2026 ஜனவரி 5 அன்று, ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் 133-வது அவிர்பாவ திவஸ் (பிறந்தநாள் விழா), இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள அவர் பிறந்த ஊரான கோரக்பூரில் கொண்டாடப்பட்டது. செல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் (SRF) மற்றும் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா (YSS) ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த சன்னியாசிகளும், மாநிலம் முழுவதிலும் இருந்து வந்திருந்த YSS பக்தர்களும் நண்பர்களும் இந்தக் காலை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
அன்றைய தினக் கொண்டாட்டங்கள், பரமஹம்சஜியின் பிறந்த இடத்திற்கு இட்டுச் செல்லும் தெருவில் பிரபாத் ஃபெரி (ஊர்வலம்)- யுடன் தொடங்கின. அருள்நிறைந்த குரு, பரமஹம்ஸ யோகானந்தரின் பெரிய வண்ணப் படம் இருந்த, மலர்களால் மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கை SRF சன்னியாசினிகள் முன்னின்று வழிநடத்தினர். சுமார் 125 பக்தர்கள் மற்றும் நண்பர்கள் பங்கேற்ற இந்த ஊர்வலம், குருதேவரின் புனித பிறந்த இடத்தை நெருங்கும் போது அந்தத் தெரு முழுவதும் நீண்டு இடைவிடாத “ஜெய் குரு” என்ற மகிழ்ச்சியான கீர்த்தனையுடன் சென்றது.
குருதேவர் பரமஹம்ஸ யோகானந்தரின் ஜன்மோத்சவ் அவர் பிறந்த இடத்திலேயே முதல்முறையாகப் பொதுமக்கள் பங்குபெறும் கொண்டாட்டமாக நடைபெறுவது, கடந்த ஆண்டு மாநில அரசு அந்தச் சொத்தை கையகப்படுத்தியதாலும், மகா குருவின் வாழ்வையும் பணிகளையும் கௌரவிக்கும் வகையில் அங்கு ஒரு நினைவாலயம் கட்டப்பட உள்ளது என்ற அரசின் அறிவிப்பாலும் சாத்தியமானது. இந்த நினைவாலயம் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா அமைப்பினால் பராமரிக்கப்பட்டு இயக்கப்படும். இது கட்டி முடிக்கப்படும்போது, பரமஹம்ஸ யோகானந்தரின் பக்தர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஓர் அழகான யாத்திரை தலமாக அமையும். மேலும், இங்கிருந்த ஆரம்பகால வீட்டிலிருந்து சேகரிக்கப்பட்ட செங்கற்களைக் கொண்டு கட்டப்படும் ஒரு சிறப்பு தியான அறை, ஒரு அருங்காட்சியகம், ஆடியோ/வீடியோ காட்சி அறை மற்றும் ஒரு பெரிய தியான மண்டபம் ஆகியவையும் இங்கு அமையவுள்ளன.
பிரபாத் ஃபெரியைத் தொடர்ந்து ஒரு மணி நேர நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 150 பக்தர்கள் மற்றும் 75 விருந்தினர்கள் என சுமார் 225 பேர் கலந்து கொண்டனர். சில மூத்த அரசு அதிகாரிகளும் கூட இதில் பங்கேற்றனர். இந்தச் சிறப்பு மிக்க விழாவைக் கொண்டாடுவதற்காக அலங்கரிக்கப்பட்ட பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.
சுவாமி விஷ்வானந்தா ஆரத்தி காட்டினார். பின் அங்கு கூடியிருந்தவர்கள் முன் உரையாற்றுகிறார்.
மூத்த சன்னியாசி சுவாமி விஷ்வானந்த கிரி நமது அன்பிற்குரிய குருவிற்கு ஆரத்தி எடுத்ததுடன் நிகழ்ச்சி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, SRF பிரம்மச்சாரினிகளின் கீதமிசைத்தல் நடைபெற்றது. அதன்பின்னர், கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய சுவாமி விஷ்வானந்தா, இந்தப் புனித இடத்தில் பரமஹம்சஜியின் 133-வது ஜன்மோத்சவ விழாவைக் கொண்டாடுவதில் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். YSS/SRF தலைவர் மற்றும் ஆன்மீகத் தலைவரான சுவாமி சிதானந்த கிரி, YSS/SRF சன்னியாசிகள் மற்றும் மகா குருவின் உலகளாவிய ஆன்மீகக் குடும்பத்தின் சார்பில், கோரக்பூர் விழாவிற்காக முழுமையான நன்றியை அவர் தெரிவித்தார். யோகானந்தஜி பிறந்த இடத்தில் நினைவாலயம் அமைக்க முடிவெடுத்த உத்தரப் பிரதேச மாநில அரசுக்கும், இதில் தொடர்புடைய அனைவருக்கும் அவர் நன்றி கூறினார். குருதேவர் பிறந்த ஆரம்பகால வீட்டின் பெரிய வண்ணப்படங்களையும், தற்போது கட்டுமானத்தில் உள்ள நினைவாலயத்தின் வரைபடக் காட்சிகளையும் அவர் பகிர்ந்து கொண்டார். இதனை கூடியிருந்தவர்கள் மிகுந்த பாராட்டுடனும் கரவொலியுடனும் வரவேற்றனர்.
சுவாமி விஷ்வானந்தா, மகா குரு பிறந்த ஆரம்பகால வீட்டின் புகைப்படங்கள் மற்றும் அங்கு கட்டப்பட்டு வரும் புதிய நினைவாலயத்தின் வரைபடங்களைக் காட்டுகிறார்.
இதனைத் தொடர்ந்து, தற்போது இந்தியாவிற்கு ஆன்மீகப் புனிதப் பயணம் மேற்கொண்டுள்ள SRF சன்னியாசினிகளான ரஞ்சனா மய் மற்றும் யோகமயீ மய் ஆகிய இருவரின் சிறு உரைகள் இடம்பெற்றன. அவர்கள் ஒரு யோகியின் சுயசரிதை மற்றும் மேஜ்தா ஆகிய YSS/SRF வெளியீடுகளில் இருந்து சில பகுதிகளை வாசித்தனர்; மேலும், பரமஹம்ஸ யோகானந்தரின் வாழ்க்கையின் முதல் எட்டு ஆண்டுகள் கோரக்பூரில் கழிந்தபோது நடந்த சில ஊக்கமளிக்கும் சிறுவயதுச் சம்பவங்களைப் பகிர்ந்து கொண்டனர். அனைத்து மனிதகுலத்தின் ஆன்மீக முன்னேற்றத்திற்காகத் தங்கள் வாழ்வை அர்ப்பணித்த எண்ணற்ற மாபெரும் ஆன்மாக்களின் தாய்நாடாக இந்தியா நீண்டகாலமாகத் திகழ்கிறது என்பதை சுவாமி விஷ்வானந்தா சுட்டிக்காட்டினார். கோரக்பூரில் பிறந்த பரமஹம்ஸ யோகானந்தரும் அத்தகைய மகான்களில் ஒருவராவார். மகா குருவின் நேரடிச் சீடரும், அவரது உலகளாவிய YSS/SRF அமைப்பின் 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தலைவராகவும் சங்கமாதாவாகவும் விளங்கியவருமான ஸ்ரீ ஸ்ரீ தயா மாதா அவர்களின் பின்வரும் வார்த்தைகளை சுவாமி விஷ்வானந்தா பகிர்ந்து கொண்டார்:
“நமது அன்பிற்குரிய குருதேவர் மிகவும் எளிமையானவர்; அவர் தனது சுயசரிதையில் பல மகான்களைத் தமக்கு மேலாகப் போற்றியுள்ளார். ஆனால், இறைவனால் பணிக்கப்பட்ட அவரது தெய்வீகத் திட்டத்தில், அவர் இந்த யுகத்தின் உலக அவதாரம் ஆவார்; அவரது ஆன்மீக நிலைக்கு இணையானவர்கள் இந்த மண்ணுலகில் மிகச் சிலரே. அந்தப் எல்லையற்றவனுடன் ஐக்கியமான அவர், பரம்பொருள் எனும் பெருங்கடலிலேயே மூழ்கி வாழ்ந்து, இயங்கி வந்தார். அவர் நிபந்தனையற்ற அன்பை வெளிப்படுத்தினார்; அவரது ஞானம் மிக ஆழமானதாகவும் உன்னதமானதாகவும் இருந்தததால், பயபக்தியுடைய அவரது சீடர்களாகிய நாங்கள், கடினமான வேதங்களின் சாரத்தை அவரது சிந்தனை எனும் ஊற்றிலிருந்தே பருகுகிறோம் என்பதை உணர்ந்திருந்தோம். அவர் தனது அற்புத சக்திகளால் கோடிக்கணக்கான மக்களைக் கவர்ந்திருக்க முடியும், ஆனால் அவர் தனது இறைப்போதை நிறைந்த அன்பால், உண்மை பக்தர்களின் இதயங்களில் இறைவனுக்கான அன்பைத் தூண்டுவதையே தனது நோக்கமாகக் கொண்டிருந்தார்.”
YSS/SRF சன்னியாசிகள், சன்னியாசினிகள், பிரம்மச்சாரிகள் மற்றும் பிரம்மச்சாரினிகள் 400-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுக்குப் பிரசாதம் வழங்கினர்.
பிரசாதம் விநியோகித்தல் மற்றும் புஷ்பாஞ்சலி (மலர்கள் சமர்ப்பித்தல்).
மதிய வேளையில், அதே இடத்தில் SRF சன்னியாசினிகள் மற்றும் பிரம்மச்சாரினிகள் ஒரு மணி நேரக் கூட்டுத் தியானத்தை வழிநடத்தினர்; இதில் 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். குருதேவரின் தெய்வீக இருப்பை அனைவரும் உணர்ந்த அந்த அருள்நிறைந்த நாளுக்காக, அங்கிருந்த அனைவரும் இறைவனுக்கும் குருமார்களுக்கும் நன்றி செலுத்தினர்.



















