கருணைப் பண்பின் ஆழ்ந்த பயிற்சி மற்றும் விளைவு பற்றி பரமஹம்ஸ யோகானந்தர்

20 நவம்பர், 2024

ஒர் அறிமுகம்: 

நம் வாழ்விலும், உலகிலும் இறை இருப்பு அதிகமாக வெளிப்பட வேண்டும் என்று நாம் அனைவரும் விரும்புகிறோம்.

இதை நாம் அடையக்கூடிய மிக உடனடி மற்றும் உலகளாவிய வழிகளில் ஒன்று, மற்றவர்களை நாம் எவ்வாறு பார்க்கிறோம் மற்றும் நடத்துகிறோம் என்பதோடு தொடர்புடையது.

YSS/SRF தலைவரும் ஆன்மீக முதல்வருமான ஸ்வாமி சிதானந்த கிரி பரிந்துரைத்தபடி: “நீங்கள் சந்திக்கும் அனைத்து நபர்களிடமும் நன்மை மற்றும் ஆன்மீக உணர்வுநிலையின் வெளிப்பாடுகளைத் தேடுங்கள் மற்றும் அவற்றில் கவனம் செலுத்துங்கள் — உங்கள் கருத்துடன் பொருந்தாத கருத்து உடையவர்களிடம் கூட — இந்த வழியில் கவனம் செலுத்துவது இவ்வுலகில் இறைவனின் இருப்பை அதிகமாக வெளிப்படுத்துகிறது என்பதை நீங்கள் காண்பீர்கள்…. மற்றவர்களை ஆன்மாக்களாகப் பாருங்கள், அந்த மரியாதை மற்றும் போற்றுதல் காரணமாக, நீங்கள் அவர்களிடமிருந்தும் — உங்களிடமிருந்தும் — ஆன்ம குணங்களின் அதிக வெளிப்படு திறன்களை நுட்பமாக பெறுவீர்கள்.”

கருணை என்ற ஆன்ம குணத்தைப் பயிற்சி செய்வதன் முக்கியத்துவம் — மற்றும் பெரும் நன்மை — குறித்த பரமஹம்ஸ யோகானந்தரின் அகத்தூண்டும் மற்றும் சமநிலை ஞானத்தை நீங்கள் கீழே காணலாம்.

பரமஹம்ஸ யோகானந்தரின் உரைகள் மற்றும் படைப்புகளிலிருந்து:

நேர்மையான, இனிமையான வார்த்தைகள் ஆன்ம தாகம் கொண்டோர்க்கு அமிர்தமாகும். அன்பான வார்த்தைகள் எல்லா இடங்களிலும் தேவை.

கனிவைக் காண்பிப்பதற்கு ஒவ்வொன்றையும் ஒத்துக் கொள்ளத் தேவையில்லை. பிறருடன் ஒருவர் ஒத்துப் போனாலும் அல்லது ஒத்துப் போகாவிட்டாலும், அமைதியான மெளனம், நேர்மை மற்றும் பணிவான வார்த்தைகள் ஆகியவை எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என அறிந்திருக்கிற மனிதரை அடையாளம் காட்டுகின்றன.

உயிர்‌ பறிக்கும்‌ பகைவனிடம்கூட, இரக்கமற்று இருப்பதை என்னால்‌ நினைத்துப்‌ பார்க்க முடியவில்லை. அது என்னை புண்படுத்தும்‌, இவ்வுலகத்தில்‌ மிகுந்த இரக்கமின்மையைப்‌ பார்க்கிறேன்‌; எனவே அதை இன்னும்‌ அதிகரிப்பதற்கு எனக்கு எந்தக்‌ காரணமும்‌ இல்லை. நீங்கள்‌ இறைவனை நேசிக்கும்‌ பொழுது, மேலும்‌ இறைவனை நீங்கள்‌ ஒவ்வொரு ஆன்மாவிலும்‌ காணும்பொழுது, நீங்கள்‌ அற்பமானவராக இருக்க முடியாது.

மற்றவர்கள் உங்களை மிதித்து விட அனுமதியாதீர்கள், ஆனால் யாரும் உங்களை காயப்படுத்தவோ அல்லது உங்கள் மன அமைதியை பறிக்கவோ முடியாத அளவிற்கு அகத்துள் மிகவும் அமைதியாக இருங்கள். என் அருட்குணம் யாரோ ஒருவரால் மீண்டும் மீண்டும் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக நான் உணரும்போது, அந்த நபர் தனது தவறை உணரும் வரை நான் மிகவும் அமைதியாகவும் ஒதுங்கியும் இருப்பேன்; ஆனால் நான் இரக்கமற்றவனாக மாறுவதில்லை.

என்றும்‌ அக்கறையுடனும்‌ அன்புடனும்‌ இருக்கும்‌ உங்கள்‌ திறனைப்‌ பற்றிய நிச்சயத்துடன்‌ இருப்பதும்‌, எவரும்‌ உங்களை வேறு விதமாக செயல்பட வைக்க முடியாது என்ற எண்ணத்தில்‌ பாதுகாப்பாக இருப்பதும்‌ சிறிய ‘தான்‌’ என்னும்‌ அகந்தையின்‌ மீது கொண்ட மிகப்‌ பெரிய வெற்றிகளில்‌ ஒன்றாகும்‌, இதைப்‌ பயிற்சி செய்யுங்கள்‌. ரோமானிய அரசாங்கம்‌ கிறிஸ்துவினிடத்தில்‌ அன்பில்லாத தன்மையை முழுவதும்‌ எழுப்பி இருக்க முடியாது. அவரை சிலுவையில்‌ அறைந்தவர்களுக்காகக்‌ கூட, அவர்‌ பிரார்த்தனை செய்தார்‌: “பிதாவே, இவர்களை மன்னியும்‌, தாங்கள்‌ செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே.”

மற்றவர்களை மகிழ்ச்சியாக இருக்கச்‌ செய்வதற்கு தனிப்பட்ட முயற்சியை மேற்கொள்ளுங்கள்‌. நீங்கள்‌ எல்லோரையும்‌ மகிழ்விக்க முடியாது; ஆனால்‌ உங்கள்‌ வாழ்க்கைப்‌ பாதையில்‌ எதிர்ப்படும்‌ அந்த ஆன்மாக்களுக்கு கருணையையும்‌, அன்பையும்‌ அளியுங்கள். இரக்கமின்மைக்கு பதில்செயலாக இரக்கத்தை சிரத்தையுடன்‌ மக்களுக்கு அளிப்பதை விட, முக்தி அளிக்கும்‌ மேம்பட்ட செயல்‌ ஒன்றுமில்லை.

[சங்கல்பம்:] “என்னைத் தவறாகப் புரிந்துகொள்பவர்களின் இதயங்களை நான் அரவணைப்பேன் என்ற நம்பிக்கையில், தொடர்ச்சியான கருணையின் மங்காத சுடரொளியை நான் எப்போதும் வைத்திருப்பேன்.”

ஸ்வாமி சிதானந்தா அவர்கள் 2023 இல் இந்தியா, ஹைதராபாத்தில் ஆற்றிய உரையின் ஒரு சிறு பகுதியைப் பார்க்க உங்களை அழைக்கிறோம், அதில் YSS/SRF தலைவர் எப்படி தியான விஞ்ஞானத்தின் மூலம் நாம் நமது உணர்வுநிலையை உயர்த்தி, நமது உண்மையான ஆன்ம இயல்பின் தெய்வீக குணங்களை எழுப்ப முடியும் என்பதை விளக்குகிறார். 

இதைப் பகிர