2025 ஜூன் 8 அன்று, YSS சென்னை ஆசிரமம், பெரம்பாக்கம் நெடுஞ்சாலையில் ஆசிரமத்திற்கு அருகில் அமைந்துள்ள மண்ணூர் கிராமத்தில் “யோகதா சத்சங்க மருத்துவ சேவை மையம்” திறந்து வைத்தது. மண்ணூர் மற்றும் சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு இலவச மருத்துவ சேவை அளிக்கும் இந்த மையம், சமூகத்திற்கு சேவை செய்வதற்கான ஆசிரமத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை விரிவுபடுத்துகிறது.


YSS சன்னியாசிகள் தலைமையில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் உள்ளூர் அதிகாரிகள், கிராம மக்கள், பக்தர்கள் மற்றும் மருத்துவர்கள் உட்பட சுமார் 70 பேர் கலந்து கொண்டனர். மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் சேர்ந்து சன்னியாசிகள் நிகழ்ச்சிக்குரிய விளக்கை ஏற்றி வைத்தனர். ஸ்வாமி சுத்தானந்தா, மனிதகுலத்திற்கு சேவை செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் YSS இன் இலட்சியங்கள் மற்றும் குறிக்கோள்களை எடுத்துரைக்கும் ஒரு சுருக்கமான எழுச்சியூட்டும் உரையை நிகழ்த்தினார். பங்கேற்பாளர்கள் அனைவரும் பிரசாதம் பெற்றுக்கொண்டனர்.
சுமார் 50 உள்ளூர் வாசிகள் திறப்பு விழாவிற்குப் பிறகு, இலவச இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை பரிசோதனைகளையும், அத்துடன் பொது சுகாதார ஆலோசனையையும் பெற்றனர்.


முக்கிய சாலையில் எளிதில் அணுகக்கூடிய வகையில் அமைந்துள்ள இந்த மருத்துவமனை, நோயாளிகளுக்கான வசதியான காத்திருப்பு அறை, மருத்துவர் அறை மற்றும் மருந்து வழங்கும் பிரிவு ஆகியவற்றை வழங்குகிறது. தற்போது ஒரு பொது மருத்துவர் வாரத்திற்கு 5 நாட்கள், சில மணிநேரங்களுக்கு ஆலோசனைக்குக் கிடைப்பார். மேலும் காது, மூக்கு, தொண்டை மருத்துவர்கள் மற்றும் பல் மருத்துவர்கள் போன்ற சிறப்பு மருத்துவர்கள் மாதத்திற்கு ஒரு முறை இலவச ஆலோசனைகளை வழங்குவார்கள்.

