பரமஹம்ஸ யோகானந்தர் மேற்கில் ஆற்றிய முதல் உரையும் அதன் நிரந்தர செய்தியும்

4 அக்டோபர், 2024

செப்டம்பர் 2020 செய்திமடலில் இருந்து உத்வேகம் 

அக்டோபர் 1920 இல் பாஸ்டனில் சர்வதேச சமய மிதவாதிகளின் மகாசபை சக பிரதிநிதிகளுடன் யோகானந்தர் - இந்த நிகழ்வில் தான் அவர் அமெரிக்காவில் “சமய விஞ்ஞானம்” குறித்த தனது முதல் உரையை நிகழ்த்தினார்

1920 செப்டம்பர் 19 அன்று பரமஹம்ஸ யோகானந்தரின் மிக முக்கியத்துவம் வாய்ந்த அமெரிக்க வருகையின் ஆண்டு நினைவு தினத்தை இந்த மாதம் நாம் கொண்டாடுகிறோம்.

தான் வந்த சிறிது காலத்திலேயே, ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் என்று தான் பின்னர் பெயரிட்ட ஒரு அமைப்பை யோகானந்தர் தொடங்கினார். இந்தியாவிலிருந்து அவர் கொண்டு வந்த கிரியா யோக விஞ்ஞானத்தைப் பரப்பும் நோக்கத்திற்காக நிறுவப்பட்ட SRF குருதேவரின் வாழ்நாளுக்குள்ளேயே, உலகம் முழுவதும் உறுப்பினர்களை கொண்டு வளர்ந்தது (இந்தியா மற்றும் அண்டை நாடுகளில், பரமஹம்ஸரின் பணி யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா என்று அழைக்கப்படுகிறது.) 1952 இல் அவர் மறைந்ததில் இருந்து, யோகானந்தரின் போதனைகள் அவற்றின் தாக்கத்தை தொடர்ந்து விரிவுபடுத்திக் கொண்டே வருகிறது. அதிகரித்துக் கொண்டே வரும் உலகளாவிய பின்பற்றுபவர்களால் ஏற்கப்பட்டு வருகிறது.

யோகானந்தர் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பாஸ்டன் வந்திறங்கிய வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை போற்றும் வகையில், அமெரிக்காவில் அவர் ஆற்றிய முதல் உரையான “சமய விஞ்ஞானம்” என்ற உரையை நாம் நினைவு கூர்வோம். தனது வருகைக்குப் பிறகு இரண்டு வாரங்களுக்குச் சற்று அதிகமாக மட்டுமே ஆகியிருந்த நிலையில், உலகெங்கிலும் உள்ள சமயத் தலைவர்கள் பேரவையில் பேசிய யோகானந்தர், இந்தியாவின் உலகளாவிய ஆன்மீகத்தை வலியுறுத்திக் கூறினார். காலத்தால் அழியாத மற்றும் தக்க தருணத்திய இலட்சியங்கள், பல மேற்கத்தியர்களுக்கு புதியவை, ஆனால் நவீன விஞ்ஞான யுகத்திற்கு மிகவும் பொருத்தமானவை.

உண்மையான சமயம் என்பது பிடிவாதமான கோட்பாடு அல்ல, அது உலகளாவியது என்றும், பரமானந்த வடிவமே இறைவன் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது என்றும் யோகானந்தர் உறுதிப்படுத்தினார். வெறுமனே இறைவனைப் பற்றி பேசுவதை விட்டு, அவனை உண்மையில் உணரக்கூடிய உள்ளுணர்வு திறனைப் பற்றி அவர் கூறினார். எல்லாவற்றிற்கும் மேலாக, இறை உணர்தலுக்கான ஒருவரின் உள்ளுணர்வு சக்திகளை எழுப்புவதற்கு ஒரு நடைமுறை வழி உள்ளது என்று அவர் தனது வருகையாளர்களிடம் கூறினார். அந்த வழிமுறை, உயிர்ச்சக்தியை உணர்வுபூர்வமாக கட்டுப்படுத்துவதற்கான உத்திகளைக் கொண்டுள்ளது – அவர் தனது வாழ்நாளில் சுமார் 1,00,000 மக்களுக்கு உபதேசம் அளித்த கிரியா யோக விஞ்ஞானத்தை உள்ளடக்கிய உத்திகள். அதன் பரவல் இன்றும் அவரது YSS/SRF பாடங்கள் மூலம் தொடர்கிறது.

1920 களில் முதன்முதலில் வெளியிடப்பட்ட, பின்னர் YSS/SRF ஆல் தொடர்ந்து புத்தக வடிவத்தில் வெளியிடப்பட்டு வரும், யோகானந்தரின் வரலாற்று சிறப்புமிக்க சொற்பொழிவின் விரிவான உரையாகிய சமய விஞ்ஞானம் இலிருந்து சில பகுதிகள் பின்வருமாறு.

இறைவனைப் பற்றி நாம் கொண்டிருக்கும் கருத்து, நமக்கு தினசரி வழிகாட்டியாக, இன்னும் சொல்லப் போனால், மணிக்கு மணி வழிகாட்டியாக இருக்க வேண்டும். இறைவனைப் பற்றிய கருத்தே, நமது அன்றாட வாழ்க்கைகளின் நடுவிலும் அவனை நாட நம்மை தூண்ட வேண்டும்.

ஒரு தேவையின் நிறைவேற்றத்தில், மனிதர்களுடனான நமது ஈடுபாடுகளில், பொருள் ஈட்டுவதில், ஒரு புத்தகத்தைப் படிப்பதில், ஒரு தேர்வில் தேர்ச்சி பெறுவதில், மிகவும் அற்பமான அல்லது மிகவும் உயர்ந்த கடமைகளை ஆற்றுவதில், இறைவன் இல்லாமல் நம்மால் செய்ய முடியாது என்ற விதத்தில் இறைவனைப் பற்றி கருதப்படாவிட்டால், இறைவனுக்கும், வாழ்க்கைக்கும் இடையே எந்த தொடர்பையும் நாம் உணர்ந்திருக்கவில்லை என்பது வெளிப்படை.

அறிவாற்றல், விஷயங்களைப் பற்றிய பகுதியளவிலான அல்லது மறைமுகமான கருத்தை மட்டுமே தருகின்றது. ஒரு விஷயத்தை அறிவுப்பூர்வமாக நோக்குவது என்பது, அதனோடு ஒன்றுபட்டிருப்பதன் மூலம் அதனை காண்பது என்பது அல்ல; அவ்விஷயத்திலிருந்து விலகி இருப்பதன் மூலமாக அதனை நோக்குவதாகும். ஆனால் உள்ளுணர்வு… என்பது உண்மையின் நேரடி கிரகித்தலாகும். இந்த உள்ளுணர்வில்தான் பேரானந்த உணர்வு நிலை அல்லது இறை உணர்வு நிலை உணர்ந்தறியப்படுகின்றது.

இந்தப் பேரானந்த-உணர்வுநிலை அல்லது இறை-உணர்வு நிலையானது நாம் அதை அனுமதித்த உடனேயே நமது அனைத்து செயல்கள் மற்றும் மன நிலைகளில் ஊடுருவி பரவ முடியும்.

நம்மை அறிதலின் மூலமாக மட்டுமே, நம்மால் இறைவனை அறிய முடியும், ஏனெனில் நமது உண்மையான இயல்பு அவனுடையதை ஒத்ததாகும். மனிதன் இறைவனது பிரதிபிம்பத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறான். இங்கே குறிப்பிடப்பட்ட வழிமுறைகள் கற்றுக் கொள்ளப்பட்டு சிரத்தையுடன் பயிற்சி செய்யப்பட்டால், நீங்கள் உங்களை ஓர் ஆனந்தமான ஆன்மாவாக அறிந்து, இறையனுபூதி அடைவீர்கள்.

சமய விஞ்ஞானம் புத்தகப் பிரதிகளை வாங்க, YSS ஆன்லைன் புக்ஸ்டோர் ஐ பார்வையிடவும்.

இதைப் பகிர