ஓர் அறிமுகம்:
உலகெங்கிலும், பொதுமக்களால் காணப்பட்ட மற்றும் காணப்படாத சூழ்நிலைகளில், மக்கள் தன்னலமற்ற தன்மையுடனும் பணிவுடனும் தினமும் தைரியமாக மற்றவர்களுக்கு சேவை செய்கிறார்கள், நம்பிக்கை மிகவும் தேவைப்படும் இடங்களில் அதை வழங்குகிறார்கள்.
பரமஹம்ஸ யோகானந்தரும் மற்ற பெரும் மகான்களும், இந்த சேவை செயல்கள், நமது உலகின் நல்லிணக்கத்திற்கு முற்றிலும் அவசியமானவை என்பதுடன், ஆன்மா விரிவடைந்து, தெய்வீகத்துடன் தன் ஒன்றிய தன்மையை உணரும் தூய்மையான இயல்பின் வெளிப்பாடுகள் என்று கூறுவார்கள்.
இந்த மாத செய்திமடலில், நமது வாழ்விலும், ஆன்மீக வளர்ச்சியிலும் பிறருக்கு செய்யும் சேவை வகிக்கும் முக்கிய பங்கு குறித்த பரமஹம்ஸரின் ஞானத்தில் கவனம் செலுத்துகிறோம்.
பரமஹம்ஸ யோகானந்தரின் சொற்பொழிவுகள் மற்றும் கட்டுரைகளிலிருந்து:
வாழ்க்கை, முக்கியமாக சேவையின் அடிப்படையில் இருக்க வேண்டும். அந்த குறிக்கோள் இல்லாமல் இறைவன் உங்களுக்கு கொடுத்துள்ள அறித்திறன், அதனுடைய லட்சியத்தை அடைய முடியாது. சேவையில் உங்களுடைய சிறிய “தான்” ஐ மறக்கும்பொழுது, பரம்பொருளின் பேராத்மாவை உணர்ந்து கொள்வீர்கள். சூரியனது உயிர்த்துடிப்புள்ள கதிர்கள் அனைத்தையும் பேணுவது போல, நீங்கள் ஏழைகள் மற்றும் கைவிடப்பட்டவர்களின் நெஞ்சங்களில் நம்பிக்கை கதிர்களைப் பரப்ப வேண்டும், நம்பிக்கை இழந்தவர்களின் நெஞ்சங்களில் தைரியத்தைத் தூண்ட வேண்டும், மற்றும் தாங்கள் தோல்வியாளர்கள் என்று எண்ணுகிறவர்களின் நெஞ்சங்களில் ஒரு புதிய சக்தியை ஒளிரச் செய்ய வேண்டும்.
ஆன்மாவானது, இடைவிடாத விரிவாக்கத்திற்கான வாய்ப்பைக் காணும் போது மட்டுமே மகிழ்ச்சியடைகிறது. மற்றவர்களுக்குச் சேவை செய்யும் விதிமுறையின் நிறைவேற்றமானது, இறைவனில் நமது உணர்வு நிலையின் விரிவாக்கத்திற்கு இட்டுச்செல்லும் நட்பு என்கிற மற்றொரு விதிமுறையை நோக்கிய ஒரு படியாகும்.
ஒருவரைப் பற்றி நீங்கள் அன்புடன் நினைத்த மாத்திரத்திலேயே, உங்கள் உணர்வுநிலை விரிவடைந்து விடுகிறது. உங்கள் அண்டை வீட்டாரைப் பற்றி நீங்கள் நினைக்கும் போது, உங்களுடைய இருப்பின் ஒரு பகுதி அந்த எண்ணத்துடன் செல்கிறது. மேலும் அவசியமானது அந்த எண்ணம் மட்டுமல்ல, ஆனால் அவ்வெண்ணத்தைக் கொண்டு செயலாற்ற ஆயத்தமாக இருத்தலும் ஆகும்.
எல்லா மனிதர்களையும் மற்ற உயிரினங்களையும் தனிப்பட்ட முறையிலும் தனித்தனியாகவும் அறிந்து நேசிக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், சந்திக்க நேரும் அனைத்து உயிரினங்கள் மீதும் நட்புரீதியான சேவை ஒளியை பாய்ச்ச எப்பொழுதும் தயாராக இருப்பதுதான். இந்த மனப்பான்மைக்கு நிலையான மன முயற்சி மற்றும் தயார்நிலை தேவைப்படுகிறது; வேறு வார்த்தைகளில் கூறுவதானால் சுயநலமின்மை.
மற்றவர்களுக்கு சேவை செய்வதன் மூலம் சுதந்திரத்திற்கான வழி கிடைக்கும். தியானம் மற்றும் இறைவனுடன் இசைந்திருப்பதே மகிழ்ச்சிக்கான வழி. உங்கள் இதயம் பிறருக்கான அன்பால் துடிக்கட்டும், உங்கள் மனம் மற்றவர்களின் தேவைகளை உணரட்டும், உங்கள் உள்ளுணர்வு மற்றவர்களின் எண்ணங்களை உணரட்டும்.
சடப்பொருளின் போலியான பாதுகாப்புகள் மீது பற்றுக் கொள்ளாது இறைவனது இருப்பின் ஆனந்த உணர்வு நிலையில் வாழ வகை செய்யும் உத்திகளை உங்களுக்கு கற்பிப்பதன் வாயிலாக யோகம், உங்களை உலகியல் ஏமாற்றங்கள் தரும் வேதனைகளிலிருந்து விடுவித்து ஓர் அதிக மகிழ்ச்சியான, அதிக பயனுள்ள மற்றும் அர்த்தமுள்ள வாழ்வை நீங்கள் அனுபவிக்க ஏதுவாக்குகிறது. அது ஓர் ஆழ்ந்த அக மன நிறைவு நிலையை வழங்குகிறது, அதை நீங்கள் மற்றவர்களுக்கான உளமார்ந்த சேவையில் தாமாகவே பகிர்ந்து கொள்ள விரும்புவீர்கள்.
வாழ்க்கை என்பது கடமையின் ஒரு மகிழ்ச்சிகரமான யுத்தம் எனவும், அதே சமயம் ஒரு கடந்து போகும் கனவு எனவும் நீங்கள் உணரும் பொழுதும், மற்றவர்களுக்குக் கருணையையும் அமைதியையும் அளிப்பதன் மூலம் அவர்களை மகிழ்ச்சியுறச் செய்த ஆனந்தத்தில் நீங்கள் நிறைந்துவிடும் பொழுதும், இறைவனின் பார்வையில் உங்கள் வாழ்க்கை ஒரு வெற்றியாகும்.
ஒருமுகப்படுத்தப்பட்ட பிரார்த்தனை என்பது, நமது குடும்பம், நண்பர்கள், அண்டை வீட்டார் மற்றும் உலகம் முழுவதற்கும் உதவ நாம் அனைவரும் செய்யக்கூடிய ஒரு மகத்தான சேவையாகும் என்று பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகள் வலியுறுத்துகின்றன. YSS/SRF இன் அன்பார்ந்த மூன்றாவது தலைவரும் சங்கமாதாவுமான ஸ்ரீ தயா மாதாவின் வீடியோவைப் பார்க்க உங்களை அழைக்கிறோம், அதில் அவர், பரமஹம்ஸர் பிரார்த்தனைக்கு அளித்த முக்கியத்துவத்தை விவரித்து, நமது பிரார்த்தனைகள் மற்றவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் ஏற்படுத்தும் பெரும் நேர்மறை தாக்கத்தை விளக்குகிறார்.




















