ஓர் அறிமுகம்:
இந்தியாவின் பண்டைய விஞ்ஞானத்தை நவீன உலகிற்கு அளித்த ஒப்பற்ற பங்களிப்பை அங்கீகரிக்கும் வாய்ப்பாக, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 அன்று, உலகெங்கிலும் உள்ள மக்கள் 2014 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையால் நிறுவப்பட்ட சர்வதேச யோகா தினத்தை கொண்டாடுகிறார்கள்.
பலர் யோகத்தை வெறும் உடற்பயிற்சியாகக் கருதினாலும் — ஹத யோகத்தின் ஆசனங்கள் அல்லது அமர்வுநிலைகள் — யோகத்தின் உண்மையான மதிப்பும் நோக்கமும் மனித மனம் மற்றும் ஆன்மாவின் எல்லையற்ற திறன்களை வெளிப்படுத்துவதாகும். யோகம் என்ற சொல்லின் அர்த்தம் ஒருவர் தன் உணர்வுநிலை அல்லது ஆன்மாவை உலகளாவிய உணர்வுநிலை அல்லது பரம்பொருளுடன் “இணைத்தல்” என்பதாகும்.
“ஆன்மாவை பரமாத்மாவுடன் இணைப்பதுதான் யோகம் — ஒவ்வொருவரும் தேடிக்கொண்டிருக்கும் அந்தப் பேரானந்தத்துடனான மறு இணைப்பு,” பரமஹம்ஸ யோகானந்தர் கூறினார். “இது ஓர் அற்புதமான விளக்கம் அல்லவா? பரமாத்மாவின் என்றும் புதிய பேரானந்தத்தில் நீங்கள் உணரும் ஆனந்தம் வேறெந்த மகிழ்ச்சியை விடவும் மிகச் சிறந்தது என்றும், உங்களை அந்த நிலையிலிருந்து எதுவும் கீழே கொணரமுடியாது என்றும் நீங்கள் திடநம்பிக்கைக் கொள்கிறீர்கள்.”
அந்த தூய பேரின்ப நிலையை ஒவ்வொருவரும் அடைய முடியும், அவர் விளக்கினார், ஆனால், அவ்வாறு செய்ய ஒரு குறிப்பிட்ட முறையும், யோக முறையை வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் ஒரு நாளுக்கு மட்டுமல்லாமல், அதன் உண்மையான நன்மைகள் ஒருவருக்குள் உணரப்படும் வரை தொடர்ந்து பயன்படுத்துவதற்கான விருப்பமும் தேவைப்படுகிறது.
யோகத்தின் சக்திவாய்ந்த தியான உத்திகள் மற்றும் கோட்பாடுகள், அதாவது பரமஹம்ஸர் மற்றும் அவரது புகழ்பெற்ற குருமார்கள் பரம்பரையால், யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா / ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்-இன் கிரியா யோக போதனைகளில் கற்பிக்கப்பட்டவை போன்றவை, வாழ்க்கையை மாற்றியமைக்கும் முடிவுகளுக்கு உலகளவில் பயன்படுத்தப்படலாம் என்பதால், யோகத்தை உண்மையிலேயே உலகளவில் கொண்டாட முடியும்.
கீழே பகிரப்பட்டுள்ள பரமஹம்ஸரின் ஞானம், யோகம் அனைவருக்கும் ஒரு சிறந்த நேர்மறை சக்தி எனப் போற்றுகிறது, மேலும் கிரியா யோகத்தின் பாதை அதன் சிறந்த நடைமுறை உத்திகளுடன் ஒரு சாதகரை முக்திக்கும் ஆனந்தத்திற்கும் இட்டுச் செல்லும் என்பதைப் பிரதிபலிக்கிறது. பரமஹஸர் தனது ஒரு யோகியின் சுயசரிதம்-இல் கூறியது போல், “இந்தியா உலகத்திற்கு வேறு எந்தப் பரிசும் கொடுக்கா விட்டாலும் கிரியா யோகம் ஒன்றே போதுமான, ராஜாங்க வெகுமதியாகும்.”
பரமஹம்ஸ யோகானந்தரின் உரைகள் மற்றும் எழுத்துக்களிலிருந்து:
யோகம் முதன்மையாக ஒரு தியான விஞ்ஞானமாகும்: இறைவன் மீதான ஒருமுகப்பாடு மற்றும் ஒருவரது உணர்வுநிலையை அவனில் கலத்தல். ஆனால் இறைவன் மீது இடையறாது தியானம் செய்யும் திறமைக்கு இயல்பான முன்தேவையாக, யோகம் மனித இயல்பின் ஒவ்வோர் அம்சத்தையும் தினசரி வாழ்க்கையையும் சரியான வழியையும் கூட மனத்தில் ஆழப்பதிய வைக்கிறது.
எடுத்துக்காட்டாக, யோகம் அனைத்து பிரச்சினைகளையும் ஆன்மா-அனுபூதியிலிருந்து எழும் ஞானம் எனும் ஆன்ம வழிகாட்டலின் மூலம் தீர்க்க ஒருவருக்கு வல்லமை அளிக்கிறது. பிரச்சினைகள் மனத்தில் இருக்கும் வரையில் மனம் மற்றும் ஆன்மீக விடுதலைக்கான வாய்ப்பு இல்லை, ஏனெனில் இவற்றால் மனக்கொந்தளிப்புடன் சேர்ந்திருக்க முடியாது. மனமானது குழப்பும் எதிர்மறை மனோநிலைகள், கவலைகள், அச்சங்கள் ஆகியவற்றிலிருந்து விடுபட வேண்டும், அப்போது மன அமைதி என்னும் வானில் ஆன்மா என்னும் விடுதலை அடைந்த சொர்க்கப்பறவையால் உயரப் பறந்து சென்று ஒருவரது முழு இருப்பின் மேல் அதன் சிறகுகளையும் விரிக்க முடியும். அகத்திலும் புறத்திலும் இருந்து ஒருவரது வாழ்வை சுமையாக்கும் தடுமாற்றங்களையும் இடையூறுகளையும் படிப்படியாக குறைப்பதன் மூலம் யோகம் விடுதலைக்கு வழி அமைக்கிறது.
யோகதா சத்சங்க யோக போதனைகள் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் -வணிக, சமூக, உடல், மன மற்றும் ஆன்மீக மேம்பாட்டிற்கு பயன்படுத்தப்பட முடியும். ஆன்மீக உண்மைகளின் அத்தகைய பன்முகப் பயன்பாடு மிக உயர்ந்த பேரின்பத்தை உண்டாக்குகிறது.
இந்த போதனைகள் உலகிற்கு ஒரு நடைமுறை முறையியல்-ஐ வழங்குகின்றன, இதன் மூலம் அனைத்து பக்தர்களும் இறைவனை நோக்கி முன்னேறுகிறார்கள் என்பதை உணர்வுபூர்வமாக அறிந்து கொள்ளலாம். இதன் காரணமாக, நம் மகத்தான குருமார்களின் இந்த SRF [YSS] பாதைக்கு நான் என் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டேன்.
தொடர்ச்சியான தியானப் பயிற்சியின் மூலம், நீங்கள் என்றும் – புதிய, என்றும் – அதிகரிக்கும் ஆனந்த உணர்வுகளைப் பெறுவீர்கள், இது குறுகிய – கால அழியக்கூடிய இன்பத்தின் ஒரு கற்பனை மன நிலை அல்ல, ஆனால் அது உங்கள் பிரார்த்தனைகளைப் பெற்று அதற்கு மறுமொழி அளிக்கும் தியானத்தின் இறைப் பேரின்பம்.
தியானத்தில் உணரப்படும் ஆனந்தமே இறைவன். YSS பாடங்களில் கொடுக்கப்பட்டுள்ள கிரியா யோக விஞ்ஞான உத்திகளைப் பயிற்சி செய்வதன் மூலம், நீங்கள் அந்த ஆனந்தத்தை உணர்வீர்கள். அத்தகைய மகிழ்ச்சியைத் தரும் எதுவும் உலகத்தில் நான் அறிந்தது இல்லை. நீங்கள் ஒருமுறை இறைவனைத் தொடர்பு கொள்வீராயின், அவனை விட அதிகமாக நீங்கள் விரும்புவது பூமியில் எதுவும் இல்லை என்பதை அறிந்து கொள்வீர்கள்.
YSS இணையதளத்தில் “யோகம் என்பதன் உண்மையான அர்த்தம்” பக்கத்தைப் பார்வையிட உங்களை அழைக்கிறோம். ஆன்மாவின் இயல்பான ஆனந்தத்தை மேலும் மேலும் உணர யோகம் வழங்கும் உலகளாவிய மற்றும் விஞ்ஞான ரீதியான அணுகுமுறை பற்றி அங்கு நீங்கள் மேலும் அறியலாம்.