பின்வரும் இடுகை ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் ஆல் ஜூன் 22 இலும் பின்னர் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியாவினாலும் வெளியிடப்படவுள்ள பரமஹம்ஸ யோகானந்தரின் சொற்பொழிவுகள் மற்றும் கட்டுரைகளின் நான்காம் தொகுதியான ஸால்விங் த மிஸ்டரி ஆஃப் லைஃப் இல் முழுமையாக வாசிக்கக்கூடிய “ஸெல்ஃப்-ரியலைசேஷன்: நோயிங் யுவர் இன்ஃபினிட் நேச்சர்,” என்ற உரையின் ஒரு பகுதி.

அமைதி உங்களை சூழட்டும், அமைதி உங்களுள் நிலைத்திருக்கட்டும், பேரானந்தம் உங்கள் அகத்திலும் புறத்திலும் வியாபிக்கட்டும்!
சாசுவத சக்திப் பெருங்கடல் உங்களைச் சூழ்ந்துள்ளது, உங்கள் அகத்துள் வியாபித்துள்ளது. ஒரு மூடிய புட்டி கடலில் மிதப்பது போல, நீங்கள் இறைவன் மற்றும் அமைதியால் சூழப்பட்டிருக்கிறீர்கள். வாழ்க்கைப் பெருங்கடலில் நீங்கள் எங்கு மிதந்தாலும், நீங்கள் எப்போதும் அந்த மாபெரும் சக்தியிலும், ஜீவனிலும் மூழ்கியிருப்பீர்கள். அதை உணருங்கள்!
நீங்கள் இறைவனைப் பற்றியும், உங்களுக்குள் இருக்கும் சாசுவத ஆற்றலைப் பற்றியும் மேலும் மேலும் அறிந்து கொள்ளும்போது, வாழ்க்கையின் கவனம் தலைகீழாகிறது. உடல் இயக்கங்களை இடையறாது உணர்தல் என்பதற்கு பதிலாக, நீங்கள் சரீரத்தின் பின்னால் இருக்கும் சாசுவத மௌனத்தை உணர்கிறீர்கள்….
உங்கள் உடலாகிய தனித்த அலை மீதும், அதன் குறுகிய வாழ்வின் மீதும் நீங்கள் கவனம் செலுத்துகிறீர்கள்; இதனால் இறைவனின் எல்லையற்ற, சர்வவியாபகத்தை நீங்கள் மறந்து விடுகிறீர்கள். ஆனால் அனைத்து உடல்களிலும், இயற்கையின் அனைத்து வெளிப்பாடுகளிலும் உள்ள ஜீவனானது, இறை உணர்வுநிலையின் எழுச்சி அன்றி வேறில்லை என்பதை நீங்கள் உணரும்போது, நீங்கள் அவனது சாசுவத இருப்பில் இருப்பீர்கள்.
இறைவன் எப்பொழுதும் நட்சத்திரங்களிலும், பூமியின் துகள்களிலும், நமது எண்ணங்களிலும், உணர்வுகளிலும், சித்தத்திலும் நிலைத்திருக்கிறான்; இதை நீங்கள் உணரும் பொழுது, எல்லையற்றதுடனான உங்கள் தொடர்பை உணர்ந்தறிகிறீர்கள். அதுவே ஆன்ம-அனுபூதி: நீங்கள் உங்களை சிறு அலையெனும் ஜீவனாக உணராமல், பெருங்கடலாகவே உணர்கிறீர்கள்.
நாள் முழுதும், நீங்கள் உடல் வாயிலாகத் தொடர்ந்து செயல்படுவதனால், அதனுடன் உங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறீர்கள். ஆனால் ஒவ்வொரு இரவும் இறைவன் அந்தச் சிறைப்படுத்தும் மாயையை உங்களிலிருந்து நீக்குகிறார். நேற்றிரவு ஆழ்ந்த கனவுகளற்ற உறக்கத்தில், நீங்கள் ஒரு பெண்ணாகவோ, ஆணாகவோ, அமெரிக்கராகவோ, இந்துவாகவோ, செல்வந்தராகவோ அல்லது ஏழையாகவோ இருந்தீர்களா? இல்லை. நீங்கள் தூய பரம்பொருளாக இருந்தீர்கள்.
பகலில், உங்களை இத்தனை எடையுள்ள சதையும் எலும்புமாக, நரம்புகளும் தசைகளும் சேர்ந்த ஒரு தொகுப்பாக உணர்கிறீர்கள்; ஆனால், ஆழ்ந்த உறக்கத்தின் அரை-உயர் உணர்வுநிலை சுதந்திரத்தில், இறைவன் உங்கள் அழியக்கூடிய அடையாளங்கள் அனைத்தையும் நீக்கி, உடலிலிருந்தும் அதன் அனைத்து வரம்புகளிலிருந்தும் விலக்கி, உங்களைப் பரவெளியில் நிலைத்திருக்கும் தூய உணர்வுநிலையாக இருப்பதாக உணர வைக்கிறான்.
அந்தப் பரந்த தன்மையே உங்கள் உண்மையான ஆன்மாவாகும். தியானம் என்பது அந்த மறக்கப்பட்ட ஆன்மத்தின் சுதந்திரத்தை நீங்கள் முழுமையாக உணரும் செயல்முறையாகும்.
நான் ஏன் மௌனமாக இருக்க வேண்டும், தியானிக்க வேண்டும் என்று கேட்கிறேன்? அந்த பரந்த தன்மையையும் சுதந்திரத்தையும் உடலுடன் பிணைக்கப்பட்டிருக்கும் எல்லைக்குட்பட்ட உணர்வுநிலையோடு ஒப்பிட்டுப் பார்ப்பதற்காகத் தான். தியானத்தில் கண்கள் மூடிய நிலையில், நீங்கள் உங்களது உடலைப் பார்ப்பதில்லை; மூடிய கண்களுக்குப் பின்னால் உள்ள இருளின் கோளத்தை உற்று நோக்குகிறீர்கள். நீங்கள் அமைதியாகி, உங்களது தியானம் ஆழமடையும் போது, இந்தச் சிறிய உடலின் உணர்வுகளும் விழிப்புணர்வும் மறைந்துவிடும். அழியக்கூடிய இந்த வடிவத்தின் எல்லைகளுக்கு அப்பால் உங்களது இருப்பு விரிவடைவதை நீங்கள் உணர்கிறீர்கள்.
பரந்த அகவெளி மேலும் மேலும் பெரிதாகிறது; நீங்களே இந்தப் பரவெளிதான், பெருகி வரும் மகிழ்ச்சியும் அமைதியும் வியாபித்திருக்கும் எல்லையற்ற உணர்வுநிலைதான் என உணரத் தொடங்குகிறீர்கள். அப்பொழுதுதான் சரீரத்தை விட மிக மேலான ஒன்று தான் நீங்கள் என்பதை உணர்கிறீர்கள்.
இந்த பேரானந்தப் பரந்த தன்மை உணர்வுநிலையை, சரீர மாயையில் மீண்டும் இழக்காமல் தக்க வைத்துக் கொள்ள முடிந்தால், உங்களுடைய உண்மையான ஆன்மாவை நீங்கள் உணர்ந்தறிவீர்கள்.
நீங்கள் யார் என்று உங்களுக்குத் தெரியாததும், உங்கள் ஆன்மாவை நீங்கள் அறியாமல் இருப்பதும் விந்தையாக இல்லையா? உங்கள் உடலுக்கும் மானுடப் பாத்திரங்களுக்கும் பொருந்தக்கூடிய பல்வேறு பட்டப் பெயர்களால் உங்களை வரையறுக்கிறீர்கள். ஆனால் நீங்கள் உடலா? இல்லை, ஏனென்றால் நீங்கள் உடல் இல்லாமல் இருக்க முடியும். ஒவ்வொரு இரவும் நீங்கள் அதைச் செய்கிறீர்கள். ஆழ்ந்த தூக்கத்தில் உடலைப் பற்றிய விழிப்புணர்வு இல்லையென்றாலும், நீங்கள் இருப்பதை நீங்கள் அறிவீர்கள்.
“நான்” எனும் உணர்வை இழக்காமல், உங்கள் உணர்வுநிலையிலிருந்து எதை விலக்க முடியுமோ, நீங்கள் அந்த அது அல்ல. இந்த அடையாளங்களை நீங்கள் ஆன்மாவிலிருந்து களைந்தெடுக்க வேண்டும். “நான் சிந்திக்கிறேன், ஆனால் நான் அந்தச் சிந்தனை அல்ல. நான் உணர்கிறேன், ஆனால் நான் அந்த உணர்வு அல்ல. நான் விருப்பம் கொள்கிறேன், ஆனால் நான் அந்த விருப்பம் அல்ல.” எஞ்சியிருப்பது என்ன? ஆன்மா தனது சொந்த இருப்பை தானே சுயமாக அறிதல் எனும் அந்த உள்ளுணர்வு அளிக்கும் சான்றின் மூலம், நீங்கள் இருப்பதை அறியும் அந்த நீங்கள்; நீங்கள் இருப்பதை உணரும் அந்த நீங்கள்.
அதுவே நான் இந்தியாவில் கற்றுக்கொண்டது: ஆன்மத்தில் மையப்படுத்தப்பட்டு அந்த எல்லையற்ற மனோபாவத்தில் தொடர்ந்து நிலைத்திருப்பது. அங்கு நான் அறிந்திருந்த மகத்தான மகான்கள் சரீரத்துடன் தங்களை ஒருபோதும் அடையாளப்படுத்திக் கொண்டதில்லை.
தெய்வீக மனிதரில் சரீரம் என்பது அவரது எல்லையற்ற இருப்பின் வெளிப்படுத்தப்பட்ட ஒரு வரையறுக்கப்பட்ட அம்சம் மட்டுமே. அவர் சாதாரண மனிதர்களைப் போல சரீர உணர்ச்சி கொள்வதில்லை. நீங்கள் நடக்கும்போது, உங்கள் தலைமுடி, உங்கள் விரல்கள் போன்ற எந்தவொரு குறிப்பிட்ட பகுதியுடனும் நீங்கள் உங்களை அடையாளப்படுத்திக் கொள்வதில்லை. நீங்கள் ஒரு சரீரத்தை சுமந்து கொண்டிருக்கிறீர்கள் என்ற பொதுவான உணர்வே உங்களுக்கு இருக்கும். அதே போல் தான் எனக்கும். எனக்கு ஒரு சரீரம் இருப்பது தெரியும், ஆனால் நான் ஆன்மா என்பதை நான் அறிவேன்.
மாபெரும் மகான்கள் என்னுள் ஏற்படுத்திய மாற்றம் அத்தகையது. இப்பொழுது ஒரே உணர்வுநிலை மட்டுமே உள்ளது: நான் என் உண்மையான ஆன்மாவை உணர்கிறேன். என் ஆன்மாவின் பரந்த தன்மை அனைத்திலும் சிறகுகளை விரித்துள்ளது, மேலும் நான் அனைத்தையும் உணர்கிறேன்….
நான் காண்பதை நீங்கள் கண்டு, நான் உணரும் பேரானந்தத்தை நீங்களும் உணர முடிந்தால்! நீங்கள் தியானம் செய்தால் உங்களாலும் முடியும்.