் இறைவனைத் தேடுவதன் மூலமே நிறைவு கிடைக்கிறது என்ற நல்ல அறிவைப் பெறுகிறோம். மிகவும் முக்கியமானது எதுவோ, அது நமது உணர்வுநிலையில் முதன்மையான இடத்தைப் பெறுகிறது. அதன் பின்னர் ஆன்மீக வெற்றி வருகிறது. அதன்பின், இந்த உலகில் ஏற்படும் வேதனையான ஏமாற்றங்களிலிருந்து விடுதலை கிடைக்கிறது.
உண்மையான ஆன்மீகத் தேடல் கொண்டவர், இறைவனுடன் அமைதியான உள்ளார்ந்த உரையாடலுக்காக மட்டுமே அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புனித ஆலயத்தை தமக்குள் உருவாக்குகிறார். குருதேவர் பெரிய கோயில்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கவில்லை. அதற்கு மாறாக, அமைதியான வழிபாட்டிற்கும் இறை-ஐக்கியத்திற்கும், இதயத்திலும் ஆன்மாவிலும் இறைவனுக்கான ஒரு கோயிலை நிறுவுவதே மிகவும் முக்கியமானது என்று வலியுறுத்தினார். முழு உலகமே நம்மை ஏமாற்றலாம் அல்லது நம்மைக் கைவிடலாம். ஆனால், இறைவனுடன் இனிமையானதும் அன்பு நிறைந்ததுமான ஓர் அக உறவை நாம் ஏற்படுத்திக்கொண்டிருந்தால், நாம் ஒருபோதும் தனிமையாகவோ கைவிடப்பட்டவர்களாகவோ உணரமாட்டோம். எப்போதும் நம் அருகில் அந்த யாரோ ஒருவர் (இறைவன்) , உண்மையான நண்பராக, உண்மையான அன்பாக, உண்மையான தாயாக அல்லது தந்தையாக இருப்பார் நீங்கள் இறைவனை எந்த வடிவில் கருதுகிறீர்களோ, அவருடைய பக்தரான உங்களுக்கு அவ்வாறே இறைவன் இருப்பார்.
அடிக்குறிப்பு:
* மத்தேயு 6:33 (திருவிவிலியம்)




















