யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்-இன் மூன்றாவது தலைவரும், சங்கமாதாவுமான ஸ்ரீ தயா மாதாவிடம், 1992-இல் ஒரு நேர்காணல் நடத்தப்பட்டது. இதில், 1993 ஜனவரி 5-அன்று வரவிருந்த பரமஹம்ஸ யோகானந்தரின் அவதார தின நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு, அவரது வாழ்க்கை மற்றும் லட்சியம் குறித்த பல கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டன. அவருடைய பதில்கள் 1993-இல் நூற்றாண்டு நிறைவை கொண்டாடும் வகையில் வெளியான யோகதா சத்சங்கா இதழின் சிறப்பு வெளியீடுகளில் பிரசுரிக்கப்பட்டன. ஸ்ரீ தயா மாதாவின் உரைகளின் மூன்றாவது தொகுப்பான ஜர்னி வித் பரமஹம்ஸ யோகானந்தா எனும் விரைவில் வெளிவரவிருக்கும் நூலில், அப்பதில்களின் தொகுப்பு ஒரு அத்தியாயமாக இடம்பெறவுள்ளது. இங்கே அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்றையும், அவர் அளித்த ஆழ்ந்த ஊக்கமளிக்கும் பதிலையும் வழங்குகிறோம்.
கேள்வி: சமநிலை வாழ்க்கை — தியானம் மற்றும் சரியான செயல்பாடு — ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் [யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா] இல் ஒரு முக்கிய நியமமாகத் தோன்றுகிறது. பரமஹம்ஸ யோகானந்தர் நிச்சயமாக அந்த லட்சியப்படியே வாழ்ந்தார். அவர் பயணங்கள் மேற்கொண்டார், நாடு முழுவதும் உள்ள நகரங்களில் உரையாற்றினார், ஆயிரக்கணக்கான மக்களைச் சந்தித்தார். ஆயினும், அவர் தெய்வீகத் தொடர்புடன் கூட அகமுகமாக வாழ்ந்து கொண்டிருந்தார். இன்றைய அதீத அழுத்தங்களுக்கு மத்தியில் சராசரி நபருக்கு இது சாத்தியமா?
பரமஹம்ஸ யோகானந்தரின் செய்தியின் ஒரு அம்சம் என்னவென்றால், இறையானுபவம் ஆசிரமங்களிலும் மடாலயங்களிலும் வசிப்பவர்களுக்கு மட்டுமே உரியது அல்ல. அது மனிதகுலம் முழுமைக்கும் உரியது. நீங்கள் இமயமலைக் குகைக்கு செல்ல வேண்டியதில்லை! நீங்கள் இருக்கும் இடத்திலேயே அவரைக் கண்டடையலாம். உங்கள் வாழ்க்கை எவ்வளவு குழப்பம் நிறைந்ததாக இருக்கிறதோ, அந்தளவுக்கு அவரை நீங்கள் கண்டடைவது அவசியமாகிறது.
உங்கள் மும்முரமான வாழ்க்கையை தியானிப்பதற்கு நேரம் ஒதுக்குவதுடன் சமநிலைப்படுத்தினால், பெரும் மகான்களும் ஞானிகளும் செய்ததைப் போலவே நீங்களும் இறைவனை உங்களுடையவனாக்கிக் கொள்ளலாம். இதில் மிக முக்கியமானது, உங்கள் அன்றாடச் செயல்பாடுகளின் போது கூட தியானத்தின் மூலம் கிடைக்கப் பெற்ற இறை இருப்பு உணர்வை விடாமல் பற்றிக்கொண்டிருப்பதே ஆகும். எளிமையாகச் சொன்னால், நீங்கள் எதைச் செய்துகொண்டிருந்தாலும் அவனை மறவாமல் இருக்க முயல வேண்டும். அவனை உங்கள் வாழ்க்கையில் கொணர்ந்து, அதில் ஓர் அம்சமாக ஆக்குங்கள், அப்போதுதான் அவன் உங்கள் அனைத்து எண்ணங்கள் மற்றும் செயல்களின் ஊடே பாயும் ஓர் ஒருங்கிணைக்கும் அம்சமான மௌன அன்பாக மாறுவான்.
இறைவனை நாட உலகைத் துறக்க வேண்டிய அவசியமில்லை என்றாலும், புற வாழ்வின் வேகத்தை குறைத்து — அமைதியுடன், அகமுகமாக வாழ முயற்சிக்க வேண்டும். இன்றைய உலகில் எவ்வளவு பதற்றத்துடனும் பரபரப்புடனும் இருக்கிறோம் என்பதை நாம் உணர்வதில்லை. பொறுப்புகளும் அழுத்தங்களும் பெருகி, செயலாற்ற வேண்டியவை குவியும் போது, ”இது சாத்தியமே இல்லை!” என்று மக்கள் நினைக்கத் தொடங்குகிறார்கள். அப்போது, ”அமைதியாக இரு” என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ள வேண்டும்; பிறகு விட்டுவிடுங்கள். அமைதியாக இருங்கள். என் வாழ்க்கையில், நான் மன இறுக்கத்திற்கு ஆளாகாமல், இதைச் செயல்படுத்த முயற்சி செய்வதால், என்னால் இன்னும் அதிகமாக சாதிக்க முடிகிறது என்பதை நான் காண்கிறேன். பதற்றமடைவதில் எந்தப் பயனும் இல்லை; அது உங்களை வெறும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி, நிலைகுலையச் செய்துவிடும்.
இறைவனைத் தேடும்போது, எவ்விதமான அவசர உணர்வும் இருக்கக்கூடாது. அவசர மனோபாவத்துடன் தியானத்தில் ஈடுபட்டால், இறை இருப்பை உணர்வதைப் பற்றி மறந்துவிடலாம். அவ்வாறே இருபது ஆண்டுகள் தினமும் தியானம் செய்தாலும், எந்தப் பயனும் கிடைக்காது; நீங்கள் தியானிப்பது தொடர்பான வெறும் இயக்கங்களைச் செய்துகொண்டிருப்பீர்கள். நீங்கள் நிதானிக்கவும், இறைவன் மீது அன்பான கவனத்தைச் செலுத்தவும் கற்றுக்கொள்ள வேண்டும். அது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
உணவு, உறக்கம் அல்லது பிற அத்தியாவசியத் தேவைகள் இன்றி நம்மால் வாழ முடியாது என்று கருதி, அவற்றிற்காக நாம் நேரம் ஒதுக்குகிறோம். அதேபோல, இறைவனின்றி நம்மால் வாழ முடியாது என்பதை நாம் உணர வேண்டும்; அவனே நம் மனம், உடல் மற்றும் அனைத்துச் செயல்பாடுகளுக்கும் தேவையான ஆற்றலை அளிப்பவன். அவனை நாம் புறக்கணித்தால், நம் வாழ்வை உருவாக்கியவனும் அதைப் பராமரிப்பவனுமான அந்த இறைவனிடமிருந்தே நாம் நம்மைப் பிரித்துக் கொள்கிறோம்.
வேலைக்கு ஒரு காலம் உண்டு; தியானத்திற்கு ஒரு காலம் உண்டு. இறைவனுக்காக மும்முரமாக செயல்பட வேண்டும் என்று குருஜி நமக்குக் கற்பித்தார்; அதேவேளையில், வேலைக்கு நடுவே அவ்வப்போது நம்மையே இவ்வாறு கேட்டுக்கொள்ள வேண்டும்: “என் உணர்வுநிலை இப்போது எங்கே இருக்கிறது? என் மனம் அகத்துள் இறைவனை அமைதியாகக் கவனித்துக் கொண்டிருக்கிறதா, அல்லது வெளி விவகாரங்களில் மூழ்கியிருக்கிறதா?” என்று. நீங்கள் தியானம் செய்துவிட்டு, அன்றாடச் செயல்பாடுகளின்போதும் உங்கள் மனத்தை இறைத்தன்மையிலேயே நிலைநிறுத்த முயன்றால், இயல்பாகவே உங்கள் வாழ்க்கையில் ஒரு சமநிலை வெளிப்படத் தொடங்கும். அப்போது, நீங்கள் அமைதியான மனிதராக மாறுவீர்கள் — உணர்ச்சி வேகத்தில் செயல்படாமல், ஆழ்ந்த அக அமைதி நிலையிலிருந்து செயல்படுவீர்கள்.
YSS/SRF-ன் அன்பிற்குரிய மூன்றாவது தலைவரும் சங்கமாதாவுமான ஸ்ரீ தயா மாதா அவர்களின் அன்பு, பணிவு மற்றும் இறைவன் மீதும் தனது குருவான பரமஹம்ஸ யோகானந்தர் மீதும் கொண்ட ஆழ்ந்த அர்ப்பணிப்புமிக்க சேவை உணர்வு ஆகியவற்றைக் கொண்ட ஊக்கமளிக்கும் வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்ள உங்களை அழைக்கிறோம்.




















