“என்னால் முடியும்” என்ற உணர்வுடன் ஊக்கமின்மையை வெல்வது பற்றி பரமஹம்ஸ யோகானந்தர்

18 அக்டோபர், 2024

ஒர் அறிமுகம்: 

நீங்கள் எப்போதாவது ஒரு மதிப்பார்ந்த ஆன்மீக அல்லது பொருள்சார் இலக்கை அடைவதற்கு முயற்சி செய்திருக்கிறீர்களா? பிறகு இயற்கையாகவே எழும் தடைகளை எதிர்கொள்ளும்போது, மனச்சோர்வடைந்து அல்லது ஊக்கமிழந்து இருக்கிறீர்களா?

சரி, அது மனித் தன்மையின் ஒரு பகுதியாகும், ஆனால் பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகள் எந்தவொரு ஊக்கமின்மையையும் நம்முடைய இச்சா சக்தியால் மின்னூட்டப்பட்ட அச்சமற்ற உறுதியின் அற்புதமான அணுகுமுறையால் மாற்ற அனுமதிக்கின்றன என்பதையும் நினைவூட்டிக் கொள்வது நல்லது.

“ஒரு நல்ல ஆரோக்கியமான மற்றும்‌ ஆக்கப்பூர்வமான, இலக்கை தேர்ந்தெடுங்கள்‌; அதன்‌ பின்‌ அதை அடையப்‌ போகிறோம்‌ என்று தீர்மானம்‌ செய்து கொள்ளுங்கள்‌,” பரமஹம்ஸர் கூறினார். “எத்தனை முறை நீங்கள்‌ தோல்வியுற்றாலும்‌ பரவாயில்லை, தொடர்ந்து முயன்ற வண்ணம் இருங்கள்‌. எது நடந்தாலும்‌ சரி; “இப்பூமியானது நொறுங்கிப்போகலாம்‌, ஆனால்‌ நான்‌ என்னால்‌ முடிந்தவற்றை ‌ தொடர்ந்து செய்தவண்ணம்‌ இருப்பேன்‌.” என நீங்கள்‌ மாற்ற முடியாதபடி தீர்மானித்திருந்தால்‌ நீங்கள்‌ செயல்‌ வலிமை வாய்ந்த இச்சா சக்தியைப்‌ பயன்படுத்துகிறீர்கள்‌, ‌ நீங்கள்‌ வெற்றி அடைவீர்கள்‌.”

உண்மையில், நம்மிடம் சக்தி இருக்கிறது — எந்தவொரு சந்தேகமும் அல்லது தற்காலிக உற்சாகமின்மையும் இருந்தாலும் — “முடியாது” என்பதை “முடியும்” என்று மாற்றி, நமது உணர்வுநிலை மற்றும் நமது சூழ்நிலைகளை மாற்றுவதற்கான சக்தி நமக்கு உள்ளது.

உங்கள் வாழ்க்கையில் ஒரு உன்னத லட்சியத்திற்கான உற்சாக நெருப்பைத் தூண்டுவதற்கு, குறிப்பாக ஆன்மாவின் அனைத்தையும் நிறைவேற்றும் தெய்வத்தன்மையை அகத்துள் உணர்தல் என்ற அந்த உயர்ந்த குறிக்கோளுக்காக, இந்த மாத செய்திமடலை நீங்கள் பயன்படுத்தலாம் என்று நம்புகிறோம்.

பரமஹம்ஸ யோகானந்தரின் உரைகள் மற்றும் எழுத்துக்களிலிருந்து:

“முடியாது” என்ற உணர்வுக்கு “என்னால் முடியும்” என்ற சங்கல்பம் ஒரு மாற்று மருந்தாக உள்ளது. உங்கள் மனத்தால் அந்த மாற்று மருந்தை உருவாக்கி, மன உறுதியால் அதை நிர்வகியுங்கள். 

நீங்கள்‌ இறைவனின்‌ குழந்தை என்றும்‌, இன்னல்கள்‌ எதுவாக இருந்தாலும்‌, அவற்றை வெல்லும்‌ சக்தி உங்களிடம்‌ உள்ளதென்றும்‌, ஒவ்வொரு காலை வேளையிலும்‌ உங்களுக்கு நினைவூட்டிக்‌ கொள்ளுங்கள்‌. பரம்பொருளின்‌ பிரபஞ்ச சக்திக்கு வாரிசாகிய நீங்கள்‌ அபாயத்தை விட அதிக அபாயகரமானவர்‌!

நீங்கள் ஒரு காரியத்தை வெற்றிகரமாக தொடங்குவதன் மூலமும், தொடர்ந்து அதைச் செய்வதன் மூலமும் செய்ய முடியாது என்ற எண்ணத்தை வெல்லுங்கள். சூழ்நிலைகள் உங்களை தாக்கி, சோர்ந்துபோகச் செய்து, “என்னால் அதைச் செய்ய முடியாது.” என்று மறுபடியும் சொல்ல வைக்க முயற்சிக்கும். தீய சக்தி என்று ஒன்று இருந்தால், அது “என்னால் அதைச் செய்ய முடியாது” என்பதாகும்… “என்னால் முடியும்” என்ற உங்கள் அசைக்க முடியாத நம்பிக்கையால் அந்தப் அரக்கனை உங்கள் உணர்வுநிலையிலிருந்து தூக்கி எறியுங்கள்.

அதை அர்த்தப்படுத்துங்கள், உங்களால் முடிந்தவரை அடிக்கடி அதை உறுதிப்படுத்துங்கள். மனதளவில் அதை நம்புங்கள், மன உறுதியுடன் செயல்படுவதன் மூலம் அந்த நம்பிக்கைக்கு சக்தியூட்டுங்கள். செயலாற்றுங்கள்! நீங்கள் செய்யும் போது, “என்னால் இதைச் செய்ய முடியும்” என்ற எண்ணத்தை ஒருபோதும் கைவிடாதீர்கள். ஆயிரம் தடைகள் வந்தாலும் மனம் தளர வேண்டாம். நீங்கள் அந்த உறுதிப்பாட்டைக் கொண்டிருந்தால், நீங்கள் எதைத் தேடுகிறீர்களோ, அது தவிர்க்க முடியாமல் நடக்க வேண்டும்; அது நடக்கும்போது, நீங்கள் சொல்வீர்கள், “அது மிகவும் எளிதானது!” 

நான் உங்களுக்குக் காண்பிக்கும் விரிவாக்க வழி எவ்வளவு அற்புதமானது என்று பாருங்கள். “என்னால் முடியும், நான் செய்ய வேண்டும், நான் செய்வேன்” – உங்களை மாற்றிக் கொள்ளவும், முழுமையான வெற்றியை அடையவும் இதுவே வழி.

உங்களிடம் ஏற்கனவே உள்ள சக்தியை ஆக்கபூர்வமான நோக்கங்களுக்காக செலவிடுங்கள், அது மேலும் பெருகும். வெற்றிக்கான அனைத்து அம்சங்களையும் பயன்படுத்தி, தளராத உறுதியுடன் உங்கள் பாதையில் செல்லுங்கள். ஆன்மாவின் படைப்பு சக்தியுடன் உங்களை இசைவித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு வழிகாட்டும் மற்றும் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் எல்லையற்ற நுண்ணறிவுடன் நீங்கள் தொடர்பில் இருப்பீர்கள். உங்கள் இருப்பின் ஆற்றல்வாய்ந்த மூலத்திலிருந்து சக்தி தடையின்றி பாய்கிறது, இதன் மூலம் நீங்கள் எந்தவொரு செயலிலும் ஆக்கப்பூர்வமாக செயல்பட முடியும். 

 

வாழ்க்கையைப் பற்றிய உங்கள் கண்ணோட்டத்திலும் இச்சா சக்தியிலும் பேராற்றல் வாய்ந்த நேர்மறை எண்ணங்களை எவ்வாறு புகுத்துவது என்பது குறித்த பரமஹம்ஸ யோகானந்தரின் ஞானத்தை மேலும் அறிய, “உண்மையான வெற்றியையும் செல்வ வளத்தையும் அடைதல்” என்ற வலைப்பக்கத்தைப் பார்வையிட அழைக்கிறோம் – இதன்மூலம் வெற்றிகரமாக உங்கள் சிறந்த இலட்சியங்களை நீங்கள் அடைய முடியும்.  

உங்கள் இன்பாக்ஸில் நேரடியாக இது போன்ற பரமஹம்ஸ யோகானந்தரின் நுண்ணறிவு மற்றும் உத்வேகத்தைப் பெற பதிவு செய்யுங்கள்.

இதைப் பகிர