கொல்கத்தாவில் நடைபெற்ற 12-வது சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக பரமஹம்ஸ யோகானந்தர் கௌரவிக்கப்பட்டார்

28 ஜூன், 2026

கொல்கத்தாவில் நடைபெற்ற யோகா தின கொண்டாட்டங்களின் போது பரமஹம்ஸ யோகானந்தரின் பாரம்பரியத்தை மேற்கு வங்க அரசு எடுத்துரைத்தது

ஜூன் 21 அன்று கொண்டாடப்பட்ட 12வது சர்வதேச யோகா தினத்திற்கு முந்தைய நாட்களிலிருந்தே, மேற்கு வங்க அரசு, கொல்கத்தா நகர் முழுவதும் சிறப்பு காட்சியமைப்புகள் மூலம் நமது போற்றுதலுக்குரிய குருதேவர் மற்றும் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியாவின் (YSS) நிறுவனருமான ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரையும் பிற ஆன்மீகப் பெரியோர்களையும் கௌரவித்தது.

யோகானந்தாஜி மற்றும் பிற ஆன்மீக பெரியோர்களுக்கு நகர அளவிலான அஞ்சலி

வங்காளத்தின் வளமான ஆன்மீக மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தின் சிறப்பான கொண்டாட்டத்தில், கொல்கத்தா முழுவதும் அதிகாரப்பூர்வ அரசு பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டன. ஸ்வாமி விவேகானந்தர், ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ ரவீந்திரநாத் தாகூர் மற்றும் ஸ்ரீ பங்கிம் சந்திர சட்டோபாத்யாய் ஆகிய மேற்கு வங்காளத்தின் மிகச்சிறந்த அறிஞர்கள் மற்றும் மறைஞானிகளுடன் பரமஹம்ஸாஜி கௌரவிக்கப்பட்டார்.

கண்கவர் கொண்டாட்டங்கள்: மணல் சிற்பக் கலை மற்றும் ட்ரோன் நிகழ்ச்சிகள்

பதாகைகளைத் தாண்டி, பிரமிக்க வைக்கும் பொதுக் காட்சிப்படுத்தல்கள் மூலம் ஆயிரக்கணக்கான மக்களின் மனதை இந்த அஞ்சலிகள் கவர்ந்தன. ஹூக்ளி ஆற்றங்கரையில் உள்ள மில்லினியம் பூங்காவில், நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய வியக்கத்தக்க அற்புதமான மணல் சிற்பக் கலை வடிவம் ஒன்று உருவாக்கப்பட்டது; இது அஞ்சலி செலுத்தக் கூடியிருந்த மக்களை வெகுவாக ஈர்த்தது. ஜூன் 21 அன்று, ஒருங்கிணைந்து நிகழ்த்தப்பட்ட கண்கவர் ட்ரோன் காட்சி மூலம் இரவு வானம் ஒளிமயமாக ஜொலித்தது. உலகம் முழுவதும் யோகம் மற்றும் தியானத்தின் ஒளி பரவுவதை உணர்த்தும் வகையில், ஆயிரக்கணக்கான ஒளிரும் ட்ரோன்கள் நீர்ப்பரப்பிற்கு மேலே ஜொலிக்கும் வடிவங்களை உருவாக்கின.

நவீன காலத்தின் தலைசிறந்த அறிஞர்கள் மற்றும் மறைஞானிகளுடன், பரமஹம்ஸ யோகானந்தரை கௌரவிக்கும் வகையிலான ஒரு அழகான மணல் கலைப்படைப்பு.
“ஆரோக்கியமான முதுமைக்கான யோகா” என்ற கருப்பொருளை முன்னிறுத்தும் பதாகை.

இதுபோன்ற நிகழ்வுகளால், யோகாவை வெறும் உடல் ரீதியான ஒரு பயிற்சியாக மட்டுமல்லாமல், மனித குலத்தை உள் அமைதிக்கு இட்டுச்செல்லும் மிக உயர்ந்த மற்றும் உறுதியான பாதையாக பரமஹம்ஸாஜியின் பார்வை தொடர்ந்து உயர் மட்டங்களில் அங்கீகாரம் பெற்று வருகிறது.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கொல்கத்தா மற்றும் செராம்பூரில் YSS சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்குகிறது

ஜூன் 21, 2026 அன்று, பலத்த மழை மற்றும் மேகமூட்டமான வானம் இருந்தபோதிலும், நூற்றுக்கணக்கான மெய்ப்பொருள் நாடுவோர், யோகா ஆர்வலர்கள் மற்றும் YSS பக்தர்கள், கொல்கத்தாவிலும் அதைச் சுற்றியுள்ள இரண்டு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடினர்: தக்ஷிணேஸ்வரில் உள்ள யோகதா சத்சங்க ஆசிரமம் மற்றும் செராம்பூரில் உள்ள ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் கிரி ஸ்மிருதி மந்திர்.

தக்ஷிணேஸ்வர்

தக்ஷிணேஸ்வர் யோகதா சத்சங்க ஆசிரமத்தில் ஜூன் 21 அன்று நடைபெற்ற ஒரு சிறப்பு நிகழ்ச்சியில், YSS சன்னியாசி ஒருவர், கிரியா யோக விஞ்ஞானத்தின் வரலாறு மற்றும் அதன் நவீன கால முக்கியத்துவத்தை பங்கேற்பாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார். இந்த புனித விஞ்ஞானம் நவீன கால மன அழுத்தம் மற்றும் கவலைகளுக்கு எவ்வாறு ஒரு மாற்று மருந்தாக செயல்படுகிறது என்பதையும், உடல், மனம் மற்றும் ஆன்மாவிற்கிடையே இணக்கத்தை ஏற்படுத்தி பதற்றம் மற்றும் கவலையைப் போக்குவதற்கான நடைமுறை வழியை வழங்குகிறது என்பதையும் வலியுறுத்தினார். மேலும், கிரியா யோக உத்தியைத் தொடர்ந்து பயிற்சி செய்வது ஆழ்ந்த மன அமைதியை கொணர்வதோடு, சுவாசம் மற்றும் மனதை அமைதிப்படுத்தி, பேரானந்த தெய்வீக உணர்வை விழித்தெழச் செய்கிறது என்றும் அவர் விளக்கினார். சரியான அமர்வுநிலை பயிற்சி, ஆரம்ப சுவாசப் பயிற்சிகள், மனக்காட்சி காண்பது மற்றும் சங்கல்பம் செய்தல் உட்பட வழிகாட்டுதலுடன் கூடிய தியான அமர்வு மூலம் பங்கேற்பாளர்கள் வழிநடத்தப்பட்டனர்.

YSS தக்ஷினேஸ்வர் ஆசிரமத்தில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி.

செராம்பூர்

யோகதா சத்சங்க தியான கேந்திரா, செராம்பூர் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில், ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் கிரி ஸ்மிருதி மந்திர் வளாகப் புல்வெளியில் சுமார் 215 உள்ளூர்வாசிகள் கூடினர்.

குழந்தைகள் சத்சங்கக் குழுவின் ஆசிரியர்கள் வழங்கிய ஒரு இனிய தொடக்கப் பாடலுடன் நிகழ்ச்சி துவங்கியது. யோகாசனங்களின் இணக்கம், ஒழுக்கம் மற்றும் கலைநயம் ஆகியவற்றைச் சிறப்பாக வெளிப்படுத்தும் ஒத்திசைவான யோகா செயல்விளக்கத்தை அங்கிருந்தோர் கண்டுகளித்தனர்.

YSS சன்னியாசி ஸ்வாமி அச்சுதானந்த கிரி, மனத்தெளிவையும் முழுமையான நல்வாழ்வையும் அடைவதற்கு பிரார்த்தனை மற்றும் தியான உத்திகளின் முக்கியப் பங்கை விளக்கி, அவற்றைப் பற்றிய ஒரு ஆழமான கருத்துக்களை உள்ளடக்கிய, அக அமைதி குறித்த எழுச்சியூட்டும் ஒரு சொற்பொழிவை வழங்கினார்.

ஸ்வாமி அச்சுதானந்த கிரி செராம்பூர் கேந்திராவில் தியான உத்திகள் குறித்த ஆழமான கருத்துகள் நிறைந்த ஒரு அமர்வை நடத்துகிறார்.

மேற்கு வங்க அரசின் தொழிலாளர் மற்றும் பொது சுகாதாரம் மற்றும் பொறியியல் (PHE) துறை மாண்புமிகு இணை அமைச்சர் திரு. பாஸ்கர் பட்டாச்சார்யா, அவர்கள், இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக YSS ஆல் கௌரவிக்கப்பட்டார்.

ஆழ்ந்த ஆன்மீகச் சூழலால் நெகிழ்ந்த அமைச்சர், தாம் ஒரு பேச்சாளராக வருவதைவிட, கேட்பவராகவே முக்கியமாக வந்ததாகக் குறிப்பிட்டார். மேலும், அந்த மாலைப் பொழுதில் நடைபெற்ற விளக்கவுரைகள் தமக்கு மிகுந்த பயனையும் உத்வேகத்தையும் அளித்ததாகத் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சி உள்ளூர் சமூகத்தினர் யோக தியானத்தின் உடல், மன மற்றும் ஆன்மீக நன்மைகளை அனுபவித்து உணரவும் பங்கேற்கவும் ஒர் அற்புதமான வாய்ப்பாக அமைந்தது; இது குருதேவரின் போதனைகளின் நடைமுறைத் தன்மையையும் காலத்தால் அழியாத சாராம்சத்தையும் உறுதிப்படுத்தியது.

எங்களுடன் சேர்ந்து அக அமைதியை உணருங்கள்

சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகளைப் பல மொழிகளில் காணலாம்

கிரியா யோக தியான போதனைகள் அவற்றின் ஆழ்ந்த தாக்கம் காரணமாக உலகளவில் தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்டு வரும் நிலையில், அக அமைதியை நோக்கி உங்களுக்கான முதல் அடியை எடுத்து வைக்குமாறு உங்களை அழைக்கிறோம்.

நீங்கள் மன அமைதியை உணர விரும்பினால், விஞ்ஞான பூர்வ தியான உத்திகளைக் கற்றுக்கொண்டு, YSS சன்னியாசிகளின் வழிகாட்டுதலுடன் கூடிய தியானங்களைப் பயிலவும் விரும்பினால், YSS நடத்தும் சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகளைக் காண உங்களை வரவேற்கிறோம்.

நமது இதயங்களில் அமைதியையும், உலகில் நல்லிணக்கத்தையும் கொண்டு வர யோகா உணர்வில் நாம் ஒன்றிணைவோம்.

இதைப் பகிர