நமது ஆன்மீக ஆற்றலில் நம்பிக்கை வைத்திருப்பது குறித்து பரமஹம்ஸ யோகானந்தர்

16 செப்டம்பர், 2025

இறைவனின் அன்பிற்குரிய குழந்தையாக நாம் ஒவ்வொருவரும், உண்மையில் பேராற்றல் மிக்க மற்றும் என்றென்றும் ஆனந்தமான ஓர் ஆன்மா என்று பரமஹம்ஸ யோகானந்தர் கற்பித்தார்.

ஆயினும்கூட, வாழ்க்கைப் பயணத்தில், நாம் கருதும் குறைபாடுகளிலும் தற்காலிக பழக்கவழக்கங்களிலும் கவனம் செலுத்துவதும், நம் மீதே நாம் நம்பிக்கையை இழப்பதும் மிகவும் எளிதானது — பெரும் மகான்களும் ஞானிகளும் கூறும் உயர் உணர்வுநிலைகளை அனுபவிக்கவும், நமது உன்னத லட்சியங்களை உணர்ந்தறியவும் உண்மையில் நாம் தகுதியானவர்கள்தானா என்று எண்ணி வியக்கிறோம்.

ஆனால் பரமஹம்ஸர் தனது போதனைகளில், உண்மையில் நாம் ஏற்கெனவே இறைவனுடன் சாசுவதமாக ஒன்றேயாகி இருக்கிறோம், ஒவ்வொருவரும் இந்த வாழ்நாளிலேயே தியானத்தின் மூலம் இறை உணர்வுநிலையைப் பெறுவதற்கான ஆற்றலைப் பெற்றுள்ளோம் என்பதை நமக்குத் தொடர்ந்து நினைவூட்டுகிறார்.

இறை அன்பு மற்றும் பேரானந்தத்தை மேலும் ஆழமாக உணர்வதற்கான உங்களின் தெய்வீகப் பிறப்புரிமையை நம்பிக்கையுடன் கோர உதவும் வகையில், மிகவும் நேர்மறையான மற்றும் ஆன்மீக ரீதியான கண்ணோட்டத்தை வளர்த்துக்கொள்வது எப்படி என்பது குறித்த பரமஹம்ஸரின் சக்திவாய்ந்த வழிகாட்டுதலைக் கீழே காணலாம்.

பரமஹம்ஸ யோகானந்தரின் உரைகள் மற்றும் கட்டுரைகளிலிருந்து:

நீங்கள் பரம்பொருளின் ஒரு பகுதி என்பதையும் உங்கள் உயிரின் தீப்பொறிக்குச் சற்றே பின்னால் எல்லையற்றவனின் பெருந்தீப் பிழம்பு இருப்பதையும் உங்கள் எண்ணங்களின் மின்னும் ஒளிக்குச் சற்றே பின்னால் இறைவனின் பேரொளி இருப்பதையும் உணருங்கள்.

நீங்கள்‌ என்னவாக இருக்கிறீர்களோ அது, நீங்கள்‌ எப்பொழுதும்‌ மிகவும்‌ ஏங்கிய எதையும்விட அல்லது எவரையும்‌ விட மிக உயர்ந்ததாகும்‌. இறைவன்‌ உங்களில்‌ தன்னை வெளிப்‌படுத்தியுள்ள முறையில்‌ வேறு எந்த மனிதளிலும்‌ வெளிப்படுத்தவில்லை. உங்கள்‌ முகம்‌, மற்ற எவருடையதையும்‌ போன்று இல்லை. உங்கள்‌ ஆன்மா மற்ற எவருடையதையும்‌ போன்று இல்லை. நீங்கள்‌ உங்களுக்கே நிறைவுற்றவராக இருக்கிறீர்கள்‌, ஏனெனில்‌ எல்லாவற்னறயும்‌ விட மகத்தான பொக்கிஷமான இறைவன்‌ உங்கள்‌ ஆன்மாவினுள்‌ உறைகிறான்.

நீங்கள்‌ எதையும்‌ செய்ய இயலாதவர்‌ என்று நம்பாதீர்கள்‌. பெரும்பாலும்‌, நீங்கள்‌ எதிலாவது வெற்றி பெற முடியவில்லையென்றால்‌, அது நீங்கள்‌ ‌ மனத்தில்‌ அதை உங்களால்‌ செய்ய இயலாது என்று தீர்மானிப்பதால்தான்‌. ஆனால்‌ உங்கள்‌ மனத்தை, அதனுடைய சாதிக்கும்‌ சக்தியைப்‌ பற்றி நம்ப வைத்தால்‌, நீங்கள்‌ எதையும்‌ செய்ய முடியும்‌!

இறைத் தொடர்பின் மூலம்‌ உங்கள்‌ நிலையை மனிதப்‌ பிறவியிலிருந்து தெய்வப்‌ பிறவியாக மாற்றுகிறீர்கள்‌. இதை நீங்கள்‌ செய்யும்‌ பொழுது உங்களைக்‌ கட்டுப்படுத்தும்‌ எல்லாத்‌ தளைகளும்‌ உடைந்துபோகும்‌. இது நினைவில்‌ வைத்துக்கொள்ள வேண்டிய ஒரு மிக உயர்ந்த விதிமுறை.

பல வருடங்களுக்கு முன்பு நான் தியானம் செய்யும்போது, “எனக்கு எப்போதாவது பரவசம் கிடைக்குமா?” என்று நினைப்பேன். சமாதி எனக்கு ஒருபோதும் வராது என்று பயந்தேன். ஆனால் அந்த பய எண்ணங்களை நான் கைவிட்டவுடன், அது அங்கேயே இருந்தது. நான் எனக்குள் சொல்லிக் கொண்டேன்: “எவ்வளவு விந்தை! எனது மனம் இறைவனைக் உணர்ந்தறிய முடியாதபடி மிகவும் அமைதியற்றதாக இருக்கிறது என்று நான் பயந்தேன்.” நான் ஒருபோதும் இறைவனை அடைய முடியாது என்ற பயத்தை இழந்தபோது, நான் அவரைக் கண்டேன்.

இன்று இறைவன்‌ அளித்திருக்கும்‌ உங்களுடைய உள்ளார்ந்த மனத்திறன்களின்‌ விதைகளை எவ்வாறு வளர்ப்பது என நீங்கள்‌ கற்றுக்கொள்ளுங்கள்…. நீங்கள்‌ அதன்‌ மேல்‌ சுமத்தியிருக்கும்‌ தளைகளை நீக்கி விட்டால்‌, அது எந்த அளவு செயலாற்றமுடியும்‌ என்பது குறித்து நீங்கள்‌ ஆச்சரியப்படுவீர்கள்.

YSS/SRF தலைவர் ஸ்வாமி சிதானந்தா அவர்கள், 2025 SRF உலகப் பேரவையில் “வி ஆர் வொர்த்தி ஆஃப் த ப்ளெஸிங்ஸ் ஆஃப் ஸ்பிரிசுவல் கான்ஷியஸ்னஸ்” எனும் தலைப்பில் நிகழ்த்திய சத்சங்கத்திலிருந்து ஒரு பகுதியை வாசியுங்கள். அதில் அவர் பரமஹம்ஸ யோகானந்தரின் ஒரு எழுச்சியூட்டும் கதையைப் பகிர்ந்து கொள்கிறார். மேலும், இறைவனால் நாம் எவ்வளவு நேசிக்கப்படுகிறோம் என்பதை புரிந்துகொள்ள உதவ, பரமஹம்ஸரின் “பிரபஞ்ச கீதங்களில்” ஒன்றை எவ்வாறு ஆழமாகப் பயிற்சி செய்யலாம் என்பதையும் விளக்குகிறார்.

இதைப் பகிர