நமக்குள்ளும் நம் உலகிலும் அமைதியை நிலைநாட்டுவது பற்றி பரமஹம்ஸ யோகானந்தர்

16 செப்டம்பர், 2024

அமைதியை நிலைநாட்ட வழி என்ன? ஒவ்வொரு செப்டம்பரிலும், ஐக்கிய நாடுகளின் சர்வதேச அமைதி தினம் சமூகங்கள் மற்றும் நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர புரிதல், மரியாதை மற்றும் திறந்த உரையாடல் மூலம் அமைதிக்கான இலட்சியத்தை கௌரவிக்கிறது.

அகத்தே அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் தெய்வீக மூலத்தை உணர்வதன் மூலம் அந்த இலக்கை அடைய நாம் நம்மிலிருந்து தொடங்க வேண்டும் என்று பரமஹம்ஸ யோகானந்தர் மற்றும் அனைத்து மகத்தான ஆன்மாக்கள், கற்பித்துள்ளனர்.

உலகிலுள்ள ஒவ்வொரு குடிமகனும்‌ இறைவனுடன்‌ தொடர்புகொள்ளக்‌ கற்பிக்கப்பட்டால்‌, (வெறுமனே அறிவுப்பூர்வமாக அவனை அறிவது மட்டும்‌ அல்ல), பின்‌ அமைதி ஆட்சி செலுத்த முடியும்‌ என நான்‌ நம்புகிறேன்‌; அதற்கு முன்பு அல்ல,” என்று பரமஹம்ஸர் விளக்கினார். “தியானத்தில்‌ விடாமுயற்சியின்‌ வாயிலாக அவனுடனான தொடர்பின்‌ மூலம்‌ நீங்கள்‌ இறைவனை உணர்ந்தறிகிற பொழுது, மனித இனம்‌ முழுவதையும்‌ தழுவிக்‌ கொள்ள உங்கள்‌ இதயம்‌ தயாராக்கப்படுகிறது.”

YSS/SRF இன் தலைவரும் ஆன்மீக முதல்வருமான ஸ்வாமி சிதானந்த கிரி, சமீபத்திய தனது 2024 பேரவை நிகழ்ச்சி உரையில்: அன்றாட தியானம் எனும் புனித விஞ்ஞானத்தை பயன்படுத்தவும், நமது விழித்தெழுந்த உலகளாவிய நாகரிகத்தின் கண்டுபிடிப்புகள் மற்றும் முன்னேற்றங்களை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தவும் நாம் கூட்டாகக் கற்றுக் கொள்ளும்போது, புவியில் “வளமை, நல்லிணக்கம், ஆன்மீக புரிதல் மற்றும் அமைதி ஆகியவற்றின் புதிய சகாப்தம் வரும்,” என்று உறுதியளித்தார்.

இந்த செய்திமடல், உங்களுக்காகக் காத்திருக்கும் ஆன்மாவின் அமைதியைக் கண்டுணரவும், மனிதகுலத்துடன் உங்கள் பிரிக்க முடியாத தொடர்பை ஆழமாக உணர்வதற்காகவும் தியானம் செய்ய உங்களை ஊக்குவிக்கும் என்று நம்புகிறோம்.

பரமஹம்ஸ யோகானந்தரின் உரைகள் மற்றும் எழுத்துக்களில் இருந்து:

நீங்கள் அகத்தே சாந்தமாகவும் அமைதியாகவும் இருக்கும் பொழுது, நீங்கள் எல்லோரையும் நேசிக்கிறீர்கள், மேலும் அனைவரிடமும் நட்பு மனப்பான்மையுடன் இருப்பதை உணர்கிறீர்கள். இறைவன் அவனுடைய படைப்பிற்காக உத்தேசித்தது இந்த இணக்கத்தைத் தான்.

தியானத்தின் அமைதியே இறைவனது மொழியும் அரவணைக்கின்ற ஆறுதலுமாகும். அவன் உங்கள் அகத்தே அமைதி எனும் அரியணையில் வீற்றிருக்கிறான். அவனை அங்கு முதலில் காணுங்கள், பின் வாழ்க்கையில் உண்மையான நண்பர்கள், இயற்கை அழகில், நல்ல புத்தகங்கள், ஆழ்ந்த எண்ணங்கள் மற்றும் உன்னதமான பேரவாக்கள் ஆகிய நல்ல மற்றும் அர்த்தமுள்ள அனைத்திலும் நீங்கள் அவனைக் காண்பீர்கள்.

ஒவ்வொரு இரவும் உறக்கத்தில் நீங்கள் அமைதியையும் ஆனந்தத்தையும் அனுபவிக்கிறீர்கள். நீங்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது, இந்த இருப்பின் அனைத்து அச்சங்களும் கவலைகளும் மறக்கப்படும் அமைதியான உயர் உணர்வுநிலையில் இறைவன் உங்களை இருத்துகிறார். அந்த புனித மனநிலையை, தியானத்தின் மூலம் நீங்கள் விழித்திருக்கும்போதே உணர முடியும், மேலும் குணப்படுத்தும் அமைதியில் தொடர்ந்து ஆழ்ந்திருக்க முடியும்.

யோகி தன் மனதில் நிலவும் தியானத்தில் எழும் அமைதியை, ஒவ்வொரு செயலிலும், மற்றவர்களுடனான நடைமுறைத் தொடர்புகள் அனைத்திலும் முன்னிருத்த எல்லா நேரங்களிலும் முயற்சிக்கிறான்.

பக்தியுடன் கூடிய தினசரி தியானத்தின் மூலம் அமைதியை உருவாக்குபவர்கள் உண்மையான அமைதி படைப்பாளர்கள்…. இறைவனின் இயல்பை உள்ளார்ந்த அமைதியாக உணர்ந்த பக்தர்கள், அமைதி-கடவுள் எப்போதும் தங்கள் வீட்டில், அக்கம் பக்கத்தில், தேசத்தில், அனைத்து தேசிய இனங்களிடையே வெளிப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

நாம் ஒவ்வொருவரும் ஒரு கிறிஸ்து, ஒரு கிருஷ்ணர், ஒரு புத்தரின் ஞானம் மற்றும் எடுத்துக்காட்டுக்கு ஏற்ப வாழ்க்கையை வடிவமைக்கும் பொழுது, இங்கே நாம் அமைதியைப் பெற முடியும்; அதற்கு முன்பு அல்ல. நாம் இப்பொழுதே, ​​நம்மிடமிருந்தே தொடங்க வேண்டும். நமக்கு வழி காட்ட மீண்டும் மீண்டும் பூமிக்கு வந்திருக்கிற தெய்வத்தன்மை வாய்ந்தவர்களைப் போல விளங்குவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும். அவர்கள் கற்பித்து, உதாரணமாய் திகழ்ந்தது போல், நாம் ஒருவரையொருவர் நேசித்திருப்பதனாலும், நமது புரிதலை தெளிவாக வைத்திருப்பதனாலும், அமைதி உண்டாக முடியும்.

இந்த ஞானத்தை உடனடியாக பயிற்சி செய்ய, SRF சன்னியாசி சேவானந்த கிரி வழி நடத்திய “பரமஹம்ஸ யோகானந்தரின் அக அமைதி குறித்த வழிநடத்தப்பட்ட தியானம்” ஓன்றில் பங்கேற்க உங்களை அழைக்கிறோம். இந்த வீடியோ தியான அமர்வுநிலை குறித்த ஒரு சிறந்த கண்ணோட்டத்தையும், பரமஹம்ஸர் கற்பித்த தியானத்திற்கு முன் செய்ய வேண்டிய சில ஆரம்ப சுவாச பயிற்சிகளையும் வழங்குகிறது.

இதைப் பகிர