பின்வரும் இடுகை ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் மற்றும் பின்னர் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியாவால் விரைவில் வெளியிடப்படவுள்ள பரமஹம்ஸ யோகானந்தரின் சொற்பொழிவுகள் மற்றும் கட்டுரைகளின் நான்காம் தொகுதியான ஸால்விங் த மிஸ்டரி ஆஃப் லைஃப் இல் முழுமையாக வாசிக்கக்கூடிய “காட் கமயூனியன்: மேன்ஸ் க்ரேடஸ்ட் நெஸசிடி,” என்ற உரையின் ஒரு பகுதி. முழு உரையும் ஜனவரி 7, 1940 அன்று கலிஃபோர்னியா என்சினிடாஸில் உள்ள ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் கோல்டன் லோட்டஸ் டெம்பிளின் இரண்டாம் ஆண்டு விழாவில் வழங்கப்பட்டது.
இந்த உலகில் எப்போதும் சில குறைபாடுகள் இருக்கும். மனித இனத்திற்குப் பயனளிக்கும் அற்புதமான முறைகள் என்னதான் கண்டுபிடிக்கப்பட்டாலும், இந்த லெளகீக உலகம் மனித குலத்திற்கு முற்றிலும் பாதுகாப்பானதாக ஒருபோதும் இருக்காது. இயேசு ஒரு சில மீன்களையும், ரொட்டிகளையும் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவு அளித்து அற்புதம் செய்தும், இறந்தவர்களை உயிர்த்தெழுச் செய்தும் கூட, நன்மை செய்ததற்காக துன்பப்பட வேண்டியிருந்தது. எல்லாம் இறைவனுடையது என்பதை அவர் தனது சக்திகளால் காண்பித்தார். நாம் அந்த பரம்பொருளின் உன்னத உணர்வுநிலையை வளர்த்துக் கொள்ளும்போது, நாம் படிப்படியாக எல்லா மேலோட்டங்களையும் கடந்து அனைத்து வெளிப்புற வெளிப்பாடுகளுக்கும் அடிப்படையான ஒரே சத்தியத்தை உணர்கிறோம்.
நாம் மகிழ்ச்சியாக இருக்க ஒரே வழி அதுதான், துக்கம் அல்லது இன்பம், ஆரோக்கியம் அல்லது நோய், வாழ்க்கை அல்லது மரணம், இருப்பின் அனைத்து இருமைகளிலும் நம்மைப் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் கருதிக் கொள்ளக்கூடிய ஒரே தருணம் அதுவே. எப்போதும் மாறிக்கொண்டிருக்கும் பொருள்சார் சூழ்நிலைகளிலிருந்துப் பூரணத்துவத்தை நாம் எதிர்பார்க்கக் கூடாது, ஆனால் தந்தையால் மட்டுமே நீடித்த மகிழ்ச்சியைத் தர முடியும் என்பதை உணர வேண்டும்.
ஒருவேளை நீங்கள் ஒரு கொடிய நோயால் அவதிப்படுவதாகக் கனவு காண்கிறீர்கள், உங்கள் கனவில் வலிமையுடனும் ஆரோக்கியமாகாவும் உள்ள ஒருவரை காண்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். பின்னர் நீங்கள் ஏழையாகவும் பசியுடனும் இருப்பதையும், வேறொருவர் வசதிகளுடன் இருப்பதைக் காண்கிறீர்கள். நீங்கள் கனவு காணும் வரை, உங்கள் வலியும் பசியும் உண்மையானவை; ஆனால் நீங்கள் விழித்தெழுந்ததும் நிம்மதியுடன் புன்னகைக்கிறீர்கள்.
நாம் வாழும் இந்த கனவு உலகமும் அவ்வாறே. இதை நான் எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த மாயையின் கனவுலகில், தந்தையின் பணியை மேற்கொள்வதற்காக, புறத்தே உடலின் வரம்புகளையும், பெளதீக இருப்பையும் நான் சமாளிக்க வேண்டியுள்ளது; ஆனால் இறை உணர்வின் அக விழிப்புநிலையில், நான் இடைவிடாது பரம்பொருளின் பேரின்பத்தையும், நிபந்தனையற்ற விடுதலையையும் அனுபவித்து மகிழ்கிறேன்.
இந்த உலகின் இருமைகள் அனைத்தும் இறைவனின் சோதனைகளே. நிலையற்ற வாழ்வின் மாயையிலிருந்து நாம் விழித்தெழுந்து, நம் அமரத்துவ உணர்வுநிலைக்கு உயர வேண்டும் என்று அவன் விரும்புகிறான். மகான்கள் கூட சோதிக்கப்படுகிறார்கள்; அவர்கள் பல சோதனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. புனித பிரான்சிஸின் வாழ்க்கையைப் படியுங்கள் – அவர் மற்றவர்களைக் குணப்படுத்தும் போது கூட அவர் எப்படி துன்பப்பட்டார், ஆனால் அவர் தனது சொந்த நலனுக்காக ஒருபோதும் இறைவனிடம் பிரார்த்தனை செய்யவில்லை. ஒவ்வொரு இரவும் அவர் இயேசு கிறிஸ்துவைக் கண்டார். அவர் புலனின்பப் பழக்கங்களுடன் பிறந்தார், ஆனாலும் அவர் இறைவனிடம் முழு சரணாகதி அடைந்ததன் மூலம் உன்னத நிலைக்கு உயர்ந்தார்.
இறைவன் நமது போற்றுதலால் அல்ல, அன்பினாலேயே மனமிறங்குகிறார்.
அற்புதங்கள் செய்யும் திறமையினால் ஒருவர் மகான் ஆவதில்லை. இதுபோன்ற செயல்கள் இறைவனை ஈர்க்காது; இந்த கடும் சிக்கலான மற்றும் வியக்கத்தக்கப் படைப்பில் இறைவன் எப்போதும் அற்புதங்களைச் நிகழ்த்திக் கொண்டே இருக்கிறான். அவனை நேசிப்பவர்களின் அன்பில் மட்டுமே அவன் அக்கறை கொள்கிறான். உங்கள் இருதயத்தை இறைஅன்பால் தூய்மைப்படுத்துவதே மிகப்பெரிய அற்புதம்; அதுவன்றி வேறொன்றும் உங்கள் ஆன்மாவை முழுமையாக திருப்திப்படுத்தாது.
இறைவனை புகழ்ச்சியால் அசைக்கமுடியாது, ஏனெனில் அவனிடம் வீண் பெருமை ஏதும் இல்லை. நீங்கள் யாருடைய கவனத்திற்கும் ஏங்காமல், உங்களை நேசிக்கும் உண்மையான ஆன்மாக்களில் மட்டுமே ஆர்வமாக இருக்கும்போது, உண்மையான நட்பின் அர்த்தத்தை நீங்கள் புரிந்துகொள்ளும்போது, முகஸ்துதியால் நீங்கள் அசைக்கப்பட முடியாமல், உண்மையான உள்ளங்களின் அன்பினால் மட்டுமே அசைக்கப்படும்போது – இறைவன் உங்களிடமிருந்து எதிர்பார்க்கும் அன்பையும் உங்களுக்கு கொடுக்கும் அன்பையும் அப்போது நீங்கள் அறிவீர்கள்.
அதனால்தான் இது போன்ற ஆலயங்கள் முக்கியமானவை — ஏனென்றால், நாம் அனைவரும் சமயத்தின் மேலோட்டமான விஷயங்களை இறைவனின் நேரடி அனுபவமாக மாற்றிக் கொள்ள முடியும். மேன்மைமிகு இயேசு கிறிஸ்து, பாபாஜி, லாஹிரி மகாசயர் மற்றும் எனது குரு ஆகியோர் தேவாலயத்தை தேவாலய பழமைவாதத்திலிருந்து காப்பாற்றி, உண்மையான கிறிஸ்தவத்தை மீண்டும் நிலைநாட்ட ஒன்றுசேர்ந்து செயல்பட்டார்கள். ஆகவே தான் நான் உங்களுக்கு சேவை செய்ய இங்கு வந்துள்ளேன். இந்த போதனை ஒவ்வொரு தனிமனிதனுக்கும் முக்தி அளிக்கும். உலகில் உள்ள வசதிக்கான கண்டுபிடிப்புகள் அனைத்தும் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தராது. நான் கிழக்கிலிருந்து இங்கு வந்தபோது, அமெரிக்காவின் அற்புதமான இயந்திரங்களாலும், பொருள் ரீதியான முன்னேற்றத்தாலும் ஈர்க்கப்பட்டேன்; ஆனால் இந்த விஷயங்கள் உங்களுக்கு அமைதியையும் மனநிறைவையும் தரவில்லை என்பதை நான் காண்கிறேன். உண்மையான அமைதியும் மனநிறைவும் இறைவனின் பேரின்பத்தில் உள்ளன.
மாயையின் கனவுகளுக்கு அப்பாற்பட்ட அந்த இடத்தில், மரணமோ, நோயோ, இன்னலோ ஒருபோதும் பிரவேசிக்க முடியாது; அதுவே உங்களுடைய பரம்பொருளின் உணர்வுநிலையில் உள்ள நிரந்தர பாதுகாப்பு. அந்த அடைக்கலத்தில் நிலைத்திருங்கள். ஆழ்ந்த, தொடர்ச்சியான தியானத்தின் மூலம் அந்த உணர்வுநிலையில் உங்களை நிலைநிறுத்திக்கொள்ளுங்கள், நீங்கள் அவனை அங்கு காண்பீர்கள்.