
யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா (YSS) இன் இளையோர் சேவைகள் தன்னார்வலர் பயிலரங்கு முதன்முதலாக YSS நொய்டா ஆசிரமத்தில் 2025 மே 1 முதல் 4, வரை நடைபெற்றது. இதில், இந்தியா முழுவதிலுமுள்ள அனைத்து YSS ஆசிரமங்களிலிருந்தும், 40க்கும் மேற்பட்ட மையங்களிலிருந்தும், அனுபவம் வாய்ந்த தன்னார்வலர்கள் மற்றும் புதிதாக சேவை செய்ய உத்வேகம் பெற்றவர்கள் என 125 பக்தர்கள் ஒன்றிணைந்தனர்.
YSS சன்னியாசிகளின் வழிகாட்டுதலுடன் நடைபெற்ற நான்கு நாள் பயிலரங்கு, இளையோர் சேவைகள் துறையின் தொலைநோக்குபார்வை மற்றும் இலக்குகளின் அடிப்படையில் தன்னார்வலர்களை ஒன்றிணைப்பதையும், அத்துடன் குழந்தைகள், பதின்ம வயதினர் மற்றும் இளம் சாதகர்களுக்கு (18 முதல் 35 வயது வரை) சேவை செய்வதற்கான பயிற்சி அளிப்பதையும் நோக்கமாகக் கொண்டது. இவை அனைத்தும் பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளையே மையமாகக் கொண்டிருந்தன.
“இந்த பயிற்சி ஒப்புவமையற்றது. உங்கள் பயிற்சியை ஆழப்படுத்தவும், இறைவன் மற்றும் குருவுடன் உங்கள் ஒத்திசைவை வளர்த்துக்கொள்ளவும் உதவும் ஒரு பயிற்சித் திட்டத்தில் நீங்கள் கலந்துகொள்ள விரும்பினால், அது இதுதான்!”
—கே.எம், மகாராஷ்டிரா





YSS சன்னியாசிகளும் அனுபவம் வாய்ந்த தன்னார்வலர்களும் பயிற்சி அமர்வுகள் நடத்தி, பங்கேற்பாளர்களுக்கு வழிகாட்டினர். புதிதாக உருவாக்கப்பட்ட இந்தத் துறையின் ஐந்து பிரிவுகளிலும் கிடைக்கும் பல்வேறு சேவை வாய்ப்புகளையும் அவர்கள் அறிமுகப்படுத்தினர்:
- சமூகம் மற்றும் தொடர்பு,
- பயிற்சி மற்றும் உள்ளடக்கம்,
- நிகழ்ச்சித் திட்டம் மற்றும் செயல்பாடுகள்,
- YSS மையங்களில் இளையோர் சேவைத் திட்டங்களின் மேம்பாடு, மற்றும்
- தன்னார்வலர் ஒருங்கிணைப்பு.
“குருஜியின் போதனைகளை குழந்தைகளுக்கு மேலும் துடிப்புமிக்கதாகவும், அர்த்தமுள்ளதாகவும், சுவாரஸ்யமானதாகவும், பயனுள்ளதாகவும் ஆக்குவதற்கு, அவற்றை ஒவ்வொரு அமர்விலும் எவ்வாறு இணைப்பது என்பதைக் கற்க ஓர் அற்புதமான வாய்ப்பு.”
—எஸ்.என்., ஜார்கண்ட்
சமநிலையான நிகழ்ச்சி
தொடக்க நாளின் மூன்று மணி நேரத் தியானமும், தினசரி மூன்று முறை நடத்தப்பட்ட கூட்டுத் தியானங்களும், ஒவ்வொரு நாளின் செயல்பாடுகளுக்கும் அமைதியான மற்றும் ஏற்கும் திறன் நிறைந்த சூழலை அமைத்தன.
ஆன்மிகப் பயிற்சி மற்றும் சேவையை சமநிலைப்படுத்துவது ஒரு பக்தரின் ஆன்மீக வாழ்க்கைக்கு அவசியம் என்பதை பங்கேற்பாளர்கள் கற்றுக்கொண்டனர் — மேலும் இந்த சமநிலையை கடைபிடிப்பது அவர்கள் சேவை செய்யும் இளையோர்களுக்கு ஒரு சக்திவாய்ந்த முன்மாதிரியாக அமைகிறது. என்பதையும் கற்றுக்கொண்டார்கள்.

இரண்டு கற்றல் பிரிவுகள்: குழந்தைகள் மற்றும் இளையோர் சத்சங்கம்
இந்த பயிலரங்கு, இரண்டு குறிப்பிட்ட கற்றல் பிரிவுகளை — குழந்தைகள் சத்சங்கம் (CS) மற்றும் இளையோர் சத்சங்கம் (TS) — பங்கேற்பாளர்களின் ஆர்வம் மற்றும் முன் அனுபவத்திற்கு ஏற்ப குழுவாக்கப்பட்டனர்.
ஒவ்வொரு பிரிவிற்குள்ளும், வெளிப்படையான பகிர்தல் மற்றும் ஆழ்ந்த பிணைப்பை ஊக்குவிக்க தன்னார்வலர்கள் கவனமாகக் குழுப்படுத்தப்பட்டனர். பயிற்சியானது, திறம்பட சத்சங்கத்தை வழிநடத்துவதற்கான அடிப்படைக் கோட்பாடுகளான இறைவனை மையமாகக் கொண்டு அமர்வை நடத்துதல், குருதேவரின் போதனைகளின் தூய்மையைப் பாதுகாத்தல், மற்றும் அன்பு, பேரானந்தம், நன்றியுணர்வு ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருந்தது.
ஆன்மீக ரீதியாக வளப்படுத்தும் மற்றும் ஆக்கப்பூர்வமான அணுகுமுறைகள் மூலம் குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினரை (வயது 6–17) ஈடுபடுத்துவதற்கான சிறந்த நடைமுறைகளையும் தன்னார்வலர்கள் பகிர்ந்து கொண்டனர். இளம் மனங்கள் மற்றும் இதயங்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு கதை சொல்லும் நேரடி நிகழ்ச்சிகள், தியானங்களை வழிநடத்துவதற்கான நடைமுறை வழிகாட்டுதல்கள் மற்றும் அமர்வு திட்டமிடலில் நடைமுறை பயிற்சிகள் ஆகியவை இதில் இடம்பெற்றன.


“அமர்விற்குத் தயாராவதற்கு அடிப்படைக் கோட்பாடுகள் மிகவும் முக்கியம்; மேலும் ‘அன்பும் நன்றியுணர்வும்’ மீது கவனம் செலுத்துவது அற்புதம். உண்மையில், முழு பயிற்சியும் மிகச் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இம்முயற்சிகளுக்காக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இதைச் சாத்தியமாக்கிய அனைவருக்கும் எமது நன்றிகள்.”
—எஸ். எல்., தமிழ்நாடு
“குருஜியின் போதனைகளை உள்வாங்கி, சிஎஸ் (குழந்தைகள் சத்சங்கம்) அமர்வில் அதை மிகவும் திறம்பட வழங்க உதவும் வகையில், ஓர் அமர்வின் ஒவ்வொரு பகுதியையும் ஒரு கட்டமைக்கப்பட்ட முறையில் மேலும் ஆழ்ந்து சிந்திப்பதற்கு எங்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பை அளித்தது.”
—எஸ்.எஸ்., மேற்கு வங்கம்

“‘தியானப் பயிற்சிகளை சுவாரஸ்யமாகவும், ஈடுபாடுமிக்கதாகவும் மாற்றுதல்’ அமர்வு அற்புதமாக இருந்தது! அது குழந்தைகளுக்கு தியானத்தை வழிநடத்துவதற்கான அருமையான எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தது.”
—என்.பி., உத்தரபிரதேசம்
இளையோர் சேவையில் பணியாற்றுவதற்கான வழிகாட்டுதல்கள்
பயிலரங்கின் முடிவில், ஸ்வாமி சங்கரானந்தா மற்றும் மூத்த தன்னார்வலர்கள், இளையோர் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான முக்கிய வழிகாட்டுதல்களைப் பகிர்ந்து கொண்டனர். — இதன் நோக்கம், குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினர் இறைவனிடம் தங்கள் அன்பை வளர்த்துக்கொள்ளக்கூடிய பாதுகாப்பான மற்றும் ஆன்மீகப ரீதியில் வளரும் சூழலை உறுதி செய்வதே ஆகும்.
இளையோர் சேவைகள் துறையின் ஐந்து பகுதிகளை பங்கேற்பாளர்கள் அறிந்து கொள்வதற்கும், அவர்கள் மிகவும் உத்வேகம் பெற்ற பிரிவுகளில் சேவை செய்வதில் தங்கள் ஆர்வத்தைப் பதிவு செய்வதற்கும் உதவுவதற்காக ஒரு தன்னார்வ சேவை வாய்ப்புகள் டெஸ்கும் அமைக்கப்பட்டது.


பயிற்சியை வாழ்வில் கொண்டு செல்லுதல்
தன்னார்வலர்கள் தமது நகரங்களுக்குத் திரும்பிய பின்னர் இளைஞர்களுக்கு உதவுவதற்காக எடுக்க வேண்டிய அடுத்த நடவடிக்கைகள் குறித்து இறுதி நாளில் விவாதிக்கப்பட்டது. இணக்கமான குழுப்பணி மூலம் உள்ளூர் மையங்களில் இளையோர் சேவைகளை எவ்வாறு வளர்த்து விருத்தி செய்வது என்பது குறித்த சிறந்த நடைமுறைகள் பகிரப்பட்டன.
ஸ்வாமி ஸ்மரணானந்த கிரி அவர்களால் நடத்தப்பட்ட நிறைவு சத்சங்கம், ஆன்மீக ரீதியில் குழந்தைகளை வளர்ப்பது பற்றியும், தெய்வீக இலட்சியங்களின் ஒளியில் இளம் ஆன்மாக்களை வழிநடத்தும் புனிதமான பொறுப்பு பற்றியுமான விவேகத்தை வழங்கியது.
பயிலரங்கு, புதிதாக அமைக்கப்பட்ட இளையோர் சேவைத் துறையின் வெற்றிக்கு இறை ஆசிகளை வேண்டி, குழுவாக கீதம் இசைத்தல் மற்றும் உறுதிமொழிகளுடன் நிறைவுற்றது.

“இந்த பயிற்சி ஒப்புவமையற்றது. உங்கள் பயிற்சியை ஆழப்படுத்தவும், இறைவன் மற்றும் குருவுடன் உங்கள் ஒத்திசைவை வளர்த்துக்கொள்ளவும் உதவும் ஒரு பயிற்சித் திட்டத்தில் நீங்கள் கலந்துகொள்ள விரும்பினால், அது இதுதான்!”
—கே.எம்., மகாராஷ்டிரா
தன்னார்வலர்கள், இளம் ஆன்மாக்களை ஆன்ம-அனுபூதிப் பாதையில் வழிநடத்துவதற்கு அவர்களின் இதயங்களையும் மனத்தையும் சிறப்பாக தயார்படுத்தும் பேறுபெற்ற பயிற்சி வாய்ப்பு மற்றும் கற்றல் அனுபவத்திற்காக தங்கள் பாராட்டைத் தெரிவித்தனர்.
“மிகவும் சிறப்பாகத் திட்டமிட்டு சிந்தித்து நடத்தப்பட்டப் பயிலரங்கு… இது நமது குருதேவரின் செயல்பாட்டு முறையை உண்மையாகப் பிரதிபலிக்கிறது. நம்மையும், YSS-இன் நம் சிறு குழந்தைகளையும் பற்றி அவர் எவ்வளவு சிந்திக்கிறார்! தமது இதயத்திற்கு மிகவும் நெருக்கமான ஒரு பணியை நிறைவேற்ற, எங்களைத் தெய்வீகக் கருவிகளாகத் தேர்ந்தெடுத்தது பெரும் பேறாகும். இந்த அற்புதமான பயிலரங்கை ஏற்பாடு செய்த சன்னியாசிகளுக்கும் தன்னார்வலர்களுக்கும் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். பயிற்சி முதல் தங்குமிடம், உணவு வரை அனைத்தும் செம்மையாக இருந்தது. இந்த அற்புதமான பயிலரங்கில் ஒரு பகுதியாக இருந்ததில் மிகவும் மகிழ்ச்சி. இதயம் நிறைந்தது.”
—பி.எஸ்., தமிழ்நாடு
அடுத்த படிகள்
- இளையோர் சேவைகளில் தன்னார்வலர்களாகப் பணியாற்ற விரும்புவோர் மற்றும் எதிர்கால பயிற்சி அமர்வுகளில் பங்கேற்க விரும்புவோர், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.
- 2025 ஆம் ஆண்டின் இறுதியில் நாடு தழுவிய அளவில் தொடங்கப்படவுள்ள ஆன்லைன் பதின்ம வயதினர் சத்சங்க திட்டத்தை முன்னிட்டு, ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் பதின்ம வயதினர் சத்சங்க தன்னார்வலர்களுக்கான ஆன்லைன் பயிற்சி திட்டமிடப்பட்டுள்ளது.
- கூடுதல் அடிப்படைப் பயிற்சி மற்றும் வழிவகுப்பவர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிலரங்குகள், இந்த ஆண்டின் பிற்பகுதியில் திட்டமிடப்பட்டுள்ளன.
இளையோர் சேவை வழிவகுப்பாளர்களாகப் பயிற்சி பெற விரும்புவோர், எதிர்காலப் பயிற்சி அமர்வுகளில் சேர்க்கப்படுவதற்கு இந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
குருஜியின் ஒளியில், இந்த புனிதப் பணியை ஒன்றிணைந்து தொடர நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்.