ஸ்ரீ தயா மாதா வழங்கிய சத்சங்கங்களிலிருந்து தொகுக்கப்பட்ட வழிகாட்டுதல் மற்றும் உத்வேகம் ஆகியவற்றை உள்ளடக்கிய Finding the Joy Within You: Personal Counsel for God-Centred Living என்ற புத்தகத்தின் ஒரு அத்தியாயமான “அன் ஆந்தாலஜி ஆஃப் கவுன்சில்” என்பதிலிருந்து ஒரு பகுதி பின்வருமாறு. ஸ்ரீ தயா மாதா பரமஹம்ஸ யோகானந்தரின் நெருங்கிய சீடர்களில் ஒருவராகவும், யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் இன் மூன்றாவது தலைவர் மற்றும் சங்க மாதாவாகவும் 1955 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு அவர் மறையும் வரை பணியாற்றினார்.
பல ஆண்டுகளாக பக்தர்களுக்கு குருஜி எழுதிய பல கடிதங்களில், அவர் “தெய்வீகத் தோழமையில்” என்ற வார்த்தைகளுடன் முடித்தார்; மேலும், ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்பிலிருந்து அதன் உறுப்பினர்களுக்கு அனுப்பப்படும் கடிதங்களுக்கான வழக்கமான முடிவுரையாக இந்த சொற்றொடரை அவர் தேர்ந்தெடுத்தார்.
ஆன்மாக்களுக்கு இடையே இருக்கக்கூடிய மிக உயர்ந்த மற்றும் தூய்மையான உறவு நட்பு உணர்வுதான் என்று அவர் எங்களிடம் அடிக்கடி கூறுவார். அந்த உறவில் எந்த நிர்பந்தமும் இல்லை.
அவர் சாதாரண மனித நட்பைப் பற்றிக் கூறவில்லை; கிறிஸ்து தமது சீடர்கள் மீது கொண்டிருந்தது போன்றதும், சீடர்கள் தங்கள் குருவின் மீதும், ஒருவருக்கொருவர் மீதும் கொண்டிருந்தது போன்றதுமான நிபந்தனையற்ற நட்பையே அவர் குறித்தார். அது பொதுவானது, ஆயினும் உறவுகளில் மிக நெருக்கமானது. ஒருவர் அவருடைய எல்லா குறைபாடுகளுடனும் நிபந்தனையின்றி ஏற்றுக்கொள்ளப்படுகிறார் என்ற அர்த்தத்தில் அது வெளிப்படையாக இருக்கிறது.
கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும், நண்பர் தவறாகக் கருதப்படுவதில்லை; நட்பு உடையாமல் நிலைத்திருந்து, காலப்போக்கில் இனிமையாக வளர்கிறது. அவருக்கு நெருக்கமாக இருந்த அன்புச் சாதகர்களிடம் குருஜி கூறுவார்: “நட்பு திராட்சை ரசத்தைப் போன்றது; அது பழமையடையப் பழமையடைய மேலும் இனிமையடைகிறது.”
உலகளாவிய தோழமை: மனிதகுலத்திற்கான சர்வ நிவாரணி
நான் குருதேவரின் உலகளாவிய நட்பு, தோழமை ஆகிய லட்சியம் குறித்த சில எண்ணங்களை வாசிக்க விரும்புகிறேன்:
“‘உலகளாவிய தோழமை’ ஒரு மிக எளிய சொற்றொடராகத் தோன்றினாலும், இந்த இரண்டு சொற்களில்தான் உலகின் லெளகீக, மன, தார்மீக மற்றும் ஆன்மீக மகிழ்ச்சியை அச்சுறுத்தி வரும் தனிமனித, சமூக, அரசியல் ரீதியான இன்னல்கள் அனைத்திற்கும் சர்வ நிவாரணி உள்ளது….இந்த உலகம் உமக்கோ எனக்கோ சொந்தமானதல்ல. நாம் பயணிகள், இங்கு குறுகிய காலத்திற்கே வந்திருக்கிறோம். இந்த உலகம் இறைவனுக்கு சொந்தமானது. அவனே நமது தலைவன், அவன் கீழ் நாம் ஒவ்வொரு சகோதர தேசமும் நட்புணர்வுடன் வாழும் ஓர் ஒருமித்த உலகத்தை நிறுவ வேண்டும். இறைவனை அறிவதே அதற்கான வழி; அவனை அறியும் வழி அவனைத் தியானிப்பதே ஆகும்….உலகளாவிய தோழமை மட்டுமே வெறுப்பை ஒழித்து போர்களைத் தடுக்க முடியும். உலகளாவிய தோழமை மட்டுமே மனிதகுலம் முழுவதற்கும் செழிப்பை உறுதிப்படுத்த முடியும். ஆகவே இறைவனுடன் தொடர்பு கொண்டு அந்த தோழமையை உங்கள் இருதயங்களுக்குள் கொண்டு வாருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். இறைவனின் பிதாத்துவத்தை உணர்ந்து, ஒவ்வொரு மனித உயிரும் உங்களுக்குச் சொந்தமானது என்பதையும் உணருங்கள். உங்கள் இருதயத்தில் இறைவனை உணர்ந்தவுடன், முன் எப்போதும் எந்த அரசரோ அரசியல்வாதியோ செய்திராத ஒரு பங்களிப்பை உலக நாகரிகத்திற்கு நீங்கள் செய்வீர்கள். நீங்கள் தொடர்பு கொள்ளும் அனைவரையும் நேசியுங்கள். ‘அவன் என் சகோதரன், ஏனெனில் என்னுள் இருக்கும் என் இறைவன் அவனிலும் இருக்கிறான்’ என்று உறுதியுடன் கூறுங்கள்.”
இன்றைய உலகிற்கு மிகவும் தேவையானது என்னவென்றால், மேலும் பல தனிநபர்கள், தங்கள் குறுகிய அகங்காரத்தைக் கடந்து, அனைவருக்கும் தெய்வீக அன்பையும் நட்பையும் வழங்குவதன் மூலம் தங்கள் உணர்வுநிலையை விரிவுபடுத்த முயற்சி செய்வதே ஆகும்.
அனைவருக்கும் அன்பையும் நட்பையும் வழங்குதல்
குருஜி, மகாத்மா காந்தியைக் குறித்துப் பேசுகையில், அவர் இந்தியாவுக்கு மட்டும் உரியவர் அல்ல என்று கூறினார். குருஜி சந்தித்து சில நாட்கள் உடனிருந்த அந்த எளிமையான மனிதர், அபரிமிதமான எளிமையுடன் வாழ்ந்து, ஒரு வேட்டியை மட்டுமே உடுத்தியிருந்த ஒரு பணிவான ஆன்மாவாகத் திகழ்ந்தார். அவர் இந்த நவீன யுகத்தில் தோன்றிய மிக உண்மையான கிறிஸ்தவராக இருந்தார்; ஆயினும் அவர் இந்தியாவிலிருந்து வந்த ஒரு இந்துவாகவே இருந்தார். அவர் இவ்வாறு கூறினார்: “என் இந்தியாவை யார் நேசிக்கிறாரோ, அவர் ஒரு இந்தியர்.” இந்த வார்த்தைகளில், தனது அன்பிலிருந்து அவர் யாரையும் விலக்கவில்லை. இறைவன் மீதான தனது அன்பிலும், தன் மக்கள் மீதான அன்பிலும் அவர் மனிதகுலம் அனைவரையும் உள்ளடக்கியிருந்தார். மனித ஆன்மாவின் சர்வவியாபகத் தன்மையை அவர் உணர்ந்து, அதற்கு உதாரணமாகத் திகழ்ந்தார்.
அந்த உணர்வைத்தான் குருதேவர் தம் வாழ்விலும் வெளிப்படுத்தினார். அவர் யாரையும் அந்நியராகப் பார்க்கவில்லை. விரிந்த கரங்களுடன் — இனிமையான, எளிமையான, குழந்தைத்தனமான நம்பிக்கையுடனும் நட்புறவுடனும் — அனைவரையும் சந்தித்தார். தம்மைப் புரிந்து கொள்ளாதவர்களுக்கும் புரிதலை அளித்தார். முதலில் இறைவனை மனப்பூர்வமாக நாடும் லட்சியத்தைப் பயிற்சி செய்தார் — நாம் அவனுடையவர்கள் என்பதில் எந்தச் சந்தேகத்திற்கும் இடமின்றியும், நம் இதயங்களின் இரகசிய அழைப்பிற்கு அவன் பதிலளிக்கிறான் என்பதிலும் நாம் மனநிறைவு அடைய வேண்டும் — பின்னர், இறைவனிடத்தில் தாம் கண்ட அதே தெய்வீக அன்பையும் நட்புறவையும் தன் பாதையில் வந்த அனைவருக்கும் வழங்கினார்.
உண்மையான நட்பைப் பற்றியும், அது எவ்வாறு நமது வாழ்க்கையையும் நமது உலகத்தையும் மாற்றியமைக்கும் என்பதைப் பற்றியும் பரமஹம்ஸ யோகானந்தரின் காலத்தால் அழியாத ஞானத்தை வழங்கும், வெளிவரவிருக்கும் த ஸ்பிரிசுவல் எக்ஸ்ப்ரெஷன் ஆஃப் ஃப்ரெண்ட்ஷிப் என்ற புத்தகம் பற்றி அறிந்துகொள்ள உங்களை அழைக்கிறோம்.



















